மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

நெஞ்சு பொறுக்குதில்லையே.!

சுசிலா

Feb 11, 2017

Siragu-nandhini1

இப்போது தமிழகம் சந்திக்கும் பல்வேறு அரசியல் சூழல்களில், இதுவும்கடந்து போகும் என்று நம்மால் எளிதாகக் கடக்க முடியாத ஒரு கொடுமையான மனவேதனை ஒன்று இருக்கிறதென்றால், அது குழந்தை ஹாசினியின் மன்னிக்கவே முடியாத படுகொலை.!

அரியலூர் மாவட்டத்தில் சிறுமி நந்தினியின் கொடூர படுகொலை நடந்த ஒருமாத காலத்திற்குள், மீண்டும் கடந்த வாரத்தில், ஒரு ஏழு வயது குழந்தைக்கு இந்தக் கொடுமை நடந்தேறி இருக்கிறது என்பது, நம் சமூகம் எப்படி புரையோடிப் போயிருக்கிறது என்பதற்கான சான்றாக இருக்கிறது. பெண்களுக்கு, பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு செய்யப்படவில்லை என்றால், நாம் எவ்வளவுதான் முன்னேறினாலும் அது முன்னேற்றமாகாது… வாழ்வியலில் பின்தங்கி தான் இருக்கிறோமென்று பொருள்.!

நம்நாட்டில், பெண் குழந்தைகள் முதல் மூதாட்டிகள் வரை பாலியல் சீண்டல்கள், வன்கொடுமை, பலாத்காரங்களுக்கு ஆளாக்கப்படுகின்றனர் என்பது வருத்தத்துடன் ஒப்புக்கொள்ளக் கூடிய உண்மை. பெண்களைப் பற்றி சரியான புரிதலை ஆண் பிள்ளைகளுக்கு நாம் சொல்லிக் கொடுக்க தவறி விட்டோமென்று தான் தோன்றுகிறது. முதல் ஆசிரியர்களாக பெற்றோர்கள் தான் இருக்க வேண்டும் என்பதில் நாம் உறுதியுடன் செயல்பட வேண்டிய கட்டாயம் இப்போது இருக்கிறது.!

நந்தினியின் படுகொலை விசயத்தில் சாதியும், வர்க்கமும் முக்கிய காரணிகளாக செயல்பட்டிருக்கின்றன. கிராமப்புறங்களில் இன்னமும் இந்த சாதிக் கொடுமைகள் நடந்தவண்ணம் இருக்கின்றன. அதுவும் ஒடுக்கப்பட்ட இனத்தைச் சார்ந்த பெண்கள் என்றால், இடைநிலை சாதியினரும், மேல்சாதி என்று கூறிக்கொள்பவர்களும் நடத்தும் கொடுமைகள் இருக்கிறதே, அதனை நம்மால் விவரிக்க முடியாத அளவிற்கு கொடுமைகள் நிறைந்ததாக இருக்கிறது.!

பதினேழு வயது சிறுமி என்றும் பாராமல், அவரை கொலை செய்து, எரித்து, கிணற்றில் வீசிய கொடுமை நம் கண் முன்னே இன்னமும் நிற்கிறது. அந்த சிறுமிக்கு நடந்த கொடுமையை விவரிக்க முடியவில்லை,,, என்னால் இதற்கு மேல் எழுதக் கூட மனம் வரவில்லை.. நெஞ்சம் பதைபதைக்கிறது.. சாதியத்தின் கொடூர இரத்த நாளங்கள் இதனை பிரதிபலிக்கிறது.!

Siragu hashini

இந்த நிகழ்வு நடந்து, ஈரம் காய்வதற்குள் மீண்டும் ஹாசினி படுகொலை. நன்கு படித்து, நல்ல பணியில் இருக்கும் ஒரு இளைஞனால் இந்தக் கொடுமை நடந்திருக்கிறதென்றால், இந்த கல்வியினால் என்ன பயன்..? வாழ்வியல் கல்வியை பெற்றோரும் சரி, ஆசிரியர்களும் சரி, இந்த ஒட்டு மொத்த சமூகமும் சரி.. அவனுக்கு சரியான பாடம் புகட்டவில்லை… அவனை சரியாக வழிநடத்தவில்லை என்று தானே பொருள்.!

பெண்கள் என்றால், அதுவும் குழந்தையாக இருந்தாலும் அவர்கள் போகப்பொருள் என்ற கண்ணோட்டம் தான் இதற்கெல்லாம் காரணம். ஆண்கள், ஆண்பிள்ளைகளை வளர்க்கும் பெற்றோர்கள், பெண்களை சக தோழியாய் பார்க்கும் உணர்வு, தோழையுடன் பழகும் பண்பு, இவற்றை சிறுவயது முதலே கற்றுக்கொடுக்கும் வாழ்வியல் கல்வி மிக முக்கியம்.

நம்மால் ஏற்றுக்கொள்ளவே முடியாத ஒன்றாக நம் சமூகத்தில், பெரும் விருட்சமாக வளர்ந்து, இந்தக் கொடுமைகள் அரங்கேற்றி வருகின்றன. அதிலும் சில காலமாக அதிகமாகவே நடந்து கொண்டிருக்கின்றன என்பது வேதனையான ஒன்று.!

இம்மாதிரி நடந்துகொள்ள எப்படி இந்த சமூகம் ஒரு ஆணை உருவாக்கி இருக்கிறது..? இதற்கான காரணம் ஒரு ஆண் என்ற கண்ணோட்டத்தில் மட்டும் பார்த்தால், அது சரியாக இருக்க முடியாது.!

Siragu murder

ஒட்டுமொத்த ஆண் சமூகமாகத்தான் இதனைப் பார்க்க வேண்டும். ஆணாதிக்கம் முற்றிலும் ஒழிக்கப்படவேண்டும். பெண்ணை, பெண் குழந்தைகளை புறத்தோற்றம், கவர்ச்சி என்று பார்க்கும் கண்ணோட்டம் மாற்றப்பட வேண்டும். நட்பு, தோழமை என்ற கண்ணோட்டம் வலியுறுத்தப்பட வேண்டும். சுய கட்டுப்பாடு என்றால் என்ன என்பதை அவர்களுக்குப் புரியவைக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.! இதனைப்பற்றிய விழிப்புணர்வு மிக முக்கியம். நேர்கோட்டு சிந்தனைகள் இளம் தலைமுறையினரிடம் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும். மேலும் பாலியல் கல்வி மிக முக்கியம். இதனை நடைமுறைப்படுத்தும் மேலை நாடுகளில் இதைப்போன்ற குற்றங்கள் குறைவு.!

இவையெல்லாம் நடக்க வேண்டுமென்றால் சிலகாலம் பிடிக்கலாம். ஆனால் நாம் சோர்வடையாமல் அதற்கான பணியைத் தொடங்குவோம்.

குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்க வேண்டும் என்பதில் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை. அப்போது தான் குற்றங்கள் குறைய வாய்ப்பிருக்கிறது. உடனே நிறுத்தப்பட வேண்டுமானால் இது தான் சரியான முறையாக இருக்க முடியும். !

பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமைகளைத் தடுப்போம்.!
அதற்கான விழிப்புணர்வை முன்னெடுப்போம்.!
ஆரோக்கியமான சமூகத்தை மீட்டெடுப்போம்.!
பாலின சமத்துவத்தை போதிப்போம்.!


சுசிலா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “நெஞ்சு பொறுக்குதில்லையே.!”

அதிகம் படித்தது