மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சாதி மறுப்பு திருமணங்கள் குறித்து உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பு – ஒரு பார்வை !!

வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

Nov 19, 2016

siragu-castes1

siragu-ambedkarஇந்திய நாட்டில் 6000 க்கும் மேற்பட்ட சாதிகள் இருப்பதாக உச்ச நீதி மன்றம் ஒரு தீர்ப்பில் கூறியுள்ளது. மிக வலுவாக இங்கே சாதியக் கட்டமைப்பு அமைக்கப்பட்டிருக்கின்றது. அண்ணல் அம்பேத்கர் கூறியது போல சாதியம் இங்கே ஏணி மரப்படிகள் போல் இருக்கின்றன. தனக்கு மேல் தன்னை அடக்கி ஆதிக்கம் செலுத்தும் கூட்டத்தைப் பற்றி கவலையின்றி தான் ஆதிக்கம் செலுத்தவும் – அடக்கி ஆண்டிடவும் மக்கள் இருக்கின்றார்கள் என்ற மன நிலையே இன்றும் சாதியை நீர்த்துப் போகாது வைத்திருக்கின்றது.

அந்த அமைப்பை வேரோடும், வேரடி மண்ணோடும் சாய்க்க வேண்டும் என்றால் காதல் மணம் புரிந்தால் மட்டுமே சாத்தியப்படும் என்ற நிலைப்பாடு சாதியை மறுப்பவர்களிடம் உண்டு. சாதி மறுத்து காதல் மணம் புரிபவர்களை கொடூரமாகக் கொன்று விடும் நிலை இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. அண்மையில் சங்கர் என்பவர் ஆதிக்க சாதி பெண்ணை திருமணம் செய்தார் என்பதற்காக கொடூரமாக நடுசாலையில் வெட்டிக் கொல்லப்பட்டார். பல இடங்களில் காவல் துறையினர் காதல் மணம் புரிந்தவர்களுக்கு உரிய பாதுகாப்புத் தர மறுக்கும் நிகழ்வுகளும் நடக்கின்றன. சமூகம் சாதிமறுப்பு திருமணங்களை எப்படி பார்க்கிறது என்பது ஒரு புறம் இருந்தாலும், இந்திய உச்சநீதிமன்றத்தின் பார்வை என்ன என்பதைப் பற்றி பார்க்கலாம்.

siragu-castes6

2006 ஆம் ஆண்டு லதா சிங் எதிர் உத்திரபிரதேசம் என்ற வழக்கில் சாதி மறுப்பு திருமணங்கள் இந்து திருமணச் சட்டம்(Hindu Marriage Act) அல்லது வேறு எந்தச் சட்டத்தாலும் தடை செய்யப்படவில்லை. சாதி மறுப்பு திருமணங்களை ஏற்காத உறவினர்கள் அதிகபட்சம் அவர்களிடம் எந்த உறவும் வைத்துக் கொள்ளாமல் இருக்கலாமே தவிர, அவர்களை கொலை செய்ய அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை என நீதியரசர்கள் மார்கண்டேய கட்ஜு மற்றும் கியான் சுதா மிஸ்ரா தாங்கள் வழங்கிய தீர்ப்பில் கூறினார்கள். மேலும், “சாதி மறுப்பு திருமணங்கள், இந்திய நாட்டில் உள்ள சாதியத்தையும் அதனை வற்புறுத்தும் கட்டமைப்பையும் மறுத்து மக்களை ஒற்றுமைப்படுத்தும். சாதிய அமைப்பு இந்திய நாட்டின் முன்னேற்றத்திற்கு இருக்கும் பெரும் தடை. அது ஒழிக்கப்பட வேண்டியது அவசியம்”, என்றனர்.

siragu-castes5“இந்தியா போன்ற மக்களாட்சி உள்ள நாட்டில், ஒரு நபர் சட்டப்படி திருமண வயது அடைந்ததும் அவர்கள் விரும்பும் இணையர்களை திருமணம் செய்யும் உரிமை இருபாலருக்கும் உள்ளது. கெளரவக் கொலைகளில் எந்த மாண்பும் இல்லை. அவை உண்மையில் காட்டுமிராண்டித்தனமான நாம் வெட்கப்பட வேண்டிய கொலைகள்”. மேலும், காப் பஞ்சாயத்துகள் கங்காரு நீதிமன்றம் போல செயல்படுகின்றன. அவர்கள் இந்த நாட்டின் நீதித் துறைக்கு எதிராக செயல்படும் அமைப்புகள். சில காப் பஞ்சாயத்துகள் சாதி மறுத்து திருமணம் செய்து கொள்ளும் தம்பதியினரை கொன்று விட வேண்டும் என இரு தரப்பினரையும் தூண்டி விடுவதையும் கேள்விப்படுகின்றோம். இப்படி தனி மனித உரிமையில் தலையிடும் காப் பஞ்சாயத்துகளை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்று நீதியரசர் கட்ஜு கூறினார்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் சரத் 21 இன் படி ஒருவரின் தனிப்பட்ட உரிமை பாதுகாக்கப்படும் எனில், அதில் தான் விரும்பியவரை திருமணம் செய்து கொள்ளும் உரிமையும் இந்திய நாட்டில் வாழும் இருபாலருக்கும் உள்ளது என்பது தெளிவு, என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

இந்த தீர்ப்பு தரப்பட்டு பத்து ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும் இன்றும் ஆணவக் கொலைகள் நடப்பது மிகவும் கண்டனத்திற்குரியது. அது மட்டுமல்ல, கடந்த 3 ஆண்டுகளில் தமிழ் நாட்டில் மட்டும் சாதி மறுப்பு திருமணம் செய்த 81 பேர் இறந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆணவக் கொலைகள் நடந்தால், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரும், காவல் கண்காணிப்பாளரும்தான் பொறுப்பேற்க வேண்டும். அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள போதும் ஆணவக் கொலைகள் தொடர் நிகழ்வாகவே இருக்கின்றன.

siragu-castes3

“யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே”.

என குறுந்தொகை பாடல் ஒன்று உண்டு. என்னுடைய தாயும் உன்னுடைய தாயும் உறவினர்கள் அல்லர். என்னுடைய தந்தையும் உன்னுடைய தந்தையும் எவ்வகையிலும் உறவினர்கள் அல்லர். நானும் நீயும் கூட ஒருவரையொருவர் அறிந்ததில்லை என்றாலும், நம் நெஞ்சம் செம்புலத்திற் பெய்த நீர் போலக் கலந்து விட்டது. எனவே நான் உன்னைப் பிரிவேன் என வருந்த வேண்டாம் எனத் தலைவன் தலைவியைத் தேற்றுவதாக அந்தப் பாடல் அமைந்திருக்கும். சாதி என்ற அமைப்பின் இடர் இல்லாது திருமணம் நடந்த முறையை இப்பாடலின் மூலம் நாம் அறிய முடியும்.

அவ்வழி வந்த தமிழ்ச்சமூகம் இன்று சாதியின் கொடிய பிடிக்குள் சிக்கி சீரழிந்து கொண்டிருக்கின்றது.


வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சாதி மறுப்பு திருமணங்கள் குறித்து உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பு – ஒரு பார்வை !!”

அதிகம் படித்தது