மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சிக்கிம் இந்திய எல்லைப் பகுதியின் கடவுள்(Hero of Nathula Baba Harbhajan Singh)

கி.ஆறுமுகம்

May 21, 2016

sikkim1இந்தியாவின் மாநிலமான சிக்கமின் எல்லைப் பகுதியில் பணிபுரியும் இந்திய இராணுவ வீரர்களின் கடவுளாக இருப்பவர் பாபா ஹர்பஜன் சிங். இவர் 1941ம் ஆண்டில் Batthe Bhain என்ற அன்றைய பஞ்சாப் மாநிலத்தில் சீக்கிய குடும்பத்தில் பிறந்தவர். இவர் இந்திய தேசிய இராணுவத்தில் சிறு சிப்பாயாக தனது பணியைத் தொடங்கினார். பின்னர் 1965-ல் 14-வது ராஜ்புத்(Rajput) படைப்பிரிவில் உதவி அதிகாரியாக பணி உயர்வு பெற்றார். இவர் 1965ம் ஆண்டில் ஏற்பட்ட இந்திய – பாகிஸ்தான் போரில் தனது சிறப்பான பணியை செய்தார். பின்னர் 1968ல் 18-வது ராஜ்புத் (Rajput Regienent) மாற்றப்பட்டு சிக்கிம் மாநிலத்திற்கு பணியிடம் மாற்றப்பட்டார்.

சிக்கிம் மாநிலத்தில் இந்தியா மற்றும் சீன எல்லைப்புற பகுதியான Nathula pass என்ற பகுதி உள்ளது. இது பெரும் வரலாறு சிறப்பு பெற்ற பகுதி. பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் பல அரசர்கள் சீனாவுடன் உறவு கொள்ளும்போது பண்டமாற்றம் மற்றும் போக்குவரத்துக்காக இந்தப் பகுதி பயன்படுத்தப்பட்டது. இந்த வரலாறு சிறப்பு மிக்க Nathula பகுதியில் பாபா, 1968ம் ஆண்டில் mule caravan என்ற பகுதிக்குச் சென்று பாதுகாக்கும் பணியில் இருந்தபோது கனமழை பொழிய ஆரம்பித்தது. இதனால் அவர் மலையில் இருந்து கீழே விழுந்தார். அங்கு அருவியாக ஓடிய நீர் இவரை விரைவாக இழுத்துச் சென்றது. இவர் கீழே விழுந்த இடத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு இவர் உடல் சென்றுவிட்டது. இவரைக் காணவில்லை என்று இவருடன் பணி செய்த இவரது சகாக்கள் தேடும் பணியில் ஈடுபட்டனர். எவ்வளவு முயன்றும் இவரது உடலை கண்டுபிடிக்கமுடியிவல்லை.

sikkim6பின்னர் pritam singh என்பவரின் கனவில் தோன்றி, எனது உடல் இந்த இடத்தில் உள்ளது என்று அடையாளப்படுத்தினார். பின்னர் அவர் கூறிய இடத்திற்கு இராணுவ வீரர்கள் சென்று அவரது உடலை மீட்டு எடுத்தனர். பின்னர் இவர் இந்திய – சீனா எல்லையில், எந்தப் பகுதியில் இந்திய பாதுகாப்பு குறைவாக உள்ளது என்று சிலரின் கனவில் சென்று கூற ஆரம்பித்தார். அந்தத் தகவல்கள் மிகச் சரியாக இருக்கவும் செய்தது. இவரது வார்த்தையை நம்பாத சில அதிகாரிகள் அந்தப் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் தங்களது உயிரை இழந்துள்ளனர்.

இவரது சமாதி chhokya chho என்ற இடத்தில் அமைந்துள்ளது. இது 4000 மீட்டர் உயரத்தில் உள்ளது. இந்தப் பகுதிதான், பாபா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பகுதி. இந்தப் பகுதி தற்போது உள்ள பாபா கோவிலில் இருந்து 9 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இந்தப் புதிய பாபா கோவில் 1982-ம் ஆண்டு கட்டப்பட்டது. பாபா ஹர்பஜன் சிங் இறந்த பிறகு, இந்திய தேசிய இராணுவம் இவருக்கு கேப்டன் பதவி வழங்கியது.

இன்றும்கூட இவர் பதவியில்தான் உள்ளார். நமது இந்திய அரசு இவருக்கு வருடம் ஒரு முறை என்று இரண்டு மாத விடுமுறை கொடுக்கின்றது. தற்போதும்கூட இவருடைய உடமைகள் இவரது அறையில் பாதுகாப்பாக வைத்து பராமரிக்கப்படுகிறது. இவரது காலணி (shoe) தினமும் சுத்தம் செய்யப்படுகிறது. இவரது சீருடை சரியான முறையில் இவரது அறையில் வைத்துவிட்டு மறுதினம் சென்று பார்த்தால், அவர் அணிந்து பணிக்குச் சென்று வந்தால் எவ்வாறு இருக்குமோ அது போன்று அவரது சீருடையும், காலணியும் காட்சி அளிக்கும். விடுமுறைக்கு இவர் செல்லும்போது, இரயிலில் இவரது உடமைகளுக்கென்று தனியாக இடமளித்து அனுப்புவார்கள். இவரது உடமைகள் செல்லும் இராணுவ வண்டியில் ஒரு கேப்டனுக்கு அனுமதி உண்டு. மேலும் வழி அனுப்புவதற்கு பாதுகாப்பு வண்டிகள் அனைத்தும் இவருடன் செல்லும். இது ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 14-ம் நாளில் நடைபெறும்.

sikkim9இந்திய – சீன எல்லைப் பாதுகாப்புப் பணியின்போது, நமது வீரர் எவராவது அலட்சியமாக இருந்தால், அவரது கன்னத்தில் அறையும் உணர்வு ஏற்படும். வாரத்தில் ஒரு நாள் மது அருந்தக் கூடாது, அந்த தினத்தில் இராணுவ வீரர்கள் மது அருந்த வேண்டும் என்றால் இவரிடம் முன் அனுமதி பெற்றுத்தான் மது அருந்துகின்றனர். இவரது கோவிலில் நோட்டு புத்தகம், பேனா போன்றவற்றை வைத்து வழிபட்டு அதை எடுத்துச் சென்று தங்கள் பிள்ளைகளுக்குக் கொடுத்து பள்ளியில் சேர்த்தால் அவர்கள் நன்றாக படிக்கின்றனர் என்று இங்கு உள்ள இராணுவ வீரர்கள் கூறுகின்றனர்.

சீன நாட்டு இராணுவ வீரர்களும் இவரை பூசை செய்கின்றனர். இரு நாட்டினரும் Flag day அன்று ஒன்று சேர்ந்து இவருக்கு பூசை செய்கின்றனர். இவர் வெள்ளைக் குதிரையின் மீது இந்திய எல்லைப் பகுதியில் வருகின்றார், நாங்கள் நேரில் அதைக் கண்டது உண்டு என்று சீன நாட்டு இராணுவவீரர்களும் கூறுகின்றனர். இறந்த பிறகும் தனது நாட்டுப்பற்று உணர்வின் மூலம் தனது பணியை பாபா செய்கின்றார்.

தற்போதும் மாத சம்பளம், ஆண்டு விடுமுறை, இராணுவ சலுகைகள் என்று அனைத்தையும் நமது அரசு இவருக்கு வழங்குகிறது. பாபா ஒழுக்கத்தில் சிறந்தவர், மற்ற இராணுவ வீரர்கள் மிக ஒழுக்கத்துடன் சரியாக பணியை செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்.

மேலே உள்ளதை படித்ததும் இது வெறும் கட்டுக்கதை என்று நினைக்கிறீர்களா?

நானும் அங்கு சென்றபோது, இது என்ன ஒரு இராணுவ வீரரின் புகைப்படத்தினை பூசை செய்கிறார்கள் என்று நினைத்தேன். பின்னர் அந்தக் கோவிலில் இருந்து இந்திய எல்லைப்பகுதியான Nathula பகுதிக்குச் சென்று, அங்கு பணியில் இருந்த இராணுவ வீரரிடம் கேட்டபோது Hero of Nathula வைப் பற்றி தெரிவித்தார். அவர் கூறியபடி, பாபா ஒரு திரைப்பட கதாநாயகன் இல்லை, இவர் உண்மையான கதாநாயகன். உண்மையான நாட்டுப்பற்றுக் கொண்ட மனிதர்.


கி.ஆறுமுகம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சிக்கிம் இந்திய எல்லைப் பகுதியின் கடவுள்(Hero of Nathula Baba Harbhajan Singh)”

அதிகம் படித்தது