மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

இந்தியாவில் உணவுப் பணவீக்கம் – பகுதி – 2

பேராசிரியர் பு.அன்பழகன்

Aug 13, 2022

siragu inflation

உணவு பணவீக்கம்

சில குறிப்பிட்ட பொருட்களின் அளிப்பு குறைவதினால் அதன் விலை அதிகரிக்கிறது. 2019 முதல் கோவிட் பெருந்தொற்றினால் ஏற்பட்ட விளைவுகள் மற்றும் ரஷ்யா – உக்ரைன் போரினால் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, உணவு பொருட்களின் விலை அதிகரிப்பு போன்றவை தற்போதைய விலை அதிகரிப்பதற்கான காரணங்களாகச் சுட்டிக்காட்டலாம். கோவிட் பெருந்தொற்றின் காரணமாக விளிம்பு நிலையில் வாழும் மக்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டு வருமானம் குறைந்தது. இதனால் அதிக அளவிலான மக்கள் பசி பட்டினியுடன் வாழவேண்டிய நிலை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஒன்றிய, மாநில அரசுகள் மற்றும் தன்னார்வலர்கள் உணவு தானியங்களை இலவசமாக வழங்கினர். இதனால் உணவு தேவை அதிகரித்தது. மேலும் புலம்பெயர் தொழிலாளர்கள் கோவிட் பெருந்தொற்றினால் சொந்த ஊர்களுக்குத் திரும்பியதால் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டு வேளாண் பொருட்களின் செலவுகள் அதிகரித்தது, உள்நாட்டு, பன்னாட்டு விநியோக சங்கிலி பாதிக்கப்பட்டதால் உணவு அளிப்பில் தடை ஏற்பட்டு உணவு பற்றாக்குறை நிலவியது இதனால் உணவு விலை அதிகரிக்கத் தொடங்கியது. கோவிட் பெருந்தொற்றுக்கு முந்தைய நிலையினை மீண்டும் அடைவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் அதிக அளவில் உணவுத் தேவை உள்ளது ஆனால் குறைந்த அளவிற்கே உணவு அளிப்பு உள்ளது இதனால் உணவுப் பொருட்களின் விலையானது உயர்கிறது. இவற்றை பேரியல் பொருளாதாரக் கருவிகள் மூலம் தடுக்க இயலாது. பணக்கொள்கைகள் (அதிகமான அளவில் ஏற்படும் பண சுழற்சியினைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர மைய வங்கி மேற்கொள்ளும் பல்வேறு நடவடிக்கைகள்) உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பின் வழியாக ஏற்படும் பணவீக்கத்தினைக் கட்டுப்படுத்த போதுமான அளவிற்கு இயலவில்லை. நோபல் பரிசு பெற்ற பொருளியல் அறிஞரான ஜோசப் ஸ்டிக்லிட்சு பணக்கொள்கையின் முக்கியக் கருவியான வட்டி வீதத்தை உயர்த்தி பணவீக்கத்தை கட்டுப்படுத்த முடியாது என்றும் இதன் மூலம் உணவு உற்பத்தி பெருக்க முடியாது என்றும் குறிப்பிடுகிறார். எனவே அளிப்பு நிலையினை உயர்த்திதான் பணவீக்கத்தை கட்டுப்படுத்த முடியும் என்கிறார்.

உணவுப் பொருட்களின் விலையினை தீர்மானிப்பதில் முக்கியப் பங்காக சுற்றுப்புறச் சுழல், பருவ மழை, தண்ணீர் இருப்பு, உணவு உற்பத்தி, உணவு அளிப்பு மற்றும் தேவை, வேளாண் விளைபொருட்களின் சந்தை விலை, உள்நாட்டு பன்னாட்டு வர்தக உறவு மற்றும் கொள்கைகள் போன்றவை முக்கிய இடத்தை வகிக்கிறது. கடந்த சில காலமாக உணவுப் பொருட்கள் விலையில் ஏற்றத்தாழ்வுடன் காணப்படுகிறது. உணவு பற்றாக்குறையினால் ஏழைமக்கள், விளிம்பு நிலையில் வாழ்பவர்களை அதிக அளவில் பாதிக்கிறது. உணவு பற்றாக்குறையினை களைவதற்கு உடனடியான தீர்வாக உணவு இறக்குமதி செய்துகொள்ளலாம். ஆனால் இது அயல்நாட்டு வர்த்தக உறவினையும், அயல்நாட்டுச் செலாவணி இருப்பினையும் சார்ந்து அமைகிறது. உணவு உற்பத்தி குறைவதினால் உள்நாட்டு உணவு தேவை அதிகரித்து விலை உயர்கிறது இதனால் சமூக அளவில் அமைதியற்ற போக்கு ஏற்படுகிறது நீண்டகால தீர்வாக உணவு உற்பத்தியினை பெருக்கும் முறைகளை அரசு கையாள வேண்டும்.

இந்தியாவைப் பொருத்தவரையில் உணவுப் பொருட்களின் அளிப்பு நிலையினை உயர்த்துவதற்கான முயற்சிகள் பின்தங்கிய நிலையிலே உள்ளது. இந்தியாவில் உணவு இருப்பானது தேவைக்கு அதிகமாக உபரியாக உள்ள நிலை பெருமளவிற்கு காணப்படுவதில்லை. எனவேதான் வறுமை, குறைஊட்டச்சத்து உடையவர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர் (Pulapre Balakrishnan and M.Parameswaran, The Hindu 21.07.2022, p.9). 1960களில் பசுமைப்புரட்சி உலக அளவில் நடைமுறைபடுத்தப்பட்டபின்பு 1973-1976, 2007-2012, 2020-2022 ஆண்டுகளில் உணவு விலையினால் சிக்கல் எழுந்தது. இதற்கு முக்கிய காரணம் உணவு உற்பத்தியின் பற்றாக்குறையாகும். இதனால் உணவு பொருட்களின் விலை கடுமையாக அதிகரித்தது.

அன்மையில் உணவு பொருட்களின் விலை அதிகரித்ததன் முக்கிய காரணங்கள் கோவிட் பெருந்தொற்று, விநியோக சங்கிலி பாதிக்கப்பட்டது மற்றும் ரஷ்யா-உக்ரைன் போருமாகும். இதனைத் தவிர்த்து வர்தக முறையும், உணவுப் பொருட்களின் பயன்பாடும் ஆகும். தற்போதைய உணவு விலை அதிகரிக்க தொடங்கியதற்கு ஒரு முக்கிய காரணமாகத் தாவர எண்ணெய் விலை உயர்வாகும். தாவர எண்ணெய் உற்பத்தியில் 38 விழுக்காடு பன்னாட்டு வர்த்தமாக உள்ளது. கோதுமையானது உலக உற்பத்தியில் 25 விழுக்காடு பன்னாட்டு வர்தகத்தில் உள்ளது. ஆனால் அரிசியினைப் பொருத்த மட்டில் 10 விழுக்காடு உற்பத்தி மட்டுமே பன்னாட்டு வர்தக பயன்பாட்டில் உள்ளது. கோவிட் பொருந்தொற்று காலத்தில் இந்த பன்னாட்டு வர்தக விநியோக சங்கிலி தொடர் பாதிப்பினால் விலை அதிகரித்தது. சமையல் எண்ணெய் விலையானது 2021ஆம் நிதிஆண்டில் 35 விழுக்காடாக அதிகரித்தது 2022ஆம் நிதிஆண்டில் இது மேலும் 40 விழுக்காடாக அதிகரித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் சமையல் எண்ணெய் அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகளான தென்அமெரிக்கா, பிரேசில், மலேசியா போன்றவைகள் குறைவான அளிப்பினைத் தருவதாகும். இதனைத் தவிற்று காய்கறிகள், பால், இறச்சி, தானியங்களின் விலைகள் கனிசமாக அதிகரித்துள்ளது.

உணவு தானியங்கள் விலை மொத்த விலை குறியீட்டின்படி ஜூன் 2021ல் 8.59லிருந்தது ஜூன் 2022ல் 19.22 ஆக அதிகரித்துள்ளது. காய்கறிகள் -31.09லிருந்து 39.38ஆக உயர்ந்துள்ளது, பழங்கள் 6.96லிருந்து 20.33ஆக அதிகரித்துள்ளது, பால் 1.65லிருந்து 6.35ஆக உயர்ந்துள்ளது, கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு 46.97லிருந்து 77.29ஆக அதிகரித்துள்ளது (eaindustry.nic.in).  உணவு பணவீக்கத்திற்கு முக்கிய காரணமாக சரக்கு சேவை வரி விதிப்பும் ஒரு முக்கிய காரணமாக உள்ளது. வேளாண் இடுபொருட்களின் மீதான வரிவிதிப்பு, உணவு பதப்படுத்துதலின் மீது வரி, பருப்புகள் மீதான வரி, பால் பொருட்களின் மீதான வரி போன்றவைகள் உணவு பணவீக்கம் அதிகரிப்பதற்கான காரணமாக உள்ளது.

இதுமட்டுமல்ல உலக அளவில் பெட்ரோல் பயன்பாடு அதிகரிப்பதால் அதன் தேவை அதிகரிக்கிறது. இதனைத் தொடர்ந்து பல நாடுகள் OECD நாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது. பெட்ரோல் விலை தொடர்ந்து அதிகரிப்பதால் நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு குறைந்து வருவதுடன், நாட்டின் வளர்ச்சியில் பெரும் பகுதி இதற்காக மாற்றமடையச் செய்யப்படுகிறது. இதனால் பல நாடுகள் பெட்ரோலுக்கு மாற்றாக பையேடீசல் மற்றும் எத்தனால் பயன்பாட்டிற்கு செல்லுகின்றனர். பையேடீசல் உற்பத்திக்கு உணவு பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது. 2003இல் பையேடீசல் உற்பத்திக்கு 1 விழுக்காடு தாவர எண்ணெய் உற்பத்தியினை பயன்படுத்தப்பட்டது இது 2021ல் 15 விழுக்காடாக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் உணவு உற்பத்தி பெட்ரோல் பயன்பாடடிற்கு மாற்றன எரிபொருளாகப் பயன்படுத்துவதால் உணவு பொருட்களின் தேவை அதிகரித்து விலை உயருகிறது. மற்றொருபுறம், உரம், பூச்சிக்கொல்லியின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது இதனால் உணவு பொருட்களின் விலை அதிகரிக்கிறது.

2021ல் வேளாண் துறையின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியானது மொத்த வேளாண்மை மதிப்பு கூட்டலில் 13 விழுக்காடு பங்கினை கொண்டுள்ளது. உள்நாட்டு அளவில் உணவுப் பொருட்களின் விலை அதிமாக உயரும்போது இவற்றை சரிசெய்ய அயல்நாட்டு வர்தக கொள்கைகளை கையாண்டு அவற்றினைச் சரிசெய்கிறது. இந்தியாவில் நுகர்வோர் மற்றும் உற்பத்தியாளர்களின் நலனைக் காக்கும் வகையில் உணவுப் பொருட்களின் விலையினை கையாளுகிறது. பன்னாட்டு அளவில் உணவுப் பொருட்களின் விலை குறைந்ததால் உள்நாட்டு உற்பத்தியாளர்களைப் பாதுகாக்கும் பொருட்டு இறக்குமதி மீது கட்டுப்பாடுகளை விதிக்கிறது. உணவுப் பொருட்கள் விலை அதிகரித்ததால் இந்திய தாராள இறக்குமதியினை அனுமதிக்கிறது. ஏற்றுமதியினைக் கட்டுப்படுத்துகிறது இதனால் உள்நாட்டு உணவுப் பொருட்களின் விலை சாதாரண சூழலில் உள்ள நிலையினை பெறுகிறது. நாட்டில் உணவுப் பொருட்களின் காப்பு இருப்பு (Buffer stock) கொள்கையானது நாட்டின் உணவுப் பொருட்களின் விலையில் ஏற்றத்தாழ்வு ஏற்படாமல் நிலையான அளவில் இருக்க உதவுகிறது. அன்மையில் கோதுமை ஏற்றுமதிக்கான தடை விதிக்கப்பட்டது. இதற்கான அடிப்படைக் காரணம் பன்னாட்டு அளவில் கோதுமையின் தட்டுப்பாடு ஆகும். இதனால் கோதுமை விலை உயரும் என்பதாகும். ஆனால் உண்மையில் இந்தியா உலக கோதுமையின் தேவையினை 1 விழுக்காடு அளவிற்கே பூர்த்தி செய்ய பங்கெடுத்துக்கொள்கிறது. இந்தியாவில் குறைவான உணவு உற்பத்தி திறன், குறு மற்றும் சிறு விவசாயிகள் அதிக அளவில் உள்ளது, வேளாண்மையில் தொழில்நுட்பம் குறைவான அளவிற்கு பயன்படுத்துதல், சந்தைப்படுத்துதலில் சிக்கல்கள் போன்றவைகள் உணவு பணவீக்கம் உருவாவதற்கு முக்கிய காரணமாக உள்ளது. அரசு வேளாண் உற்பத்திக்கான நீண்டகால அடிப்படையில் திறன் சார்ந்த கொள்கைகள் வகுத்து நிறந்தர தீர்வை அடைய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

References:

Tulsi Lingareddy (2016): “Inflation with Disinflation? Decoding India’s Inflation Indices,” Economic and Political Weekly, Vol41 (18), pp 122-127.

Pulapre Balakrishnan and M.Parameswaran (2022), “The cost of Migre presenting Inflation,” The Hindu, 21.07.2022, p.9


பேராசிரியர் பு.அன்பழகன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “இந்தியாவில் உணவுப் பணவீக்கம் – பகுதி – 2”

அதிகம் படித்தது