மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

எண்ணங்களே எல்லாம்

செல்வக்குமார் சங்கரநாராயணன்

Jul 9, 2016

Siragu-ennangal-article5

நம் எண்ணங்களே எல்லாவற்றிற்கும் காரணம். அவற்றால் தான் நாம் இந்த நிலைமையிலும், இனி வரும் காலங்களிலும் செயல்படப் போகிறோம் என்பது யாருமே மறுக்க முடியாத உண்மை. நல்லனவற்றைச் சிந்தித்தால் நல்லனவே நிகழும் என்பதும் தீயனவற்றை சிந்தித்தால் தீயனவே தான் நிகழும் என்பதையும் பல ஆண்டுகளுக்கு முன்பே நம் தமிழ் முன்னோர்கள் கூறிச் சென்றிருக்கிறார்கள். இதைத் தான் நாம் இப்பொழுது நம் வாழ்வில் பரிட்சை வைத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆக, நமக்கு இதுதான் என்பது தெரிந்துவிட்ட ஒன்றாகவே இருந்த போதிலும், அதைச் செயல்படுத்த நாம் தயங்குகிறோம். இந்தத் தயக்கம்தான் நம்மை அடக்கி வைத்து அழுத்தப்பட்ட மன நிலைக்குக் கொண்டு சென்று விடுகிறது.

“நீங்கள் எதுவாக நினைக்கிறீர்களோ அதுவாகவே ஆகிறீர்கள்!” இது விவேகானந்தர் என்ற ஒரு பெருமகானால் தரப்பட்டது. இன்று அவர் உயிருடன் இல்லை என்றாலும் அவர் விட்டுச்சென்ற வார்த்தை ஒவ்வொன்றும் நம் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையானதாகவும், வாழ்க்கையை மாற்றக் கூடிய வரமாகவும் திகழ்ந்து வருகிறது என்பதில் எந்த ஒரு ஐயமுமில்லை. இந்த இடத்தில் ஒரு பலத்த சிந்தனை உங்களுக்குள் எழலாம், அதாவது, நினைப்பது எப்படி நம்மை மாற்றும் என்று? இதோ உங்களுக்காகவே இருக்கிறது அந்த வாழ்வியல் சூத்திரம்.

Siragu ennangal article3

நான் இந்த உண்மையை தெரிந்துகொள்ள கடுந்தவமோ இமயமலைக்கோ செல்லவில்லை, ஒரு தேர்ந்த அறிஞரது நூலை வாசிக்க நேர்ந்த பொழுது இதைத் தனியாக குறித்து வைத்துக் கொண்டேன். எனக்கு எப்பொழுதெல்லாம் எதிர்மறை எண்ணங்கள் வருகிறதோ அப்பொழுதெல்லாம் அதை மாற்றி நேர்மறையாகச் சிந்திக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொண்டேன். ஏனென்றால் இந்தச் சூத்திரத்தின் மகத்துவம் அப்படி! இது தான் அது, “எண்ணங்களே பேச்சாகின்றன, பேச்சே செயலாகின்றன, செயல்களே பழக்கமாகின்றன, பழக்கமே குணாதிசயங்கள் ஆகின்றன.” எவ்வளவு மகோன்னதமான வரிகள் இவை. அதில் நான்கு கருத்துகள் இருக்கின்றன. அவற்றை நீங்கள் இன்று முதலாவது செயல்படுத்த நினைத்தாலே போதும் நாளை நீங்கள் ஒரு சிறந்த வாழ்வில் இருப்பீர்கள் என்பதில் எந்த ஒரு சந்தேகமுமில்லை.

உலகத்திலேயே மிகவும் எளிமையான ஒன்றும் கடினமான ஒன்றுமாய் இருப்பது இந்த எண்ணங்களை சீர்படுத்துவது தான். இதை இரண்டு விதமாகப் பிரித்தறியலாம். ஒன்று ப.மு மற்றொன்று ப.பி. அதென்ன புதிதாய் இருக்கிறது என்கிறீர்களா?. விதியை நமக்காக வகுப்பதும் அதை செயல்படுத்துவதும் நாம் தானே! அந்த அடிப்படியில் இதை உருவாக்கினேன் என்றே வைத்துக் கொள்ளுங்களேன். ப.மு  என்பது பழகுவதற்கு முன், ப.பி என்பது பழகியதற்குப் பின் என்பது. மனிதன் மட்டும் தான் சிந்திக்கும் தன்மையைப் பெற்றிருப்பதாக சொல்கிறார்கள். அப்படி இருக்கும் பொழுது அதைக் கூட ஒழுங்காய் செய்வதற்கு என்ன வந்தது என்று தெரியவில்லை. இப்பொழுது நீங்கள் பழச்சாறு தயாரிக்கப் போகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். என்ன பழம்? என்ன விலையில்? என்றெல்லாம் கேட்கக்கூடாது!. ஏதோவொரு பழமாக இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் பழச்சாறு செய்வதற்குத் தேவையான அனைத்தும் உங்களிடம் இருந்தால் மட்டும் அது சாத்தியம். இதுவே நல்லனவற்றை நினைப்பதற்கு உங்களுக்கு என்ன வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? ஒன்றுமே தேவையில்லை. எண்ணங்களை நினைப்பதற்கு எதுவும் நமக்குத் தேவையில்லை என்பதை எண்ணி எண்ணி பார்க்கையில் சிந்தை குளிர்கிறது. படைப்பில் ஒரு உன்னதம் இதுதான் என்று கருதுவேன் நான்.

Siragu ennangal article4

உங்கள் எண்ணங்களை முதலில் சீர் படுத்திக் கொள்ளுங்கள், பிறகு அந்த எண்ணங்களே நல்ல பேச்சாய் விளைகின்றன. அந்த பேச்சையும் வாக்குறுதிகளையும் ஒட்டியே உங்கள் செயல்கள் அமைகின்றன. இதன் மூலமாக நீங்கள் உங்களுக்குள் ஒரு நல்ல பழக்கத்தை வளர்த்துக் கொள்கிறீர்கள். நாளடைவில் இந்த பழக்கமே உங்கள் குணாதிசயங்கள் ஆகிப் போகும் அளவிற்கு மாற்றம் கண்டு விடுவீர்கள். நீங்கள் இதைத் தொடர்ந்து செய்யும் பொழுது உங்களைச் சுற்றி ஏமாற்றங்கள் இருக்காது,போய் இருக்காது, துன்பம் இருக்காது என்றெல்லாம் கூற மாட்டேன். ஆனால் இவையாவும் உங்களை நெருங்காத வண்ணம் உங்கள் குணாதிசயங்கள் உங்களை அரண் போலக் காக்கும்.

இன்றைக்கு தேதியைக் குறித்து வைத்துக் கொண்டு ஆரம்பியுங்கள். இன்று முதல் நல்லனவற்றையே நினைப்பேன் என்று! பிறகு பாருங்கள் உங்கள் வாழ்வின் ஒளிமயத்தை!
வாழ்க வளமுடன்.


செல்வக்குமார் சங்கரநாராயணன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “எண்ணங்களே எல்லாம்”

அதிகம் படித்தது