மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

இன்றைய இளம் வயது குழந்தைகளின் பயணம் எதை நோக்கி……

நிகில்

Nov 12, 2016

இன்றைய இளம் வயது குழந்தைகளின் பயணம் ஏராளமான சவால்கள் நிறைந்தது என பள்ளிக் குழந்தைகளுக்கு ஆலோசனை செய்து வரும் வழக்கறிஞர் பத்மப்ரியா ஞானசேகரன் சொல்கிறார்.
இது பற்றி அவரிடம் விரிவாகப் பேசினோம்.

padmapriya

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றுகிறேன். இன்றைய இளம் வயது குழந்தைகள் வாழ்க்கையில் எதிர்க்கொள்ளும் சவால்கள் என்ன?, அதிலிருந்து அவர்கள் தப்புவது எப்படி? என்பதை ஒவ்வொரு பள்ளிகளுக்கும் சென்று அவர்களை சந்தித்து உரையாடுவது எனது சமூகப்பணி.

பெரும்பாலும் இன்று நகரங்களைப் பொறுத்தவரை கணவன்-மனைவி வேலைக்குச் செல்பவர்களாக இருக்கிறார்கள். குழந்தையோடு அவர்கள் நேரம் கழிப்பது என்பது மிகவும் குறைவு தான். மேலும் குழந்தைக்கு என்ன தேவையோ அதனை உடனுக்குடன் வாங்கிக் கொடுத்துவிடுகிறார்கள். இன்றைய குழந்தைகள் படிப்பதற்கு தேவையான விசங்களைத் தவிர்த்து, பொழுது போக்கிற்காக அம்மா, அப்பாவிடம் கேட்டு பெறும் விசயங்கள்தான் அதிகமாக உள்ளன. எடுத்துக்காட்டாக மடிக்கணினி, அலைபேசி, இரு சக்கர வாகனம் என இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

இன்றைய தொழில் நுட்பம் என்பது புலி வாலைப் பிடித்த கதை தான். அதை சற்று கவனக்குறைவாக பயன்படுத்தினாலும் நம்முடைய வாழ்க்கையை காலி செய்து விடும்.

siragu-teen-age4

சமீபத்தில் பள்ளி ஒன்றிற்காக ஆலோசனை வழங்க சென்ற போது 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் என்னிடம் பேச வேண்டும் என்றார். நானும் நேரம் ஒதுக்கி அவரிடம் பேசினேன். பேசுதவற்கு முன்பே அழ ஆரம்பித்தார். தான் தற்கொலை செய்துகொள்ள இருப்பதாக என்னிடம் சொன்னார். என்னவென்று காரணம் கேட்டேன். அம்மா, அப்பா இருவரும் உயர் பதவியில் இருக்கிறார்கள், வீட்டில் நானும் எனது அண்ணனும் தான். பயிற்சிக்கு(Tuition) சென்ற இடத்தில் பக்கத்துத் தெருவிலுள்ள மாணவன் ஒருவன் என்னிடம் வந்து பழகினான், நானும் அவனுடன் நட்பாகத்தான் பழகினேன். நாளடைவில் அவன் என்னை காதலிப்பதாகத் தெரிவித்தான்.

நீ என்னுடைய காதலை ஏற்கவில்லை என்றால் உன் கண் முன்னே கத்தியை வைத்து கையை கிழித்துக்கொள்வேன் என மிரட்டினான். உன் அம்மா, அப்பாவிற்கு பணம் சம்பாதிக்க மட்டும் தான் தெரியும், உன்னிடம் அன்பு காட்டத் தெரியாது, நான் மட்டும்தான் உன்னிடம் எப்போதும் அன்பு காட்டுவேன் என ஆசை வார்த்தைகள் சொல்லி என்னை வசீயப்படுத்தினான். இருவரும் வாட்ஸ் அப்பின் மூலமாகப் பேசிக்கொள்ள ஆரம்பித்தோம். நீ என்னை காதலிப்பது உண்மையானால் நான் சொல்லும்படி உன்னை ரகசியமாக படம் பிடித்து அனுப்பு என வற்புறுத்தினான். நான் முடியாது என்று சொல்லியும் கேட்கவில்லை, கத்தியால் அவன் கையை என் கண்முன்னே அறுத்துக்கொண்டு துடித்தான். வேறு வழியில்லாமல் அவன் சொல்வதைச் செய்தேன்.

siragu-teen-age1

அவன் சொன்னபடி படங்களை எடுத்து அவனுக்கு அனுப்பினேன். இதுவே என்னுடைய வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறு என்பது தெரியாது. இந்தப்படங்களை வைத்தே அவன் என்னை மிரட்ட ஆரம்பித்தான். ஆரம்பத்தில் என்னிடமிருந்து பணம் கேட்டான், நாளடைவில் என்னுடைய வீட்டிலிருந்து பொருட்களைக் கொண்டு வந்து தருமாறு கூறினான். இப்போது என்னுடைய பள்ளி வாசலிலேயே என்னுடைய ரகசிய படங்களை சுவரொட்டியில் ஒட்டுவேன் என மிரட்டுகிறான். அப்படி அவன் ஒட்டாமல் இருக்க வேண்டும் என்றால் ஐம்பதாயிரம் பணம் கொண்டு வா என மிரட்டுகிறான் என்றார்.

அவன் அப்படி செய்துவிட்டால் என்னுடைய மானம் போய்விடும். பள்ளியிலிருந்து என்னை நீக்கி விடுவார்கள். அம்மா, அப்பாவிடம் என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. என்னை நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் என்று கெஞ்சினார்.

முதலில் அந்தப் பையனுடைய தொடர்பு எண் மற்றும் அவன் வீட்டு முகவரியைப் பெற்றுக்கொண்டேன். முதலில் இந்த விசயத்தை உன் அம்மா, அப்பாவிடம் சொல் அவர்கள் என்ன பதில் சொல்கிறார்கள் பார்ப்போம் என்று சொல்லி அனுப்பினேன். அந்தப் பெண்ணுடைய அலைபேசி எண்ணையும் வாங்கிக் கொண்டேன்.

siragu-teen-age2

முதலில் அவள் அம்மா, அப்பாவிடம் விசயத்தைச் சொன்னதும் அவர்கள் பெரும் அதிர்ச்சிடையந்துவிட்டனர். என்னிடம் இந்த விசயத்தை அவள் சொன்னதைச் சொன்னதும், என்னை அவளின் பெற்றோர்கள் தொடர்பு கொண்டனர். நான் அந்தப் பெண்ணின் அம்மா, அப்பா-வையும் அழைத்துக்கொண்டு அந்தப் பையனின் வீட்டுக்குச் சென்றேன். அவர்களின் அம்மா, அப்பாவிடம் விசயத்தைச் சொன்னேன். உங்கள் பையனிடம் உள்ள புகைப்படங்களை எங்களிடம் ஒப்படைத்துவிடுவது நல்லது. இல்லையென்றால் காவல் நிலையத்தில் புகார் செய்வோம்.

உங்கள் மகனின் எதிர்கால வாழ்க்கை கேள்விக் குறியாகிவிடும் என லேசாக மிரட்டியவுடன், அந்தப்பையனை வரவழைத்தார்கள். ஆனால் அவனோ எனக்கு அந்தப்பெண் யார் என்றே தெரியாது என்றான். உடனே அந்தப் பெண் தன் அலைபேசியிலிருந்து பரிமாறப்பட்ட படங்களின் விபரத்தைக் காட்டி, உங்கள் மகன் பயன்படுத்திய அலைபேசியை எடுத்து வாருங்கள், அவன் சொல்வது பொய் என்பதை நீருபிக்கிறேன் என்று சொன்னதும் அவர்கள் அவனுடைய செல்போனை எடுத்துவந்தார்கள். அந்த அலைபேசியைப் பார்த்ததும் அதிர்ச்சியாக இருந்தது. காரணம் அவன் இது போன்று பல படிக்கும் சிறுமிகளை ஏமாற்றியதும் தெரிய வந்தது.

siragu-teen-age3

இருவரின் எதிர்கால நலன் கருதி அந்த சிறுவனை கண்டித்து விட்டுவிட்டோம். இப்போது அந்த பாதிக்கப்பட்ட சிறுமி பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வுக்குத் தயாராகி வருகிறாள். எனவே அலைபேசியை வாங்கிக்கொடுக்கும் பெற்றோர்கள், குழந்தைகள் அதனை சரியாக பயன்படுத்துகிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டும். மேலும் முகநூல், டுவிட்டர் போன்றவற்றை பயன்படுத்தாமல் தவிர்ப்பது நலம். அப்படியே பயன்படுத்தினாலும் அவர்கள் இடும் பதிவுகளை நாள்தோறும் கண்காணிக்க வேண்டும். அவர்களின் நண்பர்கள் பட்டியலில் யார் யார் இருக்கிறார்கள் என்பதை ஆராய்வது கட்டாயம் அவசியமாகும்.

இன்றைய வளர்ந்து வரும் தொழில்நுட்பமே இளம் வயது குழந்தைகளுக்கு பெரும் சவாலாக உள்ளது என்பதற்கு இதுவே தக்கச் சான்று.


நிகில்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “இன்றைய இளம் வயது குழந்தைகளின் பயணம் எதை நோக்கி……”

அதிகம் படித்தது