மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

துவக்கநிலை புரோஸ்டேட் புற்றுநோயாளிகளுக்கு நம்பிக்கையூட்டும் புதிய சிகிச்சை முறை

தேமொழி

Dec 24, 2016

siragu-cance-medicine2

அமெரிக்காவில் ஆண்டொன்றுக்கு சுமார் இரண்டு லட்சம் (2,00,000) ஆண்களுக்கு ‘புரோஸ்டேட் சுரப்பி புற்றுநோய்க்கான’ (Prostate cancer/Prostatic carcinoma symptoms) அறிகுறிகள் இருப்பதாக மருத்துவர்கள் கண்டறிகிறார்கள். இங்கிலாந்தில் ஆண்டொன்றுக்கு 46,000 புரோஸ்டேட் சுரப்பி புற்றுநோய் உள்ளவர்கள் கண்டறியப்படுகிறார்கள், அவர்களில் 11,000 பேர் இந்த நோயினால் மரணத்தை எதிர்கொள்கிறார்கள். இனப்பெருக்கத்திற்கு உதவும் வகையில், ஆண்களின் இனப்பெருக்க உறுப்பில், விந்தணுக்களை (sperm) கடத்துவதற்குத் தேவையான ‘விந்துநீரைச்’ (seminal fluid) சுரப்பதில் ஆண்மைச்சுரப்பி என அழைக்கப்படும் புரோஸ்டேட் சுரப்பி (prostate gland) பங்களிக்கிறது.

பொதுவாக புரோஸ்டேட் சுரப்பி புற்றுநோய் அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு நோயாளிகள் நிரந்தரமாக எதிர் கொள்வது ஆண்மைக்குறைவு எனப்படும் ஆண்குறியின் விறைப்புத் தன்மை குறைபாட்டினால் (erectile dysfunction) ஏற்படும் செயலிழப்பின் காரணமாக இல்லறவாழ்வு பாதிக்கப்படுவதும்; சிறுநீர்க்கழிப்பதில் (urination) கட்டுப்பாடின்மை (incontinence) என்ற நிலை ஏற்படுவதுமாகும். இரவில் அடிக்கடி சிறுநீர்க்கழிக்கும் தேவையால் உறக்கம் கெடுவது, சிறுநீரகப்பையில் சேகரிக்கப்பட்ட சிறுநீரை முழுமையாக வெளியேற்றப்பட முடியாமல் போதல், கட்டுப்பாடின்றி சிறுநீர் வெளியேறிவிடுதல், சிற்சில சமயம் சிறுநீரில் உதிரப்போக்கு, சிறுநீர் கழிக்கும் பொழுது வலி எனப் பல தொல்லைகளை அறுவை சிகிச்சையின் பக்க விளைவாக நோயாளிகள் எதிர் கொள்வார்கள்.

siragu-cance-medicine4

மருத்துவம் என்பது பலனையும் பக்கவிளைவுகளையும் கருத்தில் கொண்டு, நோயாளிக்கு ஏற்படும் பாதிப்பை இயன்றவரைக் குறைக்கும் நோக்கில், ஒவ்வொரு நோயாளிக்கும் ஏற்ற வகையில் சிறந்த முடிவைத் தேர்வு செய்து தக்கதொரு சிகிச்சையாக வழங்கப்படுவது. பெரும்பாலோருக்கு புரோஸ்டேட் சுரப்பி புற்றுநோய் மிக மெதுவாகவே உருவாகி முற்றும். எனவே, துவக்க நிலையில் உள்ளவர்களுக்கு பக்கவிளைவுகளினால் ஏற்படும் பாதிப்பினைக் கருத்தில் கொண்டு, அவர்களில் பெரும்பாலோர் சிகிச்சையின்றி கவனிப்பில் மட்டுமே வைக்கப்படுவார்கள். மிக விரைவில் புற்றுநோய் முற்றித் தீவிரமடையும் நோயாளிகளுக்கு மட்டுமே அறுவை சிகிச்சை (surgery), வேதி சிகிச்சை (chemotherapy), கதிர்வீச்சு சிகிச்சை (radiation), இயக்குநீர் சிகிச்சை (hormone therapy) போன்ற அடுத்த நிலை மருத்துவம் வழங்கப்படும்.

அறுவைசிகிச்சையின்றி, எந்தப் பக்கவிளைவுகளும் இன்றி, துவக்கநிலையிலேயே உள்ள ‘புரோஸ்டேட் சுரப்பி புற்றுநோயை’ குணப்படுத்தும் முறை ஒன்றை ஐரோப்பிய மருத்துவக் குழுவினர் அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்தச் சிகிச்சைமுறை புரோஸ்டேட் புற்றுநோயை குணப்படுத்தும் முறையில் மிகவும் நம்பிக்கை தரும் நல்லதொரு மாற்றம் என்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

siragu-cance-medicine

இப்புதிய சிகிச்சை முறையில் ஆழ்கடலின் இருண்டபகுதியில், சூரிய ஒளியே இல்லாத சூழலில் உயிர்வாழும் நுண்ணுயிர்களான பாக்டீரியாக்களைக் கொண்ட மருந்து (WST11) ஒன்று தயாரிக்கப்பட்டு, மெல்லிய ஊசி ஒன்றின் மூலம் நோயாளியின் இரத்தக்குழாய்களில் செலுத்தப்படுகிறது. ஒளியை எதிர்கொள்ளும் பொழுது, அதனால் தூண்டப்பட்டு வினைபுரியத் துவங்கும் ‘ஒளி உணர்’ (light-sensitive) தன்மையுடையவை இத்தகைய பாக்டீரியாக்கள். ஒளியினைச் சக்தியாக மாற்றும் பொழுது பாக்டீரியாக்கள் மேற்கொள்ளும் வேதிவினைச் செயலும், அதன் விளைவாக உருவாகும் வேதிப்பொருளும் புற்று நோய் செல்களை அழிக்கும் தன்மை கொண்டவை. ஒளி உணர் பாக்டீரியாக்கள் கொண்ட இந்த ‘WST11′ என அழைக்கப்படும் மருந்து புரோஸ்டேட் சுரப்பி பகுதியை அடைந்த பிறகு மிக மெல்லிய ‘கண்ணாடி இழைகள்’ (optical fibers) நோயாளியின் உடலுக்குள் செலுத்தப்பட்டு, அதன் வழியாகப் புற்றுநோய் தாக்கப்பட்ட புரோஸ்டேட் சுரப்பி திசுக்களின் மீது சிவப்புநிற ‘லேசர் ஒளிக்கதிர்’ (laser light) பாய்ச்சப்படுகிறது. இதனால், பாக்டீரியாக்கள் ஒளியால் தூண்டப்பட்டு செயல்புரியத் துவங்குகிறது. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட செல்கள் கொண்ட புரோஸ்டேட் சுரப்பி திசுப்பகுதியில் (tumor tissue) உள்ள புற்றுநோய் செல்கள் மட்டும் பாக்டீரியாக்களால் அழிக்கப்படுகின்றன. நோய் பாதிப்பற்ற செல்களுக்கு பாக்டீரியாக்கள் கொண்ட மருந்தால் எந்த விதமான பாதிப்பும் ஏற்படுவதில்லை.

நீண்ட நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கத் தேவையின்றி, மருத்துவ மையங்களில் வெளிநோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை போலவே சிலமணி நேரங்களில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. நோயாளியும் ஓரிரு நாட்களில் குணமடைந்து வழக்கமான பணிகளில் ஈடுபடலாம். அறுவை சிகிச்சையின் பக்க விளைவுகளாக எதிர்கொள்ள நேரும் ஆண்மைக்குறைவு, கட்டுப்பாடற்ற சிறுநீர் போக்கு போன்றவையும் சிகிச்சை முடிந்த மூன்று மாதங்களில் மறைந்துவிடுகிறது. குறிப்பாக இரண்டாண்டுகளுக்குப் பிறகு நோயாளிகள் இத்தொல்லைகளை முற்றிலும் எதிர் கொள்வதில்லை. புற்று நோயும் முழுவதும் மறைந்துவிடுகிறது.

siragu-cance-medicine7

பாக்டீரியாக்களைக் கொண்ட ‘WST11′ மருந்தும், ‘வாஸ்குலார்-டார்கெட்டட் ஃபோட்டோ டைனாமிக் தெரப்பி’ அல்லது ‘விடிபி’ (vascular-targeted photodynamic therapy or VTP)என அழைக்கப்படும் இந்த சிகிச்சை முறையையும் உருவாக்கியது ஒரு தனியார் மருத்துவ ஆய்வு நிறுவனம். ‘ஸ்டீபா பயோடெக்’ (STEBA Biotech) என்னும் இந்தத் தனியார் மருத்துவ ஆய்வு நிறுவனம், இஸ்ரேல் மருத்துவ ஆய்வுக் குழு (scientists at the Weizmann Institute of Science in Israel) ஒன்றுடன் இணைந்து இச்சிகிச்சை முறையை உருவாக்கி உள்ளது. ஐரோப்பாவின் 10 நாடுகளின், 47 வெவ்வேறு நகர்களில் இந்த சிகிச்சை முறையை மருத்துவர்கள் ‘பரிசோதனை முறையில்’ (trial-therapy) முதன்முறையாக மேற்கொண்டார்கள். நோயின் வளர்ச்சி குறித்து தீவிர கண்காணிப்பில் இருந்துவரும் துவக்கநிலை புற்றுநோயாளிகள் மட்டுமே, அவர்களிலும் புதிய சிகிச்சை முறைக்கு ஒப்புதல் அளித்த 413 நோயாளிகளுக்கு மட்டுமே இந்த சிகிச்சை அளிக்கப்பட்டது.

இப்புதிய சிகிச்சை சிறந்த பலனளிப்பதால் சுமார் 50% நோயாளிகளுக்கு முற்றிலும் நோய் நீங்கிவிட்டது (half the patients went into remission), 6% மட்டுமே மேற்கொண்டு அறுவை சிகிச்சை நிலையை எட்டினார்கள். எந்தச் சிகிச்சையும் பெறாமல் ‘ஒப்பிடும் பிரிவு’ (control group)கவனிப்பில் இருந்த 13.5% நோயாளிகளுக்கு மட்டுமே நோய் நீங்கியிருந்தது, அத்துடன் இப்பிரிவில் 30% நோயாளிகள் அறுவைச் சிகிச்சை நிலையையும் எட்டியதன் அடிப்படையில் இந்தப் புதிய சிகிச்சை முறை நல்ல பலனளிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அறுவைசிகிச்சை இன்றி இத்தகைய பலன்தரும் சிகிச்சை முறை புரோஸ்டேட் சுரப்பி புற்றுநோய் மருத்துவத்தில் ஒரு ‘மிகப்பெரும் முன்னேற்றம்’ என இந்த சிகிச்சை முறையை முன்னெடுத்துச் செல்லும் லண்டன் பல்கலைக்கழக மருத்துவர் ‘மார்க் எம்பெர்ட்டன்’ (Mark Emberton, a University College London consultant urologist)கூறியுள்ளார். துவக்கநிலை புரோஸ்டேட் புற்றுநோயாளிகளுக்கு நம்பிக்கையளிக்கும் இந்த சிகிச்சை குறித்த ஆய்வின் முடிவு தற்பொழுது வெளியாகியுள்ள ‘லேன்சட் ஆன்காலாஜி’ மருத்துவ இதழில் (Journal Lancet Oncology) வெளியாகியுள்ளது. இப்பொழுது இந்த சிகிச்சை முறை ஐரோப்பிய மருத்துவ ஆலோசனைக் குழுவின்(the European Medicines Agency – EMA) பரிந்துரைக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்த பிறகு, துவக்கநிலை புரோஸ்டேட் புற்றுநோயாளிகள் பலரும் இச்சிகிச்சையால் பலன் பெறும் வாய்ப்புள்ளது.
____________________________

தகவல் பெற்ற தளங்கள்:

[1] Padeliporfin vascular-targeted photodynamic therapy versus active surveillance in men with low-risk prostate cancer (CLIN1001 PCM301): an open-label, phase 3, randomised controlled trial, Azzouzi, Abdel-Rahmène et al.; The Lancet Oncology

http://www.thelancet.com/journals/lanonc/article/PIIS1470-2045(16)30661-1/fulltext

[2] “Vascular Targeted Photodynamic Therapy for Localized Prostate Cancer.” Lepor, Herbert.; Reviews in Urology 10.4 (2008): 254–261. Print.

[3] Light therapy effectively treats early prostate cancer – University College London News

http://www.ucl.ac.uk/news/news-articles/1216/201216-prostate-cancer-light-therapy#sthash.vQIgUYZG.ei4i3fJ0.dpuf

[4] Prostate cancer laser treatment ‘truly transformative’

http://www.bbc.co.uk/news/health-38304076

படம்:

https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC2615102/bin/RIU010004_0254_fig001.jpg

அறிவியல் கலைச்சொற்கள் உதவி:
தமிழ் இணையக் கல்விக்கழகத்தால் சீராய்வு செய்து வெளியிடப்பட்ட கலைச்சொல் பேரகராதி

http://www.tamilvu.org/library/technical_glossary/html/techindex.


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “துவக்கநிலை புரோஸ்டேட் புற்றுநோயாளிகளுக்கு நம்பிக்கையூட்டும் புதிய சிகிச்சை முறை”

அதிகம் படித்தது