மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

குடலை கழுவி உடலை வளர்

முனைவர். ந. அரவிந்த்

Apr 30, 2022

siragu eye wash1

நம் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளையும் ஒவ்வொரு இயற்கையான முறையில் சுத்தப்படுத்தலாம். உதாரணமாக, கண்களை கழுவுவதன் மூலம் கண்களையும், கல்லீரலையும் பாதுகாக்கலாம். அதுபோல் முறையாக மலம் மற்றும் சிறுநீர் கழிப்பதன் மூலம் வயிறு மற்றும் சிறுநீரகங்களை பாதுகாக்கலாம்.

ஒவ்வொரு நாளும் குளிப்பதற்கு முன்னர் கண்களை கழுவுதல் நல்லது. இன்றைய கால கட்டத்தில், தினமும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அலைபேசி மற்றும் கணினி பார்க்கின்றனர். இது வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. இது அறிவியலின் வளர்ச்சி. ஆரோக்கியத்தின் வீழ்ச்சி.

இவ்வாறு தொடர்ந்து பார்ப்பதனால் உடலும், கண்களும் அதிக சூடு அடையும். மின்னணு சாதனங்களை தேவைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். நம் கட்டுப்பாட்டில் அதனை வைத்திருக்கும் வரை உடலுக்கு பிரச்சனையில்லை. அதன் கட்டுப்பாட்டில் நாம் செல்லும்போது பிரச்சனை ஆரம்பிக்கிறது,

இவற்றில் இருந்து உடலை பாதுகாக்க நல்ல மற்றும் குளிர்ந்த நீரில் இரு கண்களையும் ஒவ்வொன்றாக கழுவ வேண்டும். இதற்கு ஏதாவது ஒரு குவளையை நீரினை வைப்பதற்காக பயன்படுத்தலாம். அல்லது கண் குவளை (eye cup)என்ற பெயரில் கடையில் கிடைக்கும் பொருளைக்கூட வாங்கி பயன்படுத்தலாம். கண்ணை திறந்தபடி இந்த நீரினில் வைத்து சுமார் 50 முறை திறந்து மூடவேண்டும். முதலில் சற்று கண் எரிச்சல் இருக்கும். அதற்கு பிறகு சரியாகிவிடும்.

இதே முறையில் இரு கண்களையும் கழுவ வேண்டும். ஒரு நாளைக்கு எத்தனை முறை கழுவ வேண்டும் என்று எந்த ஒரு நிபந்தனையும் கிடையாது. எத்தனை முறை வேண்டுமானாலும் செய்யலாம்.

இவ்வாறு கண்களை கழுவுவதால் கண்கள் குளிர்ச்சி அடையும். நரம்புகள் பலப்படும். திரு. ஹீலர் பாஸ்கர் அவர்கள், கண்களை கழுவுவதால் கல்லீரல் குளிர்ச்சியடையும் என்று கூறியுள்ளார். இதனால் இரத்தம் குளிர்ச்சியடையும். உடலும் உள்ளமும் ஆரோக்கியமாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மலம் கழிப்பதற்கு நம் நாட்டின் கண்டுபிடிப்பான இந்திய வகை கோப்பையை பயன்படுத்த வேண்டும். இவ்வாறு பயன்படுத்தும்போது நம் தொடைகள் வயிற்றிற்கு அழுத்தம் கொடுக்கின்றன. எனவே, நம்முடைய உடலில் உள்ள கழிவுகள் முழுவதுமாக வெளியேறுகின்றன. உடலும் ஆரோக்கியமாக இருக்கும். வயதானவர்கள் மற்றும் முழங்கால் வலி உள்ளவர்கள் வேண்டுமானால் மேற்கத்திய வகை கோப்பையை பயன்படுத்தட்டும். அதில் தவறில்லை.

காலையிலோ அல்லது காலை மாலை இரு வேளையிலோ மலம் கழிக்கும் உணர்வு எழும்போது மலம் கழிக்க வேண்டும். இதனை தள்ளிப்போடக் கூடாது. ஒரு சில மாணவர்கள் காலையில் பள்ளி செல்வதற்கு முன்னர் மலம் கழிக்காமல் சாயங்கால வேளையில் பள்ளி சென்று திரும்பிய பின்னர் மலம் கழிக்கும் பழக்கம் வைத்துள்ளனர். இது தவறு. மலம் கழித்தலின் மற்றொரு பெயர் காலை கடன்களை கழித்தலாகும். இந்த பழக்கம் உங்கள் குழந்தைகளுக்கு இருந்தால் அதனை உடனே மாற்றுங்கள். முறையாக மலம் கழிக்கப் பழகுவதே சாலச் சிறந்த முறையாகும்.

மலம் கழிக்க சிரமம் இருந்தால் அதுவே மலச்சிக்கல் எனப்படும். காலையில் மலச்சிக்கல் இல்லாமலும் இரவில் மனச்சிக்கல் இல்லாமலும் இருக்கும் மனிதனே ஆரோக்கியமானவன் என்று கவி பேரரசு வைரமுத்து கூறியிருக்கிறார்.

மலச்சிக்கல் இருந்தால் அவை மற்ற நோய்களுக்கும் காரணமாகின்றன. மலச்சிக்கல் நரம்பு தளர்ச்சியை உண்டு பண்ணுகிறது.

சீரான உணவு பழக்கம் மலச்சிக்கலை தடுக்க உதவும். மலம் சரியாக வெளியேற நாம் உணவில் காய்கறிகள், கீரை மற்றும் பழங்களை அதிகம் உண்ண வேண்டும். பழங்களை சாறு பிழிந்து உண்பதைவிட அதை நன்கு கழுவி, கடித்து மென்று உண்பது நல்லது.  தேவையான அளவு தண்ணீர் குடித்து வந்தால் நமக்கு மலச்சிக்கல் வராது. மைதாவினால் செய்த பொருட்களான அடுமனை என்ற வெதுப்பகம் மூலம் தயாரிக்கப்படும் ரொட்டி வகைகள், பரோட்டா போன்றவை மலச்சிக்கலின் நண்பர்கள். இவற்றினை தவிருங்கள். மிகவும் சுலபமாக செரிமானம் ஆகக்கூடிய சத்துள்ள உணவுகளை பசியெடுக்கும் நேரத்தில் உண்ண வேண்டும். நாம் உண்ணும் நேரத்திலெல்லாம் மிதமாக உண்பது நல்லது. அதுபோல், நம்மால் இயலும் அளவிற்கு தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

திரிபலா சூரணம், விளக்கெண்ணெய் அல்லது அவுரி இலை பொடி இவற்றில் ஏதாவது ஒன்றினை மலமிளக்கியாக பயன்படுத்தலாம். மாதம் ஒருமுறை பேதி மருந்து சாப்பிட்டால் போதுமானது. இவ்வாறு பேதி மருந்து உட்கொள்வதால் குடல் சுத்தமடையும். பேதியானது நிற்காமல் பல முறை சென்றால் தயிர் சாதம் உண்டால் நின்று விடும்.  இதனையே நம் முன்னோர்கள் குடலை கழுவி உடலை வளர் என்று கூறியுள்ளனர். சிறுவர்கள் மற்றும் வயதானோர்களுக்கு குடலை கழுவ காய்ந்த திராட்சையை கொடுக்கலாம். ஒரு உள்ளங்கை அளவிற்கு விதைகள் உள்ள கருப்பு காய்ந்த திராட்சையை எடுத்து, அவற்றை நன்கு கழுவி இரவில் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். அவற்றை காலையில் கசக்கி அல்லது அரைத்து குடிக்க வேண்டும். இது உடலுக்கு பலத்தையும் தரும். சிறந்த மலமிளக்கியாகவும் செயல்படும்.


முனைவர். ந. அரவிந்த்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “குடலை கழுவி உடலை வளர்”

அதிகம் படித்தது