மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

இந்திய உச்ச நீதிமன்றமும் தேசிய கீதமும்

வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

Dec 3, 2016

siragu-national-anthem4

அண்மையில் நீதியரசர்கள் தீபக் மிஸ்ரா மற்றும் அமிதாவ ராய் கொண்ட குழு தேசிய கீதம் திரையரங்குகளில் படம் தொடங்கும் முன் இசைக்கப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. தேசிய கீதம் ஒலிக்கும்போது திரையில் தேசிய கொடி இருக்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றது எனச் சொன்னால் மிகையன்று. பொழுதுபோக்கிற்காக படம் பார்க்க வரும் மக்களிடம் கண்டிப்பாக தேசிய கீதம் இசைக்கும்போது எழுந்து நிற்க வேண்டும் எனக் கூறுவது அறிவானதா? அது பல பிரச்சனைகளையும், சண்டைகளையும் உருவாக்காதா? அதே போன்று தாய்நாட்டின் மீதான பற்று என்பது நிர்பந்திப்பதால் வந்து விடுமா?  என ஒரு புறம் கேள்விகள் கேட்கப்படுகின்றது.

siragu-national-anthem2

இது ஒரு புறம் இருக்க, 1962 ல் இந்திய – சீனா போரின் போது திரையரங்குகளில் படம் முடிந்தவுடன் தேசிய கீதம் இசைக்கப்பட்ட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது. ஆனால் மக்கள் அதை பொருட்படுத்தாத காரணத்தால் அந்தப்பழக்கம் நிறுத்தப்பட்டது. மீண்டும்  மகாராஷ்டிரா மாநிலத்தில் 2003 இல் போடப்பட்ட உத்தரவின் படி திரையரங்குகளில் படம் தொடங்கும் முன் தேசிய கீதம் இசைக்கப்படவேண்டும் என வலியுறுத்தப்பட்டது. நாட்டின் பல்வேறு இடங்களில் பல பிரச்சனைகளைக்கட்டாயமாக்கப்பட்ட தேசியகீதம் ஏற்படுத்தியுள்ளது. கோவா மாநிலத்தின் பானாஜி எனும் இடத்தில் எழுத்தாளர் சாலில் சத்துருவேதி முதுகு தண்டில் காயம் காரணமாக திரையரங்கில் தேசிய கீதம் இசைக்கும் போது எழுந்து நிற்காதபோது கடுமையாகத்தாக்கப்பட்டார். இது போன்ற வன்முறை சம்பவங்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது எனினும் உச்சநீதிமன்றம் தேசிய கீதம் தொடர்பான முக்கிய வழக்கில் முப்பது வருடங்களுக்கு முன் என்ன தீர்ப்பு தந்தது எனப் பார்ப்பது அவசியம்.

siragu-national-anthem3

1985 இல் கேரள மாநிலத்தைச் சேர்ந்த பிஜோ இம்மானுவேல் எதிர் கேரளா எனும் வழக்கில் இம்மானுவேல் தன் பிள்ளைகள் மூவரை பள்ளியில் கட்டாயமாக பாடப்படும் தேசிய கீதத்தை தன் பிள்ளைகள் பாட மாட்டார்கள், ஏனெனில் அப்படிப்பாடுவது தங்கள் மத நம்பிக்கைக்கு எதிரானது என கூற பள்ளி நிர்வாகம் அதை ஏற்றுக்கொண்டது. அவர்கள் ஜெஜோவா விட்னஸ்ஸ் மத நம்பிக்கை கொண்டோர், அதுவும் கிறித்துவ மதத்தின் ஒரு பிரிவு தான். ஆனால் அந்தப்பள்ளியில் பணிபுரியும் ஒருவர் அதைப்பற்றி வெளியில் கூற அது பெரும் பிரச்சனையாகி கேரள சட்டமன்றத்தில் பேசப்பட்டது. பின் பள்ளி நிர்வாகம் தேசிய கீதத்தை கண்டிப்பாக பிள்ளைகள் பாட வேண்டும் என கூற, அதை மறுத்த பெற்றோர்களிடம் பிள்ளைகளை பள்ளியில் இருந்து நீக்குவதாக கூறினார்கள்.

இமானுவேல் கேரள நீதிமன்றத்தை அணுகியும் தீர்ப்பு அவர்களுக்கு சாதகமாக வராத காரணத்தால் உச்ச நீதிமன்றத்தை அணுகினர். உச்சநீதிமன்றம் அழகான தெளிவான தீர்ப்பு தந்தது. கருத்துரிமை, பேச்சுரிமைக்கு எந்த அளவிற்கு அரசமைப்புச்சட்டத்தில் இடம் இருக்கிறதோ அந்த அளவு ஒருவர் அமைதியாக இருப்பதற்கும் உரிமை உண்டு. அவர்கள் தேசிய கீதம் இசைக்கும் போது அமைதியாக இருந்தாலே போதும், பாடல் பாடவேண்டும் என அவசியம் இல்லை எனத் தீர்ப்பளித்து. இன்றும் இந்தத்தீர்ப்பு மிக முக்கியமானதாகக்கருதப்படுகிறது.

இப்படிப்பட்ட சிறந்த தீர்ப்புகளை வழங்கி மத சிறுபான்மையினரின் உரிமைகளைக்காத்த பெருமை இந்திய உச்ச நீதிமன்றத்திற்கு உண்டு. அண்மையில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு எப்படிப்பட்ட எதிர்விளைவுகளை உண்டாக்கும் என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “இந்திய உச்ச நீதிமன்றமும் தேசிய கீதமும்”

அதிகம் படித்தது