மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

அவசியமே அத்யாவசியம்

செல்வக்குமார் சங்கரநாராயணன்

Sep 3, 2016

Siragu avassiyam2

வாழும் வாழ்க்கையில் உறவுகளுக்குள்ளும், சமூகத்திற்குள்ளும்  பலதரப்பட்ட முரண்கள் ஏற்படுகின்றன. ஏற்படுகின்றன  என்பதை விட ஏற்படுத்திக்கொள்கிறோம் என்பதே மறுக்க முடியாத உண்மை. இங்கே நாம் வாழ்வதற்கு எவையெல்லாம் முக்கியமாக  வேண்டுமோ அவையெல்லாம் நமது தேவைகள் அன்றி எவையெல்லாம் வேண்டுமோ, அவையெல்லாம் தேவைகள் என்று சொல்லுதல் நலமன்று. இப்படிச் சிந்தித்ததன் விளைவுதான் நாம் பலதரப்பட்ட மனச் சுமைகளில் உழன்று கொண்டிருப்பதற்கு முக்கியக் காரணமாகவும் இருக்கிறது.

நம்மில் பலருக்கு, தேவை என்பதற்கும்  வேண்டும் என்பதற்கும் இடையே அடிப்படைப் புரிதல்கள் இல்லாத நிலை நிலவி வருகிறது. இதை இப்படிப் பார்க்கலாம், ஒரு வீட்டிற்கு ஒரு இருசக்கர வாகனம் தேவை என்று வைத்துக் கொண்டால் அது வாங்கப்படவேண்டிய ஒன்றுதான். ஆனால் அதே சமயத்தில் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் இருசக்கர வாகனங்கள் வேண்டும் என்பதில்  முரண்பாடுகள் எழுகிறது. ஏனென்றால் அது அவசியமற்ற ஒன்றும் கூட. தேவைகளை அறிந்து எப்பொழுதெல்லாம் நீங்கள் செயலாற்றுகிறீர்களோ அப்பொழுதெல்லாம் அங்கு துன்பத்திற்கு இடம் இருப்பதில்லை. மாறாக உங்கள் விருப்பத்திற்கு இணங்கி வேண்டும் என்பதற்கு மறுப்பின்றி செவிசாய்க்கும் பொழுதுகளில்தான் சில கசப்புகளைத் தேடிப்போய் சுவைக்க வேண்டியதாய் இருக்கிறது.

எல்லா மனிதரிடமும் தன் தேவையைத் தானே பூர்த்தி செய்யும் சக்தி என்பது இருக்கிறது. அப்படி இல்லையென்றாலும் கூட அதைப் பெற்றுவிடும் ஆற்றலும் அவனிடத்தில் இருக்கிறது. ஆனால் எப்பொழுது தேவைகளைத் தாண்டி அதிகம் வேண்டும் என்று செல்கிறானோ அப்பொழுதே அவனுக்கு அடுத்தடுத்த தேவைகளும் கிடைக்காமல் போய்விடுகிறது என்பது அபாயகரமான உண்மை. நான் திரும்பத் திரும்ப சொல்வதெல்லாம் இது ஒன்று தான். தேவை என்பது அத்யாவசியாமனது அவசியமானது, அது இல்லையென்றால் நம் வாழ்க்கைச் சக்கரம் அன்றாடம் சுழலாது என்பதற்குள் அடக்கம். இந்த வேண்டும் என்பதை நீங்கள் எப்பொழுதேனும் உங்களை சமரசம் செய்து கொண்டு பெற்றுக் கொள்ளலாம். ஆனால் தேவைகளில் நம்மால் சமரசம் செய்யவே முடியாது. இதைத்தான் நீங்கள் உணர முனைய வேண்டும்.

Siragu avassiyam1

கோடைகாலத்தில் விசிறி என்பது அவசியமான ஒன்று, அது மின் விசிறியாக இருந்தாலும் நலமே. இக்காலக் கட்டத்தில் மின் விசிறி இல்லாத வீடுகளும் இல்லை எனலாம். ஏனென்றால் அது நம் தேவைக்குள் வந்து சேர்கிறது. இதை நீங்கள் வாங்கிக் கொள்வதில் எவ்வித சமரசமும் செய்யக் கூடாது. ஆனால் அண்டை வீட்டார் வீட்டில் குளிரூட்டி வாங்கி இருக்கிறார் என்ற ஒரே காரணத்திற்காக, நீங்களும் அது உங்களுக்கு வேண்டும் என்று நினைத்து விட்டால் அங்கேதான் எழுகிறது சில விபரீதங்கள். ஒன்று அதற்கு செய்யக்கூடிய முதலீடுகள் கடனாய் இருக்கும் பட்சத்தில் அதனால் விளையும் பாதிப்புகள் ஒரு புறம். மற்றொரு புறம், அனைவருக்கும் மருத்துவ ரீதியாக குளிரூட்டி ஒத்துக் கொள்வது கிடையாது, சிலருக்கு அரை வெப்பநிலை மாறினாலே உடல் சூடேறும், சிலருக்கு குளிரூட்டிகளால் தோல் சம்பந்தப்பட்ட ஒவ்வாமையும் ஏற்படும். ஆனால் நாம் இதையெல்லாம் கவனத்திற் கொள்வதேயில்லை. ஏனென்றால் வேண்டும் என்பது நம் கண்களை மறைத்து அரை நூற்றாண்டுகளாயிற்று. இதிலிருந்து உங்களை யாரும் விடுவிக்க முடியாது. நீங்கள்தான் விடுவித்துக் கொள்ள வேண்டும்.

நான் படித்த உதாரணத்தை உங்களுடன் பகிர்கிறேன். ஏனென்றால் அது எனக்கு சில செய்திகளை வழங்கியது.

ஒரு வகுப்பில் பயின்ற மாணவர்கள் சில வருடங்கள் கழித்து தனது ஆசிரியரை சந்திக்க வேண்டி அவரது இல்லத்திற்குச் செல்கின்றனர். அப்பொழுது அந்த ஆசிரியர்  காலிக் கோப்பைகளுடன் வருகிறார், அதை அவர்கள் முன்னே வைத்துவிட்டு உள்ளே சென்று குடிப்பதற்காக தேநீர் எடுத்து வரச் செல்கிறார். அப்பொழுது வந்திருந்தவர்கள் அனைவரும் அதிலிருந்த கோப்பைகளில் இந்த நிறம் எனக்கு, அந்த நிறம் உனக்கு என்றவாறாக எடுத்து வைத்து அமர்ந்திருந்தனர். இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த ஆசிரியர் கையில் தேநீர் குவளையுடன் அருகில் வந்து கேட்டார், நீங்கள் அனைவரும் இன்றளவும் மாறவேயில்லையா என? இதைக் கேட்ட மாணவர்கள் அனைவரும் ஏன் அப்படிக் கேட்கிறீர்கள் என்று வினவினர். அதற்கு ஆசிரியர், நான் கையில் என்ன வைத்திருக்கிறேன் என்று தெரியாது அது தேநீரோ, தண்ணீரோ அல்லது குளிர்பானமோ. அதே சமயத்தில் அதை நீங்கள் சுவைத்தும் பார்க்கவில்லை. இப்படியிருக்கும் பொழுது நீங்கள் அடித்துப் பிடித்து  எடுத்துவைத்திருக்கும் அந்த காலிக் கோப்பை இதன் சுவையை மாற்றுமா? என்று கூறினார். அதற்கு அவர்கள் ஒவ்வொருவரும் சற்றே பேச்சின்றி அமர்ந்திருந்தனர். இது தான், தேவையின் மகத்துவத்தை உணர்த்துவது. இதை விட தேவையின் மகத்துவத்தை உணர்த்தவும் இயலாது என்றே நான் என்வரையில் நம்பிக்கொண்டிருப்பதும் கூட.

தேவைகள் அனைத்தும் வேண்டுவனவே அன்றி வேண்டுவன எல்லாம் தேவைகள் அல்ல.
வாழ்க வளமுடன் !


செல்வக்குமார் சங்கரநாராயணன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “அவசியமே அத்யாவசியம்”

அதிகம் படித்தது