மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

காதல் பாதை சரியானதா?

சா.சின்னதுரை

Jul 2, 2016

Siragu-kaadhal-paadhai1

முன்பெல்லாம் ஒரு சிலரிடம் மட்டுமே காதல் கலாச்சாரம் ஏற்பட்டது. இப்போதோ அது ஒரு கெளரவப் பிரச்சினையாக மாறிவிட்டது. ஒரு காலத்தில் காதல் வலையில் விழ நேர்ந்தது ஒரு வெட்கத்திற்குரிய விசயமாகக் கருதப்பட்டது. இப்போதோ பள்ளிக்கூட நாட்களிலும், கல்லூரி நாட்களிலும் காதல் அனுபவத்திற்குச் செல்லாமலிருப்பது ஒரு குறைவு போலவும், வெட்கத்திற்குரியது போலவும் எண்ணப்படுகிறது.

பெரும்பாலும் காதல் என்பது எதிர்பாலின ஈர்ப்பு விசையின் விளைவாகவே ஏற்படுகிறது. தொடர்ந்து பேசக்கிடைக்கும் வாய்ப்புகள், பழகக்கிடைக்கும் சந்தர்ப்பங்கள், ஒருவரையொருவர் நெருங்க வைக்கும் சூழ்நிலைகள், ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஒரு உணர்வு ரீதியான ஈர்ப்பை ஏற்படுத்தி விடுகிறது. பெரும்பாலும் எதிர்பாலினத்தைச் சேர்ந்த ஒருவரிடமுள்ள ஏதாவது ஒரு விசயம் மிகவும் பிடித்து விடுவதால் காதல் தோன்ற ஆரம்பித்து விடுகிறது. அந்த ஒரு விசயம் அழகு, இனிமையான வார்த்தைகள், கவரும் தன்மையுள்ள ஒரு நடவடிக்கை, கரிசனையான செயல், வேடிக்கையாகப் பேசும் திறன், அக்கறையான விசாரிப்பு, தனித்திறமை, இப்படி ஏதாவது ஒன்றாக இருக்க முடியும்.

இளவயதுகளில் ஏற்படும் எதிர்பாலின ஈர்ப்பு சார்ந்து எடுக்கப்படும் முடிவுகள், வாழ்க்கைக்கு உண்மையான நன்மைகளைக் கொண்டுவராது. தங்கள் காதல் நல்லது என்றும், தூய்மையானது என்றும், அன்பின் விளைவானது என்றும் கூறினாலும் அது தோன்றியதன் அடிப்படைக் காரணம், எதிர்பாலின ஈர்ப்பு விசையினால் ஏற்பட்ட உணர்ச்சி ரீதியான விளைவே ஆகும். வாலிப வயதின் நாட்களில் உணர்வுகள் மேலோங்கியிருக்கும். உணர்வுரீதியான சிந்தனைகளும், எண்ணங்களும், ஆசைகளும், விருப்பங்களும், மேலோங்கியிருக்கும். யதார்த்தமான வாழ்க்கையின் தன்மைகளை சரியாக அறிந்து உணரும் பக்குவம் இராது. உணர்ச்சிகளும் உணர்வுகளும் தற்காலிகமானவை. அவை மாறிக்கொண்டே போகும். ஒரு நல்ல வாழ்க்கைக்கு தற்போது வேகமாக செயல்படும் சில உணர்வுகள் மட்டும் போதாது. அழகைக் குறித்த ஆசையே அவள் போதும் என்ற முடிவை எடுக்கத் தூண்டும். ஆனால் அழகை மட்டும் பின்னணியாகக் கொண்டு வாழ்க்கையை சந்தோசமாக வாழ்ந்து விடமுடியாது.

Siragu-kaadhal-paadhai4

ஏதோ சில காதல் திருமணங்கள் தோல்வியடைந்து விடுகிறது என்பதற்காக காதல் சரியான வழியல்ல என்று எண்ணிவிட முடியாது. பெற்றோர்கள் பிள்ளைகளுக்காக பேசி முடித்து நடத்தும் சில திருமணங்கள் வெற்றியடைகின்றன என்பதற்காக அது சரியான வழி என்றும் கூறிவிட முடியாது. எல்லாவற்றிலும் பிரச்சினைகள் உண்டு. ஆனால் காதல் உறவுகள் என்பது குழந்தைகள் ஒரு இனிப்புப் பொருளை மூடியிருக்கும் அட்டையின் தோற்றத்தினால் கவரப்பட்டு அதனை விரும்புவது போலாகும். சிலநேரம் அதற்குள் தரமான பொருள் இருக்கக்கூடும். காதல் திருமண உறவுகள் உடையும்போது பாதிக்கப்பட்டவருக்கு போதிய குடும்ப ஆதரவோ, உறவினரின் ஆதரவோ இன்றி தனிமைப்படுத்தப்பட்டு நிற்கும் நிலை ஏற்படுகிறது. ஆனால் பெற்றோர் பார்த்து ஏற்படுத்தும் திருமண உறவு என்பது ஒரு பொருளினை நன்கு பார்த்து சோதித்து சிந்தித்து வாங்குவது போன்றதாகும்.

பெரும்பாலும் காதலுக்குள் சென்றுவிட்ட பிள்ளைகள் அதிலிருந்து வெளியே கொண்டுவரும் முயற்சிகள் முள்ளில் சிக்கிய சேலையை, பலத்தைப் பிரயோகித்து இழுத்தெடுப்பதைப் போலவே உள்ளன. பலர் காதல் உலகுக்குள் சென்ற பின்பு அது தங்களுக்கு ஏற்றதல்ல என்று உணருகின்றனர். ஆனால் அதைவிட்டு வெளியே வர இயலாத மனோரீதியான உணர்வுகளின் நிர்ப்பந்தங்களினால் விலங்கிடப்பட்டுவிடுகின்றனர்.

Siragu-kaadhal-paadhai3

சினிமாவில் பெரிய முதலாளியின் மகள் அங்கு வேலை செய்யும் காவலாளியை விரும்புவாள். பெரிய காவல்துறை அதிகாரியின் மகள் ரவுடி ஒருவனை நேசிப்பாள். இந்தத் தொடர்புகள் யாவும் இறுதியில் திருமணத்தில் முடியும் விதமாக படம் எடுத்திருப்பார்கள். ஆனால் சினிமாவில் காண்கின்ற விதமாக யதார்த்தமான வாழ்க்கையில் காரியங்கள் அமையாது. அங்கே பல நடைமுறைப் பிரச்சினைகள் உண்டு.

தாங்கள் விரும்பியபடி காதல் திருமணம் செய்துகொள்வதில் பலர் வெற்றி பெறுவது உண்மை. காதல் காலத்தில் சாதி, மதம், குடும்பப் பின்னணி, பொருளாதாரம், சமூகநிலை, வயது, குணம் எதுவும் முக்கிய விசயங்களாக இராது. ஆனால் குடும்ப வாழ்விற்குள் நுழைந்த பிறகு அவை யாவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக மாறும். தங்களின் காதலுக்கு இடையூறாகவும், குறுக்கீடாகவும் வந்த தடைகள் யாவற்றையும் கடந்து காதலில் வெற்றி கண்ட போதிலும், தொடர்ந்த காதல் வாழ்க்கையில் வெற்றி பெறுகின்றவர்கள் வெகுச்சிலரே.

காதலுக்காக பெற்றோரை உதறித்தள்ளும் பிள்ளைகள், திருமண வாழ்வில் பிரவேசித்த பின்னர் காதல் சார்ந்த உணர்வு ரீதியான பரபரப்புகள் சற்று அடங்கிய பின்னர், மீண்டும் தங்கள் பெற்றோரின் உறவு மிக முக்கியமானதாக மாறிவிடமுடியும். மறுபடியும் பெற்றோர்களை முக்கியப்படுத்தும்போது அது ஒருவருக்கொருவர் அதிருப்திகளையும், கோப உணர்வுகளையும் ஏற்படுத்துவதுண்டு.

Siragu-kaadhal-paadhai2

ஒருவரோடு ஒருவர் விரும்பிப் பழகுகின்ற நாட்களில் பெரும்பாலும் உண்மையான குணங்களையும், பண்புகளையும் மனநிலைகளையும் மற்றவர் அறிந்துக் கொள்ள முடியாது. ஒருவரையொருவர் நேசிப்பதிலும், நேசத்தைப் பெறுவதிலும் தீவிர ஆர்வமாயிருக்கும். அந்த நாட்களில் ஒருவரை அதிக மகிழ்ச்சியாக்குவது எப்படி என்ற எண்ணமே மற்றவரின் மனதில் நிறைந்திருக்கும். தங்களின் நேச உணர்வை வெளிப்படுத்தி ஐக்கியத்தை ஆழமாக்கும் வாஞ்சை பெருகி நிற்கும் அந்த நாட்களில், தவறான குணநிலைகளும், சுபாவங்களும் மறைந்துதான் இருக்கும். சில குணங்களை அறியும் வாய்ப்பிருந்தாலும், ஏற்பட்டுவிட்ட எதிர்ப்பாலின ஈர்ப்பின் வேகம் அவைகளைப் பெரிதாக எடுத்துக்கொள்ளத் தூண்டாது. ஆனால் குடும்ப வாழ்க்கைச் சூழ்நிலைகளுக்குள் வரும்போது உண்மை குணங்கள் வெளியே வரும். அப்போதுதான் இனிப்பாக ஆரம்பித்த காதல் கசப்பான ஒரு வாழ்வாக உருவெடுக்கும்.

திருமணமான பின்பு வாழ்க்கை என்பதற்கு எதிர்பாலின ஈர்ப்பு விளைவான விருப்பம் மட்டும் போதாது என்பது விளங்க ஆரம்பிக்கும். அதன் பின்னர் மற்றவரின் சாதி, மதம், குண இயல்புகள், குடும்பப் பின்னணிகள், வருமானம், விருப்பு வெறுப்புகள், யாவும் அதிக முக்கியத்துவம் பெற ஆரம்பிக்கும். முன்பு தான் விரும்புகின்ற நபர் தனக்கு கிடைத்தால் போதும் என்று எண்ணினவர் இப்போது தான் விரும்புகின்ற விதமாகவும், தன்னுடைய உணர்வுகளுக்கு இசைந்த விதமாகவும் மற்றவர் இருக்க வேண்டும் என்று சிந்திக்க ஆரம்பிக்கின்றனர். அவ்விதம் மற்றவர் வளைந்து கொடுக்க இயலாமல் போகும்போதும், மற்றவரின் மனதின் போக்குகளுக்கு ஏற்றபடி தன்னை வளைக்க இயலாதவராகப் போகும்போதும், முன்பு தேனாய் இனித்த காதல் உறவு வேம்பாய் கசக்க ஆரம்பிக்கின்றது. அதன் விளைவாக போராட்டம் ஆரம்பமாகிறது. எனவே முன்பு நீ இல்லாமல் வாழமுடியாது என்று சொன்னவர், இப்போது என்னை நிம்மதியாக வாழவிடு என்று சொல்லுகின்ற நிலைமை ஏற்படுகிறது. அது விவாகரத்து வரை செல்கிறது.

வாழ்க்கை என்பது கடற்கரை மணலில் குழந்தைகள் கட்டும் வீடு அல்ல. அது ஆழமாக அடித்தளமிட்டு, அதிக கவனத்தோடு கட்டப்படவேண்டிய ஒன்று.


சா.சின்னதுரை

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “காதல் பாதை சரியானதா?”

அதிகம் படித்தது