மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

இந்தியாவின் 2022-2023ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையும் அறைகூவல்களும் – பகுதி-2

பேராசிரியர் பு.அன்பழகன்

Feb 19, 2022

siragu-budget-2022-23-2சமூக நலம்

சுகாதாரம் கல்வி இரண்டும் நாட்டின் சமூக மேம்பாட்டிற்கு அடிப்படையானதாகும். சுகாதாரச் செலவு என்பது இரு முக்கிய நோக்கங்களை உடையது ஒன்று, பேறுகால மற்றும் குழந்தைகளுக்கான சுகாதாரப் பாதுகாப்பு, மற்றொன்று, பொதுமக்கள் நோய்களை தீர்ப்பதற்காக செலவிட்டு கடனில் அதிக அளவில் வீழ்ந்து வறுமையினை எதிர்கொள்கின்றனர். எனவே இதனை போக்க சுகாதாரத்தின் மீதான முதலீடுகளை அதிகப்படுத்துதல் ஆகும். இந்தியாவில் தலா சுகாதாரச் செலவு 2020ஆம் ஆண்டின்படி 22.3 டாலர் ஆகும் இது அமெரிக்காவில் 119.9 டாலரும், பிரிட்டனில் 408.5 டாலரும் ஆகும். சுகாதாரத் துறைக்கு ரூ.8.66 லட்சம் கோடி 2023ஆம் நிதி ஆண்டிற்கான செலவாக ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 0.23 விழுக்காடு மட்டுமே அதிகமாகும் (2021-22BE). இதில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்திற்கு ரூ.0.83 லட்சம் கோடியும், சுகாதார ஆராய்ச்சிக்கு ரூ.0.03 லட்சம் கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

சுகாதாரக் கட்டமைப்பு இயக்கத்திற்கு ரூ.5156 கோடியும், டிஜிட்டல் சுகாதார இயக்கத்திற்கு ரூ.200 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. கோவிட் தடுப்பூசிக்கு இந்த நிதிஆண்டில் ரூ.5000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது இது கடந்த நிதிஆண்டில் ரூ.39000 கோடியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முக்கிய காரணம் இந்தியாவில் ஏற்கனவே கோவிட் தடுப்பூசியை நான்கில்-மூன்று பங்கினர் எடுத்துக்கொண்டனர் (15 வயதுக்கு மேல்) எனவே இதற்கான செலவினை அதிகஅளவில் இந்த நிதியாண்டில் குறைத்துள்ளனர். தேசிய சுகாதாரத்திற்கு 7 விழுக்காடும், பிரதம மந்திரி ஸ்வஸ்திய சுராக்ஷா திட்டத்திற்கு 35 விழுக்காடும், சுகாதார கட்டமைப்பிற்கு இரண்டு மடங்கும் கடந்த நிதி ஆண்டைவிட அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது புதிய முயற்சியாக தேசிய தொலைமனநல மருத்துவத் திட்டம் என்பதை நாட்டில் 23 மையங்களில் தொடங்க உள்ளது.

இந்தியாவில் கோவிட் பெருந்தொற்று காலங்களில் டிஜிட்டல் வழியாக மருத்துவம் பார்த்தவர்கள் 80 விழுக்காடு அதிகரித்துள்ளனர். ஏனவே இதற்கான முக்கியத்துவம் தற்போது அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 2 லட்சம் அங்கன்வாடிகளை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. புகையிலைப் பயன்பாட்டை குறைக்க அதன் மீதான வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசானது பொதுசுகாதாரத்திற்கு அதன் பங்களிப்பாக மூன்றில் ஒரு பங்கு மட்டுமே செலவிடுகிறது, மொத்த சுகாதாரம் என்று எடுத்துக்கொண்டால் ஒன்றிய அரசு 8 விழுக்காடு செலவினைப் பகிர்ந்துகொள்கிறது. ஆனால் மாநில அரசுகள் என்று எடுத்துக்கொண்டால் ஒன்றிய அரசைவிட இரண்டு மடங்கு செலவினை செய்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் கோவிட் பெருந்தொற்றினை எதிர்கொள்ள சுகாதாரத்திற்கு செலவிடப்பட்டது இந்தியாவின் ஜிடிபி யில் 2.1 விழுக்காடாகும் ஆனால் இது விரும்பத்தக்க குறைந்தபட்ச அளவான 3 விழுக்காடு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கல்விக்கான உத்தேச ஒதுக்கீடு ரூ.104278 கோடியாகும் இது கடந்த ஆண்டைவிட 18 விழுக்காடு அதிகமாகும், குறிப்பாக பள்ளி கல்விக்கு ரூ.63449 கோடியும், பள்ளிகளில் மதிய உணவு திட்டத்திற்கு ரூ.10223 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. கோவிட் பெருந்தொற்று காலங்களில் ஏற்பட்ட கற்றல் குறைபாடுகளைக் களைவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் பல்கலைக் கழகம், பள்ளிகளில் மின் உள்ளடக்கம், கல்வி தொலைக்காட்சியினை 12லிருந்து 200ஆக உயர்த்துதல் போன்றவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த திட்டங்கள் கிராமப்புற பகுதிகளிலும், பெரும்பாலான பட்டியல்-பழங்குடி இன மக்களிடையே சென்றடைய வகைசெய்யாது மேலும் இது முறைசாரா கல்வியினை அடிப்படையாகக் கொண்டுள்ளதாகவே கருத வேண்டியுள்ளது. அரசு பள்ளி-கல்லூரிகளில் உள்ள அடிப்படைக் கட்டமைப்பினை உருவாக்க இந்த நிதிநிலை அறிக்கையில் ஏதும் குறிப்பிடவில்லை.

உள்கட்டமைப்பு

கடந்த இரண்டு ஆண்டுகளாக பொதுத்துறை முதலீடுகள் அதிகரித்து வருகிறது. தனியார் முதலீடுகள் குறிப்பாக அன்னிய நேரடி முதலீடுகள் இந்தியாவில் முதலீடு செய்ய தயக்கம் காட்டிவருகிறது. இந்த நிலையில் தனியார் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வரிச்சலுகைகள், உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், தொழில் துவங்க எளிமையான அணுகுமுறை, தொழிலாளர் சட்டங்களை மாற்றி அமைத்தல் போன்ற நடவடிக்கைகளை கடந்த சில ஆண்டுகளாக ஒன்றிய அரசு முன்னெடுத்து வருகிறது.

இந்தியாவின் 75வது சுதந்திர தின உரையில் பிரதமர் கதி சக்தி திட்டமானது செலவுகளை குறைத்து உற்பத்தி திறனை மேம்படுத்தி பொருளாதார வளர்ச்சியினை அடைய உள்கட்டமைப்பை ரூ.100 கோடி செலவில் நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவித்தார். இந்த அடிப்படையில் சாலை போக்குவரத்து, இரயில் போக்குவரத்து, வான்வழிப் போக்குவரத்து, துறைமுகம், வெகுஜன போக்குவரத்து, நீர்வழிப் போக்குவரத்து, லாஜிஸ்டிக் உள்கட்டமைப்பு போன்றவைகளை மேம்படுத்துவதாக 2022-23ஆம் ஆண்டு நிதிநிலை குறிப்பிட்டுள்ளது. 2022-23ஆம் ஆண்டு நிதிநிலையில் போக்குவரத்துக்கு ரூ.3.51 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது இது கடந்த ஆண்டைவிட 8 விழுக்காடு அதிகமாகும். தேசிய நெடுஞ்சாலைகளுக்கு ரூ.1.34 லட்சம் கோடியும், பிற சாலைகளுக்கு ரூ.64568 கோடியும் (கிராமப்புற சாலை இணைப்பு திட்டத்திற்கு – PMGSY 27 விழுக்காடு கடந்த ஆண்டைவிட அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது), ரயில் போக்குவரத்திற்கு ரூ.1.37 கோடியும், மெட்ரோ ரயில்களுக்கு ரூ.19130 கோடியும், மின் துறையில் சூரிய மின் உற்பத்திக்கு ரூ.3304 கோடியும், காற்றாலைகளுக்கு ரூ.1050 கோடியும், ஜல் ஜீவன் மிஷன் திட்டத்திற்கு ரூ.60000 கோடியும் 2022-23ஆம் ஆண்டு நிதிநிலையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சாலைகளின் நீளத்தைப் பொருத்தவரையில் இந்தியா உலகில் இரண்டாம் இடத்தில் உள்ளது (2020-21ல் 62.16 லட்சம் கி.மீ). ஆனால் இந்தியாவில் பாதி கிராமங்களுக்குச் சாலை இணைப்பு இல்லை, பராமரிப்பற்ற நிலையில் சாலைகள், குறைந்த அளவிலான விரைவு சாலைகள், அதிக சாலை விபத்துகளை எதிர்கொள்ளுதல் (உலகில் முதல் இடத்தில்) போன்ற நிலையினை எதிர்கொண்டுள்ளது. இதனால் இந்தியாவில் சாரசரியான சரக்கு போக்குவரத்திற்கு ஜிடிபி யில் 14 விழுக்காடு செலவிடப்படுகிறது. இது வளர்ந்த நாடுகளில் 8லிருந்து 9 விழுக்காடு மட்டுமே செலவிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அரசு, சாலைப் போக்குவரத்தை மேம்படுத்த இந்த நிதி ஆண்டில் தலையாய முன்னுரிமை அளிக்கப்பட்டுளளது. இந்தியாவில் கடந்த ஆண்டு ஒரு நாளுக்கு சராசரியாக 20.9 கி.மீ சாலைகள் போட இலக்கு வகுக்கப்பட்ட நிலையில் தற்போது ஒரு நாளைக்கு 68 கி.மீ போடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சரக்குகளை ஏற்றிச் செல்வதில் சாலைப் போக்குவரத்து முக்கிய இடம் வகிக்கிறது. குறிப்பாக தேசிய நெடுஞ்சாலைகள் மொத்த சாலைகளில் 2 விழுக்காடாக இருந்தும் சுமார் 50 விழுக்காடு சரக்குகளை ஏற்றிச் செல்கிறது. எனவே, இந்த ஆண்டு 25000 கி.மீ க்கு புதிய தேசிய நெடுஞ்சாலைகளை உருவாக்க (2022ல் 11000 கி.மீ சாலைகள் போடப்பட்டுள்ளது) திட்டமிடப்பட்டுள்ளது. ரயில் போக்குவரத்தை மேம்படுத்த 2000 கி.மீ நீளத்திற்கு உள்நாட்டு தொழில்நுட்ப முறையிலான Kawach பயன்படுத்தி உலக தரத்திலான சேவையினை வழங்க உள்ளது. அதிவேகம் செல்லக்கூடிய 400 வந்தே பாரத் ரயில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ரயில் போக்குவரத்தில் ‘ஒரு நிறுத்தம் ஒரு உற்பத்தி’ என்ற திட்டத்தினை அறிமுகப்படுத்தப்பட உள்ளது இதனால் உள்ளுர் வாணிபம் பெருக்கமடையும். 100 பிரதம மந்திரி கதி சக்தி திட்டத்தின்படி கார்கோ தெர்மினல் உருவாக்கப்பட உள்ளது. இந்தியாவில் பல்வகை போக்குவரத்து சட்டம் (Multi-Modal Transport Act) 1993இல் இயற்றப்பட்டாலும் பயன்பாட்டளவில் நடைமுறையில் இல்லை எனவே இந்த நிதி அறிக்கையில் இதற்கான முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

நீர்பாசனம் வேளாண் மேம்பாட்டிற்கு முக்கியமானது என்பதால் இந்த நிதி அறிக்கையில் Pradhan Mantri Krshi Sinchaee Yojana (PMKSY) என்கிற திட்டத்திற்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் நீர்பாசனம், கிராமப்புறச் சாலைகள், கிராமப்புறங்களில் குடிநீர் வசதி போன்றவைகளை மேம்படுத்தப்படும் என்கிறது ஆனால் இந்த நிதி அதிக அளவில் நகர்புற மேம்பாட்டில் கவனம் செலுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. சூரிய சக்தி பயன்பாட்டை அதிகரித்து சுற்றுப்புற சூழலை மேம்படுத்த இந்த நிதி ஆண்டில் கடந்த ஆண்டைவிட சுமார் ஐந்து மடங்குக்கு மேல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது (ரூ.4500 கோடியிலிருந்து ரூ.24000 கோடியாக அதிகரிப்பு). டிஜிட்டல் மேம்பாட்டை இந்த நிதிநிலை அறிக்கை பல நிலைகளில் முன்னிருத்துகிறது. அதன்படி டிஜிட்டல் பல்கலைக்கழகம், டிஜிட்டல் வழி திறன் வளர்ப்பு, டிஜிட்டல் தரவுகள் சேமிப்பு, டிஜிட்டல் பணம், டிஜிட்டல் வங்கிகள் போன்றவைகளை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக குறிப்பிட்டால் கதி சக்தி என்ற தேசிய மாஸ்டர் திட்டத்தின்படி நாட்டின் வளர்ச்சியினை வேகமடைய செய்ய இந்த நிதிநிலை அறிக்கை முன்னுரிமை அளித்துள்ளது.

நலதிட்டங்கள்

பிரதான் மந்திர் கிசான் திட்டத்திற்கு ரூ.68000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 0.07 விழுக்காடு மட்டுமே அதிகமாகும். உணவு மானியத்திற்கு ரூ.2.06 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது இது கடந்த ஆண்டைவிட 28 விழுக்காடு குறைவாகும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்திற்கு ரூ.73000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 25.5 விழுக்காடு குறைவாகும். சுகாதாரத்திற்கான PMSSY திட்டத்திற்கு ரூ.10000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது இது கடந்த ஆண்டைவிட 35 விழுக்காடு அதிமாகும். வீடு கட்டும் திட்டமான பிரதான் மந்திரி அவாஸ் யோஜனாவிற்கு ரூ.48000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது இது கடந்த ஆண்டைவிட 1.3 விழுக்காடு மட்டுமே அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி நகர கிராமபுறங்களின் 80 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும். மேலும் இதனால் கட்டுமான, மனைத் தொழில்கள் புத்துயிர் பெறும் வேலைவாய்ப்பும் அதிகரிக்கும். தேசிய வாழ்வாதார இயக்கத்திற்கு ரூ.14236 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது இது கடந்த ஆண்டைவிட 14 விழுக்காடு அதிகமாகும். தேசிய சுகாதார இயக்கத்திற்கு ரூ.37800 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது இது கடந்த ஆண்டைவிட 8 விழுக்காடு அதிகமாகும். மிஷன் ஷகி வாத்சல்யா அங்கன்வாடி மற்றும் போஷன் 2.0 திட்டத்திற்கு ரூ.20263 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது இது கடந்த ஆண்டைவிட 1 விழுக்காடு மட்டுமே அதிமாகும்.

தேசிய கல்வி இயக்கத்திற்கு ரூ.39553 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது இது கடந்த ஆண்டைவிட 28 விழுக்காடு அதிகமாகும். பிரதான் மந்திரி போஷன் திட்டத்திற்கு (மாணவர்களுக்கான மதிய உணவு) ரூ.10233 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. துய்மை இந்தியா திட்டத்திற்கு ரூ.9492 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது இது கடந்த ஆண்டைவிட 19 விழுக்காடு அதிமாகும். பட்டியல் இனத்தவர்கள், பழங்குடி மக்களின் மேம்பாட்டிற்கு ரூ.12821 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது இது கடந்த ஆண்டைவிட 15 விழுக்காடு அதிகமாகும். தேசிய உணவுப் பாதுகாப்பின் கீழ் செயல்படும் பிரதம மந்திரி கரீப் கல்யாண் யோஜனா திட்டத்திற்கு ரூ.2.06 கோடி மானியத்துடன் உணவு பாதுகாப்பு அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்திற்கு 12 விழுக்காடு அளவிற்கு கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது (ரூ.13134 கோடி). இதில் மூத்த குடிமக்கள், போதைப்பொருள் அடிமை மறுவாழ்வு திட்டம், ஊனமுற்றோர் மேம்பாட்டு திட்டங்கள், ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை போன்றவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் சுகாதாரம், கல்வி, ஊட்டச்சத்து, சமூக பாதுகாப்பு போன்ற நிலைகளில் ஒரு தேக்க நிலையே நீடிக்கிறது. விளிம்புநிலை மக்களின் வாழ்வு மேம்பட சமூக நலதிட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டிய தற்போதைய நிலையில் அதை இந்த நிதிநிலை அறிக்கை செய்யத் தவறியிருக்கிறது.

அறைகூவல்கள்

இந்த 20222-23ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் முக்கிய அறைகூவல்களான வேலையின்மை, குடும்பங்களில் வருமானம் இழப்பு (கோவிட் பொருந்தொற்றால் 84 விழுக்காடு குடும்பங்களின் வருவாய் இழப்பை சந்தித்துள்ளது), தலா வருமானம் வீழ்ச்சி (2019-20ல் ரூ.108645லிருந்து 2021-22(AE)ல் ரூ.107801ஆக குறைந்துள்ளது), பணவீக்கம், தலா செலவு குறைந்தது (2019-20ல் ரூ.62056ஆக இருந்தது 2021-22(AE)ல் ரூ.59043ஆக குறைந்துள்ளது) புதியவர்கள் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது (4.6 கோடி மக்கள்), சுமார் 1.6 மில்லியன் சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் மூடப்பட்டது போன்றவைகள் முக்கியமாகக் காணப்படுகிறன. இந்த அறைகூவல்களைப் போக்க 2022-23ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் திட்டமிடாதது பெருத்த ஏமாற்றமாகும். அதே சமயம் 142 பேரின் வருமானம் கடந்த இரண்டு ஆண்டுகளில் ரூ.23 லட்சம் கோடியிலிருந்து ரூ.53 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது என்ற விவரம் தெரியவருகிறது.

பொருளாதார ஆய்வுகள் உலகிலேயே இந்தியா பெரும் சமனற்ற நாடாக இருப்பதாக தெரிவிக்கிறது. கடந்த 70 ஆண்டுகளில் உச்ச நிலையிலான 10 விழுக்காடு மக்களின் வருமானம் 20 விழுக்காட்டுப் புள்ளிகள் அதிரித்திருப்பதாகவும் கீழ்நிலையில் உள்ள 50 விழுக்காடு மக்களின் வருமானம் 7 விழுக்காடு புள்ளிகள் குறைந்திருப்பதாகவும் தெரிவிக்கிறது. கருப்பு-கள்ளப் பணத்தினை ஒழிக்க டிஜிட்டல் பண முறை நடைமுறைபடுத்தப்படும் என மறைமுகமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே குறிக்கோலின்படி 2016ல் கொண்டு வரப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கை இதனை அடையவில்லை. கொண்டுவரப்பட உள்ள இந்த பண முறையில் எந்த அளவிற்கு கருப்பு பணத்தினை கட்டுப்படுத்த முடியும் என்று உறுதியிட முடியாது.

பெரிய அளவிலான உள்கட்டமைப்புகள் மீதான முதலீடுகள் பெருமளவிற்கு வேலைவாய்பினை உருவாக்காது. இது பெருநிறுவனங்களுக்குச் சாதகமானதாவே இருக்கும். இக்கட்டமைப்பை உருவாக்க அதிக அளவில் இயந்திரங்கள் பயன்படுத்துவதால் வேலைவாய்ப்பு பெருகாது. மேலும் இக்கட்டமைப்பினை தொடங்குவதற்கான அடிப்படை கால அளவு அதிகமாக உள்ளதால் தற்போது எதிர்கொள்ளும் வேலையின்மையினை உடனடியாக தீர்க்க இயலாது. கிராமப்புற உள்கட்டமைப்பை வலுப்படுத்திய மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்திற்கு போதுமான நிதி ஒதுக்காத நிலையில் கிராமப்புறங்களில் வேலையின்மையினை அதிகரிக்கும். நகர்புறங்களில் வேலையின்மை கோவிட் பெருந்தொற்று காலங்களில் அதிகரித்தது இதனைக் கட்டுப்படுத்த கிராமப்புறங்களில் நடைமுறைபடுத்தப்பட்ட வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை போன்றே நகரங்களிலும் தொடங்கவேண்டும் என்று பல ஆய்வறிஞர்கள் வலியுறுத்தினர் ஆனால் இதற்கான அறிவிப்பு இந்த நிதிநிலை அறிக்கையில் இல்லை.

நிதி நிலையைப் பொருத்த அளவில் எதிர்பார்த்த அளவிற்கு வரி வருவாய் வளர்சியடையவில்லை, வரியல்லா வருவாய் முடக்கப்பட்டு அதற்கான முன்னெடுப்பும் இல்லை. கட்டுக்குள் வராத நிதிப் பற்றாக்குறை (15வது நிதிக்குழு பரிந்துரைத்த 5.5 அளவு), வருமான வரி தொடர்ந்து பல ஆண்டுகளாக வரிச்சலுகையில் மாற்றமின்மை, பொதுத்துறையினை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகள், சமூகநல திட்டங்களுக்குத் தகுந்த நிதிஒதுக்கீடு இன்மை, டிஜிட்டல் பண முறை வெளியிட உள்ளது, சிறு முதலீட்டாளர்கள் மெய்நிகர் (Cryptocurrency) பணத்தில் முதலீடு செய்வதில் அச்சம், முறைசாரா தொழிலாளர்களின் வேலைவாய்ப்பிற்கான ஒதுக்கீடு இன்மை போன்றவைகள் காணப்படுகிறது. நிதி அமைச்சர் பொருள் மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்தப்பட்ட 2017 ஆண்டிலிருந்து அதிக அளவாக ரூ.1.41 லட்சம் கோடி ஜனவரி 2022ல் பெறப்பட்டதாக பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார். இந்த வரியினால் ஏழை எளிய மக்கள் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், மாநிலங்களின் நிதி பெருமளவிற்கு பறிக்கப்பட்டுள்ளதையும், மாநிலங்களின் உரிய இழப்பீட்டு முழுஅளவினை பகிராமல் இருப்பதைப் பற்றியும் எண்ணிப் பார்க்கவில்லை.

கோவிட் பெருந்தொற்றினால் கடந்த இரண்டு ஆண்டுகளில் சுகாதாரம், கல்வி, உணவு பற்றாக்குறை, வேலை, வருமானம் போன்றவைகள் மீது பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. உலக அளவிலான மனிதவள குறியீட்டில் 189 நாடுகளில் இந்தியா 131வது இடத்திலும், உலகளாவிய பசி குறியீட்டில் 116 நாடுகளில் இந்தியா 101வது இடத்திலும், இந்தியா உலகிலேயே அதிக சமனற்று இருப்பதாக பன்னாட்டு தொழிலாளர் அமைப்பினால் வெளியிடப்பட்ட உலக சமூக பாதுகாப்பு அறிக்கை 2020-22ம் (ஆக்ஸ்பாம் அறிக்கை) தெரிவிக்கிறது. இந்தியா சமூக பாதுகாப்பிற்கு (சுகாதாரம் தவிற்று) ஜிடிபி யில் 1.4 விழுக்காடு மட்டுமே செலவிடுகிறது என்பதும் இந்தியா எந்த நிலையில் உள்ளது என்பதை தெளிவுபடுத்துகிறது. இந்த நிலையினைப் போக்க நீண்டகால அணுகுமுறை தேவை. மூலதன மூதலீடுகள் அதிகரிப்பதாலோ, டிஜிட்டல் முறையினை பரவலாக்குவதாலோ, பெரிய அளவிலான உள்கட்டமைப்புகளை ஏற்படுத்துவதாலோ இந்திய எதிர்கொண்டுள்ள அறைகூவல்களை வென்றெடுக்க முடியாது. பெருமளவிலான ஏழை, விளிம்பு, நடுத்தர குடும்பங்களின் வாழ்வாதாரங்களை உறுதிப்படுத்தி அவர்களின் சமூக மேம்பாட்டை அடைய செய்வதன் மூலமே உள்ளடக்கிய வளர்ச்சியினை அடைய முடியும். இதனால் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரம் மேம்படும்.


பேராசிரியர் பு.அன்பழகன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “இந்தியாவின் 2022-2023ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையும் அறைகூவல்களும் – பகுதி-2”

அதிகம் படித்தது