மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஆதரவற்றோர் பள்ளியில் சீணு

வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

Nov 5, 2016

siragu-aadharavatror

“அப்பா, அம்மாச்சி வீட்ல இருக்கிற, அந்த சீணு பையன் நம்ம அம்மாவை அம்மா அம்மான்னு கூப்பிட்டு மடில உட்காரான்பா, நானும் அண்ணனும் அவன தள்ளி விட்டுட்டோம்பா” என்று கண்களை விரித்தப்படி சொன்னாள் ஐந்து வயது தங்கம்.

“அப்படியா கண்ணு, சரி நீங்க போய் விளையாடுங்க” என பிள்ளைகளை வெளியே அனுப்பிய குமரன், அஞ்சலையிடம் “எத்தன தடவ சொல்லிருக்கேன் அந்தப் பையன் அங்க இருக்கும் போது புள்ளைகள அங்க அழைச்சிட்டு போகாதன்னு, அப்படியே கூட்டிட்டுப் போனாலும் அவன கொஞ்சக்கூடாதுன்னு சொல்லிருக்கேன்ல, என் புள்ளைங்க முன்னாடி அவன் உன்ன அம்மான்னு கூப்பிடக் கூடாதுன்னு எத்தன தடவை சொல்றது? ” எனச் சீறினான்.

“இல்லங்க அவன் தான் ….” என இழுத்தாள் அஞ்சலை

“வாய மூடுடி, இனிமே அவன் உன்ன அம்மான்னு கூப்பிட்றத புள்ளைங்க சொன்னா தொலைச்சிடுவேன்” என அதட்டி விட்டு வெளியே சென்றான் குமரன்.

அஞ்சலை அமைதியானாள். அவள் நெஞ்சம் வெடித்துவிடும் போல் இருந்தது. ஓ வென அழத் தோன்றியது அவளுக்கு. கண்களில் பெருகிய கண்ணீரை கட்டுப்படுத்திக் கொண்டாள்.

“இங்க பாரும்மா என்னால அந்த மனுசன்கிட்ட ஏச்சு வாங்க முடியல. என்னைய என்ன பண்ண சொல்ற? நீ எப்படியாச்சும் அவனை வளத்துக்க. என்னால முடிஞ்ச பணத்தக் கொடுக்கறேன், அவ்ளோதான் முடியும், இந்த வாழ்க்கையாவது எனக்கு நிலைக்கனும்” என விசும்பிய அஞ்சலையைத் தேற்றினாள் கண்ணம்மா.

” இங்க பாரு அஞ்சலை, உனக்கு தெரியாதது இல்ல, உங்க அண்ணனும் அண்ணியும் என்னையும், உன் புள்ளையையும் கொடுமை பண்றாங்க. அந்தப் புள்ளைக்கு ஒரு வாய் சோறு கூட நான் போட்டாதான் உண்டு. முந்தா நாள் மழைல மொட்டை மாடில போர்வை கூட இல்லாம இருந்தோம். புள்ள பாவம் குளிருல நடுங்கிட்டான். எப்படியோ அஞ்சாவது வர படிக்கவச்சுட்டேன். ஏதோ நான் நாலு வீட்ல பாத்திரம் தேச்சு எம் பேரன காப்பாத்தறேன். அதுவும் என் உடம்புல வலு இருக்குற வரை செய்வேன் அதுக்கப்புறம் அவன் நிலமய யோசிச்சு பாத்தியா?” என்ற கண்ணாமாவிடம்,

“நான் என்ன பண்ண முடியும்? நீ கட்டி வச்ச பொறம்போக்கு கைவிட்டு ஓடிட்டான். புள்ளையோட தனியா தவிச்சப்ப நான் கட்டிக்கிறேன்னு அந்த மளிகைக்கடை குமரன் சொல்லலன்னா என் நிலம என்னவாயிருக்கும். ஆனா இந்த புள்ள மட்டும் உங்க ஆத்தாக்கிட்ட இருக்கட்டும்னு சொல்லி கண்ணாலம் பண்ணினான். நானும் காலப் போக்குல சீணுவ ஏத்துப்பான்னு நினைச்சேன். ஆனா அவனுக்குன்னு ரெண்டு புள்ள பெத்துக் கொடுத்ததும் அவனுக்கு சீணுவ ஏத்துக்க மனசே இல்ல. அதுங்களும் ஆத்தான்னா அது எங்களுக்கு மட்டும்தான்னு அடம் புடிக்குதுங்க. என்னத்த செய்ய? வாழாவெட்டியா இருந்து ஊரு பேச்ச வாங்க மனசில்லாம கிடச்ச வாழ்க்கைய வாழணும்னு தான் போராடுறேன்.” என மூக்குச் சிந்தினாள் அஞ்சலை.

siragu-aadharavatror1

“சரி விடு அஞ்சலை. சீணுவ என் உசிரு இருக்குற வர நான் பாத்துப்பேன். நீ உன் வாழ்க்கையைப் பாத்துக்க” என்றாள் கண்ணம்மா விரக்தியோடு.

அஞ்சலை போவதையே ஏக்கத்தோடு சீணு பார்த்துக்கொண்டிருந்தான். உள்ளே வந்து கண்ணம்மாவிடம், “அம்மாச்சி ” என அழைத்தான்,
“என்ன ராசா?” என அழுத கண்களை துடைத்தப்படி கண்ணம்மா கேட்டாள்,
” ஏன் அம்மாச்சி அழுவுற?”
“என்னய்யா சொல்ல, உன்ன பெத்தவளுக்கு உன்ன வளக்க முடியல. அவள பெத்த என்னால உன்ன ஒதுக்க முடியல. காலம் தான்யா எல்லாத்துக்கும் முடிவு சொல்லணும்”, என சீணுவை கட்டிக் கொண்டு அழுதாள் கண்ணம்மா.

“எப்படியாவது நீ நல்ல படிக்கணும் ராசா. அப்பத்தான் இந்த கிழவிக்கு சந்தோசம். ஒழுங்கா நேர நேரத்துக்கு சாப்பிடு. அடம் புடிக்காத. அம்மாச்சி உன்ன வந்து மாசம் ஒரு தடவ பாக்குறேன். அப்புறம் ராசா … அம்மா அப்பா இல்லாதவங்கள தான் இங்க சேத்துப்பாங்கன்னு ராமாயி கிழவி சொல்லுச்சு. அதான் ராசா உனக்கு யாரும் இல்லன்னு இங்க சேத்துவுட்டேன். மறந்து கூட உன் அம்மாவப் பத்தி சொல்லிடாதா ராசா. உங்க மாமனும் அத்தையும் நான் செத்தா உன்னைய தெருவுல விட்ருவாங்க அய்யா. அதான் இந்தப் பொய்யச் சொல்லி உனக்கு இங்க இடம் வாங்கினேன். 12ம் வகுப்பு வர இவங்களே படிக்க வச்சிடுவாங்க. நீ நல்ல படிச்சா உன்ன பெரிய படிப்பெல்லாம் படிக்க வைப்பாங்க. அதனாலதான் அம்மாச்சி பொய் சொல்லிட்டேன், மன்னிச்சிடு ராசா” என்ற கண்ணம்மாவிடம்,
“நீ பொய் சொல்லல அம்மாச்சி. உண்மைய தான சொன்ன” என கூறிவிட்டு ஆதரவற்றோர் பள்ளியின் தங்கும் விடுதிக்குள் சென்றான் சீணு.

கண்ணம்மா கலங்கிய கண்களோடு அவள் பேரனையே பார்த்துக் கொண்டு நின்றாள்.


வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஆதரவற்றோர் பள்ளியில் சீணு”

அதிகம் படித்தது