மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மூடநம்பிக்கைகளை வளர்த்தெடுக்கும் தனியார் பள்ளி நிறுவனங்கள்.!

சுசிலா

Mar 4, 2017

Siragu moodanambikkai3

கடந்த சில ஆண்டுகளாகவே, தமிழகத்திலுள்ள தனியார் பள்ளி நிறுவனங்கள், இந்த பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு சமயத்தில், சில குறிப்பிட்ட மதத் தொடர்பான மூடநம்பிக்கைகளை மாணவர்களிடம் திணிக்கிறது என்றே சொல்லலாம். இது ஒரு ஆபத்தான செயலாகும். நம் வருங்கால சமூகம் இம்மாணவர்களையே நம்பியிருக்கும் நடைமுறையில், இம்மாதிரி சமூக சீர்கேடுகளை நாம் உடனே தடுத்து நிறுத்தியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

பல தனியார் கல்வி நிறுவனங்கள் இந்தப் பொதுத் தேர்வு சமயத்தில், பெற்றோர்களுக்கு பாதபூசை செய்ய நிர்பந்திக்கிறது, மென்மேலும், ஆசிரியர்களும் பாதப்பூசை செய்ய வேண்டும், கல்வி கொடுக்கும் ஆசிரியர்கள் தெய்வத்திற்குச் சமம் என்ற ஒரு தோற்றத்தை மாணவர்களிடம் அறிமுகம் செய்கிறது. இதற்கெல்லாம் மிகப்பெரிய உச்சகட்டமாய், சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம்தான் நம் எல்லோரையும் மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கி விட்டது எனலாம். சில நாட்களுக்கு முன், கோவை மாவட்டத்திலுள்ள தனியார் பள்ளி ஒன்று, பத்தாம் வகுப்பில் படிக்கும் நாற்பத்தியெட்டு மாணவர்களை மொட்டை அடிக்கச் சொல்லி வலியுறுத்தி இருக்கிறது. இதற்கு ஆசிரியர்களும் ஒரு காரணமாம். தேர்வில், தேர்ச்சிப்பெற வேண்டுமென்பதால் தான் இந்த மொட்டை அடிக்கும் சம்பவமாம்.!

Siragu moodanambikkai2

என்னே ஒரு அறியாமை. தேர்வில் தேர்ச்சிப்பெற வேண்டுமென்றால், நன்கு படிக்க வேண்டும் அதற்கான எளிய முறைகளைக் கற்றுக்கொடுத்தல் முக்கியமே தவிர, இந்த மாதிரி மூடநம்பிக்கைகளைப் பரப்பி, மாணவர்களின் மூளையை சலவை செய்தல் என்பது எவ்வகையில் இது நியாயம்… இது நம் சமூகத்திற்கு ஏற்புடையதாகுமா…?

அப்படிப்பட்ட மாணவன் நாளை வளர்ந்து வந்தாலும், எந்த ஒரு பிரச்சினையையும் துணிச்சலுடன் சந்திக்கக்கூடிய மனவலிமை பெற்றவனாக எப்படி இருக்க முடியும்..? இதையெல்லாம் சிந்திக்க வேண்டாமா..!

page.pmd

மதசார்பற்ற நாடு இந்தியா என்று ஒருபுறம் சொல்லிக்கொண்டு, ஒரு மதத்தைச் சார்ந்த கொள்கைகளை, வழக்கங்களை மாணவர்களின் மீது திணிப்பது மிகவும் கண்டனத்துக்குரியது. பல மதங்களைச் சேர்ந்த மாணவர்கள் படிக்கும் ஒரு தனியார் பள்ளியில், குறிப்பிட்ட ஒரு மதத்தைச் சார்ந்த கோயிலை பள்ளி வளாகத்திலேயே கட்டுவது, அதற்கு பூசை செய்வது என பக்தியை வளர்ப்பதுதான் கல்வியின் இலக்கா…? பக்தி, ஒழுக்கம் என்ற பெயரில், ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்த வழக்கங்களை அனைத்து மாணவர்களிடமும் திணிப்பது என்பது எப்படி நேர்மையான செயலாக இருக்க முடியும்..?

கல்வி என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்று. ஒரு பள்ளி, கல்லூரி என்றால் அனைத்து மதத்தினரும் அங்கு படிப்பார்கள். அங்கு கல்விதான் பிரதானமே தவிர, மற்ற விடயங்கள் எல்லாம் தேவையற்றவை. இன்னும் சொல்ல வேண்டுமென்றால், பள்ளி கலை விழாக்களில் கூட மதம் சார்ந்த போதனைகளோ, நாடகங்களோ, பாடல்களோ இல்லாமல் தவிர்ப்பது சாலச் சிறந்தது. அரசு பள்ளிகளில் இம்மாதிரியான செயல்கள் நடப்பதில்லை என்பது சற்று மகிழ்ச்சியைத் தரும் செய்தியாகும்.!

இனி வரும் காலங்களில், தன்னம்பிக்கைக்கு நேர் எதிராக இருக்கும் மூடநம்பிக்கைகளை பள்ளி நிர்வாகங்களே, ஆசிரியர்கள் மூலம் மாணவர்களிடம் திணிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

பள்ளி நிறுவனங்கள் தரமான கல்வியை, சமூகப்பார்வையை வளர்க்கும் பொது அறிவை அளிப்பதற்கு முன்வர தயாராக வேண்டும்.

வெறும் மதிப்பெண்கள் எடுக்கும் இயந்திரங்களாக மாணவர்களை தயார் செய்வதை விட்டுவிட்டு, பொது அறிவை கொடுக்கும் சிறந்த வழிமுறைகளையும், மிகச் சிறந்த மனிதநேயத்தைப் பற்றியும், சுற்றுச்சுழல் பற்றியும் கற்றுக்கொடுக்கும் கல்வி முறையை நாம் எல்லோரும் சேர்ந்து ஆதரிப்பதும், அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இன்றியமையாதது. தற்போதைய அவசர அவசியமும் கூட.!

தன்னம்பிக்கையைத் தகர்க்கும், மூடநம்பிக்கைகளை வேரறுத்து, சிறந்த சிந்தனைச் சிற்பிகளாக மாணவச் சமூகத்தை உருவாக்க நாம் அனைவரும் உறுதி கொள்வோம்.!


சுசிலா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மூடநம்பிக்கைகளை வளர்த்தெடுக்கும் தனியார் பள்ளி நிறுவனங்கள்.!”

அதிகம் படித்தது