சாயங்கால வேளை சிற்றுணவு
முனைவர். ந. அரவிந்த்Feb 11, 2023
அலுவலகத்தில் இருந்து வேலை முடிந்து வீட்டிற்கு வந்தவுடன் ஏதாவது உண்பதை நாம் வழக்கமாக கொண்டுள்ளோம். மதிய உணவு நன்றாக செரிமானம் ஆன பின்னர் சாயங்கால வேளையில் ஏதாவது சிற்றுணவு உண்பதில் தவறில்லை. ஆனால், அது நல்ல தரமான மற்றும் ஆரோக்கியமான உணவாக இருக்க வேண்டும்.
தினமும் சாயங்கால வேளையில் சிற்றுணவிற்கு வேக வைத்த சிறு பயிறு, பட்டாணி கடலை, வேர் கடலை அல்லது கொண்டை கடலை இவற்றில் ஏதாவது ஒன்றை சுண்டலாக செய்து மாற்றி மாற்றி உண்ணலாம்.
சுண்டல் எப்படி செய்யலாம் என்பது நாம் அறிந்ததே. சாயங்கால வேளையில் சிற்றுணவு சமைக்க வேண்டுமானால், காலையிலேயே ஏதாவது ஒரு பயிறு வகையினை தண்ணீரில் கழுவி நல்ல தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். சமையல் பாத்திரத்தில் கடலையை உப்பு சேர்த்து வேக வைத்து தண்ணீரை வடிக்க வேண்டும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு, பெருங்காயம் தாளித்து, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி கடலையை கொட்டி கிளற வேண்டும். பின்பு துருவிய தேங்காயைச் சேர்த்து, கிளறி பறிமாறினால் சுண்டல் சுவையாக இருக்கும். வெள்ளை கொண்டை கடலை சுண்டலை விட கருப்பு கொண்டை கடலை மிகவும் நல்லது.
வடை, வாழைக்காய் பஜ்ஜி போன்ற எண்ணெய்யில் பொரித்த பலகாரங்களையும் உண்ணலாம். ஆனால், அளவோடு உண்ண வேண்டும். எண்ணெய், சுத்தமான மற்றும் மரச் செக்கில் ஆட்டப்பட்ட கடலை எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய்யாக இருந்தால் நல்லது.
இவற்றை சாப்பிட்டவுடன் நமக்கு சூடாக குடிக்க தோணும். அந்த வேளையில் சூடான சுக்கு மல்லி சுடுநீர் அருந்தலாம். அதில், இனிப்பு சுவைக்காக பனங் கருப்பட்டி, வெல்லம், அச்சு வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை இவற்றில் ஏதாவது ஒன்றை சேர்க்கலாம். வெல்லம் எனப்படுவது பதனிடப்படாத சர்க்கரை ஆகும். வெல்லத்தில் இரும்பு சத்து அதிகம் நிறைந்துள்ளது. முக்கியமாக வெல்லம் பெண்களுக்கு மிகவும் உகந்தது. தேவைப்பட்டால் நாட்டு பசு மாட்டின் பால் சேர்த்துக்கொள்ளலாம்.
தமிழ் நாட்டின் மாநில மரம் பனை மரம். இதன் ஒவ்வொரு பாகமும் பயன் தரக்கூடியது. பனை மரம் நமக்கு நுங்கு, பனம் பழம், பதநீர், பனங் குருத்து, பனங் கருப்பட்டி, பனங் கிழங்கு மற்றும் பனங் கற்கண்டு போன்ற பல மருத்துவ குணம் நிறைந்த ஆரோக்கியமான உணவுகளை தருகிறது. பனங்கருப்பட்டி கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், விருதுநகர் போன்ற மாவட்டங்களில் அதிகளவில் தயாரிக்கப்படுகிறது. உடன்குடி, வேம்பார் பகுதிகளில் தயாரிக்கப்படும் கருப்பட்டி பனங்கற்கண்டு மிகவும் பிரபலமானது. ஆனால், இக்காலத்தில் பலர் சர்க்கரை பாகு, சர்க்கரை மற்றும் இரசாயனப் பொருட்கள் கலந்து போலியான கருப்பட்டி, பனங்கற்கண்டு தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். இதனை தடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கருப்பட்டி வாங்கும்போது தெரிந்தவர்கள் மூலமாக சுத்தமான முறையில் கலப்படம் இல்லாமல் தயாரிக்கப்பட்ட கருப்பட்டியை வாங்கி பயன்படுத்துங்கள். வெள்ளை சர்க்கரை வேண்டவே வேண்டாம். அதுபோல், மைதா மாவில் தயாரிக்கப்படும் பலகாரங்களும் வேண்டாம்.
ஓமான் தேசத்தில் இனிப்பு சேர்க்காத காபியைதான் குடிப்பார்கள். ஆனால், இனிப்பு சுவைக்காக அதனுடன் சேர்த்து பேரீச்சம்பழத்தை சாப்பிடுவார்கள்.
முனைவர். ந. அரவிந்த்
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “சாயங்கால வேளை சிற்றுணவு”