மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

கணவனால் நாள்பட்ட மன அழுத்தத்திற்கு ஆளாகும் பெண்கள்- அவர்களின் தண்டனைகள் பற்றிய ஒரு அலசல் !!

வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

Jul 2, 2016

Siragu kanavanaal1

கணவன் தன் மனைவி மீது  தொடர்ந்து  வன்முறை தாக்குதல்கள் நடத்திக் கொண்டே இருக்கின்ற போது, அது மன ரீதியாகவும் இருக்கலாம் அல்லது உடல் ரீதியாகவும் இருக்கலாம்; இந்தத் தொடர் தாக்குதலால் அந்தப்  பெண் ஒரு  விதமான மன அழுத்தத்திற்கு ஆளாகின்றார் என்கின்றது ஆய்வுகள். இதனை ஆங்கிலத்தில் Battered Woman Syndrome என்று அழைக்கின்றார்கள். இதைப் பற்றி முதலில் 1970 -இல் டாக்டர். லெனோரே வால்கெர் (Dr. Lenore Walker) என்ற உளவியல் நிபுணர் தான் கோட்பாடாக, இந்த  சமூகத்தில் ஒரு பெண் மன மற்றும் சமூக ரீதியாக தொடர்ச்சியாக வன்முறைக்கு ஆளாகும் போது எப்படி பாதிப்புக்கு உள்ளாகிறார் என்று “The Battered Woman” என்ற நூலில் கூறினார்.

தொடர்ந்து தாக்குதலுக்கு தன் கணவனால் உள்ளாகும் பெண் ஒரு வன்முறை சுழற்சிக்கு ஆளாகி மன ரீதியாக பாதிப்படைகின்றாள். அப்படி பாதிக்கப்படும் பெண் அந்தக் குடும்ப வன்முறையில் இருந்து தப்பிக்க தன் கணவனை கொலை செய்கின்றாள். Dr . Walker தெளிவாகக் கூறுகின்றார் இது ஒரு நோய் அல்ல தொடர்ந்து  கணவனால் துன்பப்படுத்தப்படும் பெண் பல்வேறு சமூகக் காரணங்களால் அந்த உறவில் இருந்து வெளியேற முடியாமல் கணவனைக் கொன்றுவிடுகின்றாள்.

Siragu kanavanaal2

இங்கு தான் சிக்கல் ஆரம்பமாகின்றது. இது கொலையா? அல்லது தன் எஞ்சியிருக்கும் வாழ்வை காப்பாற்றிக் கொள்ள அந்தப் பெண் எடுக்கும் தற்காப்பு நிலையா? என்று சட்ட ரீதியாக சிந்தித்தால், இந்திய தண்டனைச் சட்டம்  76 முதல் 106 வரை தனியார் பாதுகாப்பு உரிமைகளின் பொது விதிவிலக்குகள் பற்றி கூறுகின்றது. அதில் குறிப்பாக தற்காப்பு கருதி ஒரு நபர் செய்யும் கொலையை மரணம் விளைவிக்கும் குற்றமாகவே சட்டம் பார்க்கின்றது, கொலையாக அல்ல. அதனை இந்திய தண்டனைச் சட்டங்கள் 96, 97, 102, 105 & 106 தெளிவாக விளக்குகின்றது .

குறிப்பாக இந்திய தண்டனைச் சட்டம் 100  தற்காப்புக்காக விளைவிக்கப்படும்  மரணம் எப்போதெல்லாம் கொலையாக கருதப்பட மாட்டாது என்று விளக்குகின்றது.

 

Siragu kanavanaal3திடீர் தாக்குதல் தன் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் என்று கருதும் போது தாக்குதல்,
தனக்கு மிகக் கொடிய காயங்களை ஏற்படுத்தும் என்று கருதும் போது தாக்குதல்,
பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்ய நடத்தப்படும் போது தாக்குதல்,
இயற்கைக்கு  மாறான இச்சைக்காக நடத்தப்படும் போது தாக்குதல்,
கடத்தலுக்காக நடத்தப்படும் போது தாக்குதல்,
ஒரு நபரை அடைத்து வைக்க நடத்தப்படும் நிலையில்; அவர் அதிகாரிகளின் உதவியை நாட முடியாது என்று நினைக்கும் நிலையில்,
தற்காப்பு கருதித்தான் மரணம் நிகழ்த்தப்பட்டது என்பதை நீதிமன்றம் தறுவாய் இடச்சூழல்(circumstances) கண்டே முடிவு செய்யும். இது ஒவ்வொரு வழக்கிலும் மாறுபடும். இந்த நிலையில் ஒரு பெண் கணவனின் தொடர் தாக்குதல் காரணமாக மனம் நொந்து செய்யும் கொலை தற்காப்பு காரணிகளுள் வர வாய்ப்பில்லை.

இந்தியாவைச் சேர்ந்த அலுவாளியா (Ahluwalia) 1979 ஆம் ஆண்டு, தன் 24 வயதில் பெற்றோர்களால் பார்த்து நிச்சயிக்கப்பட்ட திருமணத்தின் மூலம் பிரிட்டன் செல்கின்றார். அவரது கணவர் தீபக், மனைவியை மதிக்காமல் மிகவும் கொடுமை செய்கின்றார். அடிமை போன்று நடத்துகின்றார். அலுவாளியாவிற்குப் பிடித்த உணவைக் கூட தீபக் உண்ண அனுமதிப்பதில்லை. அவளுக்கு அந்த உணவு மகிழ்ச்சியைத் தருகின்றது என்ற ஒரே காரணத்தால் என்றால் தீபக் அவளை எவ்வளவு துன்புறுத்தியிருக்க வேண்டும் என்பது புலப்படும். அந்தத் திருமண உறவை அவளால் முறித்துக் கொள்ளவும் முடியவில்லை. வீட்டை விட்டு வெளியேறி ஓடினாலும் தீபக் அவளைப் பிடித்துக் கொண்டு வந்து மிகக் கொடூரமாக தாக்குவான். கொடுமைகளின் துன்பத்தை 10 வருடங்களாக அனுபவித்து வந்த அலுவாளியா, தன் கணவன் தன்னை அடித்துத் துன்புறுத்தி விட்டு தூங்கும் போது அவன் மீது பெட்ரோல் ஊற்றி அவனை எரித்துக் கொன்று விடுகின்றாள். இது தற்காப்பு மரணத்தில் வர வாய்ப்பில்லை என்று அவளுக்கு ஆயுள் தண்டனை பிரிட்டன் நீதிமன்றம் வழங்குகின்றது.

Siragu kanavanaal4

ஆனால் பின் பலரின் தொடர் போராட்டங்களால், 1993 மேல் முறையீட்டில் தொடர் மன அழுத்தத்தின் காரணமாக நடந்த மரணம் என்று அலுவாளியாவை பிரிட்டன் நீதிமன்றம் விடுதலை செய்கின்றது. இந்த வழக்கு குடும்ப வன்முறையால் தொடர் பாதிப்பிற்கு உள்ளாகும் பெண்களின் மன அழுத்தத்தை, அதனால் ஏற்படும் அவர்கள் கணவர்களின்  மரணத்தை கொலையாக பார்க்கத் தேவையில்லை என்ற நிலையை ஏற்படுத்தி இருந்தாலும் இந்தியாவைப் பொறுத்த வரை இந்தக் கோட்பாட்டு இன்றும் தற்காப்பிற்காக ஏற்படும் மரணத்தில் சேர்க்கப்படவில்லை. மன அழுத்தத்தின் காரணமாக அதில் இருந்து தற்காத்துக்  கொள்ள நடக்கும் இத்தகைய நிகழ்வு “psychological self defence” என்ற நிலையில் நமது இந்திய தண்டனைச் சட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்பதே இன்றும் பலரது கோரிக்கையாக இருந்து வருகின்றது.

விக்டோரியா மாகாணம், மேற்கு ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகள் psychological self – defence என்ற நிலையை தங்கள் தற்காப்புச் சட்டத்தில் இணைத்திருக்கும் நிலையில் இந்தியாவும் அதனை செய்ய வேண்டும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்திய அரசமைப்புச் சட்டம் சரத்து 21, ஒரு மனிதனின் உயிரையும், அவனின் தனிப்பட்ட விடுதலையையும் (Protection Of Life and personal Liberty) பாதுகாப்பது அடிப்படை உரிமை என்கின்ற போது, தொடர்ந்து தன் வாழ்விற்கு அச்சத்தை ஏற்படுத்தும், தன் சுயமரியாதை வாழ்விற்கு குந்தகம் விளைவிக்கும் கணவர்களை நாள்பட்ட மன அழுத்தத்தின் காரணமாக கொன்று விடும் நிலைக்கு தள்ளப்படும் பெண்களை கொலை குற்றவாளியாகப் பார்க்காமல், அதனை தற்காப்பு கருதி செய்யப்பட்ட மரணம் என்றே இந்திய நீதி மன்றங்கள் பார்க்க வேண்டும் என்பதே இன்றைய சட்ட அறிஞர்களின் நிலைப்பாடு.


வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கணவனால் நாள்பட்ட மன அழுத்தத்திற்கு ஆளாகும் பெண்கள்- அவர்களின் தண்டனைகள் பற்றிய ஒரு அலசல் !!”

அதிகம் படித்தது