மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

காலை குளியல்

முனைவர். ந. அரவிந்த்

Aug 13, 2022

siragu kaalai kuliyal
காலையில் உடற்பயிற்சி செய்து முடித்த பின்னர், சிறிது நேரம் சென்றபின் சுத்தமான நீரில் குளிக்க வேண்டும். தினமும் குளிப்பது உடலிற்கு புத்துணர்ச்சியை தரும். குளிப்பதற்கு முன்னர் உணவு உண்ணக்கூடாது. கூழானாலும் குளித்துக் குடி, கந்தையானாலும் கசக்கி கட்டு என்பவைகள் தமிழ் பழமொழிகள்.

உடற்பயிற்சியின்போது வரக்கூடிய வியர்வை நீங்குவதற்கு குளிப்பது அவசியம். நம் உடலின் தோலில் உள்ள கண்ணுக்கு தெரியாத மிக சிறிய துவாரங்களை அழுக்குகள் அடைப்பதால் நாம் குளிக்கும்போது நன்றாக தேய்த்து குளிக்க வேண்டும். குளிப்பதற்கு அதைவிட முக்கியமான காரணம் ஒன்று உண்டு. இரவில் உறங்கி காலையில் எழுந்தவுடன் அனைவருடைய உடலும் சூடாகவே இருக்கும். அதை குளிர்ச்சியாக மாற்றுவதற்கு காலையில் குளித்தல் அவசியம். எனவே, நாம் குளிர்ந்த நீரில்தான் குளிக்க வேண்டும். சளி, காய்ச்சல் உள்ளவர்கள் வெந்நீரை குளிப்பதற்கு பயன்படுத்தலாம். ஆனால் தண்ணீர் மிதமான சூட்டில்தான் இருக்க வேண்டும். அதிக சூடு மற்றும் அதிக குளிர்ச்சியான நீர் உடலுக்கு உகந்தது அல்ல.

அருவியில் குளித்தால் உடலில் உள்ள உயிரணுக்கள் (body cells) நன்றாக செயல்படும். ஆனால், எல்லாருக்கும் அருவியில் அதுவும் தினமும் குளிக்கும் வாய்ப்புகள் அமையாது. சிலருக்கு ஆறு அல்லது குளம் வீட்டின் அருகில் இருக்கும். அவர்கள் அதில் நன்றாக குளிப்பதால் நல்ல பலன் கிடைக்கும். நன்றாக நீந்தி குளித்தால் அதுவே மிகச்சிறந்த உடற்பயிற்சியாகும். நகரவாசிகளுக்கு ஆறு, குளம் அல்லது அருவியில் குளிக்கும் வாய்ப்புகள் கிடைக்காது. இவர்கள் குளியலறையில்தான் குளித்தாக வேண்டும். இருந்தாலும், குளிர்ந்த நீரில் முறையாக குளித்தால் அதுவே போதுமானது.

நாம் குளிக்கும்போது, எடுத்தவுடனே தலையில் நீர் ஊற்றக்கூடாது. அவ்வாறு ஊற்றினால் உடல் சூடு மீண்டும் கால் பாதத்திற்குதான் செல்லும். அதனால், முதலில் கால் பாதத்தில் இருந்து மேல் நோக்கி ஊற்றி கடைசியில் தலைக்கு தண்ணீரை ஊற்ற வேண்டும். இவ்வாறு செய்வதால் உடல் சூடானது தலை வழியாக வெளியேறும். சிலருக்கு இதுவும் ஒத்துக்கொள்ளாது. குளிர்ந்த நீரினை காலில் ஊற்றினால் ஒத்துக்கொள்ளாதவர்கள் அதே நீரை சிறிது நேரம் வாயில் வைத்துக்கொள்ளுங்கள். அப்பொழுது, நம் உடலானது குளிர்ச்சிக்கு பழகிக்கொள்ளும். அதற்கு பிறகு காலில் இருந்து மேல் நோக்கி தண்ணீர் ஊற்றுங்கள்.

அனைவரும் தினமும் தலைக்குத்தான் குளிக்க வேண்டும். தலைமுடிக்கு கோழி முட்டையின் வெள்ளை கரு அல்லது தயிர் போன்றவற்றை தேய்த்து சிறிது நேரம் ஊற வைத்து அதற்கு பிறகு குளிக்கலாம். பெண்கள் தினமும் தலைக்கு குளித்தால் முடியை காய வைப்பதற்கும், தலை சீவுவதற்கும் நேரமாகும். இது போன்ற காரணங்களால் பெண்கள் பொதுவாகவே தினமும் தலைக்கு குளிப்பதில்லை. பெண்கள் தலைக்கு குளிக்காத நாட்களில், பருத்தி துணியை நீரில் நனைத்து, பிழிந்து, அதை தலையில் போட்டு குளிக்கலாம். இவ்வாறு குளிப்பதனால், குளிக்கும்போது தலைக்கு போகும் சூட்டினை ஈரத்துணி உறிஞ்சுவிடும். இவ்வாறு செய்வதால் தலையில் உள்ள சூடு தணியும் மற்றும் சூட்டினால் உண்டாகும் பொடுகு தொல்லை நீங்கும்.

தினமும் காலையில் ஏழு மணிக்குள் குளித்தால் நல்லது. பித்தம் அதிகமாக உள்ளவர்கள் அதிகாலையில் நான்கரை மணிக்கு ஓடும் தண்ணீரில் குளித்தால் பித்தம் தணியும்.

உடற்பயிற்சியை முடித்தவுடன் தண்ணீர் குடிக்கவோ குளிக்கவோ கூடாது. சுமார் 20 நிமிடம் கழித்துதான் தண்ணீர் குடிக்கவோ அல்லது குளிக்கவோ வேண்டும். குளிப்பதற்கு முன்னர் தலையில் எண்ணெய் தேய்த்து குளித்தால் உடல் குளிர்ச்சியடையும். சளி பிடித்திருந்தால் அது சரியாகும்வரை எண்ணெய் தேய்த்து குளிப்பதை தவிர்க்கலாம். தினமும் எண்ணெய் தேய்த்து குளிக்காவிட்டாலும் வாரம் ஒரு முறையாவது எண்ணெய் தேய்த்து குளிக்கலாம்.

தலைக்கு தேய்க்க தேங்காய் எண்ணெய் நல்லது. நல்லெண்ணெய் தேய்த்து குளித்தால் உடல் அதிக குளிர்ச்சியடையும். இது எல்லாருக்கும் ஒத்துக்கொள்ளாது. எண்ணெய் தேய்த்து குளிப்பது ஒத்துக்கொள்ளவில்லையெனில் எண்ணெய் தேய்க்காமல் குளியுங்கள். வாதம் அல்லது கபம் பிரச்சனை உள்ளவர்கள் மிதமான வெந்நீரில்தான் குளிக்க வேண்டும்.

குளிக்கும்போது கைகள், கால்கள், விரல்கள், பாதங்கள் மற்றும் நகங்களை நன்றாக தேய்த்து குளிக்க வேண்டும். ஒரு கால் பாதத்தினால் இன்னொரு காலை தேய்த்து கழுவ கூடாது. காலில் அழுக்கு காரணமாக பித்த வெடிப்பு இருப்பது சகஜம். இந்த வெடிப்பு கூர்மையானதாக இருக்கும். இது மற்றொரு காலில் உள்ள தோலை சேதப்படுத்தும். எனவே, நன்றாக குனிந்து கைகளை வைத்துதான் கால்களை கழுவ வேண்டும்.

பெண்கள் அவசியம் மஞ்சள் தேய்த்து குளிக்க வேண்டும். மஞ்சள் ஒரு கிருமி நாசினியாகும். நோய்களில் இருந்து மஞ்சள் பெண்களை பாதுகாக்கிறது. மஞ்சள் தலையில் மட்டும் படாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள். பாசி பயிறு மாவினை வைத்து உடலில் தேய்த்து குளிக்கலாம். இது அனைவருக்கும் உகந்தது. கூடுமானவரை செயற்கையாக தயாரிக்கப்பட்டு கடைகளில் விற்கப்படும் சவர்க்காரத்தினை (soap) தவிருங்கள். இதில் உள்ள கொழுப்புகள் தோலில் உள்ள சிறு துவாரங்களை அடைப்பதற்கு வாய்ப்புள்ளது. அது மட்டுமின்றி, செயற்கை சவர்க்காரத்தினை பயன்படுத்தி குளித்தால் அந்த நீரை காய்கறிகள் அல்லது பழங்கள் தரும் செடிகளுக்கு பயன்படுத்த முடியாது. தலைக்கு செயற்கை முடிக்கழுவிக்கு (shampoo) பதில் இயற்கை பொருளான சீயக்காய் பயன்படுத்துங்கள்.

காலையில் குளித்தாலும் வெளியில் வேலைக்கு சென்று சாயங்காலம் வீடு திரும்பும்போது, வெளியில் உள்ள அழுக்கு, தூசி மற்றும் புகை போன்ற மாசுக்களால் உடலில் அழுக்குகள் மற்றும் கிருமிகள் சேரும். அது மட்டுமின்றி, காற்றில் உள்ள ஈரப்பதம், தலைக்கு எண்ணெய் தேய்ப்பதால் மற்றும் உடலில் உள்ள எண்ணெய் பசையினால் முகத்தில் பிசுபிசுப்பு தன்மை வருவது இயற்கை. இதனை தவிர்ப்பதற்காக சாயங்காலம் அல்லது இரவிலும் உணவு உண்பதற்கு முன்பு குளிக்கலாம். சாயங்கால குளியல் நல்ல தூக்கத்தை தரும்.


முனைவர். ந. அரவிந்த்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “காலை குளியல்”

அதிகம் படித்தது