மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

இந்திய வேளாண் தொழிலாளர்களின் நிலைமாற்றம்

பேராசிரியர் பு.அன்பழகன்

Aug 29, 2020

siragu tholilaalargal2

தொழிலாளர்கள் அவர்கள் ஈடுபட்டுள்ள பணிகளைக் கொண்டு அவை முறைசார்ந்த, முறைசாராப் பணிகள் என பகுக்கப்படுகிறது. முறைசாராப்பணியில் வேளாண்மைத் தொழிலாளர்களை (1.1 மில்லியன்) காணும் போது உலகளவில் 2 மில்லியன் தொழிலாளர்கள் ஈடுபடுகின்றனர். இது மொத்த தொழிலாளர்களில் 61.2 விழுக்காடாகும். ஆப்பிரிக்கா, ஆசியா, அரபு நாடுகளில் மூன்றில் இரண்டு மடங்குக்கு மேல் இப்பணிகளில் ஈடுபடுகின்றனர். இவர்களுக்கான அடிப்படை வேலைபாதுகாப்பு, ஒப்பந்தம், விடுப்புகால பயன்கள் போன்றவைகள் வழங்கப்படுவதில்லை. 1991ஆம் ஆண்டு வேளாண்தொழிலில் உலகளவில் ஈடுபட்டோர்கள் மொத்த தொழிலாளர்களில் 43.68 விழுக்காடாகும். இது 2019ஆம் ஆண்டு 26.85 விழுக்காடாகக் குறைந்துள்ளது. இது ஆண்டிற்கு சராசரியாக 0.88 விழுக்காடு குறைந்து வந்துள்ளது. வேளாண்மைத் தொழிலில் ஆண்களைவிட பெண்கள் அதிக அளவில் ஈடுபடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. உலகளவில் மொத்த பெண் வேளாண் தொழிலாளர்கள் 20-30 விழுக்காடு அதிகரித்துள்ளதாகப் பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு அன்மையில் வெளியிடப்பட்ட புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது. வேளாண்மையில் ஈடுபடுகிறவர்களை இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். ஒன்று சுயமாக பயிர்த்தொழில் செய்பவர்கள், மற்றோன்று கூலித் தொழிலாளர்கள் எனலாம். இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம், ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், ஹரியானா, உத்தர்காண்டு, மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்கள் தவிர்த்து இதரமாநிலங்களின் முதன்மைத் தொழிலாக வேளாண்மையும் அதைச் சார்ந்த தொழிலுமே முன்னிலையில் உள்ளது. 2018-19ஆம் ஆண்டு தொழிளாளர் கணக்கெடுப்பின்படி (PLFS2018-19) வேளாண் தொழிலை உள்ளடக்கிய சுய தொழில் செய்வேர்கள் 52.2 விழுக்காடாகும் இதுபோன்றே வேளாண் கூலித்தொழிலாளர்களை உள்ளடக்கிய நாட்கூலியாட்கள் 24.9 விழுக்காடாகும். இவ்விரு தொழிலாளர்களின் வருமானம், உழைப்பு நேரம் தொடர் வேலைக்குச் செல்வோரைவிடவும் மிகக் குறைவாகவே உள்ளது.

இந்தியாவில் நிலப்பயன்பாடானது பல்வேறு காரணங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் வேளாண் தொழிலுக்கான நிகர நிலப் பயன்பாடானது 68.38 மில்லியன் எக்டர் ஆகும் (2018-19ஆம் ஆண்டு) இது 1950-51ஆம் ஆண்டை விட மூன்றரை மடங்கு அதிகரித்துள்ளது அதாவது 47.53 மில்லியன் எக்டர் நிலம் வேளாண்மை செய்வதற்கான பயன்பாட்டிற்கு கூடுதலாகியுள்ளது. இதில் ஒன்றுக்கு மேற்பட்டமுறை பயிர் செய்தலின் பரப்பு 28மில்லியன் எக்டராக அதிகரித்துள்ளது. நிலச்சீர்திருத்தம், நீர்பாசன வசதி மேம்பாடு போன்ற முக்கியக் காரணிகள் இந்த நிலை எட்டுவதற்கான கராணமாக சுட்டிக்காட்டலாம்.

விவசாயிகளிடையே நிலப்பாகுபாட்டில் 85 விழுக்காடு உடைய குறு (1எக்டர்க்கு கீழ்) மற்றும் சிறு (1-2 எக்டர்) விவசாயிகள் 44.6 விழுக்காடு அளவிற்கே வேளாண் நிலங்களை வைத்துள்ளனர் ஆனால் 0.7 விழுக்காடு உடைய பெரிய (10 எக்டருக் மேல்) விவசாயிகள் 10.6 விழுக்காடு நிலங்களை கையகப்படுத்தி வைத்துள்ளனர் (PLFS2018-19). மேலும் கடந்த காலங்களில் நிலம் குடும்ப பிரிவுபடுதலின் கராணமாகச் சராசரி நில கையிருப்பு ஒரு விவசாயிக்கு 2.3 எக்டராக 1971ஆம் ஆண்டு இருந்தது 2011ஆம் ஆண்டு 1.16 எக்டராக குறைந்துள்ளது.

siragu tholilaalargal1

ஊர்ப்புரங்களில் நான்கு முக்கிய பணிகள் முதன்மையானதாகக் காணப்படுகிறது அவை- சுய வேளாண்மை செய்தல், சுய-வேளாண்மையற்ற தொழில் செய்தல், நாட்கூலி வேளாண்மைத்தொழில் மற்றும் நாட்கூலி-வேணளாண்மையற்ற தொழில் எனலாம். இதில் நாட்கூலி வேளாண்தொழிலாளர்கள் குடும்பங்கள் அதிக அளவில் குறைந்துள்ளது (1993-94ஆம் ஆண்டு 30.3விழுக்காடாக இருந்தது 2018-19ஆம் ஆண்டு 11.7விழுக்காடாகக் குறைந்துள்ளது) மாறாக நாட்கூலி செய்யும் வேளாண்மையற்ற தொழிலாளர்கள் அதிகரித்து (1993-94ஆம் ஆண்டு 8விழுக்காடாக இருந்தது 2018-19ஆம் ஆண்டு 13.4விழுக்காடாக அதிகரித்துள்ளது) வந்துள்ளது. இதுபோன்ற போக்கே சுயதொழில் வேளாண்மையிலும் காணப்படுகிறது. வேளாண்மைத் தொழிலில் வேலை பெருக்கமின்மை, தொடர்ந்து நிலப் பகுப்பு, வேளாண்மைக்கு இயந்திரங்களைப் பயன்படுத்துவது அதிகரிப்பு, மழைப்பொழிவில் நிலையற்ற போக்கு, அதிகரித்து வரும் வேளாண் உள்ளீட்டு பொருட்களுக்கான செலவு, குறைவான வேளாண்பொருட்களுக்கான விலை போன்ற முக்கியக் காரணங்களினால் வேளாணமைத் தொழிலிருந்து அதிகமாக விலகுகின்ற போக்கு ஏற்படுகிறது.

தொழிலாளர்கள் பற்றிய புள்ளிவிவரங்களை இரு வழிகளில் பெறமுடியும் அவை மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றொன்று தேசிய மாதிரிப் புள்ளிவிவரம். மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 1951ஆம் ஆண்டு வேளாண்மைத் தொழிலைச்சாரந்தவர்கள் 69.7 விழுக்காடாக இருந்தது 2011ஆம் ஆண்டில் 54.6 விழுக்காடாகக் குறைந்துள்ளது, இதில் வேளாண்பயிர் செய்வோர் பங்கு விழுக்காடாது கடந்த 60 ஆண்டுகளில் 27 விழுக்காடு அளவிற்கு குறைந்துள்ளது (71.9விழுக்காட்டிலிருந்து 45.1 விழுக்காடாக இவ்வாண்டுகளில் குறைந்துள்ளது) ஆனால் வேளாண் கூலியில் ஈடுபடுவேர்கள் பங்கானது 26.5 விழுக்காடாக இவ்வாண்டுகளில் அதிகரித்துள்ளது, குறிப்பாக இவ்விரண்டும் புதிய பொருளாதாரக் கொள்கை (1991ஆம் ஆண்டு) நடைமுறைப்படுத்தப்பட்ட பின் பெரிய மாறுதலுக்கு உட்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் பொருள் 60 ஆண்டுகளில் வேளாண்மை செய்யும் தொழிலுக்கான ஈர்ப்பு வெகுவாகக் குறைந்துள்ளது. தேசிய மாதிரி புள்ளிவிவரக் கணக்கின்படியும் அன்மையில் வெளியிடப்பட்ட தொழிலாளர் காலஇடைவெளியிலான கணக்கெடுப்பு மதிப்பீடு 2017-18ஆம் ஆண்டு அடிப்படையில் வேளாண்மைத் தொழிலில் ஈடுபடுவோர்கள் 63.4 மில்லியன் அளவிற்கு 2004-05 மற்றும் 2017-18ஆண்டுகளுக்கிடையே குறைந்துள்ளது, அதாவது ஆண்டிற்கு சராசரியாக 4.87 மில்லியன் இத்தொழிலிருந்து வெளியேறி உள்ளனர். இது விழுக்காட்டில் 58.5 விழுக்காட்டிலிருந்து 44.1 விழுக்காடாகக் குறைந்துள்ளது. இவர்கள் உற்பத்தி சாராத தொழிலிலும் (கட்டிடத் தொழில் உட்பட), சேவைத்துறையையும் நோக்கி சென்றுள்ளனர். இத்தொழில்களுக்கு போதுமான முன் பயிற்சி அல்லது அனுபவம் தேவை இல்லை என்பதாலும். நகர்புறங்களில் அதிக வேலைவாய்ப்புகள் இருப்பது மற்றும் வருமானம் அதிகமாக கிடைப்பதாலும்அதிக அளவிலான வேலைப் பெயர்வு நடைபெற்றுள்ளது. எடுத்துகாட்டாக உற்பத்தி சாரா தொழிலில் சுமார் 30 மில்லியனும், சேவைத்துறையில் 37 மில்லியன் வேலைவாய்ப்புகள் கூடுதலாக 2004-05 மற்றும் 2071-18ஆம் ஆண்டுகளுக்கிடையே கூடுதலாகப் பெறப்பட்டுள்ளது. அதே நேரம் இக்காலகட்டங்களில் வேலையின்மையின் அளவானது சுமார் 20 மில்லியன் அதிகரித்துள்ளது, வேலைவாய்ப்பு பெருக்கமற்ற நிலை, கூடுதலாக இளைஞர்கள் வேலைவாய்ப்பை நேக்கி நகர்ந்து வருதல், தகுதிக்கு ஏற்ப வேலை கிடைக்கும் வரை காத்திருத்தல், தொழில்நுட்ப மேம்பாடு போன்ற காரணங்களினால் வேலையின்மை அதிக அளவில் காணப்படுகிறது.

வேளாண் தொழிலைப்பொருத்தவரையில், 1977-78ஆம் ஆண்டுகளில் ஆண் தொழிலாளர்கள் 80.6விழுக்காடு மொத்த ஆண் தொழிலாளர்களின் அளவில் இருந்தது 27.4விழுக்காட்டுப் புள்ளி அளவாகக் குறைந்து 53.2விழுக்காடாக 2018-19ஆம் ஆண்டில் காணப்படுகிறது. பெண்களில் இது 88.1விழுக்காட்டிலிருந்து (மொத்த பெண் தொழிலாளர்களில்) 17விழுக்காட்டுப் புள்ளி அளவு குறைந்து 71.1 விழுக்காடாக இதே ஆண்டுகளில் குறைந்துள்ளது. ஆண்-பெண் இருபாலினத்தவர்களும் வேளாண்மைத் தொழிலிளிருந்து விடுபட்டிருந்தாலும் ஆண்களே அதிக அளவில் வேளியேறி இருப்பது குறிப்பிடத்தக்கது. நிலம் மேலும் மேலும் பிரிக்கப்படுவதினால் குடும்ப சராசரிநிலகைப்பற்று அளவு குறைந்தது, வேளாண்மையின் உள்ளீட்டுச் செலவுகள் அதிகரித்து பயிர் செய்வதற்கான உள்ளீட்டுச் செலவிற்கு ஏற்ப உற்பத்திப் பொருட்களுக்கான விலைகிடைக்காமை, பருவமழையில் உள்ள ஏற்றத் தாழ்வுகள், நிலத்தடி நீர் பல்வேறு கராணங்களுக்காக உறிஞ்சப்படுவதால் நீர் பற்றாக்குறை, நகரமயமாதலால் கூலித் தொழிலாளர்கள் இடப்பெயர்வு, உயர் கல்வி கற்க செல்வோர்கள் வீதம் அதிகரித்தல், வேளாண்மைத் தொழில் இலாபமற்றது என்ற நிலை போன்ற காரணங்களால் அதிமான வேலை மாறுபாடுகளை இத்தொழில் தற்போது எதிர்கொண்டுள்ளது.

வேளாண்மைக் கூலியைப் பொருத்த அளவில் மத்திய அரசானது குறைந்தபட்ச வேளாண்மைக் கூலியை அறிவிக்கிறது. ஆனால் நடைமுறையில் இவை செயலற்றதாகவே உள்ளது. வேளாண்மைத் தொழிலில் பல்வேறுபட்ட உட்தொழில்கள் நடைபெறுகிறது, ஏர் செய்தலுக்கு ரூ.495ம், விதைவிதைத்தலுக்கு ரூ.435ம், அறுவடை மற்றும் நாற்று பிடுங்குதலுக்கு தலா ரூ.426ம், நடவு செய்தலுக்கு ரூ.405ம், களை பரித்தலுக்கு ரூ.381ம் நாளொன்றுக்கு ஒரு நபருக்கு கூலியாக பெறப்படுகிறது. இதில் களைப்பரித்தல், நடவு செய்தலையும் மற்றவேலைகளுடன்ஒப்பிடும் போது குறைவான கூலியாக இருப்பதற்கு காரணம் இதில் பெரும்பாலும் பெண்கள் ஈடுபடுவதாகும். பொதுவாகவே பெண்களுக்கான கூலியானது ஆண்களைவிடக் குறைவாகவே காணப்படுகிறது. 2006-07ஆம் ஆண்டு ஆண்களுக்கான கூலியானது நாளொன்றுக்கு சராசரியாக ரூ.82ம் பெண்களுக்கு ரூ.62ஆக இருந்தது 2017-18ஆம் ஆண்டில் இது ரூ.315 மற்றும் ரூ.244 என்று முறையே அதிகரித்துள்ளது. இரு பாலினரின் வேலை நேரமானது ஒரே அளவாக இருந்தும் இக் கூலி வேறுபாடு 15விழுக்காட்டிலிருந்து 30விழுக்காடு அளவிற்கு பெண்களின் கூலி ஆண்களின் கூலியைவிடக் குறைவாகவே காணப்படுகிறது.

அதிகரிக்கும் மக்கள் தொகை, வேளாண்மையின் கொள்அளவு, துணைப்பணிகள், கைவினை மற்றும் குடிசைத்தொழில்கள், வேளாண்மையிலிருந்து வெளியேறும் சிறு மற்றும் குறு விவசாயிகள், கடன் பளு, கூட்டுக்குடும்பச் சிதைவு போன்ற காரணங்களினால் வேளாண்மை சார்ந்த தொழிலில் தொழிலாளர்கள் ஈடுபடுவது அல்லது அதிகரிப்பது தீர்மானிக்கபட்டுகிறது. இத் தொழிலாளர்களைப் பாதுகாக்க அரசு கடந்த காலங்களில் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்துள்ளது. இதைத் தவிர குறைந்தபட்சக் கூலி சட்டம் 1948, தோட்டத் தொழிலாளர் சட்டம் 1951 போன்ற சட்டங்கள் வழியாக உரிமைகள் பாதுகாக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற சட்டங்கள் இருந்தபோதும் அன்மைக்காலமாக அதிக அளவில் வேளாண்மையில் ஈடுபடுவோர் அதிலிருந்து வெளியேறுவது அதிகரிப்பது மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. வேளாண்சாரா தொழில்களில் கூலி அதிகமாக இருப்பது, பருவகால வேலையான வேளாண்மையிலிருந்து தொடர்வேலைகளுக்குச் செல்லுதல், வேளாண்மைத் தொழில் தகுதியில் குறைவான வேலை என்னும் போக்கு நிலவுதல், அதிக கூலிக்கு அருகாமையில் உள்ள நகரங்களுக்கு குடிபெயர்தல் போன்ற காரணங்களால் வேளாண்மைத் தொழிலில் தொழிலாளர்கள் பற்றாக் குறை அதிக அளவில் அண்மைக் காலங்களாக நிலவிவருகிறது. பஞ்சாப், ஹரியான மாநிலங்களில் வேளாண்கூலிகளை பீகார், உத்திரப்பிரதேசங்களில் இருந்து தருவித்துக்கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவிட்19 பரவத்தொடங்கியதும், அதனைக் கட்டுப்டுத்த பல்வேறு நடவடிக்கைகளை சீரிய அளவில் மாநில-மத்திய அரசுக்கள் எடுக்கத் தொடங்கியது. தற்போது 7ம் கட்ட பொது அடைப்பானது சிலதளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தி வருகிறது. இதன் காரணமாக பல துறைகள் கடும் நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளது. ஏப்ரல் 2020இல் 122மில்லியன் வேலைவாய்பு இழப்பை சந்தித்தது. இதில் பெரிய அளவாக சிறுவணிகர்கள் மற்றும் தொழிலாளார்கள் 91.3 மில்லின் வேலை இழப்பினை சந்தித்தனர் ஆனால் விசாயிகள் 5.8மில்லியன் வேலைவாய்ப்பில் தொடர்ந்தனர். சில தளர்வுகளின் அடிப்படையில் வேலைவாய்புநிலை சிறிது சிறிதாக மீண்டெழத் துவங்கியது. ஜுன் 2020இல் 91மில்லியன் வேலைவாய்ப்பினை மீண்டும் அடைந்ததுபோது இதில் அதிக அளவாக சிறுவணிகர்கள் மற்றும் தொழிலாளர்கள் 44.5மில்லியன் வேலைவாய்ப்பினையும் அதற்கு அடுத்து விவசாயிகள் 11.8மில்லியன் வேலைவாய்ப்பினையும் மீண்டும் பெறப்பட்டது. மேலும் மாநிலங்களுக்கிடையேயான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வரத்து அதிகரிக்கத் தொடங்கியதன் விளைவாக தொழிலாளர்கள் அளிப்பு 25விழுக்காடு அளவில் ஊர்புறங்களில் அதிகரித்துள்ளது. இவர்களுக்கான வேலைவாய்ப்பு அளிக்கும் பொருட்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்திரவாத திட்டத்தின் மூலமாக வேலைவாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இவ்வேலைவாய்ப்பிற்கு பதிவுசெய்து காத்திருப்போர்கள் சுமார் 90மில்லியன் ஆகும். மே மற்றும் ஜுன் மாதங்களில் இதில் 14 லட்சம் பேர் 100 நாட்கள் வேலைஅளவை எட்டிவிட்டனர் மீதமானவர்களில் 80 நாட்கள் மற்றும் 60 நாட்கள் முடித்தவர்கள் அதிக அளவில் உள்ளனர். எனவே இவ்வேலை நாட்களை 200 நாட்களாக நீடிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் இதன் கூலி ரூ.600ஆக அதிகரிக்க வேண்டுமென்றும் கோரிக்கைகள் எழுகிறது.

siragu ulavu2

வேளாண்மைத் தொழிலைப் பொருத்த வரையில் ஜுலை (2020ஆம் ஆண்டு) மாதத்தில் பயிர்செய்யும் மொத்த பரப்பளவில் 90விழுக்காடு பகுதியை எட்டியுள்ளது. மேலும் தற்போது 96.55மில்லியன் எக்டர் பரப்பளவு பயிர் செய்யும் அளவினை இம்மாதத்தில் அடைந்துள்ளது இது கடந்த ஆண்டு இதே மாதத்தில் 87.75மில்லியன் என்ற அளவில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்றே குறைந்தபட்ச ஆதரவு விலை அரசு அதிகரித்தன் (3-9விழுக்காடு) வாயிலாக விவசாயிகளின் உற்பத்தி பொருளுக்கான தகுந்த விலை பெறுவதற்கான வாய்புகள் அதிகரித்துள்ளது, மேலும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களால் சொந்த ஊர்களுக்கு திரும்பியதால் தொழிலாளார் பற்றாக்குறை குறைந்துள்ளது, இதைத் தவிர இந்த ஆண்டு பரவலான பருவமழையினாலும் வேளாண்மை மீண்டும் புத்துயிர் பெறுவதற்கான வாய்புகள் உள்;ளது. வேளாண் உட்கட்டமைப்பிற்கு அன்மையில் ஒரு லட்சம் கோடியில் புதிய நிதித்தை உருவாக்கியுள்ளது, வருங்காலத்தல் விசாயிகள் மிகுந்த பயன்பெற வாய்புள்ளது. 2020ஆம் ஆண்டு கடைசி காலாண்டில் வேளாண்மைத்துறை நேர்மறை வளர்ச்சியை எட்டும் என அரசால் கணிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் அளிப்பு (போக்குவரத்து) விநியோகச் சங்கிலி நிறுத்தம். உரம் பற்றாக்குறை, உற்பத்திப் பொருட்களுக்கான தேவை குறைந்து காணப்படுதல், அரசின் நேரடி கொள்முதல் நடைமுறை விரிவுபடுத்தாதது, வேளாண்மைக்கான கடன் போதுமானதாக இல்லாதது போன்றவைகள் மிகப் பெரிய சவால்களை தற்போது எதிர்கொள்ள வேண்டியுள்ளது. மேலும் எப்போதும் பொருட்களின் விலையினை உற்பத்தி அல்லது விற்பனையாளர்கள் தீர்மானித்தல் என்பதே சரியானதாக இருக்கும் ஆனால் வேளாண்மைப் பொருட்களைப் பொருத்தமட்டில் வாங்குபவர்கள் தீர்மானிக்கின்றனர் என்பது ஒரு வேதனையானதாக உள்ளது. இதனைப் போக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவசியமாகிறது.

வேளாண் பொருட்களை சந்தைபடுத்துதலுக்கான நடைமுறையினை விவசாயிகளிடையே போதுமான செய்திகளை எளியவழியில் சென்றடையச் செய்தல். இடைத்தரகர்களை ஒழித்து அரசே உற்பத்தி பொருள்களை கொள்முதல் செய்தல் என்பது வேளாண் வளர்ச்சிக்கு உதவும். பயரிகளுக்கான காப்பீட்டுத் திட்டத்தினை மேலும் விரிவடையச் செய்தல் (தற்போது 29விழுக்காடு பயிர்பரப்புமட்டுமே உள்ளடங்கியுள்ளது), ஒப்பந்த பயிர்செய்யும் முறையினை தீவிரப்படுத்துதல். தெலுங்கானா மாநிலம் போன்று தேவையையும் வருமானத்தையும் அடிப்படையாகக் கொண்டு வேளாண்மை செய்தல், சுழற்சி பயிர்முறை, வேளாண் சேமிப்புக் கிடங்குகளை அதிக அளவில் உருவாக்குதல், வேளாண் ஆராய்ச்சிக்கு முன்னுரிமை, இத்துறைக்கான முதலீடுகளை அதிகப்படுத்துதல், வேளாண் கட்டமைப்புகளை உருவாக்குதல் மற்றும் மேம்படுத்துதல் போன்றவைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். இவைகளை நடைமுறைபடுத்தினால் வேளாண்மை தொழிலை பாதுகாக்கவும், இத்துறைசார்ந்த தொழில்களை (மதிப்பு கூட்டு பொருட்கள் தொழில்கள் உட்பட) உருவாக்கவும் அதன் மூலம் வேளாண் தொழிலாளர்களுக்கு தொடர் வேலைவாய்ப்பை உருவாக்கித்தர இயலும். இதனால் வேளாண்மை இழந்த இடத்தை மீண்டும் பெற இயலும். தற்போதைய சுழல் இத்துறைக்குச் சாதகமானநிலை உருவாகியுள்ளதால் வேளாண்மையைப் பாதுகாப்போம் ஊர்புரத்தை மேம்படுத்துவோம்.


பேராசிரியர் பு.அன்பழகன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “இந்திய வேளாண் தொழிலாளர்களின் நிலைமாற்றம்”

அதிகம் படித்தது