இந்தியாவின் பன்முக ஏழ்மை குறியீட்டெண் 2021 – மாநில ஏற்றத்தாழ்வுகளும்
பேராசிரியர் பு.அன்பழகன்Dec 18, 2021
வறுமை இந்தியாவின் முக்கிய அறைகூவல்களில் ஒன்று ஆகும். வறுமையின் தீவிரத்தை குறைக்கும் பல்வேறு செயல் திட்டங்களை இந்திய அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. இந்தியாவில் வறுமையைப் பற்றிய புள்ளி விவரங்களை 1901ஆம் ஆண்டு தாதாபாய் நௌரோஜி அவர்களால் முதன் முதலில் கணக்கிடப்பட்டது. பின்னால் பல்வேறு நிபுணர் குழுக்களாலும் பொருளியல் அறிஞர்களாலும் கணக்கிடப்பட்டு வந்துள்ளன. இந்தியாவில் தேசிய மாதிரி ஆய்வு அமைப்பு (1950) உருவாக்கப்பட்டு வறுமையைப் பற்றிய தரவுகளை ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நுகர்வினை அடிப்படையாகக் கொண்டு வெளியிட்டு வந்துள்ளது. பேரா.ஒய்.கே.அலக் (1979) என்பவரின் தலைமையாலான குழுவின் பரிந்துறையின்படி முதன் முதலில் அறிவியல் பூர்மாக மனிதர்கள் உட்கொள்ளும் உணவுகளை கலோரிகளின் அடிப்படையில் கணக்கிட பரிந்துரைத்தது. பின்னால் பேரா.லக்டவாலா (1993ஆம் ஆண்டு), பேரா. சுரேஸ் டெண்டுல்கர் (2009ஆம் ஆண்டு), ரங்கராஜன் 2014ஆம் ஆண்டு) ஆகியோர்கள் தலைமையிலான நிபுணர் குழுக்கள் வறுமையைப் பற்றி அளவிடும் முறைகளில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டுவந்தன. இம் முறைகள் அனைத்தும் நுகர்விற்காக செலவிடப்படும் பணத்தை அடிப்படையாகக் கொண்டு புள்ளிவிவரங்களை வெளியிட்டு வந்தன.
உலக அளவில் பத்தாயிரமாவது ஆண்டு குறிக்கோள்கள் (2000-2015) மற்றும் நீடித்த வளர்ச்சி குறிக்கோள்கள் (2015-2030) ஆகிய இரண்டும் வறுமையின் தீவிரத்தை குறைக்க இலக்கு நிர்ணயம் செய்தன. இந்த அடிப்படையில் ஐக்கிய நாடுகளின் மானுட மேம்பாட்டு அறிக்கையின் கீழ் அல்கிரே-ப்பாஸ்டர் அவர்களின் கணக்கிடும் முறையின் அடிப்படையில் சுகாதாரம், ஊட்டச்சத்து, கல்வி, வாழ்க்கை தரம் போன்ற கூறுகளைக் கொண்டு பன்முக ஏழ்மை குறியீட்டெண் 2010ஆம் ஆண்டு முதல் வெளியிடப்பட்டு வருகிறது (இதற்கு முன்பு இருந்த மனித வறுமைக் குறியீட்டெண் என்பதை மாற்றி அமைக்கப்பட்டது). அன்மையில் 2021ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட உலகளவிலான பன்முக ஏழ்மை குறியீட்டின்படி உலகில் %ன்றில் ஒரு குழந்தை பன்முக நிலையிலான ஏழைகளாக உள்ளனர் இவர்களில் பெரும்பாலும் துணை-சஹாரா ஆப்பிரிக்கா (556 மில்லியன்) மற்றும் தெற்கு ஆசிய நாடுகளில் (532 மில்லியன்) வசிக்கின்றனர். உலகில் 788 மில்லியன் குடும்பங்களில் குறைந்தது ஒருவர் ஊட்டச்சத்து குறைபாடுடன் உள்ளனர், 481 மில்லியன் குழந்தைகள் பள்ளி செல்லாமல் உள்ளனர், 568 மில்லியன் குடும்பங்களுக்கு தூயகுடிநீர் கிடைப்பதில்லை, 678 மில்லின் குடும்பங்களுக்கு மின் இணைப்பில்லை, 2021ஆம் ஆண்டிற்கான உலகளவிலான பன்முக ஏழ்மை குறியீட்டின்படி பட்டியலிடப்பட்ட 109 நாடுகளில் இந்தியா 66வது இடத்தில் உள்ளது. 2005-06ஆம் ஆண்டின்படி இந்தியாவில் 55.1 விழுக்காடு மக்கள் (690.55 மில்லியன்) ஏழைகளாக இருந்துள்ளனர் இது 2015-16ஆம் ஆண்டில் 27.9 விழுக்காடாக் (369.55 மில்லியன்) குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதாவது 271 மில்லியன் மக்கள் பன்முக ஏழ்மையில் இருந்து விடுபட்டுள்ளனர். இந்தியாவில் இக்குறியீட்டின்படி (2015-16ஆம் ஆண்டு) பாதி அளவிற்கு பழங்குடியினர் ஏழைகளாக (129 மில்லியனில் 65 மில்லியன்) உள்ளனர், இவர்கள் இந்தியாவில் பன்முக ஏழ்மையில் வாழும் மொத்த மக்களில் ஆறில்-ஒரு பங்கினராகும். பட்டியலின மக்களில் 33.3 விழுக்காடும் இதர பிறபடுத்தப்பட்ட மக்கிளில் 27.2 விழுக்காடு மக்களும் ஏழ்மையில் வாடுகின்றனர் (UNDP (2021) : “Global Multidimensional Poverty Index 2021,”http://hdr.undp.org/sites/default/files/2021_mpi_report_en.pdf) .
மாறிவரும் சூழலில் வறுமை என்பது மனிதர்கள் உட்கொள்ளும் கலோரிகளைக் கொண்டு மட்டுமே கணக்கிடுவது உகந்ததாக அமையாது என்றும் பல்வேறு காரணிகளையும் உள்கொண்டுவரவேண்டும் என பல்வேறு ஆய்வுகள் தொடர்ந்து வெளியிட்டு வந்ததன. இந்த அடிப்படையில் இந்தியா இதற்கான கொள்கைகளை வகுப்பதன் அவசியத்தை உணர்ந்து உலகளாவின பன்முக ஏழ்மை குறியீட்டின் அடிப்படையில் இந்தியாவில் ஒரு புதிய முயற்சியாக ஏழ்மையினைப் பற்றிய தரவுகளை வெளியிட முனைந்தது. நிதி அயோக் தலைமையில் 11 அமைச்சகத்தை (1.புள்ளியல் மற்றும் திட்ட அமலாக்கம். 2.பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, 3. பேட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, 4. ஆற்றல், 5. வீட்டுவசதி மற்றும் நகர்புற விவகாரங்கள், 6. சுகாதாரம் மற்றும் குடும்ப நலன், 7. கிராமப்புற மேம்பாடு, 8. உணவு மற்றும் பொதுவிநியோகம், 9. பள்ளி கல்வி மற்றும் கல்வியறிவு, 10. குடிநீர் மற்றும் கழிவுநீர், 11. நிதிச் சேவைகள்) ஒருங்கிணைத்து பன்முக ஏழ்மை குறியீட்டெண்ணிற்கான கூட்டுக்குழு (MPICC) அமைக்கப்பட்டது. பலகட்ட விவாதத்திற்கு பின்பு மூன்று முக்கிய கூறுகளான சுகாதாரம், கல்வி, வாழ்க்கை தரம் போன்றவைகள் சம மதிப்புடனான (1/3) கணக்கில்எடுத்துக்கொள்ளப்பட்டது. 12 காரணிகள் இக் கூறுகளின் கீழ் எடுத்துக்கொள்ளப்பட்டது. சுகாதாரத்தின் கீழ் மூன்று காரணிகள் (ஊட்டச்சத்து, குழந்தைகள் மற்றும் பருவவயதினர் இறப்பு, தாய்மார்களின் பேறுகாலத்திற்கு முற்பட்ட பாதுகாப்பு), கல்வியின் கீழ் இரண்டு காரணிகள் (பள்ளி கல்வி ஆண்டு, பள்ளி கல்வி வருகை), வாழ்கை தரத்தின் கீழ் ஏழு காரணிகள் (சமையல் எரிபொருள், கழிவுநீர் வசதி, குடிநீர், மின்சாரம், வீட்டுவசதி, சொத்துக்கள், வங்கி கணக்கு) போன்றவைகளைக் கொண்டு பன்முக ஏழ்மை குறியீட்டெண் கணகிடப்படுகிறது. இம்முறையானது ஏழ்மை நிலையைப்பற்றி பணமற்ற முறையில் கணக்கிடக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது. இதன்படி இந்தியாவின் முதல் பன்முக ஏழ்மை குறியீட்டெண் 2021 நிதி அயோகினால் அன்மையில் (27.011.2021)வெளியிடப்பட்டது.
தணிக்கை செய்யப்பட்ட தலா விகிதத்தின்படி (Censored Head Count Ratio) இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாடு உடைய குடும்பங்கள் 19.9 விழுக்காடாகவும், குழந்தைகள், பருவவயதுடையோர்இறப்பு விகிதம் 1.88 விழுக்காடாகவும், முற்பட்ட நிலையிலான பேறுகால பாதுகாப்பு இன்மையால் 14.71 விழுக்காடும், பள்ளி கல்வி எட்டாத குடும்பங்கள் 10.71 விழுக்காடும், பள்ளி கல்வி வருகை குறைபாடு உள்ள குடும்பங்கள் 5.23 விழுக்காடும், சமையல் எரிவாயு பெறாமல் உள்ள குடும்பங்கள் 23.13 விழுக்காடும், கழிவுநீர் வெளியேற்ற வசதியற்ற குடும்பங்கள் 21.32 விழுக்காடும், குடிநீர் வசதியற்ற குடும்பங்கள் 5.53 விழுக்காடும், மின்சார இணைப்பற்ற குடும்பங்கள் 8.29 விழுக்காடும், சரியான வீட்டு வசதி இல்லா குடும்பங்கள் 20.56 விழுக்காடும், சொத்துகளற்ற குடும்பங்கள் 8.37 விழுக்காடும, வங்கி கணக்கு இல்லாத குடும்பங்கள் 5.37 விழுக்காடும் உள்ளதாக பன்முக ஏழ்மைக் குறியீடு கணக்கிட்டுள்ளது.
இந்திய அளவிலான எழ்மையினை பன்முக ஏழ்மை குறியீட்டின்படி மாநிலங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதன்படி மொத்த மக்கள் தொகையில் ஏழ்மையாக உள்ள மாநிலங்களில் அதிக அளவில் முதல் ஐந்தில் பீகாரில் 51.91 விழுக்காடு மக்களும், ஜார்க்கண்டில் 42.16 விழுக்காடும், உத்தரப் பிரதேசத்தில் 37.79 விழுக்காடும், மேகாலயா 32.7 விழுக்காடும், அசாமில் 32.67 விழுக்காடும் காணப்படுகிறது. அதாவது இம் மாநிலங்களில் %ன்றில் ஒருபங்கிற்குமேல் மக்கள் ஏழ்மையில் இருப்பதாக இக் குறியீடு விளக்குகிறது. இதில் மூன்று மாநிலங்கள் வடஇந்தியாவிலும் இரண்டு மாநிலங்கள் (மலைப் பிரதேச மாநிலங்கள்) வடகிழக்கு பகுதியிலுமானது. பீகார், ஜார்க்கண்ட், உத்தரப் பிதேசம், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் மொத்தமாக 196 மில்லியன் மக்கள் பன்முக ஏழைகளாக உள்ளனர் அதாவது இந்தியாவின் மொத்த பன்முக ஏழைகளில் பாதிக்கு மேல் இம் மாநிலங்களில் வாழ்கின்றனர். ஏழ்மை நிலையில் குறைவான மாநிலங்களில் கடைசி ஐந்து இடத்தை கேரளா (0.71 விழுக்காடு), கோவா (3.76 விழுக்காடு), சிக்கிம் (3.82 விழுக்காடு), தமிழ்நாடு (4.89 விழுக்காடு), பஞ்சாப் (5.59 விழுக்காடு) போன்றவைகள் இடம்பெற்றுள்ளன. இதில் கேரளா, தமிழ்நாடு இந்தியாவின் தென்மாநிலங்களாகும். இம் மாநிலங்கள், கல்வி, சுகாதார திட்டங்களை தீவிரமாக தொடர்ந்து செயல்படுத்தி வருவதன் விளைவு என இதனைப் புரிந்துகொள்ள முடியும். கோவா, சிக்கிம் பொன்றவைகள் மிகச் சிறிய மாநிங்களாகும்.
இந்தியாவில் உள்ள 28 மாநிலங்களின் ஏழ்மை நிலையினை அடிப்படையாகக்கொண்டு ஐந்து குழுக்களாகப் பிரிக்கலாம். அவை 10 விழுக்காடுக்கு குறைவாக ஏழைகள் உள்ள மாநிலங்களின் எண்ணிக்கை 7 ஆகும். 10லிருந்து 25 விழுக்காடு ஏழைகள் உள்ள மாநிலங்களின் எண்ணிக்கை 10 ஆகும். 25லிருந்து 33 விழுக்காடு ஏழைகள் உள்ள மாநிலங்களின் எண்ணிக்கை 7 ஆகும், 33லிருந்து 50 விழுக்காடு ஏழைகள் உள்ள மாநிலங்களின் எண்ணிக்கை 3 ஆகும். 50 விழுக்காடுக்கு சற்று மேல் உள்ள ஒரே மாநிலம் 1 ஆகும் (பீகார்). அதாவது மொத்தமான 28 மாநிலங்களில் கால்பங்கு மக்களுக்கு மேல் ஏழ்மையாக காணப்படும் மாநிலங்கள் எண்ணிக்கை 11 ஆகும். 12 காரணிகளின் அடிப்படையில் அதிக குறைபாடு உடைய உச்ச அளவிலான ஐந்து மாநிலங்கள், குறைந்த அளவிற்கான குறைபாடு உடைய கடைசி ஐந்து மாநிலங்கள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன.
காரணிகள் | அதிக குறைபாடு உடைய முதல் ஐந்து மாநிலங்கள் |
குறைந்த குறைபாடு உடைய
கடைசி ஐந்து மாநிலங்கள் |
ஊட்டச்சத்து(குடும்பத்தில் 0-59 மாதக் குழந்தைகள்,
15-49 வயதுடைய பெண்கள், 15-45 வயதுடைய ஆண்கள் ஊட்டச்சத்து குறைபாடு உடையவர்கள்) |
பீகார்,ஜார்க்கண்ட்,மத்தியப் பிரதேசம்,உத்தரப் பிரதேசம்,சத்தீஸ்கர்(43.02 – 51.88 %) | சிக்கிம்,கேரளா,அருணாச்சலப் பிரதேசம்,மிசோரம்,
பஞ்சாப்(13.32 – 22.11 %) |
குழந்தைகள்,பருவ வயதுவதுடையோர் இறப்பு வீதம் (குழந்தைகள்,பருவ வயதுடையோர்
கணக்கெடுப்பிற்கு முன்பு கடந்த 5 ஆண்டுகளில் 18 வயதுக்கு முன்பு இறந்தவர்கள்) |
உத்தரப் பிரதேசம்,பீகார்,மத்தியப் பிரதேசம்,சத்தீஸ்கர்,ஜார்க்கண்ட்
(3.32 – 4.97 %) |
கேரளா,கோவா,சிக்கிம்,தமிழ்நாடு,
திரிபுரா(0.19 – 1.28 %) |
பேறுகால பாதுகாப்பு(வீட்டில் உள்ள பெண்களுக்கு
பேறு காலத்திற்கு முற்பட்ட நிலையில் சுகாதாரப் பாதுகாப்பு இக் கணக்கெடுப்பிற்கு முன்பு 5ஆண்டுகளில் பெற்ப்படாதவர்கள்)
|
பீகார்,உத்தரப் பிரதேசம்,ஜார்க்கண்ட்,நாகாலாந்து,
மேகாலயா(31.70 – 45.62 %) |
கேரளா,சிக்கிம்,தமிழ்நாடு,கோவா,
ஆந்திர பிரதேசம்(1.73 – 9.66%)
|
பள்ளி கல்வி ஆண்டு(குடும்பத்தில் உள்ள ஏதாவது
ஒரு நபர் 10 வயதுக்குட்பட்டோர் அல்லது மூத்தவர் 6 ஆண்டுகள் பள்ளி கல்வியை முடிக்காதவர்கள்) |
பீகார்,மேகாலயா,ஜார்க்கண்ட்,
அருணாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான்(17.10 – 26.27 %) |
கேரளா,ஹிமாச்சலப் பிரதேசம்,கோவா,மணிப்பூர்,
மகாராஷ்டிரா(1.78 – 6.54%) |
பள்ளி, கல்வி வருகை
(பள்ளி படிக்கும் வயதுடையவர்கள் 8ஆம் வகுப்பு முடிய பள்ளிகூடம் செல்லாதவர்கள்)
|
பீகார்,உத்தரப் பிரதேசம்,ராஜஸ்தான்,
மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட் (8.19 – 12.52 % NFHS 2015-16) |
கேரளா,ஹிமாச்சலப் பிரதேசம்,கோவா,தமிழ்நாடு,
சிக்கிம்(0.54 – 1.42 % NFHS 2015-16) |
சமையல் எரிபொருள்(குடும்ப சமையலுக்கான
முதன்மை ஆதரங்களான வறட்டி,வேளாண் பயிர்கள்,சுல்லிகள்,கட்டைகள்,மரக்கரி அல்லது நிலக்கரி பெறமுடியாதவர்கள்) |
பீகார், ஜார்க்கண்ட், ஒடிசா, சத்தீஸ்கர், அசாம்(60.50 – 63.20%) | கோவா, தமிழ்நாடு, தெலுங்கானா,
மிசோரம், பஞ்சாப்(3.10 – 23.30 %) |
கழிவுநீர் வசதி(குடும்பத்தில் கழிவுநீர் வசதி
இல்லாதவர்கள் அல்லது மேம்படுத்தாதவர்கள் அல்லது மேம்படுத்தப்பட்டவர்கள் ஆனால் மற்ற குடுப்பத்தினருடன் பகிர்ந்து கொள்ளக்கூடியவர்கள்) |
ஜார்க்கண்ட், பீகார், ஒடிசா,
சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் (34.90 – 43.30%) |
கேரளா, சிக்கிம், மிசோரம், பஞ்சாப், ஹரியானா(1.30 – 15.00 %) |
குடிநீர் வசதி(குடும்பத்தில் குடிநீர் வசதி பெறாதவர்கள்
அல்லது பாதுகாப்பான குடிநீரைப்பெறுவதற்கு போக வர 30 நிமிடத்திற்கு மேல் செலவிடுபவர்கள்)
|
மணிப்பூர், மேகாலயா, ஆந்திர பிரதேசம், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம்
(29.83 – 60.89 % NFHS2015-16) |
பஞ்சாப், பீகார், சிக்கிம், கோவா, உத்தரப் பிரதேசம்(1.93 – 5.38 % NFHS 2015-16) |
மின்சாரம்(மின்சார இணைப்பற்ற குடும்பங்கள்) | உத்தரப் பிரதேசம், மேகாலயா,
அசாம், ஜார்க்கண்ட், அருணாச்சலப் பிரதேசம்(5.20 – 9.00 %) |
கோவா, பஞ்சாப், ஹிமச்சலப் பிரதேசம், சிக்கிம், கேரளா(0.00 – 0.74 %) |
வீட்டு வசதி(போதுமான வீட்டு வசதியின்றி இருக்கும்
குடும்பம்: தரை, கூரை,சுவர் போன்றவைகள் இயற்கையாக கிடைப்பவைகளைக் கொண்டு உருவாக்கப்பட்டிருத்தல்) |
மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசம்,
அசாம், திரிபுரா, பீகார் (73.73 – 81.49 % NFHS 2015-16) |
கேரளா, கோவா, ஆந்திர பிரதேசம்,
பஞ்சாப், தமிழ்நாடு(10.76 – 20.18 % NFHS 2015-16) |
சொத்துகள்(வானொலி,தொலைபேசி,கணினி,
மாட்டுவண்டி,மிதிவண்டி. மோட்டர்பைக், குளிர்சாதன பெட்டி போன்றவற்றில்ஒன்றுக்கு மேற்பட்டு இல்லாமலும் இத்துடன் கார் அல்லது டிரக் வகனங்கள் இல்லாமல் இருக்கும் குடும்பங்கள்) |
நாகலாந்து, மேகாலயா, பீகார், அருணாச்சலப் பிரதேசம், ஜார்க்கண்ட்(21.37 – 33.91 %) | பஞ்சாப், கேரளா, கோவா, தமிழ்நாடு, ஹரியானா(1.72 – 4.65 %) |
வங்கி கணக்கு(குடும்ப உறுப்பினர்களில் வங்கி அல்லது
அஞ்சலக கணக்கு வைத்திருக்காதவர்கள்) |
நாகாலாந்து, பீகார், மணிப்பூர், மேகாலயா, அசாம்(15.40 – 28.66 % NFHS 2015-16) | ஹிமச்சலப் பிரதேசம், திரிபுரா,
பஞ்சாப், கோவா, ராஜஸ்தான் (2.69 – 4.03 % NFHS 2015-16) |
குறிப்பு: அடைப்புகுறிகளில் ஐந்து மாநிலங்களின் விழுக்காட்டு வீச்சு அளவு கொடுக்கப்பட்டுள்ளன.
ஆதாரம்: GoI (2021): “ India – National Multidimensional Poverty Index – Baseline Report,” NITI Aayog, New Delhi.
சுகாதாரம்
சுகாதாரத்தைப் (ஊட்டச்சத்து, குழந்தைகள் மற்றும் பருவ வயதுடையோர் இறப்பு, முற்பட்ட பேறுகால பாதுகாப்பின்மை) பொருத்த அளவில் வட-இந்திய மாநிலங்களான பீகார், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் போன்றவைகள் மிகவும் பின்தங்கியுள்ளன. தென்-இந்திய மாநிலங்களான கேரளா, தமிழ்நாடு சிறப்பான நிலையில் உள்ளன. இதற்கு முக்கிய காரணம் 2016-17ஆம் ஆண்டின்படி சுகாதாரத்திற்கான மொத்த தலா செலவு இந்திய அளவில் செலவிடப்படும் ரூ.4381ஐவிடக் குறைவாக பீகார் (ரூ.2358), மத்தியப் பிரதேசம் (ரூ.2820), சத்தீஸ்கர் (ரூ.3648), உத்தரப் பிரதேசம் (ரூ.4019) மாநிலங்களில் காணப்படுவதாகும் ஆனால் கேரளாவில் இது ரூ.8083ஆகவும், தமிழ்நாட்டில் ரூ.4734ஆகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது (GoI (2019): “National Helath Accounts Estimates for India 2016-17,” Ministry of Health & Family Welfare, New Delhi). தமிழ்நாடு ஊட்டச்சத்து குறைபாட்டினைப் போக்க தொடர்ந்து 1980களிலிருந்து திட்டங்களை வகுத்துவருவதும் (எ.கா.தமிழ்நாடு ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து திட்டம், மதிய உணவு திட்டம்), கேரளா அரசினால் சிறப்பாக நடைமுறைபடுத்திவரும் மேம்பாட்டு ஊட்டச்சத்து திட்டமும் அனைவருக்குமான சுகாதாரம் போன்றவைகளினால் இம் மாநிலங்கள் சுகாதார நிலையில் சிறந்த இடத்தில் இருப்பதற்கான முக்கிய காரணங்கள் ஆகும்.
கல்வி
இந்தியா பள்ளி கல்வி (தொடக்க கல்வி முதல் மேல்நிலைக் கல்வி வரை) உலகத்திலேயே மிகவும் பெரியது ஆகும். இந்தியாவில் 2019-20ஆம் ஆண்டு கணக்கின்படி 15 லட்சத்திற்குமேல் பள்ளிகளும், 95 லட்சம் ஆசிரியர்களும், 26.5 கோடி மாணவர்களும் பயில்கின்றனர். இதில் தொடக்க கல்வியை (1-5 வகுப்பு) 12.2 கோடி மாணவர்கள் பயில்கின்றனர். ஆனால் 16.6 விழுக்காடு பள்ளிகளில் மின்சார இணைப்பு இல்லை, 3.1 விழுக்காடு மாணவியர்களுக்கும், 4.1 விழுக்காடு மாணவர்களுக்கும் கழிப்பிட வசதியில்லை. தொடக்க கல்விக்கான மொத்த மாணவர் சேர்கை விகிதம் 103.7 விழுக்காடு ஆகும். பள்ளி கல்வியில் பல்வேறு நிலைகளில் பீகார், ஜார்க்கண்ட், ஆகிய இரண்டு மாநிலங்கள் தேசிய அளவில் மிகவும் பின்தங்கியுள்ளன. கேரளா, ஹிமாச்சல் பிரதேசம், கோவா போன்ற மாநிலங்கள் சிறந்த நிலையில் உள்ளன. பீகார் மாநிலத்தில் தொடக்க பள்ளி கல்விக்கான ஆசிரியர் மாணவர் விகிதம் மிகவும் கவலை அளிக்கத்தக்க அளவில் 55.4 ஆகவும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் இது 30.6ஆகவும் உள்ளது. இதுபோல் ஆரம்பக் கல்வியில் (1-8 வகுப்பு) மொத்த சேர்கை விகிதம் பீகாரில் 88.1ஆகவும் ஜார்க்கண்டில் 95.1ஆகவும் உள்ளது (தேசிய அளவில் 97.8). இவ்விரண்டு மாநிலங்களிலும் பள்ளி கல்வியில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் விழுக்காடு தேசிய அளவைவிட மிகக் குறைவாகவே உள்ளது. மேலும் தொடக்கக் கல்வி இடைநிற்றல் பீகாரில் 2.3 விழுக்காடும் ஜார்க்கண்டில் 6.3 விழுக்காடும் உள்ளது (தேசிய அளவில் 1.5 விழுக்காடு). ஆரமப்பக் கல்வியில் இடைநிற்றல் பீகாரில் 8.9 விழுக்காடும், ஜார்க்கண்டில் 8.5 விழுக்காடும் உள்ளது (தேசிய அளவில் 2.6 விழுக்காடு). இவ்வாறு பல நிலைகளில் இவ்விரண்டு மாநிங்களும் பின்தங்கிய நிலையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது (GoI (2021): “Unified District Information System for Education Plus (UNISE+)) 2019-20,” Ministry of Education, New Delhi). எனவே இவ்வகை மாநிலங்களை இனம் கண்டு அவற்றின் உள்கட்டமைப்பை மேம்படுத்தியும் மனித ஆற்றலையும், மாணவர்களின் திரனையும் மேம்படுத்தப்படவேண்டியது அவசியமாகிறது.
வாழ்க்கை தரம்
வாழ்கை தரம் 7 காரணிகளை உள்ளடக்கியதாகும். வடஇந்தியாவின் இரண்டு மாநிலங்களான பீகார், ஜார்க்கண்ட் 5ந்து காரணிகளில் பின்நிலையில் உள்ளன. வடகிழக்கு மாநிலங்களான அசாம் மேகாலயா, அணாச்சலப் பிரதேசம் போன்றவைகள் அடுத்த நிலையில் பின்தங்கிய மாநிலப் பட்டியலில் உள்ளன. வடகிழக்கு மாநிலங்கள் பூகோலரீதியான அமைப்பினால் குடிநீர் வசதி, வீட்டு வசதி மற்றும் மின்சார இணைப்பு போன்றவைகள் இம் மாநிலங்களில் வாழும் குடும்பங்களுக்கு சரியான அளவில் அமைத்து தரமுடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இம் மாநிலங்கள் மலைப் பிரதேசத்திலும் காடுகள் அதிக அளவில் இருப்பதினால் வங்கி சேவைகளும் சரியாக வழங்கப்படவில்லை. இக் காரணங்களினால் இங்கு வாழும் மக்களின் வாழ்க்கை தரத்தில் போதுமான முன்னேற்றம் ஏற்படுதில்லை.
இந்திய மாநிலங்களுக்கிடையிலான ஏற்றத்தாழ்வுகள் பெரிய அளவில் காணப்படுகிறது. குறிப்பாக வடக்கு, வடகிழக்கு மாநிலங்கள் பல நிலைகளில் பின்தங்கிய நிலைகளில் உள்ளன. தெற்கு, மேற்கு, வட-மேற்கு மாநிலங்கள் சிறப்பான நிலையில் உள்ளன. எனவே இவ் வட்டார ஏற்றத்தாழ்வினை போக்க வடக்கு, வடகிழக்கு மாநிலங்களுக்கான சிறப்பு திட்டங்களை முன்னெடுக்க வேண்டிய கட்டாயம் ஒன்றிய அரசுக்கு உள்ளது. குறிப்பாக சுகாதாரம் மற்றும் கல்வி நிலையினை மேம்படுத்த அப்படையில் கட்டமைப்பினை போர்கால அடிப்படையில் நிறைவேற்றபடவேண்டும். இவ்விரண்டு துறைகளில் முன்னேற்றம் காணும்போது மக்களின் வாழ்க்கை தரம் மேம்படும் இதன் வெளிபாடாக உள்ளடக்கிய பொருளாதர வளர்ச்சி உறுதிசெய்யப்படும்.
பேராசிரியர் பு.அன்பழகன்
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “இந்தியாவின் பன்முக ஏழ்மை குறியீட்டெண் 2021 – மாநில ஏற்றத்தாழ்வுகளும்”