மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

திருமண வயது எட்டாத பெண்களின் திருமணங்கள் – ஒரு பார்வை

வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

Dec 31, 2016

child-marriage-4

இந்தியா போன்று குழந்தைத் திருமணம் அதிகளவில் நடைபெறும் நாடுகளில், அதனைத் தடுக்க திருமணம் செய்து கொள்ளும் இருபாலருக்கும் சட்டப்படி திருமண வயதாகவில்லை எனின் அந்தத் திருமணம் செல்லுமா? செல்லாதா? என்ற குழப்பம் எப்போதும் உண்டு. பெரும்பாலான சமயங்களில் பெண்ணுக்கு 18 வயதாகவில்லை எனின் அந்தத் திருமணத்தை செல்லாத திருமணம் (void marriage) என நீதிமன்றங்கள் அறிவிப்பதில்லை. மாறாக விலக்கத்தக்க (voidable marriages) என்றே நீதிமன்றங்கள் கருதுகின்றது. அப்படி நடந்திடும் திருமணங்களில் அந்தக் குழந்தைத் திருமணத்தில் சம்மந்தப்பட்ட மணமகன் அந்தப் பெண்ணின்  இயற்கை பாதுகாவலராக இருக்க முடியாது. Hindu Minority and Guardianship Act 1956 6(c) இன் படி திருமண வயது வராத மணப்பெண்ணின் கணவன் இயற்கை பாதுகாவலர் என்று இருந்தாலும் Prohibition Of Child Marriage Act 2006 என்ற சட்டத்தின் படி மேலே சொல்லப்பட்ட 6(c) எனும் சட்டம் செல்லத்தக்கதல்ல.

ஒரு பெண் திருமண வயது வரும் முன்னர் ஒருவரை காதலித்து வீட்டைவிட்டு வெளியேறி அவரை திருமணம் செய்துகொண்டால், அந்தப் பெண்ணின் தந்தை ஆட்கொணர்வு மனு நீதிமன்றத்தில் தாக்கல் செய்து தங்கள் மகளை மீட்டுக்கொடுக்கக் கூறுகிறார் என வைத்துக்கொள்ளுங்கள், நீதிமன்றம் என்ன செய்யும்?
அந்தப் பெண்ணை நீதிமன்றம் முன் கொண்டுவர உத்தரவு போடும். அப்படி அந்தப் பெண் வரும் பட்சத்தில் அந்தப் பெண், “நான் விரும்பித்தான் அந்த நபரை திருமணம் செய்து கொண்டேன் யாரும் என்னை கடத்தவில்லை, கட்டாயப்படுத்தவில்லை” என்று கூறினால் நீதிமன்றம் அந்தப் பெண்ணை திருமண வயது வரை அரசு நடத்தும் பெண்கள் விடுதியில் தங்க வைத்து பராமரிக்க உத்தரவு போடும்.
child-marriage-5
கணவனாக இருந்தாலும் திருமண வயது இல்லாத பெண்ணை திருமணம் செய்து கொண்டால் அவன் அப்பெண்ணின் இயற்கை பாதுகாவலர் இல்லை என மேலே பார்த்தோம். அதனடிப்படையில் அந்தப் பெண்ணுக்கு திருமண வயது வந்ததும் அவர் யாருடன் செல்ல விரும்புகிறார் என்பதைப்பொருத்தே திருமணம் செல்லத்தக்க திருமணமாகுமா? ஆகாதா என்பது இருக்கின்றது.

ஒருவேளை பெண்கள் திருமண வயதிற்கு முன் திருமணத்திற்கு கட்டாயப்படுத்தப்படுகின்றனர்  என்றால் அது சட்டப்படி தவறாகும். அதனை ஒரு பெண் எப்படி எதிர்கொள்ள வேண்டும் எனின், அந்த ஊரில் உள்ள மகளிர் காவல் நிலையத்திற்கு எழுத்து வடிவில் அந்தப்பெண்ணை கட்டாயப்படுத்துவோரின் மீது புகார் அளிக்கலாம். அல்லது குடும்ப வன்முறைச் சட்டத்தின் கீழ் புகார் பதிவு செய்தால் மாஜிஸ்திரேட் அந்தத் திருமணத்திற்கு இடைக்காலத்தடை விதிப்பதோடு அந்தப் பெண்ணிற்கு காவல் துறை மூலம் பாதுகாப்பும் அளிக்க பரிந்துரைக்கப்படும். அல்லது மகளிர் தேசிய ஆணையத்திடம் புகார் தெரிவிக்க முடியும்.


வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “திருமண வயது எட்டாத பெண்களின் திருமணங்கள் – ஒரு பார்வை”

அதிகம் படித்தது