மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

காலை உணவை தவிர்க்காதீர்கள்

முனைவர். ந. அரவிந்த்

Sep 24, 2022

siragu breakfast
காலை உணவை தவிர்க்கக் கூடாது என்பதற்கு காரணம் உண்டு. முந்தைய நாள் இரவில் உத்தேசமாக ஏழு மணிக்கு உணவு உண்ட பின்னர் அடுத்து மறுநாள் காலையில்தான் சாப்பிடுகிறோம். இரவு மற்றும் அடுத்த நாள் காலை உணவிற்கும் இடையே சுமார் 12 மணி நேரம் இடைவெளி உள்ளது.

காலை உணவை தவறவிட்டால் அடுத்து மத்திய உணவிற்கு ஒரு மணி வரை காத்திருக்க வேண்டியிருக்கும். அதாவது, முந்தைய நாள் இரவு உணவிற்கும் மறுநாள் மதிய உணவிற்கும் இடைவெளி 18 மணி நேரமாகும். இவ்வளவு நேரம் சாப்பிடாமல் இருக்கக் கூடாது. இது குடலிற்கு நல்லதல்ல. நம் உடலில் குடல் பகுதியில் அமிலம் சுரந்துகொண்டே இருக்கும். இதுதான் நாம் உண்ணும் உணவு செரிமானம் ஆவதற்கு துணை புரிகிறது.

இந்த அமிலம் அதிகமாக சுரந்தால் குடலை பாதிக்கும். இதனால் குடலில் அரிப்புகள் மற்றும் புண்கள் வரும். புண்களின் ஆரம்ப நிலை அரிப்புகள் எனப்படும். புண்களை சரி செய்யாமல் விட்டுவிட்டால் குடலில் ஓட்டை வருவதற்குகூட வாய்ப்புள்ளது. எனவே, காலையில் பசி எடுத்தவுடன் தாமதிக்காமல் உணவு உண்ணுங்கள்.

காலை உணவு ஆங்கிலத்தில் ‘பிரேக் ஃபாஸ்ட்’ (breakfast) என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு காரணப்பெயர் ஆகும். இந்தக் கூட்டுச் சொல்லை ‘பிரேக்’ மற்றும் ‘ஃபாஸ்ட்’ என இரண்டு பகுதிகளாக பிரிக்கலாம். பிரேக் என்றால் ‘முறித்தல்’ என பொருள்படும். ஃபாஸ்ட் என்றால் விரதமாகும். அதாவது, நீண்ட நேரம் உண்ணாமல் இருப்பதை முறித்து நாம் காலையில் உணவு உண்பதால் காலை உணவிற்கு ‘பிரேக் ஃபாஸ்ட்’ என பெயர் வந்தது.

உணவு உண்பதற்கு சுமார் 20 நிமிடங்களுக்கு முன்னர் மற்றும் 20 நிமிடங்களுக்குப் பிறகு தண்ணீர் குடியுங்கள். உண்ணுவதற்கு சற்று முன் மற்றும் பின் தொண்டை நனையும் அளவிற்கு சிறுதளவு தண்ணீர் குடியுங்கள். சாப்பிடும்போது விக்கல் வந்தால் தண்ணீர் குடியுங்கள். மற்றபடி உண்ணும்போது தண்ணீர் குடிப்பதை தவிருங்கள். நாம் குடிக்கும் தண்ணீரானது குடலில் சுரக்கும் அமிலத்தையும் சேர்த்து அடித்து சென்றுவிடும். எனவே, இது செரிமானத்தை பாதிக்கும்.

காலை உணவை அரசன் உண்பதைபோல் உண்ண வேண்டும் என்பார்கள். இதற்கு காரணம், நாம் எந்த ஒரு கடின உணவுகளை உண்டாலும் அது இரவு உறங்க செல்வதற்குள் செரிமானமாகிவிடும். அசைவம் உண்பவர்கள் புலால் உணவைக்கூட காலையில் உண்ணலாம். செரிமான பிரச்சனை வராது. காலை நேரத்தில் உண்ணக்கூடிய இட்லி, தோசை, பொங்கல், இடியாப்பம், குழி பனியாரம், ஆப்பம் போன்றவை தமிழர்களின் முக்கிய உணவு வகைகள்.

காலையில் இட்லி, இடியாப்பம் போன்றவை மிகவும் நல்லது. சுட்ட உணவைவிட அவித்த உணவு நல்லது. மூலப்பொருட்கள் ஒன்றானாலும், செய்முறையினால் அதாவது தோசையை சுடுவதால் அது உடலிற்கு சூட்டை தரும். இடியாப்பத்திற்கு தேங்காய் பால் மிக நல்ல சேர்க்கை உணவு. உடலிற்கும் குளிர்ச்சியானது. குடல் புண்கள் இருந்தால் அதை ஆற்றும் தன்மை தேங்காய் பாலிற்கு உண்டு.

நம் மண்ணில் எந்த காய்கறி மற்றும் தானியங்கள் கிடைக்கிறதோ அதை உண்ணுங்கள். பிற நாடுகளில் அல்லது தூர பகுதிகளில் விளையும் உணவு பொருட்களை கூடுமானவரை தவிர்ப்போம். நம் ஊரின் தட்ப வெப்ப நிலையில் வளரும் பயிர்கள் நம் உடலிற்கு ஒத்துப்போகும். அரிசி தமிழ் நாட்டின் முக்கியமான பயிர். கோதுமை வட இந்தியர்களின் பிரதான பயிர். கோதுமையில் செய்யப்படும் சப்பாத்தி மற்றும் பூரி வகைகள் உடலிற்கு சூட்டை தரும். நாட்டு ரக அரிசி உணவு வகைகள்தான் நமக்கு மிகவும் பொருத்தமானது. பாரம்பரிய உணவுகளை மறந்துவிட கூடாது. நம் முன்னோர்கள் அவற்றை உண்டுதான் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள்.

முந்தைய நாளில் உள்ள அரிசி சாதத்தில் இரவில் நீர்விட்டு மறுநாள் காலையில் உண்ணலாம். இதனை ‘பழைய சாதம்’ அல்லது ‘கஞ்சி’ என்று கூறுகிறோம். இதனுடன் சிறிய வெங்காயத்தை பச்சையாக சேர்த்துக்கொண்டால் சுவையாகவும் இருக்கும்; உடலிற்கும் நல்லது. இந்த உணவை தொடர்ந்து உண்டு வந்தால் பித்தம் தணியும். வாதம், சர்க்கரை நோய், கபம் உள்ளவர்கள் இதனை தவிருங்கள்.

மைதாவினால் செய்யப்பட்ட ரொட்டி, பரோட்டா, பீஸ்ஸா (pizza), பர்கர் (burger) மற்றும் பிஸ்கட் போன்ற உணவுகளை காலை வேளை மட்டுமல்ல எல்லா வேளையும் முற்றிலும் தவிருங்கள். வெள்ளை சர்க்கரையும் மைதாவும்தான் சர்க்கரை வியாதிக்கு மூல காரணம் என ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

பூரி, வடை போன்ற எண்ணெய்யில் பொரித்த உணவுகளை செரிமான பிரச்சனை இல்லாதவர்கள் காலையில் உண்ணலாம். ஆனால், எந்த எண்ணெயை பயன்படுத்துகிறோம் என்பது மிக அவசியம். நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்த தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் மற்றும் நல்லெண்ணெய் மிகவும் நல்லது. சத்தானது. இவை மரச்செக்கில் அரைத்தவைகளாக இருந்தால் அதன் சத்துக்கள் வீண் ஆகாது. எண்ணெயை திரும்ப திரும்ப சூடுபடுத்தினால் நோய் வரும் வாய்ப்புகள் அதிகம். பித்த உடம்புக்காரர்கள் கடலை எண்ணெய்யை தவிர்க்கலாம்.

உணவு உண்டு முடிக்கும்போது சிறிதளவு இனிப்பு சாப்பிட்டால் உமிழ்நீர் அதிகமாக சுரக்கும். இதுவும் செரிமானத்திற்கு உதவும். முடிந்தால் சம்பளங்கால் போட்டு தரையில் உட்கார்ந்து உண்ணுங்கள். மெதுவாக உண்ணுங்கள். ‘நொறுங்க தின்றால் நூறு வயது’ என்பது பழமொழி. உணவு உண்ணும் விசயத்தில் அவசரம் வேண்டாம்.


முனைவர். ந. அரவிந்த்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “காலை உணவை தவிர்க்காதீர்கள்”

அதிகம் படித்தது