மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

இந்திய வேளாண் பயிர் காப்பீட்டுத் திட்டங்களும் சிக்கல்களும்

பேராசிரியர் பு.அன்பழகன்

Jun 18, 2022

siragu payir kaappeedu1

வேளாண்மை உற்பத்தியானது பருவகாலச் சூழல், மண்வளம், இடுபொருட்களின் செலவு, வேளாண் விளைபொருட்களின் விலை, விவசாயிகளின் பொருளாதார நிலை, நாட்டின் வாணிப சுழல் போன்ற காரணிகளால் தீர்மானிக்கப்படுகிறது. இந்திய வேளாண்சார் பொருளாதார நடவடிக்கைகள் இயற்கையின் நிச்சயமற்ற போக்கினால் இடர்களையும் நிலையற்ற தன்மையும் காணமுடிகிறது. இந்தியா வேளாண்மை மழையையும், நீர்பாசன வசதியையும் நம்பியே உள்ளது. இந்தியாவில் மொத்த சாகுபடி செய்யும் பரப்பில் 47.6 விழுக்காடு நீர்பாசனம்மூலம் நடைபெறுகிறது. தப்பவெப்ப நிலை மாநிலங்களுக்கிடையே வேறுபாட்டுடன் உள்ளது. அதிக வெள்ளம், வெப்பக்காற்று, அதிக குளிர், புயல், ஆலங்கட்டி மழை என வேறுபட்ட காலநிலை மாறுபாடுகளுடன் உள்ளது. இதனால் அதிக அளவிற்கு பயிர்செய்வதில் இழப்பு ஏற்படுகிறது. இதனால் இந்தியாவின் வேளாண்மைக்கான முக்கிய நோக்கமான நாட்டின் உணவு பாதுகாப்பும், வேளாண் விவசாயிகளின் நலனும் பெருமளவிற்கு பாதிக்கப்படுகிறது. ஆண்டுக்குச் சாராசரியாக 12 மில்லியன் பயிரிடும் நிலப்பரப்பு பாதிக்கப்படுவதாக கணக்கிடப்படுள்ளது.

விவசாயிகள் இழப்பினை சந்திப்பதுடன் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாததால் ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஆண்டுதோறும் தற்கொலை செய்துகொள்கின்றனர். 2006ஆம் ஆண்டு மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேச மாநிங்களில் உள்ள 31 மாவட்டங்களில் விவசாயிகள் அதிக அளவில் தற்கொலை செய்துகொள்கின்றனர் என அடையாளம் காணப்பட்டு விவசாயிகளின் மறுவாழ்விற்காக ரூ.16978.69 கோடி ஒதுக்கப்பட்டது. இதுபோன்று 2008ல் வேளாண் கடன் காரணத்திற்காகத் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, உத்திரப் பிரதேசம், ராஜஸ்தான், கர்நாடகா, பஞ்சாப் போன்ற மாநிங்களுக்கு ரூ.52516.86 கோடி ஒதுக்கப்பட்டது. தேசிய பேரிடர் நிதியாக 2011-12 மற்றும் 2015-16 ஆண்டுகளுக்கிடையே ரூ.24055 கோடி ஒதுக்கப்பட்டது. இத்துடன் அவ்வப்போது ஒன்றிய-மாநில அரசுகள் விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்து வருகிறது.

பஞசாப், ஹரியானா, கிழக்கு உத்திரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் அதிக அளவில் பயிர் சாகுபடி நீர்பாசனத்தைச் சார்ந்துள்ளது. பெரும்பான்மையான மாநிலங்களைப் பொருத்த வரையில் மிகவும் குறைவான அளவில் நீர்பாசன வசதியினைப் பெற்றுள்ளது. பருவமழை பொய்த்துப் போனால் வேளாண்மை உற்பத்தி பாதிக்கப்பட்டு உற்பத்தி குறைகிறது இதனால் தொடர்ந்து அரசு வேளாண் பொருட்கள் ஏற்றுமதியினைத் தடைசெய்கிறது. மேலும் அரசு வேளாண் பொருட்களின் மீது விலைக் கட்டுப்பாடுகளை விதிக்கிறது. இதன் விளைவு விவசாயிகள் பெரும் இழப்பினைச் சந்திக்கின்றனர். எனவே இயற்கையினை கணிப்பது மிகவும் கடினமாக இருப்பதால் இதற்கு எற்ப வேளாண் பொருட்களின் விளைவிக்க விவசாயிகளால் முடிவதில்லை. இதுபோல் வேளாண் சாகுபடியில் பல்வேறு காரணங்களால் இழப்பு ஏற்படும்போது வேளாண் பொருட்களுக்கு போதுமான விலை அல்லது உற்பத்தி செலலவினைக்கூட ஈடுசெய்ய அல்லது உறுதிபடுத்த முடியாத நிலை ஏற்பட்டு விவசாயிகள் வேளாண்மையை விட்டு வெளியேறி (15 நிமிடத்திற்கு ஒரு விவசாயி வெளியேறுவதாக கணக்கிடப்படுகிறது) வேளாண்சாராத் தொழில்களுக்கு (குறிப்பாக கட்டுமானத் துறை) செல்லத் தொடங்குகிறார்கள். குறைந்தபட்ச ஆதார விலை 23 வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது இதில் நெல் கோதுமை அதிக முக்கியத்துவம் பெறுகிறது. நாட்டின் மொத்த விவசாயிகளில் 10 விழுக்காட்டிற்குகீழ் இதன் மூலம் பயன்பெறுகின்றனர். எனவே வேளாண் விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்க அரசு பல்வேறு கொள்கைகளையும் திட்டங்களையும் வகுத்து நடைமுறைப்படுத்தினாலும் பெருமளவிற்கான விவசாயிகள் குறிப்பாக சிறு குறு விவசாயிகள் பலனை அடைய முடிவதில்லை. இந்த அடிப்படையில் கொண்டுவரப்பட்டதுதான் பயிர் காப்பீட்டுத் திட்டமாகும்.

பயிர் காப்பீட்டின் முக்கிய நோக்கங்கள், பயிர் சாகுபடியினால் ஏற்படும் இழப்பு மற்றும் வேளாண் விலைகளால் ஏற்படும் நிலையற்ற போக்கினால் விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்பினைச் சரிசெய்வது ஆகும். இந்தியாவில் 1972லிருந்து வேளாண் காப்பீட்டுத் திட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது. 1985ஆம் ஆண்டுவரை தேர்தெடுக்கப்பட்ட சில பகுதிகளில் மிகவும் சிறிய அளவில் பயிர் காப்பீட்டுத் திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டது. முதன்முதலில் 1985ஆம் ஆண்டு சம்பா பருவத்தில் (கரீஃப் பருவம்: ஜூன் முதல் அக்டோபர் முடிய) இந்திய முழுமைக்கும் ஒருங்கிணைந்த பயிர் காப்பீட்டுத் திட்டம் (Comprenesive Crop Insurance Scheme –CCIS) கொண்டுவரப்பட்டது. 25 ஆண்டுகள் இந்த காப்பீட்டுத் திடடம் நடைமுறையில் இருந்தது. 1999-2000ல் தேசிய வேளாண்மை காப்பீட்டுத் திட்டம் (Rashtriya Krishi Bima Yojana) குறுவைப் பருவத்தில் (ரபி பருவம்: அக்டோபர் அல்லது நவம்பர் முதல் மார்ச் முடிய) கொண்டுவரப்பட்டது. இதன்படி சிறு குறு விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்பட்டது. இது பயிரிடும் வட்டார அணுமுறையில் கொண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. 2011-12ல் மறுவடிவமைக்கப்பட்ட தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டம் (MNAIS) கொண்டுவரப்பட்டது இந்த திட்டம் பரிசோதனையின் அடிப்படையில் 50 மாவட்டங்களில் நடைமுறைபடுத்தப்பட்டது. இதுபோன்று கால நிலை அடிப்படையில் பயிர்காப்பீட்டுத் திட்டம் பரிசோதனை அடிப்படையில் 20 மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டது 2013-14ல் இந்திய அரசு தேசிய பயிர் காப்பீட்டுத் திட்டம் (National Crop Insurance Programme) நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டது. இத் திட்டம் விவசாயிகளுக்கு நிதி உதவியை அளித்தது. ஓட்டு மொத்தமாக இந்த திட்டம் முழு அளவிற்கு சேர்க்கப்படவில்லை. இந்த திட்டம் முழு அளவிற்கு வெற்றி பெறாததால் இதனை மாற்றி அமைத்து பிரதம மந்திரி ஃபசல் பீமா யோஜனா (Pradhan Mantri Fasal Bima Yojana – PMFBY) 2016ல் துவக்கப்பட்டது. இதனைத் தவிற்று 1999-00ல் விதைப் பயிர் காப்பீட்டுத் திட்டம், 2003-04ல் வேளாண் வருமானக் காப்பீட்டுத் திட்டம், 2007ல் தண்ணீர் அடிப்படையில் சாகுபடி ஆகும் பயிர்களுக்கான காப்பீட்டுத் திட்டம் போன்றவை துவக்கப்பட்டன.

பயிர்த் தொழிலில் இழப்பானது தொடர்ந்து வேளாண்மையின் முக்கிய சிக்கலாக உருவெடுத்து வந்துள்ளது எனவே பயிர் காப்பீட்டுத் திட்டம் முழு அளவில் வேளாண் பயிர் பரப்பினை ஏற்றுகொள்ளவது தேவைப்படுகிறது. 1 ஏப்ரல் 2016ல் முழுமையான பயிர் காப்பீட்டுத் திட்டமாக பிரதம மந்திரி ஃபசல் பீமா யோஜனா கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்தின் முக்கிய நோக்கங்கள் 1) விவசாயம் இயற்கைச் சீற்றம், பூச்சிகளால் பாதிக்கப்படுதல், நோய் பரவுதல் போன்ற காரணங்களுக்காக குறிப்பிட்ட பயிர்களுக்குக் காப்பீடு முழு அளவிற்கு நிதி உதவி அளிப்பதாகும். 2) விவசாயிகளின் வருமானத்தை தொடர்ந்து அதிகரித்தல். 3) புதிய மற்றும் நவீன வேளாண்மை சாகுபடியினை பின்பற்ற விவசாயிகளை ஊக்குவித்தல் 4) வேளாண் துறையில் கடன் தடையின்றி கிடைக்க உறுதி செய்தல் போன்றவை ஆகும். இந்த காப்பீட்டுத் திட்டத்தினை ஒன்றிய, மாநில, காப்பீட்டு நிறுவனங்கள் ஒன்றிணைந்து நடைமுறைபடுத்துகிறது. இக்காப்பீடு விளைச்சல் புள்ளி விவரங்கள் உள்ள அனைத்து பயிர்களுக்கும், அறிவிக்கப்படுகின்ற பகுதிகளில் பயிர் அறுவடை பரிசோதனை (Crop Cutting Experiments) முறையில், அனைத்து பயிர்க் கடன் பெற்ற விவசாயிகளுக்கு கட்டாயம் (கடன் பெறாத விவசாயிகளும் பயன் பெற முடியும்) இக் காப்பீட்டுத் திட்டம் நடைமுறைபடுத்தப்படுகிறது (https://pmfby.gov.in/pdf/New%20Schemes-english_.pdf).

இந்த திட்டத்தின் முக்கிய இயல்பு விவசாயிகளின் காப்பீட்டுத் தவணை செலுத்தும் சுமையினைக் குறைப்பதாகும். தொழில்நுட்பம் தொடர்பான புள்ளிவிவரங்களைப் பயன்படுத்துதல், வறட்சி, பூச்சியினால் பாதிக்கப்படுவது, அறுவடைக்குப் பிந்தைய இழப்பு, விளைச்சல் பாதிப்பு போன்றவை இந்த பயிர்காப்பீட்டுத் திட்டம் முழு அளவினை உள்ளடக்கியதாக உள்ளது. பயிர் காப்பீடு செய்த விவசாயிகள் மட்டுமே இதன் பலனை பெறமுடியும். இவர்கள் பயிர்க் கடன் பெற்றவர்கள், விவசாயக் கடன் அட்டை வைத்திருப்பவர்கள் கட்டாயமாக இக்காப்பீட்டில் பங்கு பெற வேண்டும். பயிர் கடன் பெறாதவர்களும் இந்த காப்பீட்டை பெறலாம்.  இந்த காப்பீட்டு தொகை ஒன்றிய மாநில அரசுகளின் பங்களிப்புடன் பயிர் அறுவடை பரிசோதனை கணிப்பு முறையினால் விளைச்சலைக் கணக்கில்கொண்டு காப்பீட்டுத் தொகை வழங்கப்படுகிறது. கடந்த 7 ஆண்டுகள் சராசரி விளைச்சலையும் ஒப்பிட்டு காப்பீட்டுத் தொகை வங்கிகள் மூலமாக வழங்கப்படுகிறது.  7 ஆண்டுகளில் இரண்டு ஆண்டுகள் பருவநிலை பாதிப்பினால் பயிர் இழப்பு நேரிட்டால் ஐந்தாண்டுகள் கணக்கில் கொண்டு சராசரி கணக்கிடப்படுகிறது. உணவுதானியம், எண்ணெய்வித்துகள் சாகுபடி செய்யும் விவசாயிகள் சம்பா பருவத்திற்கு மொத்த பிரிமியத்தில் 2 விழுக்காடு செலுத்தவேண்டும் இதுவே குறுவை சாகுபடியாக இருந்தால் 1.5 விழுக்காடு செலுத்தவேண்டும். இதர வணிகப்பயிர், தோட்டப் பயிர் செய்பவர்கள் 5 விழுக்காடு செலுத்தவேண்டும். விவசாயிகள் செலுத்தவேண்டிய பிரிமயத்தை 50:50 என்ற அளவில் ஒன்றிய, மாநில அரசுகள் பங்கிட்டுக்கொள்ளவேண்டும். இதுவே வட-கிழக்கு மாநிலங்களுக்கு 90:10 என்ற அளவில் பகிரப்படுகிறது.

இக்காப்பீட்டின் இயல்புகள் 1). காப்பீட்டுத் தொகை: உறுதி செய்யப்பட்ட காப்பீட்டுத் தொகை மாவட்ட தொழில் நுட்ப கணக்கீட்டின் அடிப்படையில் நிருணயிக்கப்படுகிறது. இக்கணக்கீடு நிலத்தின் தன்மை, நீர்பாசனம், உரம், விதை, தொழிலாளர் உழைப்பு போன்றவைகளை அடிப்படையாகக் கொண்டது. 2). காப்பீட்டு பிரமியம்: பருவத்திற்கு ஏற்பவும், பயிர்களுக்கு ஏற்பவும் 2 விழுக்காடு, 1.5 விழுக்காடு, 5 விழுக்காடு என முடிவுசெய்யப்பட்டுள்ளது. 3). நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல்: தொலை உணர்வு அறிதல், வான்வழிப் படங்கள், செயற்கைக்கோள் போன்ற தொழில்நுட்ப உதவியுடன் விரைவாகவும், துள்ளியமாகவும், விளைச்சலை மதிப்பிடுதல். 4). தனியார் பங்கு: பொது-தனியார் துறைகளின் காப்பீட்டு நிறுவனங்கள் இந்த திட்டத்தில் பங்கேற்கின்றன. மூன்று ஆண்டுகளுக்கு நல்ல, பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் என பாகுபடுத்தி இடர்கள் மதிப்பீடு செய்யப்படும். 5). இழப்பு மதிப்பீடு குறிப்பிட்ட காலவரையறை: விளைச்சல் புள்ளி விவரங்கள் கிடைத்தவுடன் மூன்று வாரங்களுக்குள் இழப்பு மதிப்பீடு செய்யப்பட வேண்டும். 6). பிரிமியம் மானியம் காப்பீட்டு நிறுவனங்களுக்குக் குறிப்பிட்ட காலத்திற்குள் அளித்தல்: ஒன்றிய-மாநில அரசுகள் 50 விழுக்காடு பங்களிப்பு மானியத்தினை காப்பீட்டு நிறுவனங்களுக்குப் பயிர் தொடங்கும் முன்பு அளித்தல் வேண்டும் மீதமான மானியத்தைக் காப்பீட்டு நிறுவனங்கள் இறுதியாக விவசாயிகளுக்கு வழங்கும்போது ஒன்றிய மாநில அரசுகள் செலுத்த வேண்டும். 7). விளம்பரம் மற்றும் விழிப்புணர்வு: கிராமங்களுக்குப் போதுமான விழிப்புணர்வினை இந்த திட்டம் பற்றி ஏற்படுத்த, விளம்பரங்கள், காட்சிகள், குறுஞ்செய்திகள், குறும்படங்கள், நாளிதழ்கள், மின்னணு ஊடகங்கள் வழியாகத் தெரியப்படுத்த வேண்டும்.

 NAIS  (National Agricultural Insurance Scheme), MNAIS (Modified National Agricultural Insurance Scheme), WBCIS (Water Based Crop Insurance Scheme) ஆகிய காப்பீட்டுத் திட்டங்களைச் சேர்த்து மொத்தமாக பயிர் காப்பீட்டு மூலம் பயன் பெற்றவர்கள், சம்பா பருவம் 2012ல் 29 மில்லியன் ஹெக்டேர் ஆகும் இது 2016 சம்பா பருவத்தில் 37.9 மில்லியன் ஹெக்டேராக அதிகரித்தது. WBCIS மூலம் பயன்பெற்ற அளவு இவ் ஆண்டுகளில் 11.1 மில்லியன் ஹெக்டேராக இருந்தது 1.3 மில்லியன் ஹெக்டேராகக் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. PMFBYல் 2015-16ல் மில்லியன் ஹெக்டேர் பயிர் காப்பீட்டு வழியாக பயன்பெற்றது இது 2016-17ல் 57.2 மில்லியன் ஹெக்டேராக அதிகரித்தது அதாவது 6.5 விழுக்காடு அதிகரித்தது இவ்வாண்டுகளில் 47.5 மில்லியன் விவசாயிகளிலிருந்து 57.2 மில்லியன் விவசாயிகளாக முறையே உள்ள ஆண்டுகளில் பயனடைந்துள்ளனர் இதன் அதிகரிப்பு 74 விழுக்காடாகும். குஜராத், ஹிமச்சல் பிரதேசம், கர்நாடகா, உத்திரப் பிரதேசம், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்கள் அதிக அளவிற்கு பயன் பெற்றுள்ளன. அடிப்படையில் கடன் பெற்ற விவசாயிகள் முழு அளவில் பயிர் காப்பீட்டின் கீழ் வருவதால் மொத்த பயனாளிகளில் நான்கில் மூன்று பங்கினராக இவர்கள் உள்ளனர். அதிக அளவில் கடன் பெறாத பயனாளிகள் ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் உள்ளனர். 2016லிருந்து 2019வரையில் விவசாயிகள் இந்த திட்டத்தில் பயன்பெற்றவர்கள் குறைந்துள்ளனர், இதேபோல் பயிரின் பரப்பளவிலும் குறைந்துள்ளது.

அட்டவணை: இந்தியப் பயிர் காப்பீட்டின் போக்கு

ஆண்டு விவசாயிகள் (000) விளைநிலம் (000 ஹெக்டேர்)
சம்பா குறுவை சம்பா குறுவை
2012 20719.9 12682.0 29057.8 15998.2
2013 20962.2 12273.0 27678.6 15065.5
2014 23754.1 13344.0 28183.7 17587.0
2015 30681.5 16720.0 33510.6 20371.3
2016 40492.2 16803.0 37828.2 19285.2
2017* 58370.0 56110.0
2018 30724.2 22045.6 27789.3 19793.9
2019 38307.9 17666.9 29299.7 15420.9
2020 40955.2 19834.9 27175.7 15740.3
2021 49511.3 32544.9 23924.9 14852.0

குறிப்பு: 2017லிருந்து PMFBY புள்ளிவிவரங்கள் மட்டும் அளிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம்: Ashok Gulti, Prerna Terway and Siraj Hussain (2018): “Crop Insurance in India: Key Issues and Way Forward”, Working Paper No. 352, Indian Council for Research on International Economic Relations  and https://pmfby.gov.in/ceo/dashboard

PMFBY காப்பீட்டுத் திட்டம் மூலம் சிறு குறு விவசாயிகள் பெருமளவிற்கு பயனடைந்துள்ளனர் என்பது மிகப் பெரிய ஆறுதலானதாக உள்ளது. விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு மூலம் விவசாயிகளின் இழப்பினைச் சரிசெய்ய இந்த காப்பீட்டுத் திட்டங்கள் முனைந்தாலும் பல்வேறு சிக்கல்கள் அடிப்படையில் காணப்படுகிறது. பல மாநிலங்களில் தொழில் நுட்ப பிரச்சனைகளால் காப்பீட்டு நிறுவனங்களை தேர்வு செய்வதில் குளறுபடி நேரிடுகிறது. காப்பீட்டு குறிப்பிட்ட காலக்கெடுவான ஜூலை 31க்குள் விவரங்களை அளிக்காமல் பல மாநிலங்களில் கோரிக்கையினால் காலகெடு நீடித்து வழங்கப்படுவதல் காப்பீட்டுத் தொகை குறிப்பிட்ட காலங்களுக்குள் கிடைக்கப் பெறுவதில்லை. காப்பீட்டு நிறுவனங்களில் 25 விழுக்காடு உள்நாட்டு காப்பீட்டு நிறுவனங்களும், 25 விழுக்காடு வெளிநாட்டு காப்பீட்டு நிறுவனங்களும், 50 விழுக்காடு மறுகாப்பீட்டு முறையினைப் பின்பற்றப்படுவதால் இந்த திட்டம் நடைமுறைபடுத்துவதில் சிக்கல்கள் எழுகிறது. வேளாண் பொருட்களின் விளைச்சலின் அடிப்படையிலே இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஆனால் வேளாண் பொருட்களின் விலை குறைவினால் ஏற்படும் இழப்பினை இத்திட்டம் கணக்கில் கொள்ளவில்லை. கைப்பேசி தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி புள்ளி விவரங்கள் கணக்கீடு செய்யப்படுகிறது. எனவே இதில் முறைகேடுகள் நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.

விளைச்சல் பற்றிய புள்ளிவிவரங்கள் கிடைத்த மூன்று வாரங்களுக்குள் அனைத்து காப்பீட்டுத் தொகையினை அளிக்கப்படவேண்டும் ஆனால் பல மாநில அரசுகள் குறித்த நேரத்தில் தாக்கல் செய்யாததால் அதிக காலம் எடுத்துக்கொள்கிறது. குறிப்பாக குஜராத், தமிழ்நாடு, ராஜஸ்தான் மாநிலங்கள் இக்காலம் கடத்தலை அதிகம் எடுத்துக்கொள்கிறது. வேளாண் விவசாயிகள் எதிர்கொள்ளும் இழப்புகளை ஈடுசெய்வதற்காகவே நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டம், விவசாயிகள் அதிக அளவில் வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச விலை கிடைக்காமல் பெரும் இழப்பிற்கு ஆளாகின்றனர் எனவே இத்திட்டம் இதனையும் கருத்தில் கொண்டு இவ்விழப்பினைச் சரிசெய்ய முன்வரவேண்டும். குறித்த நேரத்தில் விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத் தொகையினை அளிக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் இதனால் விவசாயிகளின் தற்கொலைகள் தடுக்கப்படும். பல மாநிலங்களில் இடைத்தரகர்களின் ஆதிக்கமும் பல முறைகேடுகளும் நடைபெறுகிறது இதனைத் தடுத்து முறையாக விவசாயிகளுக்கு காப்பீட்டுத் தொகை சென்றடைய வழிவகை செய்யவேண்டும்.


பேராசிரியர் பு.அன்பழகன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “இந்திய வேளாண் பயிர் காப்பீட்டுத் திட்டங்களும் சிக்கல்களும்”

அதிகம் படித்தது