மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

இந்தியப் பொருளாதாரச் சீர்திருத்தமும் விளைவுகளும்

பேராசிரியர் பு.அன்பழகன்

Jun 5, 2021

siragu india economy
இந்தியா, உலகில் மிகப்பெரும் இயற்கை, மனித ஆதாரங்ககளைக் கொண்டுள்ள நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது. சமூக-பொருளாதாரத் தளங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது. ஆனால், இது, வளர்ந்த நாடுகளுடனும், இந்தியா போன்றே உள்ள பல வளரும் நாடுகளுடனும் ஒப்பீடு செய்யும்போது குறைவான நிலையிலேயே காணப்படுகிறது. இந்தியா, கடந்த மூன்று பத்தாண்டுகளில் பல்வேறு பொருளாதாரச் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அவற்றின் பலன்கள் எதிர்மறையாகவும், நேர்மறையாகவும் சமூக-பொருளாதாரத் தளங்களில் பதிந்துள்ளன. குறிப்பாக 2016 ஆம் ஆண்டுக்குப்பிறகு இந்திய பொருளாதாரம் தொடர் சரிவினை சந்தித்து வருகிறது. 2020ஆம் ஆண்டில் உருவெடுத்த கோவிட் பெரும் தொற்றினால் இந்தியா பொருளாதாரம் எப்போதும் சந்திக்காத நிலையை அடைந்துள்ளது.

பிரிட்டிஷ் இந்தியாவை ஆளுவதற்குமுன், இந்தியா உலகப் பொருளாதாரத்திற்கு 33 விழுக்காடு பங்களிப்பைச் செய்துள்ளது. இதன் அடிப்படையிலேயே பல ஐரோப்பிய நாடுகள் இந்தியாவைத் தங்கள் வசப்படுத்திக்கொள்ள முயன்றன. தற்போது இந்தியா, உலகப் பொருளாதாரத்திற்கு 4.5 விழுக்காட்டை அளித்துள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்தபின் 1980களின் முற்பகுதிவரை இந்து வளர்ச்சி வீதம் எனப்படுகின்ற 2-3 விழுக்காடு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வளர்ந்துள்ளது. இதன் அடிப்படையில் உயர் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்ல 1991ஆம் ஆண்டு பொருளாதாரச் சீர்திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது இச்சீர்திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டு 30 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் அதன் தாக்கம் பல்வேறு தளங்களில் கால்பதித்துள்ளது. இது குறித்த நிலைபாட்டினை இக்கட்டுரை ஆய்வு செய்கிறது.

அரசியல் பொருளாதாரக் காரணிகள்

இந்தியா, சுதந்திரம் பெற்றபின் 1950களில் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆண்டுக்கு 3.6 விழுக்காடாக வளர்ச்சி இருந்தது, 1960களில் 4.8 விழுக்காடாக அதிகரித்தது. 1970களில் 3.45 விழுக்காடாகக் குறைந்தது. இது 1980களில் 5.17 விழுக்காடாகவும் 1990களில் 6.11 விழுக்காடாகவும் அதிகரிக்கத் தொடங்கியது. மொத்த உள்நாட்டு உற்பத்தி 2005-2014ஆம் ஆண்டுகளில் சராசரியாக 7.48 விழுக்காடாகத் தொடர்ந்து அதிகரிக்கத் தொடங்கியது ஆனால் 2015லிருந்து அது சரியத்தொடங்கி 2019 ஆம் ஆண்டு 4.18 விழுக்காடாகக் குறைந்தது. இது கோவிட்19 பெருந்தொற்றுகாரணமாக பொருளாதாரம் இந்தியா இதுவரை கண்டிராத பெரும் சரிவினை சந்தித்து -7.3 விழுக்காடாக (எதிர்மரையாக) 2020-21இல் பதிவாகியுள்ளது. தனிபர் வருமானம், தனிநபர் நுகர்ச்சி, நுகர்வுத் தேவை போன்றவைகள் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா, சுதந்திரம் அடைந்தபோது, ஏற்பட்ட உணவு பற்றாக்குறையைச் சரிசெய்ய முதல் ஐந்தாண்டுத் திட்டத்தில் வேளாண்மைக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. பொதுத்துறையின் பங்களிப்பின் தேவையை உணர்ந்து பேரா.மக்லனோபிஸ் இரண்டாவது திட்டத்தை வடிவமைத்தார். அதனைத் தொடர்ந்து முதலீடுகளில் அரசின் பங்களிப்பு பெரும் பகுதியாகவும், தனியார் துறையின் முக்கியத்துவம் கடைநிலையை உடையதாகவும் கொள்கைகள் செயல்படுத்தப்பட்டது. திரு நேரு, திருமதி இந்திரா காந்தி ஆகிய இருவருமே இதே கொள்கையுடன் ஆட்சி செய்தனர்.

1977ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஐனதா கட்சி திரு மொராஜிதேசாய் தலைமையில் ஆட்சி அமைத்தது. ஐனதா அரசு பொதுவாக வாணிகம் சார்பான நிலையே எடுத்திருந்தது என்றாலும், அந்த அமைச்சரவையில் இட்ம்பெற்ற திரு ஜார்ஜ்பெர்னாண்டஸ் அமெரிக்க நிறுவனமான ஐ.பி.எம் மற்றும் கோக்கோகோலாவிற்கு எதிராகவே இருந்தார், திரு ராஜ்நாராயண் குடிசை மற்றும் சிறு-குறு தொழில்களை ஆதரித்தார், திரு சரண்சிங் வேளாண்மை சார்பான நிலைப்பாட்டை எடுத்திருந்தார். இதனால் தலைமையுடன் பல்வேறு கருத்து மோதல்கள் வெடிக்கத் தொடங்கியது. இதன் விளைவாக ஜனதா அரசு இரண்டரை ஆண்டுகளே நீடித்திருந்தது. அரசியல் தளத்தில் ஒரு திடமான நிலை இன்மையால் பெருங் குழப்பம் நீடித்த நிலையில் அடுத்து வந்த பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் திருமதி இந்திரா காந்தி ஆட்சி அமைத்தார். 1984ஆம் ஆண்டு அபித் உசேன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு ஏற்றுமதி-இறக்குமதியில் சீர்திருத்தங்கள் கொண்டுவந்தது. நரசிம்மம் குழு நிதி தொடர்பான பல சீர் திருத்தங்களைப் பரிந்துரைத்தது. 1984ஆம் ஆண்டு திருமதி இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டபின் அவருடைய மகன் இராஜீவ் காந்தி பிரதமராகப் பொறுப்பேற்றார். இவருடைய ஆட்சிகாலத்தில் பல பொருளாதாரச் சீர்திருத்தங்கள் தொடங்கப்பட்டன. 30 தொழில் நிறுவனங்களுக்கு உரிமைவிலக்கு (delicensed) அளிக்கப்பட்டது, முற்றுரிமை கட்டுப்பாட்டு வர்த்தகச் செயல்பாடு (MRTP) வரம்பினை ரூ.20 கோடியிலிருந்து ரூ.100 கோடியாக அதிகரிக்கப்பட்டது. மேலும் இந்தியப் பங்குமாற்றுக் கழகம் (Security Exchange Board of India) நிறுவப்பட்டது. இவ்வாறு பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொண்டதன் விளைவு மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியானது 5.6 விழுக்காடாக 1980களின் இரண்டாம் பகுதியில் எட்டியது.

1990களின் தொடக்க காலச்சிக்கல்கள்

1990களில் வலைகுடா போரின்போது, சதாம் உசேன் குவைத் மீது படைஎடுத்ததன் விளைவாக, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் கிடுகிடுவென உயர்ந்தது இதன் விளைவு இந்தியாவில் பணவீக்கம் அதிகரித்தது. 1991ஆம் ஆண்டு திரு. மைக்கல் கோர்பசேவ் கொண்டுவந்த சீர்திருத்தத்தின் (பெத்தரகோயா) விளைவு சோவியத் யூனியன் சிதறுண்டது, இது, இந்தியாவின் அயல்நாட்டு உறவில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. மேலும் கச்சா எண்ணெய் ரஷ்யாவிடம் இறக்குமதி செய்யும் போது இந்திய ரூபாய் செலுத்திப் பெறக்கூடிய நிலை தடைபட்டுப்போய், டாலர் அல்லது பிற அந்நியச் செலாவணிகளைச் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் செலாவணி கையிருப்பு குறைந்து அந்நியச் செலாவணி பற்றாக்குறை அதிகரித்தது. அதே சமயம் திரு.வி.பி.சிங் தலைமையிலான அரசு 1990ஆம் ஆண்டு இதர பிற்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தபட்டபோது வடமாநிலங்களில் பெரும்கொந்தளிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக, பி.ஜே.பி கட்சி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக்கொண்டது. திரு வி.பி.சிங் அரசானது 11 மாதங்களில் முடிவுக்கு வந்தது. இதனிடையே திரு சந்திரசேகர் தலைமையில் காங்கிரஸ் தயவுடன் அரசு அமைந்தது. அந்நியச் செலாவணி கையிருப்பின்மை, நடப்புக்கணக்கு பற்றாக்குறை, நிலையற்ற அரசியல்சூழல் போன்றவை இக்காலகட்டத்தில் பெரும்சவாலாக இருந்தது. திரு.சந்திரசேகர் அரசு இரண்டு மாதங்களே நீடித்தது. இதைத்தொடர்ந்து வந்த பொதுத்தேர்தலின்போது இராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார், மீண்டும் காங்கிரஸ் நரசிம்மராவ் தலைமையில் ஆட்சி அமைத்தது.

எவ்வித அரசியல் பின்புலமும் இல்லாத திரு மன்மோகன் சிங் நிதி அமைச்சராகப் பதவியேற்றார். தொடர்ந்து அதிகரித்துவந்த பணவீக்கம், குறைவான அந்நியச் செலாவணி கையிருப்பு, குவிந்து வந்த மானியம், நடப்புக் கணக்குப் பற்றாக்குறை, குவிந்துவந்த அயல்நாட்டுக் கடன் போன்றவை புதிய அரசுக்கு மிகப் பெரிய சவாலாக இருந்தது. இதன் அடிப்படையில் புதிய பொருளாதாரக் கொள்கையை அரசு நடைமுறைபடுத்தத் தொடங்கியது. முதல்கட்டமாக, ஜூலை 1991, முதல் நாளன்று இந்தியாவின் பண மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராக 9.5 விழுக்காடு குறைத்தது. இதனைத்தொடந்து கடும்எதிர்;ப்புகளுக்கு இடையில் மீண்டும் ஜூலை 1991, மூன்றாம் நாள் 20 விழுக்காடு அளவில் குறைத்தது. இதனால் ஏற்றுமதி பெருகவும், அந்நியச் செலாவணி இருப்பை அதிகப்படுத்துவதற்கும் வழிவகை செய்யப்பட்டது. ஜூலை 1991, 6-18 இடைப்பட்ட நாட்களில் 47 டன் தங்கம் இங்கிலாந்து வங்கியில் ஈட்டாக வைத்து 2.27 பில்லியன் டாலர் கடனாகப் பெறப்பட்டது. அதேசமயம் அன்றாட நிலைமையின் அடிப்படையில் அந்நியச் செலாவணி மாற்று தீர்மானிக்கப்பட்டது. 60 விழுக்காடு வெளிச்சந்தை மூலமாக அந்நியச் செலாவணியை மாற்றுவதற்கும், 40 விழுக்காடு இந்திய ரிசர்வ் வங்கி மூலம் மாற்றுவதற்கும் முதன் முறையாக வழிவகை செய்யப்பட்டது. இச்சீர்திருத்தங்கள் அனைத்தும் அந்நியச் செலாவணி இருப்பினை அதிகரிக்க உதவியது. தொழில்களுக்கான உரிமம் பெரும்முறையினை எளிமையாக்கப்பட்டது, அந்நிய நேரடி முதலீடு ஊக்குவிக்கப்பட்டது. 1991ஆம் ஆண்டு புதிய தொழில் கொள்கை அறிமுகப்படுத்தபட்டது. அரசின் பங்கினைக் குறைப்பது, முதலீடு, வர்த்தகம், தொழில் நுட்பம் போன்றவற்றை ஊக்குவிப்பது போன்ற நடைமுறைக்கு வித்திட்டது இத் தொழில் கொள்கை. பொதுவாக, தராளமயமாக்கல், தனியார்மயமாக்கல், உலகமயமாக்கல் என்ற அடிப்படையில் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டது.

துறைவாரியான விளைவுகள்

சமூக-பொருளாதாரத் தளங்களில் 1991ஆம் ஆண்டு புதிய பொருளாதாரக் கொள்கை பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. வேளாண்மையைப் பொறுத்தவரை மிகப் பெரிய சரிவைச் சந்தித்துள்ளது. விதை, உரம், பூச்சிக்கொல்லி, தொழிலாளர்கள் கூலி, போன்ற இடுபொருட்களின் விலைகள் கடுமையாக அதிகரித்தன. ஆனால் உற்பத்திச் செலவு அதிகரித்த அளவிற்கு அவற்றின் விற்பனை விலை அதிகரிக்கவில்லை. வேளாண்மை மானியம் 1991ஆம் ஆண்டு ரூ.9000 கோடியாக இருந்தது 2015ஆம் ஆண்டு ரூ.83000 கோடியாக உயர்ந்தது இது 2019ஆம் ஆண்டு ரூ.120500 கோடியாக அதிகரித்துள்ளது. தலா உணவுப் பொருட்கள் இருப்பு சராசரியாக 1991ஆம் ஆண்டு 177கிலோ கிராமாக இருந்தது 2011ஆம் ஆண்டு 163கிலோ கிராமாகக் குறைந்துள்ளது இது மீண்டும் 2019ஆம் ஆண்டு 179கிலோ கிராமாக அதகரித்துள்ளது. சாரசரி உணவு உற்பத்தி வளர்ச்சியானது 1981-82 மற்றும் 1989-90ஆம் ஆண்டுகளுக்கிடையே 2.8 விழுக்காடாக இருந்தது 1.75 விழுக்காடாக 1990-91 மற்றும் 1999-2000ஆம் ஆண்டுகளுக்கிடையே குறைந்தது. இது மேலும் 1.03 விழுக்காடாக 2000-01 மற்றும் 2009-10ஆம் ஆண்டுகளில் குறைந்தது. தற்போதைய கோவிட் சூழலில் வேளாண்மை தவிற பிற துறைகள் பெரும் பின்னடைவை சந்தித்த வேலையில் வேளாண்மை நேர்மை வளர்சியினை சந்தித்து வருகிறது. 2020-21ஆண்டின் மொத்த உணதானிய உற்பத்தி 303.34 மில்லியன் டன் ஆகும். ஆனால் வேளாண்மையைச் சார்ந்திருப்பவர்கள் 1991ஆம் ஆண்டில் 66 விழுக்காட்டிலிருந்து 2011ஆம் ஆண்டு 49 விழுக்காடாகக் குறைந்துள்ளது தற்போது (2018-19) இது மேலும் குறைந்து 44 விழுக்காடாக உள்ளது. சிறு மற்றும் குறு விவசாயிகள் அதிக அளவில் வேளாண்மைத் துறையை விட்டுவிட்டு மாற்று வேலைகளான உற்பத்திசார் தொழில்கள் மற்றும் சேவைத்துறைகளுக்கு அதிக அளவில் பொருளாதாரச் சீர்திருத்த காலங்களில் மாறியுள்ளனர். இதே வேலையில் 1981-82ஆம் ஆண்டில் வேளாண்மை பங்களிப்பு 29.6 விழுக்காடாக ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்திக்கானதாக இருந்தது 25.2 விழுக்காடாக 1989-90ஆம் ஆண்டு குறைந்தது. இது மேலும் 11.8 விழுக்காடாக 2013-14ஆம் ஆண்டு குறைந்துள்ளளது. அன்மைக்காலங்களாக பருவமழை, மாநில அரசுகளின் வேளாண்சார் திட்டங்கள், வேளாண் கடன் போன்ற சாதக போக்கினால் வேளாண் துறையின் பங்களிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. 2020-21ஆம் ஆண்டு 15.4 விழுக்காட்டினை அடைந்துள்ளது. கோவிட் பெருந்தொற்றினால் பலர் தனியார் மற்றும் முறைசாரா தொழில் ஈடுபட்டவர்கள் வேலைஇழப்பினை சந்தித்து தங்களின் சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளனர். இவர்கள் தாங்கள் வைத்துள்ள நிலங்களில் அல்லது குத்தைக்கு பயிர்செய்யும் போக்கு வெகுவாக அதிகரித்துள்ளது. இதுவே தற்போதைய வேளாண்மை மீண்டு எழுந்ததற்கான காரணமாக குறிப்பிடலாம்.

பொருளாதார சீர்திருத்த காலங்களில் வேளாண் விளைபொருட்களுக்கான விலை போதுமான அளவில் கிடைக்காமையினால் சிறு மற்றும் குறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை இழக்கவேண்டிய சூழல் உருவாகியது. இதனால் கிராமப்புறங்களில் வேளாண்மைக்கான முக்கியத்துவம் குறைந்து வேளாண்சாராத் தொழில்கள் பெருமளவு பொருளாதாரச் சீர்திருத்தகாலங்களில் முக்கியத்துவம் பெறத் தொடங்கியுள்ளது. தற்போது கிராமப்புற வீட்டு வருவாயில் 40 விழுக்காடு அளவிற்கு வேளாண்சாராத் தொழில் மூலம் பெறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. வேளாண்மை மூலம் பெறப்படும் வருமானம் தொடர்ந்து குறைந்து வருவது, வேளாண்மையில் ஏற்பட்ட கடனால் விவசாயிகள் தற்கொலை அதிகரிப்பு, வேளாண் உள்ளீட்டுச்செலவுகள் தொடர்ந்து உயர்தல், நிலங்கள் சிறிய அளவில் குடும்பம் பிரிவதால் குறைவது போன்றவைகள் பெரும்சவாலாக தற்போது உருவெடுத்துள்ளது. ஒட்டுமொத்தமாக வேளாண்மையைப் பொறுத்தவரையில் மிகப்பெரிய சரிவையும் சவால்களையும் பொருளாதாரச் சீர்திருத்தக் காலங்களில் எதிர்கொண்டுள்ளது. இந்தியாவில் மட்டுமல்ல பல வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளிடமும் இப்போக்கு வேளாண்மையைப் பொறுத்தவரை பொதுவாகவே காணப்படுகிறது.

உற்பத்தித்துறையைப் பொறுத்தவரையில் ஒட்டுமொத்த உள்நட்டு உற்பத்திக்கு 1981ஆம் ஆண்டு 13.9 விழுக்காடாக இருந்தது, 1991ஆம் ஆண்டு 15.1 விழுக்காடாக உயர்நதது இது மேலும் 15.5 விழுக்காடாக 2001ஆம் ஆண்டிலும் 15.8 விழுக்காடாக 2013ஆம் ஆண்டும் உயர்ந்துள்ளது. பொருளாதாரச் சீர்திருத்தகாலங்களில் (1991-2014) உற்பத்தித் துறையானது ஆண்டுக்கு சராசரியாக 7.7 விழுக்காடாக வளர்ந்துள்ளது. 2019-20ஆம் ஆண்டில் இது 17.42 விழுக்காடக அதன் பங்களிப்பு உள்ளது. அதே உற்பத்தித் துறையை உள்ளடக்கிய தொழில் துறையானது மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு 27.6 விழுக்காடு என்ற பங்களிப்பை 1991ஆம் ஆண்டில் அளித்தது. அது, 27.3 விழுக்காடாக 2013 ஆண்டு சிறிய சரிவை எதிர்கொண்டுள்ளது. இது 2019-20ஆம் ஆண்டில் 30.19 விழுக்காடு என்று பதிவாகியுள்ளது. இத்துறையினைப் பொருத்த அளவில் இதன் பங்களிப்பில் பெரும் மாற்றம் ஏற்படவில்லை. அதே சமயம், சிறப்புப்பொருளாதார மண்டலம், நேரடி அந்நிய முதலீடு போன்றவை தொழில் துறைக்கு ஆதரவான போக்கு துவக்க சீர்திருத்த காலங்களில் காணப்பட்டது. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் தொழில் துறையில் எதிர்பார்த்த முன்னேற்றம் அடையவில்லை என்றாலும் அதன் நிலையை ஓரளவு தக்கவைத்துள்ளது. தொழில்துறையினைப் பெருத்தவரையில் 1990களிலும் 2000ஆவது ஆண்டுகளிலும் பெரும் ஏற்றத்தினை சந்தித்தாலும் 2008ஆம் ஆண்டு ஏற்பட்ட உலக நிதிச்சிக்கலினால் இந்தியப்பொருளாதாரம் பெரும் சவாலை சந்திக்கவேண்டி வந்தது. தற்போபோதைய கோவிட் பெருந்தொற்றின் காரணமாக உலக அளவிலான விநியோக சங்கிலி அறுபட்டதன் விளைவு பொருட்கள் ஏற்றுமதி குறைந்துள்ளது மேலும் நுகர்வுப்பொருட்களின் தேவை பன்னாட்டு அளவில் கனிசமாக குறைந்து தேவை இழப்பு ஏற்பட்டுள்ளது. இதன் விளைவு தொழில்துறை பெருமளவு சவால்களை தற்போது எதிர்கொண்டுள்ளது.

மூன்று முக்கியத்துறைகளில் சேவைத்துறை பொருளாதாரச் சீர்திருத்தகாலங்களில் மிகப்பெரிய நன்மையை அடைந்துள்ளது. ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்திக்குப் பொருளாதாரச் சீர்திருத்தகாலங்களில் சேவைத் துறையின் பங்களிப்பு 17 விழுக்காட்டுப் புள்ளிகள் உயர்ந்துள்ளது அதாவது 1990-91ஆம் ஆண்டு 42.5 விழுக்காடாக இருந்தது 2013-14ஆம் ஆண்டில் 59.9 விழுக்காடாக அதிகரித்துள்ளது. ஆனால் தற்போது கோவிட் பெரும்தொற்றினால் அதன் பங்களிப்பு சற்றே குறைந்து 55.17 விழுக்காடாக 2019-20ஆம் ஆண்டுகளில் பதிவாகிஉள்ளது. 1980-81 மற்றும் 1991-92ஆம் ஆண்டுகளுக்கிடையே ஆண்டு சராசரியாக 6.81 விழுக்காடாக இருந்த பங்களிப்பு 1991-92 மற்றும் 2003-04ஆம் ஆண்டுகளுக்கிடையே சாரசரியாக 8.64 விழுக்காடாக அதிகரித்தது. இது, மேலும் 10.89 விழுக்காடாக 2004-05 மற்றும் 2011-12ஆம் ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. ஆனால், இத்துறை நான்கில் ஒரு பங்கு வேலைவாய்ப்பை மட்டுமே மொத்த வேலைவாய்ப்பிற்கு உருவாக்கித் தருகிறது. வேளாண்துறையில் உள்ளவர்களை அதிக அளவில் உள்வாங்கிக்கொண்ட துறையாகச் சேவைத்துறை திகழ்கிறது. சேவைத்துறை நேரடியாக வளர்ச்சியடைவதைப் பற்றிப் பல்வேறு எதிர்மறை விவாதங்கள் பொருளாதார ஆய்வுத் தளங்களில் அண்மைக்காலமாக விவாதிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஒட்டுமொத்தப் பொருளாதாரச் சீர்திருத்ததின் விளைவு சேவைத்துறைக்கு மிகப்பெரிய நன்மையை அளித்துள்ளது.

தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பொருளாதாரச் சீர்திருத்தங்களின் விளைவாக அந்நியச்செலாவணி கையிருப்பு 1.12 பில்லியன் டாலராக 1991ஆம் ஆண்டு இருந்தது, மிகப் பெரிய அளவில் 319 பில்லியன் டாலராக 2016ஆம் ஆண்டு அதிகரித்துள்ளது. இது ஏப்ரல் 2021ஆம் ஆண்டில் 584 பில்லியன் டாலராக தற்போது உயர்ந்துள்ளது. பொருளாதார சீர்திருத்தக் காரணத்தினால் மிகப்பெரிய சாதகமாக அந்நியச்செலவணி இருப்பினை காணமுடிகிறது. ஆனால் வர்த்தகப் பற்றாக்குறை -12.5 பில்லியன் டாலராக 2000-01ஆம் ஆண்டில் இருந்தது -144.9 பில்லியன் டாலராக 2014-15ஆம் ஆண்டு அதிகரித்துள்ளது. தற்போது ஏப்ரல் 2021ஆம் ஆண்டில் இது 15100 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இதுபோன்றே நடப்புப் கணக்கு பற்றாக்குறை -2.7 பில்லியன் டாலராக இருந்தது -21.9 பில்லின் டாலராக இந்த ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. இது தற்போது -1.7 பில்லியன் டாலராக 2020-21ஆம் ஆண்டு பதிவாகி உள்ளது. ஒட்டுமொத்தமாகப் பார்தால் பொருளாதார சீர்திருத்தினால் அந்நிய முதலீடுகள் பெருமளவிற்கு பெறப்பட்டுள்ளது இதனால் ஏற்றுமதி அதிகரித்து வேலைவாப்புகள் பெருகியுள்ளது. இதனால் இந்தியவின் அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரித்துள்ளது. இந்தியா பெருமளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யவேண்டி கட்டாயத்தில் உள்ளதால், வர்தகபற்றாக்குறை தொடர்ந்து அதிக அளவில் காணப்படுகிறது.

ஒட்டுமொத்தமாக பொருளதார வளர்ச்சி இந்திய சுதந்திரத்திற்கு அடுத்த மூன்று பத்து ஆண்டுகளில் சராசரியாக ஆண்டுக்கு 4.1 விழுக்காடாக இருந்தது அதைஅடுத்து வந்த மூன்றரை பத்தாண்டுகளில் 6.3 விழுக்காடு ஆண்டு சராசரியாக அதிகரித்துள்ளது. தலா வருமானம் ஆண்டுக்கு 1.9 விழுக்காடாக 1965-1990ஆம் ஆண்டுகளுக்கிடையே காணப்பட்டது 4.6 விழுக்காடாக பொருளாதாரச் சீர்திருத்த காலங்களில் (1990-2015) அதிகரித்தது. 1951–1985 ஆம் ஆண்டுகளுக்கிடையே மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 2-3 விழுக்காடு என்ற அளவில் இருந்தது, இது, இந்து வளர்ச்சி வீதம் என அழைக்கப்படுகிறது. ஆனால் பொருளாதாரச் சீர்திருத்தகாலங்களில் 5 விழுக்காடுக்கு மேல் வளர்ச்சி அளவை எட்டியுள்ளது. மேலும் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு வர்த்தகத்தின் பங்கு 11.5 விழுக்காடாக 1991ஆம் ஆண்டில் இருந்தது 48.7 விழுக்காடாக 2015ஆம் ஆண்டு அதிகரித்துள்ளது. ஏற்றுமதியின் மதிப்பு 22.6 பில்லியன் டாலராக இருந்தது 522 பில்லியன் டாலராக இவ்வாண்டுகளில் அதிகரித்துள்ளது, ஆனால் அரசு எடுத்து பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி நடைமுறைபடுத்தியது, கோவிட் பெருந்தொற்று போன்ற செயல்பாடுகளால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து குறைந்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வேலைவாய்பு

இந்தியா உலக அளவில் உழைப்பாளர்கள் அதிக எண்ணிக்கையைக் கொண்டுள்ள நாடு. மக்கள்ஈவு (Demographic Dividend) அண்மைக் காலத்தில் இந்தியாவின் மிகப்பெரிய ஆதாரமாக உள்ளது. 25 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் இந்தியாவில் 40 விழுக்காடு அளவிற்கு உலக அளவில் காணப்படுகிறது. மூன்றில் இரண்டுபங்கு உழைக்கும் (15-59 வயதுடையவர்கள்) மக்களைக் கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு நெகிழ்ச்சி அளவு 1980 மற்றும் 1990களில் 0.40ஆக இருந்தது பொருளாதாரச் சீர்திருத்தக் காலங்களில் (1994-94 – 2010) வேலைவாய்ப்பு நெகிழ்ச்சி அளவு 0.33ஆக குறைந்துள்ளது. 25 விழுக்காடு தொழிலாளர்கள் வறுமைக் கோட்டின் வருமான அளவில் பாதியையே ஈட்டுகின்றனர். பெண்கள் மொத்தமாக 28 விழுக்காடு அளவிற்கே பொருளாதார நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். உழைக்கும் பெண்களில் 53 விழுக்காடு சுய தொழிலில் ஈடுபடுகின்றனர் குறிப்பாகப் பயிரிடுதல் பணியில் உள்ளனர். மிகக்குறைவாக 10 விழுக்காடு அளவிலேயே தொடர்வேலைகளில் ஈடுபடுகின்றனர். வேலை-உற்பத்தி நெகிழ்ச்சி 41 விழுக்காடாக 1983-1994ஆம் ஆண்டில் காணப்பட்டது 17 விழுக்காடாக 1993-94 – 2004-05ஆம் ஆண்டு குறைந்துள்ளது. இது மேலும் 0.04 விழுக்காடாக 2004-05 – 2011-12ஆம் ஆண்டுகளில் குறைந்தது. 2005ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட மிகப்பெரிய வேலைவாயப்புத் திட்டமான ‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்திரவாதத் திட்டம்’ கிராமப்புறங்களில் நலிவடைந்தவர்களிடையே குறிப்பாகப் பெண்கள், பட்டியல் இனத்தவர்கள் கணிசமான அளவில் வேலைவாய்பினைப் பெற்றுள்ளனர். இத்திட்டத்தில் உறுதி அளிக்கப்பட்ட 100 நாள் வேலைவாய்ப்பை முழுமையாக அளிக்கப்படவில்லை ஆனால் கூலி கிராமப்புறங்களில் அதிகரித்தது இதன் விளைவாக வேளாண்மையில் எதிர்பார்த்த வருவாய் கிடைக்காததால் விவசாயிகள் வேளாண்செய்வதைத் தவிர்த்துவிட்டு மாற்றுப் பணிக்குச் செல்லத் தொடங்கினர். பொதுவாக பொருளாதாரச் சீர்திருத்தத்தினால் வேலைவாய்பபுப் பெருக்கம் பெரிய அளவில் ஏற்படவில்லை. நகர்ப்புறங்களில் தொழில்நுட்ப வேலைவாய்பபும், தொடர் வேலைவாய்ப்பு மட்டுமே அதிகரித்துள்ளது. குறிப்பாகத் தொழில்நுட்பம் படித்தவர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. பெண்கள் பெருமளவில் வேலை இழப்பினை எதிர்கொண்டனர். கோவிட் பெருந்தொற்று இரண்டு அலைகளின்போதும் பெருமளவிற்கு வேலை இழப்பினை ஏற்படுத்தியுள்ளது. இதில் பெருளவிற்கு முறைசாரா தொழிலில் ஈடுபடுபவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியா இதுவரை சந்தித்திராத வேலையின்மையினை தற்போது எதிர்கொண்டுள்ளது.

வறுமையும் சமமின்மையும்

உலக அளவில் அதிக அளவில் வறுமையில் வாழ்பவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிக அளவில் உள்ளனர். பொருளாதாரச் சீர்திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்டபின் வறுமையின் அளவு வெகுவாகக் குறைந்துள்ளது. 1973ஆம் ஆண்டு 56 விழுக்காடாக இருந்த (416 மில்லியன்) வறுமைக்கோட்டின்கீழ் வாழ்பவர்களின் அளவு 1993ஆம் ஆண்டு 46 விழுக்காடாக (326 மில்லியன்) குறைந்தது. பொருளாதாரச் சீர்திருத்தக் காலங்களில் இது 22 விழுக்காடாக (270 மில்லியன்) 2011ஆம் ஆண்டு குறைந்துள்ளது. கிராமப்புற வறுமை ஆண்டுக்கு 2.5 விழுக்காடாக 1993-94 – 2009-10ஆம் ஆண்டுகளில் குறைந்துள்ளது ஆனால் நகர்புறங்களில் 2.3 விழுக்காடாக இதே ஆண்டுகளில் ஆண்டொன்றுக்கு குறைந்துள்ளது. ஆனால் வறுமை வீழ்ச்சி சமூக அளவிலும் வட்டார அளவிலும் ஒருவாறு குறையவில்லை. நாட்கூலியாட்கள், பட்டியலினத்தவர், முஸ்லீம் போன்றவர்களின் மத்தியில் வறுமையின் அளவு அதிகமாகத் தற்போதும் காணப்படுகிறது. அன்மையில் உருவான கோவிட் பெரும்தொற்றின் காரணமாக முழுஅடைப்பினை இரண்டு அலைகளிலும் மேற்கொண்டது இதன் முக்கிய விளைவு பெரும்பகுதியான மக்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டு அதிக அளவிலான மக்கள் வறுமையை அடைந்துள்ளனர். ஏற்கவே வறுமையில் இருந்து மீண்டவர்கள் மீண்டும் வறுமைக்கோட்டிற்கு கீழ் வந்துள்ளனர் மேலும் கூடுதலான மக்கள் முதன் முறையாக வறுமைக்கோட்டிற்கு கீழ் வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூகத்தில் சமனற்ற நிலை நீண்ட காலமாக இருந்து வந்தாலும் அண்மைக்காலங்களில் வட்டாரச் சமனற்ற நிலை, வருமானச் சமனற்ற நிலை, நுகர்வு சமனற்ற நிலை, ஆண்-பெண் சமனற்ற நிலை, சமூகச் சமனற்ற நிலை போன்றவை அதிக அளவில் அகண்று வருகிறது. சமூகத்தில் உயர் பணக்காரர்களாகிய 1 விழுக்காட்டினரின் வருமானம் 5 விழுக்காட்டுப் பங்காக மொத்த வருமானத்தில் 1980ஆம் ஆண்டு இருந்தது 2006ஆம் ஆண்டில் இது 12 விழுக்காடாக அதிகரித்துள்ளது. சமூகத்தில் அதிஉயர் பணக்காரார்களாகிய 0.1 விழுக்காட்டினரின் 1 விழுக்காடு வருமனாத்தை 1980ஆம் ஆண்டில் இருந்ததது 5 விழுக்காடாக 2006ஆம் ஆண்டில் அதிகரித்தது. நாட்கூலியாட்கள் அதிக அளவில் பட்டியலினத்தவர்கள் (எஸ்.சி 75 விழுக்காடு, எஸ்.டி 83 விழுக்காடு, இதர பிற்படுத்தப்பட்டவர்கள் 64 விழுக்காடு) 15 – 59 வயது உடையவர்கள் ஈடுபடுகின்றனர். ஆனால் உயர் வகுப்பினர்கள் 30 விழுக்காடு மட்டுமே இப்பணிகளில் உள்ளனர். வேளாண்மை, தொழில் நெறிஞர்கள் பேன்ற பணிகளில் ஈடுபடும் சமூகக் குழுக்களிடையே பெருத்த வேறுபாடுகள் காணப்படுகிறன. மேலும் பட்டியலினத்தவர்கள் குறைவான கூலி அளிக்கப்படும் தொழில்களில் பெருமளவில் ஈடுபடுகின்றனர் மாறாக உயர்வகுப்பினர் அதிகப் பணம் பெறும் தொழில்களில் ஈடுபட்டுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

15-59 வயதுடைய பாலினத்தவர்களிடமும் சமூகக் குழுக்களிடையேயும் காணப்படும் வருமானத்திற்கான கினிக் கெழு 0.41 மற்றும் 0.38 என்று முறையே 2011-12ஆம் ஆண்டு காணப்படுகிறது. சமூகத்தில் ஏற்பட்டுள்ள சமமின்மையின் கராணமாகச் சமூக விலக்கல், பேதம்காட்டல், வறுமை பேன்ற சிக்கல்கள் அதிகமாக ஏற்படுகிறது. (கினிகெழுவின் மதிப்பு 0 – 1 என்ற மதிப்பில் வெளிப்படுத்தப்படுகிறது, அதிக அளவிளான மதிப்பு என்பது அதிக ஏற்றத்தாழ்வுகளைக் கொண்டது எனவும் மாறாகக் குறைவான மதிப்புக் குறைந்த அளவு ஏற்றத்தாழ்வுகளை உடையதாகும். கினிகெழு இயல்பாக விழுக்காட்டு நிலையில் வெளிப்படுத்தப்படுகிறது.) நுகர்வுச் சமமின்மையின் 1990ஆம் ஆண்டு கினிக் கெழுவானது 29.6ஆக இருந்தது, 2010ஆம் ஆண்டு 36.8ஆக அதிகரித்துள்ளது. அதாவது நுகர்ச்சிக்கிடையான வேறுபாடு அதிக அளவில் பொருளாதாரச் சீர்திருத்தக் காலங்களில் மேலும் அகன்றுள்ளது. மேலும் மொத்த மக்கள் தொகையில் பாதிஅளவிற்குப் பெண்கள் இருந்தாலும் 28 விழுக்காடு மட்டுமே உழைப்பில் ஈடுபடுகின்றனர் (பெண்களின் மொத்த அளவிற்கு). பெண்களின் உழைப்பினால் 16 விழுக்காடு மட்டுமே பொருளாதார ஈட்டலுக்கான (வருவாய் பெறும்) உழைப்பு ஈடுபடுத்தப்படுகிறது. மேலும் 70 விழுக்காட்டினர் அன்றாடக் கூலிகளாகப் பணிசெய்கின்றனர். மேலும் பெண்கள் பெறும் கூலியானது ஆண்களின் கூலியைவிட மிகக் குறைவாக உள்ளது. பெணகள் பெரும்பாலும் குறைவான கூலி பெறும் தொழிலான வீட்டு வேலைசெய்வது, சுத்தம் செய்பவர்கள், தெருக்களில் விற்பனை செய்பவர்கள், குப்பை பொறுக்குதல். உதவியாளர்கள், விற்பனையாளர்கள் போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பொருளாதாரச் சீர்திருத்தகாலங்களில் பொதுவாகச் சமூகச்சமமின்மை, வருமானச் சமமின்மை, நுகர்வுச் சமமின்மை போன்றவை பெருமளவில் பெருகியுள்ளன.

மேலும் பொருளாதாரச் சீர்திருத்தம் நடைமுறைப்படுத்தபட்ட 30 ஆண்டுகளில் 0.4 விழுக்காடு பொதுத்துறையின் முதலீடு குறைந்துள்ளது. ஆனால் தனியார் துறையின் பங்களிப்பு குறிப்பிட்ட அளவில் அதிகரித்துள்ளது. தனியார் துறை பங்கேற்பின் காரணமாக, சுகாதாரம், கல்வி போன்ற சமூகத் துறைகள் பெருமளவில் பயன் அடைந்துள்ளன. அதே சமயம் பல பொருளாதார நடவடிக்கைகள் சமூகத்தில் கீழ்மட்டத்தில் உள்ளவர்கள் எளிதாக அடைய முடியாத நிலை காணப்படுகிறது. பொருளாதாரச் சீர்திருத்தத்தில் விளைவாகப் பொருளாதார வளர்ச்சி, ஏற்றுமதி, செலுத்து இருப்புச் சமநிலை, அந்நிய செலாவணி இருப்பு, பண்ததுறை வளர்ச்சி, தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி, போன்றவை சாதகமான நிலையை அடைந்துள்ளன. இந்தியா தற்போது பன்னநாட்டு உறவில் ஒருங்கிணைந்து செயல்பட்டுக்கொண்டுள்ளது, ஆனால், இந்த நிலை சீர்திருத்தம் அறிமுகப்படுத்துவதற்கு முன்பு காணப்படவில்லை.

இந்தியாவின் முக்கிய சவாலாகத் தற்போது கருதப்படுவது ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவது, நிதிபற்றாக்குறை அதிகரிப்பு, மொத்த உள்நாட்டு மூலதன ஆக்கம் குறைந்து வருதல், தொழில் துறை வளர்ச்சியில் சுணக்கம் போன்றவை பொருளாதாரச் சீர்திருத்தத்தால் ஏற்பட்ட எதிர் விளைவுகளாக அறியப்படுகிறது. தொடர்ந்து குறைந்து வரும் வேளாண்மையின் பங்களிப்பு, குறைவான மனிதவள மேம்பாடு, கிராம-நகர வேறுபாடுகள், பாலின மற்றும் சமூக சமமின்மை, வட்டார ஏற்றத்தாழ்வு போன்றவையும் பெரும்சவலாகச் சீர்திருத்தின் விளைவாக உருவெடுத்துள்ளன. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்திரவாத அடிப்படையில் மிகப்பெரிய வேலைவாயப்புத் திட்டமாக அறியப்பட்டாலும் அதனால் உருவான மனித வேலை நாட்கள், வேலைவாய்ப்புப் பெருக்கத்தை எதிர்பார்த்த அளவிற்கு முன்னெடுப்பை எடுத்துச்செல்லவில்லை. ஆனால் இந்தத் திட்டத்தால் கிராமப்புற நுகர்வு பெரிய அளவில் அதிகரித்துள்ளது, கிராமப்புறக் கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது.

வீழ்ச்சி அடைந்துவரும் வேளாண்மையை மேம்படுத்துவதும். உற்பத்தித் துறையை வலுவானதாகக் கட்டமைப்பதும், தரம்வாய்ந்த உட்கட்டமைப்பை மேம்படுத்தலாலும், மனித மற்றும் பயன்படுத்தப்படாத இயற்கை வளங்களை முறையாகப் பயன்படுத்தப்படுதலால் பொருளாதாரச் சீர்திருத்தச் சவால்களை எதிர்கொண்டு இயைந்த உள்ளடக்கிய வளர்ச்சியை எட்டுவதற்கு வழிவகை செய்யும். இவையெல்லாம் நீண்டகால அனுகுமுறையினைக்கொண்டே உருவாக்க வேண்டும். தற்போது எதிர்கொண்டுள்ள கோவிட் பெருந்தொற்றின் துயரங்களைக் களைவதற்கு அளிப்பினை மேம்படுத்துவது மட்டுமின்றி தேவைகளை உருவாக்க வேண்டும், மருத்துவத்திற்கான முதலீடுகளை அதிகரிக்க வேண்டும், மாநில அரசுகளின் நிதி ஆதாரங்களை வலைக்கும் முயற்சியினை ஒன்றிய அரசு கைவிடவேண்டும். அரசுசார்ந்த முதலீடுகள் பெருக்கப்படவேண்டும், நகர-கிரமப்புற வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். ஒட்டுமொத்தமாக விளைவுள்ள தேவைகளை உருவாக்க அரசு முயற்சிசெய்ய வேண்டும்.


பேராசிரியர் பு.அன்பழகன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “இந்தியப் பொருளாதாரச் சீர்திருத்தமும் விளைவுகளும்”

அதிகம் படித்தது