கவிஞர் செல்வ கீதாவின் நூல் விமர்சனம் – பகுதி-2
சு. தொண்டியம்மாள்Oct 22, 2022
தலைவியின் மனதைப் புரிந்து கொள்ளாமை
தலைவன் தலைவியை ஒதுக்கிவிடும் காலங்களும் இருந்திருக்கின்றன. மறந்துவிட்ட காலங்களும் இருந்திருக்கின்றன.
‘‘ஒதுக்கப்படுவதும் மறக்கப்படுவதும்
உன்னிடம் எனக்குச் சகஜம் தான்
என்றாலும் .. உன்னை விட்டு
ஒதுங்காமல் என்னை வாழ வைத்திருக்கிறது
உன் மீது நான் வைத்திருக்கும்
உயிர்காத்தல்! (ப. 24)
இக்கவிதை வழி அக்காலங்களில் தலைவி தலைவன் ஒதுங்கினாலும் ஒதுங்காமல் வாழ்ந்திருக்கிறாள். இதற்குக் காரணம் தலைவி கொண்டிருந்த உயிர்காதல் என்று குறிப்பிடப்படுகிறது.
”உன் காற்று மண்டலத்தில் எல்லாம்
என் கவிதைத் துணுக்குகளை
கலந்து வைத்திருக்கின்றேன்…
உன் மூச்சுக் காற்றில்
ஒன்றிரண்டாவது கலந்து விடாதா…
என்ற ஏக்கப் பெருமூச்சுடன்!” (ப. 29)
என்ற கவிதையில் கவிஞராக விளங்கும் தலைவி, தன் கவிதைகளை எழுதி வைத்துக் காத்துக் கொண்டிருக்கத் தலைவனின் பார்வை, கவிதைகளின் மேலும் படவில்லை. அவள் மீதும் படவில்லை என்ற ஏக்கத்தை இக்கவிதை பதிவு செய்துள்ளது.
கவிதைகள் மட்டும் அல்ல. தலைவியின் எதிர்பார்ப்புகளையும் கவனித்து அவற்றை முழுமைப்படுத்தும் மன நிலையில் தலைவன் இல்லை.
‘‘என் எதிர்பார்ப்புக்களையெல்லாம்
என்றாவது ஒரு நாள்
நிறைவேற்றுவாய்
என்ற
எதிர்பார்ப்புடனேயே
எதிர்கொள்கிறேன் என்
எதிர்காலத்தை.!” (ப. 39)
என்ற கவிதைக்குள்ளும் தலைவியின் மனதிற்குள் இருக்கும் ஏக்கப் பெருமூச்சுகளை அறிந்து கொள்ளமுடிகின்றது.
”நீ நினைக்காத பொழுதுகளில் கூட
உனையே நினைத்திருக்கிறேன் நான்
நீ எனையே நினைத்திருப்பாய்
என நினைத்து!” (ப. 40)
என்ற கவிதையில் தலைவன் தன்னை நினைக்காத பொழுதுகள் உள்ளன என்பதைத் தலைவி பதிவு செய்கிறாள்.
”என் மனதை நீ
காயப்படுத்தும் பொழுதுகளில் கூட..
என் மனதிற்கு நீ
மருந்திட்ட பொழுதுகளை நினைத்தே
மலர்ந்திருக்கிறேன் உனக்காகவே!” (ப. 44)
என்ற கவிதையில் தலைவியின் மனதைக் காயப்படுத்தும் பொழுதுகள் தலைவனிடத்தில் இருந்துள்ளன என்பதை அறியமுடிகின்றது.
பெண் உடல்
பெண் கவிதைகளில் பெண்ணின் உடல் என்பது முக்கிய இடம் பிடித்திருக்கும். உடல் பற்றிய பதிவுகள் பலவற்றைப் பெண் கவிதைகளில் காண இயலும்.செல்வ கீதா மிக நாகரீகமாகப் பெண் உடல் பற்றிய செய்திகளைத் தந்துள்ளார்.
”உயிரையே தரவா
உடலைத் தரவா
எதைத் தந்தால்
நீ உனைத் தருவாய்
எனக்கு?” (ப.41)
என்ற கவிதையில் பெண்ணுடல் பேசு பொருளாகி உள்ளது. தலைவி உயிர் தந்தும் உடல் தந்தும் தலைவனைப் பெற முயல்கிறாள். இருப்பினும் அவன் தலைவியின் உடலையும், உயிரையும் பெற்றாலும் தன்னைத் தர மறுக்கிறான் என்பதை இக்கவிதை காட்டுகிறது. உடலையும் உயிரையும் தந்தும் கூட கணவனின் அன்பைப் பெற இயலாத தலைவியின் ஏக்கம் இக்கவிதைக்குள் கிடக்கின்றது.
உடல் தந்தும் பெற முடியவில்லை.உடலைத் துறந்த பின்பாவது தலைவன் தன்னை அறிவானா என்ற ஏக்கம் தலைவிக்கு ஏற்படுகிறது.
”மறக்க முடியுமா உன் நேசம் சுமந்து
மரிப்பதே எனது சுகமென்பதை
நான் மரித்தபின் தான்
நீ புரிந்து கொள்வாயா?(ப. 53)”
மேலும் தலைவியை உயிர் பொம்மையாகத் தலைவன் ஏற்கிறானே தவிர உணர்வுள்ள உயிராக ஏற்கவில்லை என்று முடிவு செய்து அறிவிக்கின்றது பின்வரும் கவிதை.
நினைவைக் கொன்றுவிட்டு
உணவு தின்று செரிக்க
நான் உணர்வற்ற ஜடமல்ல
நீதான் எல்லாமென்று
திடமாய் நம்பும்
உயிர்ப்பதுமை!(ப. 53)
தலைவி உணர்வுடைய உயிர் என்பதை மெய்ப்பிக்க இக்கவிதை தேவைப்படுகிறது.
தலைவி யார்?
செல்வ கீதாவின் தலைவி அவரே என்பதற்குப் பல சான்றுகள் இக்கவிதைத்தொகுதிக்குள் இருக்கின்றன. “என் கணவரைக் காதலித்து நான் பிரசவிக்கும் முதல் கவிதைக் குழந்தை இது. அவரது அன்பு மழையில் நான் நனைந்த, மழை எனை நனைத்த பொழுதுகளிலும், கடும் சொற்களால் நான் காயப்பட்டு நின்ற பொழுதுகளிலும் என் மனக் கிறுக்கல்களைக் கவிதை கத்தைகளாக்கி வைத்திருந்தேன்” (பின்அட்டை) என்ற சுய பாத்திர அறிமுகத்தில் மனசெல்லாம் நீ என்ற கவிதைத்தொகுதியின் தலைவி செல்வ கீதா என்பது தெளிவுபடத்தெரிகிறது. இவரது மேற்தொடரில் அன்பு மழையும் இருந்துள்ளது.காயப்பட்ட நிலையும் இருந்துள்ளது.
இக்கட்டுரை செல்வ கீதாவின் தலைவி காயப்பட்ட பொழுதுகளைக் காட்டி பெண் சோகத்தை வெளிப்படுத்தி நிற்கிறது.
முடிவுகள்
சங்க காலம் தொட்டே திருமணத்திற்குப் பின்பு தலைவனும் தலைவியும் இன்புற்று வாழும் வாழ்க்கை என்பது மிகக் குறைவான காலமே என்பது தமிழ் மரபில் காணக்கிடைக்கிறது. தலைவன் தலைவியைப் பிரிந்து தலைவிக்குத் துன்பம் தருபவனாகவே சங்க காலம் தொட்டு விளங்கி வருகிறான்.இந்நிலையில் கற்பு ஒழுக்கம் என்ற வாழ்க்கைப் பகுப்பில் தலைவனை மிகவும் நேசித்து வாழும் வாழ்க்கையை உடையவளாக இருக்கிறாள். ஆனால் தலைவன் தலைவியின் உணர்வுகளை, எதிர்பார்ப்புகளை, எண்ணங்களை, கனவுகளை ஈடேற்றுபவனாக இருக்கவில்லை என்பதை செல்வ கீதாவின் மனசெல்லாம் நீ என்ற கவிதைத் தொகுதி காட்டி நிற்கிறது.
பயன் கொண்ட நூல்கள்
சாரதாம்பாள்.செ., பெண்ணிய உளப் பகுப்பாய்வும், பெண் எழுத்தும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 2005
செல்வதா, மனசெல்லாம் நீ, வதனம் வெளியீடு, மதுரை 2014
சு. தொண்டியம்மாள்
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “கவிஞர் செல்வ கீதாவின் நூல் விமர்சனம் – பகுதி-2”