மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

உடற்பயிற்சி

முனைவர். ந. அரவிந்த்

May 21, 2022

siragu udarpayirchi1
பொதுவாகவே, அனைவரும் மூன்று வேளை உண்கிறோம், வேலைக்கு செல்கிறோம், உறங்குகிறோம். உடற்பயிற்சி செய்வதற்கும் மற்றும் இறைவனை வணங்குவதற்கும் நேரம் இல்லையென விட்டு விடுகிறோம். இது தவறு. உடற்பயிற்சி உடல் மற்றும் உள்ளத்திற்கு புத்துணர்ச்சி மற்றும் ஆரோக்கியம் தரக்கூடியது.

சிலர் விவசாயம் சார்ந்த தோட்ட வேலை அல்லது கட்டிட வேலை செய்யலாம். இவர்களுக்கு வேலை செய்யும்போதே உடலுக்கு தேவையான பயிற்சி கடின உழைப்பின் மூலம் கிடைத்து விடுகிறது. கூடுதலாக உடற்பயிற்சி என்பது அவசியமில்லை. ஆனால். வியாபாரம் மற்றும் அலுவலகங்களில் வேலை செய்பவர்களுக்கு உடற்பயிற்சி அத்தியாவசியமானது.

உடற்பயிற்சியில் பல வகைகள் உள்ளன. அவற்றில் நமக்கு தேவையான மற்றும் ஒத்து வரக்கூடிய ஒன்று அல்லது பல பயிற்சிகளை நம்முடைய இடத்திற்கு தகுந்தாற்போல் செய்யலாம். முக்கியமாக 4 வகையான உடற்பயிற்சிகளைப்பற்றி காண்போம்.

முதலாவதாக யோகாசனம் பற்றி காண்போம். நகர்புறத்தில் வசிப்பவர்கள் வீட்டிற்குள்ளேயே இருந்து யோகாசனம் செய்யலாம். அல்லது அருகில் ஏதாவது பூங்கா இருந்தால் அங்கு சென்று யோகாசனம் செய்யலாம். யோகாசனம் என்பது நகர் புறத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமல்ல. அனைவருக்குமே தேவையானது. வீட்டிற்குள் இருந்து யோகாசனம் செய்வதைவிட திறந்த பகுதியில் மற்றும் மரம், செடிகள் இருக்கும் இடத்தில் செய்தால் நல்ல காற்று கிடைக்கும். இது உடலுக்கு மிகவும் நல்லது. எத்தனை வகையான ஆசனங்கள் உள்ளன? அவற்றை எப்படி முறைப்படி செய்ய வேண்டும்? என்பதனை யோகா ஆசிரியரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். இதனை தரமான புத்தகங்கள் அல்லது வலை ஒளி மூலமாகவோ கற்றுக்கொள்ளலாம்.

யோகாசனம் மூச்சு பயிற்சியையும் உள்ளடக்கியது என்பதால் அதனால் நம் உடலிற்கும், அதற்குள் உள்ள இரத்தத்திற்கும் தேவையான பிராண வாயு கிடைக்கிறது. இதனால் நமக்கு புத்துணர்ச்சி கிடைக்கிறது. யோகாசனம் நுரையீரலுக்கு மிகவும் நல்லது செய்கிறது. யோகாசனம் செய்வதற்கு சில விதிகள் உள்ளன. அவையாவன, யோகாசனம் செய்வதற்கு முன் உணவு உண்ணக்கூடாது. மலம், சலம் கழித்த பின்னர்தான் யோகாசனம் செய்ய வேண்டும். உடல் சூடாக இருக்கும் நாட்களில் மற்றும் உடல் நலம் சரியில்லையென்றால் ஓரிரு நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும்.

அடுத்தது நாம் நடை பயிற்சியினை பற்றி பார்ப்போம். நடை பயிற்சி செய்வதற்கும் இடத்தினை தேர்வு செய்வது மிகவும் முக்கியமானதாகும். நம்முடைய வீட்டைச் சுற்றி, விளையாட்டு மைதானம், பூங்கா அல்லது போக்குவரத்து நெரிசல் இல்லாத சாலை இவற்றில் ஏதாவது ஒன்றினை தேர்ந்தெடுத்து நடை பயிற்சி மேற்கொள்ளலாம். போக்குவரத்து நெரிசல் இருந்தால் அது நடப்பதற்கு இடைஞ்சலாகவும் இருக்கும் மற்றும் வாகனங்களில் இருந்து வெளிவரும் புகையானது உடலிற்கு தீங்கினையும் உண்டு பண்ணும். நண்பர்களுடன் சேர்ந்து நடை பயிற்சி சென்றால் இன்னும் நல்லது. கூடுதல் தூரம் நடந்தாலும் சோர்வு தெரியாது. நடை பயிற்சி தினமும் செய்து வந்தால் நம் உடலில் உள்ள கழிவுகள் வியர்வையாக வெளியேறும். மனம் புத்துணர்ச்சி பெறும். சூரிய ஒளியில் நடப்பதால் எலும்புகள் வலுவடையும்.

மூன்றாவதாக, விளையாட்டினை பற்றி பார்ப்போம். தினமும் ஒரு மணி நேரமாவது ஏதாவது ஒரு விளையாட்டினை விளையாட பழக்கப்படுத்திக்கொள்ளுதல் அவசியம். கால்பந்து, இறகு பந்து, வரிப்பந்தாட்டம், மேசைப்பந்து அல்லது வேறு ஏதாவது நமக்கு பிடித்த விளையாட்டினை தேர்வு செய்து விளையாடலாம்.

கடைசியாக, நம்முடைய உடலில் உள்ள மூட்டுகளுக்கு தேவையான பயிற்சிகளை காண்போம். நம்முடைய மூட்டு மற்றும் எலும்புகளில் உள்ள மஜ்ஜைகள் இரத்தத்தினை உற்பத்தி செய்கின்றன. எனவே இப்பயிற்சிகள் மிக அவசியம். இப்பயிற்சியை கால்களில் இருந்து ஆரம்பிப்போம். கால்களில் உள்ள பத்து விரல்களையும் பத்து முறை நன்றாக மடக்கி நீட்ட வேண்டும். அடுத்தது, ஒரு காலில் நின்றுகொண்டு மற்றொரு காலை அதாவது கணுக்காலை வலப்புறமாக பத்து முறை மற்றும் இடப்புறமாக பத்து முறை சுற்ற வேண்டும். இதே பயிற்சியை மற்றொரு காலுக்கும் செய்ய வேண்டும். அடுத்து நம் இரு கைகளையும் கால் முழங்கால்களில் வைத்துக்கொண்டு இரு கால்களின் மூட்டுகளையும் வலப்புறம் மற்றும் இடப்புறமாக பத்து முறை சுற்ற வேண்டும். அடுத்தபடியாக, கைகளை இடுப்பினில் வைத்துக்கொண்டு இடுப்பினை சுற்ற வேண்டும். இதே முறையில் தோள்பட்டை, முழங்கை, மணிக்கட்டு, கை விரல்கள் மற்றும் கழுத்துக்கும் செய்ய வேண்டும். கழுத்தினை சுற்றும்போது மெதுவாக சுற்ற வேண்டும். வேகமாக சுற்றினால் சுளுக்கிக்கொள்ள வாய்ப்புள்ளது. மூட்டுகளுக்கு செய்யும் ஒவ்வொரு பயிற்சிகளையும் எப்படி செய்ய வேண்டுமென்பதை திரு. ஹீலர் பாஸ்கர் அவர்கள் விளக்கியுள்ள வலை ஒளி இணைப்புகள் கீழே தரப்பட்டுள்ளது. அதனை பார்த்து முறைப்படி செய்யுங்கள். (நன்றி: திரு. ஹீலர் பாஸ்கர்)

https://www.youtube.com/watch?v=EiRLw1cf7ZA

https://www.youtube.com/watch?v=b6tWYii4NJc

மேற்கூறிய உடற்பயிற்சிகளை தொடர்ந்து செய்து வந்தால் மருத்துவமனை செல்லும் அவசியம் இருக்காது.


முனைவர். ந. அரவிந்த்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “உடற்பயிற்சி”

அதிகம் படித்தது