இந்தியாவின் 2022-2023ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையும் அறைகூவல்களும்
பேராசிரியர் பு.அன்பழகன்Feb 12, 2022
இந்தியா கடந்த பத்தாண்டுகளில் அரசியல் மாற்றம், பணமதிப்பிழப்பு, பொருள் மற்றும் சேவை வரி அறிமுகம், கோவிட் பெருந்தொற்றின் தாக்கம் போன்ற நிலைகளினால் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது. வேலை இழப்பு, வருமான வீழ்ச்சி, வறுமை அதிகரிப்பு, சமூக சூழல் பாதிப்பு, சமுதாய சமத்துவமின்மை அதிகரிப்பு, உற்பத்தி பாதிப்பு, நுகர்வுத் தேவை குறைந்தது, ஏற்றுமதி வீழ்ச்சி, பணவீக்கம், மூலதனக் கணக்கு பற்றாக்குறை, வங்கிக் கடனை திருப்பி செலுத்தாததல் ஏற்படுகின்ற Non-Performing Assets (NPA) அதிகரிப்பு போன்ற பெரும் அறைகூவல்களை சுதந்திரம் அடைந்து 75ஆண்டு நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது இந்தியா எதிர்கொண்டு வருகிறது விளைவுகளாகும். பிரதமர் மோடி தலைமையிலான அரசின் இரண்டாம் கட்ட ஆட்சியில் இவ் அறைகூவல்களை எதிர்கொள்ள பல முயற்சிகள் தொடர்ந்து எடுத்துக்கொண்டு வருகிறது. இந்த நிலையில் ஒன்றிய அரசின் நிதிநிலை கோவிட் பெருந்தொற்று பாதிப்பு காலத்தின் இரண்டாவது 2022-23 நிதிஆண்டிற்கான அறிக்கையை நிதிஅமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களால் 02.02.2022 அன்று பாராளுமன்றத்தில் ஒன்றரை மணி நேரம் தாக்கல் செய்தார். இந்த நிதிநிலை அறிக்கையின் முக்கிய நோக்கங்களாக பொருளாதார வளர்ச்சி, உள்ளடக்கிய சமூக நலன், தொழில்நுட்ப மேம்பாடு, பொது-தனியார் துறை முதலீடு போன்றவைகள் காணப்படுகிறது.
வரவு செலவு
2022-23ஆம் ஆண்டு நிதிநிலையில் மொத்த திட்டகால செலவாக ரூ.3944909 கோடி என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது இது கடந்த ஆண்டு மதிப்பீட்டுச் செலவினைவிட 4.64 விழுக்காடு அதிகமாகும். இதில் முக்கிய அம்சம் மூலதனச் செலவினம் கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்டதைவிட 24.47 விழுக்காடு 2021-22(RE)ல் ரூ.602711 கோடி, 2022-23(BE)இல் ரூ.750246 கோடி அதிகமாகும். ஆனால் இது 2019ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு முடிய அதிகரித்த விழுக்காட்டைவிடக் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. மற்றொரு வகையில் இது ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP); 2.9 விழுக்காடாகும். திட்டகால செலவு மதிப்பீட்டில் அதிக அளவாக வட்டிக்காக ஒதுக்கப்பட்டுள்ளது இது கடந்த ஆண்டைவிட 2.26 விழுக்காட்டுப்புள்ளிகள் அதிமாகும். மொத்த செலவீனத்தில் இதற்கு 29 விழுக்காடு அளவிற்கு பங்கெடுத்துக்கொள்கிறது. இதற்கு முக்கியக்காரணம் இந்தியாவில் கடன்-உள்நாட்டு உற்பத்தி விகிதம் 60 விழுக்காடிற்கு மேல் உள்ளதாகும், ஏற்றுக்கொள்ளத்தக்க அளவாக 40 விழுக்காடு இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. மாநில அரசுகளின் மூலதன முதலீடுகளுக்கு 50 ஆண்டுகளுக்கு வட்டியற்ற கடனாக ரூ.1 கோடி நிதி பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. முதலீட்டை விலக்குதல் இலக்காக ரூ.65000கோடி தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது கட்நத இரண்டு ஆண்டுகளாக இதன் இலக்குகளில் சுமார் 16 விழுக்காடு மட்டுமே சாத்தியமானது என்பது குறிப்பிடத்தக்கது.
வரி மற்றும் வரியல்லா வருவாயினை ஒப்பிடும்போது வரி மூலம் மட்டுமே சுமார் 90 விழுக்காடு பெறப்படுகிறது. இவ்வருவாயில் நிறுவன வரி, தனிநபர் வரி, பொருள் மற்றும் சேவை வரி அதிக அளவிற்கான பங்கினை அளிக்கிறது. நேர்முக வரியில் நிறுவன வரியினை விட தனிநபர் வரி அதிக அளவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது (2020-21ஆம் ஆண்டு நிறுவன வரி ரூ.4.46 லட்சம் கோடி, தனிநபர் வருமான வரி ரூ.4.59 லட்சம் கோடி). 2022-23இல் வரி மூலம்,ரூ.1934771 கோடி வரி வருவாய் எதிர்பார்கப்படுகிறது இது கடந்த ஆண்டை விட 9.6 விழுக்காடு அதிமாகும். பொருள் மற்றும் சேவை வரி (16 விழுக்காடு), நிறுவன வரி (15 விழுக்காடு), வருமான வரி (15 விழுக்காடு) போன்றவைகள் வரி வருவாய்க்கு பெரும் பங்கினை அளிக்கிறது. வரியில்லா வருவாய் ரூ.269651 கோடியாகும் இது கடந்த ஆண்டைவிட சுமார் ரூ.0.44 லடசம் கோடி அளவிற்குக் குறைகிறது (ரூ.313791 கோடி). நிதி பற்றாக்குறை 2023ஆம் நிதி நிலையில் 6.4 என எதிர்பார்கப்படுகிறது. நிதி பற்றாக்குறை 2021க்கு பிறகு குறைந்து வந்தாலும் ஏற்றுக்கொள்ளத்தக்க கட்டுப்பாட்டில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுத் துறை முதலீடானது வேலைவாய்ப்பு. வறுமை, உள்கட்டமைப்பு போன்றவைகளுடன் நெருங்கிய தொடர்புடையது. ஆனால் இம் முதலீடுகள் எந்த வகையில் செயல்படுகிறது என்பதைப் பொருத்தே அமையும். கடந்த இரண்டு ஆண்டுகளில் பொதுத்துறை முதலீடுகள் அதிகரிக்கப்பட்டது இது இனியும் தொரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போதைய நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தனியார் நுகர்வு தேவையானது 3 விழுக்காடும் (2020ஆம் நிதி ஆண்டில் தனியார் நுகர்வு செலவு ஜிடிபி யில் 61.0 விழுக்காடாக இருந்தது 2022இல் 57.5 விழுக்காடாகக் குறைந்துள்ளது), தலா வருமானம் 2 விழுக்காடு குறைந்துள்ளது. பொதுத் துறை முதலீடு நடப்பு விலையின் அடிப்படையில் 35 விழுக்காடு நிதி அதிகரிக்கப்பட்டுள்ளது. இது ஒட்டுமொத்த ஜிடிபி யில் 2.9 விழுக்காடாகும். பொதுத்துறை முதலீடுகளைத் தொடர்ந்து அதிகரிப்பதன் மூலம் தனியார் முதலீடுகளை உருவாக்கமுடியும் என்கிறது 2022-23ஆம் ஆண்டு நிதி அறிக்கை. ஆனால் நடைமுறையில் பணவீக்கம், அதிக அளவிற்கான இறக்குமதி, வட்டி அதிகரிப்பு போன்ற நிலைகளில் பொதுத்துறை முதலீடு 0.2 விழுக்காடு மட்டுமே அதிகரிக்க வாய்ப்புள்ளது.
2016-17ஆம் ஆண்டில் ஜிடிபி வளர்ச்சியானது 8.3 விழுக்காடாகும். இது தொடர்ந்து 2019-20 வரை (4.0 விழுக்காடு) குறைந்து வந்துள்ளது. 2020-21ல் ஜிடிபி -7.3 விழுக்காடாக எதிர்மறை வளர்ச்சியாக பதிவானது. 2021-22ல் 9.2 விழுக்காடு ஜிடிபி வளர்ச்சியினை எட்டி மீண்டெழுந்தது. பெயரளவு ஜிடிபி 2022-23ல் 11.1 விழுக்காடு என்றும், உண்மையான ஜிடிபி 8லிருந்து 8.5 விழுக்காடு வளரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் மறைமுகமான விலை அழுதத்த (Implicit price deflator – IPI) பணவீக்க அடிப்படையில் பார்த்தால் இது 2.9 விழுக்காடு அளவிற்கு குறையும். எனவே 7-7.5 விழுக்காடு அளவிற்கு வரும் நிதிஆண்டில் உண்மையான ஜிடிபி வளர்ச்சியும் ஆனால் 14 விழுக்காடு பெயரளவு ஜிடிபி காணப்படும்.
பணவீக்கம்
பணவீக்கத்திற்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் நெருங்கிய தொடர்புண்டு. 1970களில் இந்தியாவில் பணவீக்கம் 9 விழுக்காடாக இருந்தபோது 2.9 விழுக்காடு பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளது. 1980களில் பணவீக்க அளவு 8 விழுக்காடாகக் குறைந்தபோது பொருளாதார வளர்ச்சி அளவானது 5.7 விழுக்காடாக அதிகரித்தது. 1990களில் புதிய பொருளாதாரக் கொள்கை நடைமுறைபடுத்தப்பட்டபோது ஏறக்குறைய 1980களில் இருந்த நிலையே தொடர்ந்தது. 2000களில் பணவீக்கம் 5.4 என்ற கட்டுப்பாட்டு அளவிற்கு அடைந்த போது பொருளாதார வளர்ச்சியானது 6.9 விழுக்காடாக அதிகரித்தது. 2010களில் பணவீக்கம் மேலும் 3.9 விழுக்காடு அளவிற்கு குறைந்த போது பொருளாதார வளர்ச்சி 7 விழுக்காடு என்ற நிலையினை அடைந்தது. 2020களின் தொடக்கத்தில் ஏற்பட்ட கோவிட் பெருந்தொற்றின் காரணமாக மொத்த விலை பணவீக்க அளவு அதிகமாக அதகரித்துள்ளது இதன் விளைவு பொருளாதாரம் சரிவினைக் கண்டுள்ளது (The Times of India2.2.2022). பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் தொடர்நது கடந்த இரண்டு ஆண்டுகளாகக் மானியங்கள் குறைக்கப்பட்டு வருகிறது. ஒட்டுமொத்த மானியம் 2021 நிதி ஆண்டில் ரூ.7.58 லட்சம் கோடியாக இருந்தது, 2022ஆம் ஆண்டு ரூ.4.87 லட்சம் கோடியாக குறைக்கப்பட்டது. இது மேலும் 2023ஆம் ஆண்டு நிதிநிலையில் 3.56 கோடியாக குறைக்கப்பட உள்ளது. உணவு, உரம், பெட்ரோலியம் போன்றவைகளுக்கான ஒட்டுமொத்த மானியம் 39 விழுக்காடு குறைக்கப்பட்டுள்ளது. இதில் அதிக அளவாக உணவிற்கான மானியம் ரூ.80000 கோடி கடந்த ஆண்டைவிட குறைக்கப்பட்டுள்ளது (2022ல் ரூ.2.86 லட்சம் கோடி, 2023ல் ரூ.2.06 கோடி).
வேளாண் துறை
வேளாண் துறையில் நேரடியாக மொத்த தொழிலாளர்களில் பாதிஅளவிற்கான பங்கேற்பு உள்ளது ஆனால் இது ஒட்டுமொத்த பொருளாதாரத்திற்கு மிகக் குறைவாகவே (2020-21ல் சுமார் 18 விழுக்காடு) பங்களிப்பினை அளிக்கிறது. கோவிட் பெருந்தொற்று காலங்களில் பாதிக்கப்படாத ஒரே துறை வேளாண்மையாகும். பெருமளவிற்கு வேலையை நகர்புறங்களில் இழந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பினை அளித்தது வேளாண்மையாகும். இந்த நிதிநிலை அறிக்கையில் வேளாண்மையும் அதனைச் சார்ந்த துறைகளுக்கு ரூ.1.51 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது இது கடந்த ஆண்டைவிட 2 விழுக்காடு அதிகமாகும். மொத்த திட்ட கால செலவீனத்தில் இதன் பங்கு 3.84 விழுக்காடாகும் இது கடந்த நிதிஆண்டில் 3.92 விழுக்காடாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. வேளாண்மையில் தொழில்நுட்பம் புகுத்துவதற்கான நடவடிக்கைகளைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. மீன் பிடிப்பினை மேம்படுத்த நிதிச்செலவு இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. டிஜிட்டல் பயிரிடும் முறை மற்றும் வேளாண்மையில் உயர் தொழில் நுட்பத்தினை பயன்படுத்துதல் போன்றவைகள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. குறைந்தபட்ச ஆதார விலையினை விவசாயிகளுக்கு நேரடியாக வேளாண் விளைபொருள்களுக்கு வழங்க ரூ.2.37 கோடி ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தவிற்று நதிகளின் இணைப்பிற்காக ரூ.1400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் விவசாயிகளின் வருமானம் 2022இல் இரட்டிப்பு பற்றி நிதிநிலை அறிக்கையில் இடம்பெறாதது, உர மானியம் குறைத்தது, கிராமப்புற வேலை உருவாக்கம் பற்றி திட்டமிடல் இல்லாதது போன்றவைகள் இடம்பெறாததால் விவசாயிகளுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இந்த நிதிநிலை அறிக்கை இல்லை.
தொழில் துறை
உற்பத்தி துறை ஜிடிபி க்கு 15 விடுக்காட்டு பங்கினை அளித்து நிலையான அளவில் உள்ளது. தொழில் துறையின் ஆண்டு வளர்ச்சி அளவு 2015-16ஆம் ஆண்டில் 13.1 விழுக்காடாக இருந்தது. 2020-21ஆம் ஆண்டு 7.2 விழுக்காடாக குறைந்துள்ளது. பொருள் மற்றும் சேவை வரி, பணமதிப்பிழப்பு, சந்தை தேவை இழப்பு, இறக்குமதி அதிகரிப்பு, உலக அளவிலான பொருளாதார சிக்கல்கள் போன்றவைகளின் தாக்கத்தினால் 2014 மற்றும் 2021ஆம் ஆண்டுகளுக்கிடையே ஆயிரக்கணக்கான தொழில் நிறுவனங்கள் முடக்கப்பட்டன. தற்போது 2021ல் 11.77 மில்லியன் தொழில் நிறுவனங்கள் செயல்படுகிறது. இதில் பெருமளவிற்கு அமைப்பு சாராத் தொழிலினைச் சார்ந்ததாகும். 2014-15ஆம் ஆண்டு “இந்தியாவில் செய்” (Make in India) அறிவிக்கப்பட்டு உற்பத்தி துறையின் பங்களிப்பினை 2022இல் 25 விழுக்காடு அளவிற்கு அதிகரிக்கவும் 100 மில்லியன் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டாலும், தொழில் தொடங்குவதற்கான நடைமுறையில் பெரும் தடைகள் தொடர்கிறது, பெருநிறுவனங்களுக்கான முன்னுரிமையினால் சிறு குறு தொழில் நிறுவனங்கள் பாதிப்படைகிறது. அதேசமயம் உலக அளவிலான எளிய வாணிபம் செய்தல் குறியீட்டின்படி இந்தியா 2014ல் 142வது இடத்திலிருந்தது 2019-20ல் 63வது இடத்தை அடைந்துள்ளது ஒரு ஆறுதலான ஒன்றாகும். ஒன்றிய அரசின் 2022-23ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில், குறு சிறு நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அவசரகால கடன் உத்தரவாதத் திட்டத்தின் மூலம் கூடுதல் கடனாக 130 லட்சம் நிறுவனங்களுக்கு அளிக்கப்படும், அவசரகால கடன் வரி உத்தரவாத திட்டத்தை (ECLGS) மார்ச் 2023 வரை நீடிக்கப்படும், விருந்தோம்பல் மற்றும் அதன் தொடர்புடைய நிறுவனங்கள் கோவிடுக்கு முந்தைய நிலையினை அடைய வழிவகை செய்ய ரூ.50000 கோடி ஒதுக்கீடு போன்றவைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜவுளித் துறையின் மேம்பாட்டிற்கு கடந்த ஆண்டைவிட 8.1 விழுக்காடு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்தமாக வாணிபம் மற்றும் தொழில்களுக்கு இந்த நிதிஆண்டில் ரூ.53116 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. உற்பத்தி தொடர்பு ஊக்குவிப்பு திடடத்தின் (Production Linked Incentive scheme – PIL) மூலம் 14 துறைகள் வளர்வதற்கும் சிறு குறு நடுத்தர நிறுவனங்களின் ஏற்றுமதியினை பெருக்கவும், 60 லட்சம் புதிய வேலைவாய்புகளை உருவாக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பிற்கான தளவாடங்கள் இந்தியாவிலே உற்பத்தி செய்யவும் அதில் தனியார் துறையினை ஈடுபடுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக 68 விழுக்காடு பாதுகாப்பு தளவாடங்களை உள்நாட்டு நிறுவனங்களிடமிருந்து வாங்க உறுதி செய்துள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள 2006ஆம் ஆண்டு சிறப்பு பொருளாதார மண்டல சட்டம், ஏற்றுமதி மையங்களை உருவாக்கவும் உற்பத்தியினை அதிகரிக்கும் விதமாக மாற்றி அமைக்கப்பட உள்ளது. இதனால் வேலைவாய்ப்பு பெருக்கம் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. போக்குவரத்து கட்டமைப்பினை மேம்படுத்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதால் தொழில்துறை வளர்ச்சி வரும்காலங்களில் வேகமெடுக்கும்.
வேலைவாய்ப்பு
இந்தியாவில் வேலைவாய்ப்பு அமைப்பு சாரா மற்றும் அமைப்பு சார் தொழிலில்கள் இரண்டிலுமே குறிப்பிடத்தக்க வேலைவாய்ப்பு பெருக்கம் அன்மைக்காலங்களில் ஏற்படவில்லை. இந்திய வேலைவாயப்பு – மக்கள் தொகை விகிதம் கடந்த பத்தாண்டுகளில் 12 விழுக்காடு புள்ளிகள் குறைந்துள்ளது (2005 ஆம் ஆண்டு 55 விழுக்காடாக இருந்தது 2020ஆம் ஆண்டு 52 விழுக்காடாகக் குறைந்தது) என்ற புள்ளிவிவரம் பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு வெளியிட்டுள்ளது. CMIEஅறிக்கையானது டிசம்பர் 2016க்கும் டிசம்பர் 2021க்கும் இடைப்பட்ட காலங்களில் 1 கோடி வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது என்கிறது. அதாவது இக் காலகட்டங்களில் சராசரியாக 7.3 விழுக்காடு வேலையின்மை ஏற்பட்டுள்து. குறிப்பாக நகர்புறங்களில் கோவிட் பெருந்தொற்றினால் வேலை இழப்பு கிராமப்புறங்களைவிட அதிகமாக உள்ளது. வேலைவாய்பின்மையினைப் போக்க ஆத்மநிர்பார் பாரத் ரோஜ்கார் யோஜனா திட்டத்திற்கு கடந்த நிதி ஆண்டைவிட இருமடங்காக ஒதுக்கீடு அதிகரித்துள்ளது (2021-22ஆம் ஆண்டு ரூ.3130 கோடியிலிருந்து 2022-23ஆம் ஆண்டு ரூ.6400 கோடியாக அதிகரிப்பு). தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் செலவீனத்திற்கு ரூ.16893 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கிராமப்புற வேலைவாய்ப்பினை அதிக அளவில் திறன்குன்றிய ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உருவாக்கித் தந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்திரவாத திட்டத்திற்கு இந்த நிதிஆண்டிற்கு ரூ.73000 கோடி ஒதுக்ப்பட்டுள்ளது இது கடந்த ஆண்டைவிட 25 விழுக்காடு குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. இதில் சுமார் ரூ.1500 கோடி கூலி நிலுவைக்கும், ரூ.10900 கோடி பொருட்களுகான நிலுவைக்கும்செலுத்துவதற்கு போக மீதமான ரூ.47100 கோடி மட்டுமே இந்த நிதி ஆண்டில் செலவிட முடியும். கோவிட் பெருந்தொற்று காலத்தில் நகர்புறங்களில் வாழ்வாதாரம் இழந்து சொந்த ஊர் திரும்பிய தொழிலாளர்களுக்கும், பெண்கள், பட்டியல் இன மக்களுக்கு சுமார் 11 கோடி பேர் இவ் வேலைவாய்ப்பு திட்டத்தினால் பயன்அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பேராசிரியர் பு.அன்பழகன்
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “இந்தியாவின் 2022-2023ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையும் அறைகூவல்களும்”