மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் (2021-22) சமூகநீதியின் தாக்கம்

பேராசிரியர் பு.அன்பழகன்

Aug 28, 2021

siragu budjet1

இந்திய சமுதாயத்தில், மருத்துவம், கல்வி, வேலைவாய்ப்பு, போன்றவைகளைப் பெறுவதில் ஏற்றத் தாழ்வுகள் நிலவுகிறது. இந்த ஏற்றத்தாழ்வுகள் சாதி, மத, மொழி, பாலின, வட்டார, வருமான அளவில் காணப்படுகிறது. இவற்றை சரிசெய்ய அனைவருக்குமான சமமான நீதியினை அளிக்கவேண்டிய கடமையும், கட்டாயமும் உள்ளது. இதைத்தான் சமூகநீதி என்கிறோம். இதன் பொருள் அனைவருக்குமான சமமான வாய்ப்புகளை உருவாக்கித் தருவதாகும். இந்திய அரசியலமைப்பு அனைவருக்குமான சமவாய்ப்பினை உருவாக்கித்தர வேண்டுமென்கிறது. இந்தியாவின் 11வது மற்றும் 12வது ஐந்தாண்டு திட்ட காலங்களில் உள்ளடக்கிய வளர்ச்சியினை குறிக்கோளாகக் கொண்டே திட்டங்கள் உருவாக்கப்பட்டன. இது சமூகபொருளாதார வளர்ச்சி பாதையில் பயணிக்காதவர்களான சமுதாயத்தில் விளிம்பு நிலையில் உள்ளவர்களை இனம்கண்டு இப்பாதையில் சேர்ப்பதாகும். சமூகநீதியினை நிலைநாட்ட கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு அவசியமாகிறது. சாதி, மத, பாலின, வட்டார, வருமான அடிப்படையில் இடஒதுக்கீடு இந்தியாவில் பல மாநிலிங்களிலும் பின்பற்றப்படுகிறது. இடஒதுக்கீட்டு முறையினை நடைமுறைப்படுத்தியதில் முன்னோடியாக தமிழ்நாடு திகழ்கிறது.

தமிழ்நாடும் இடஒதுக்கீடும்

இந்திய அளவில் சமூகநீதியின் அடையாளமாகத் தமிழ்நாடு விளங்குகிறது. இந்தியவிலேயே தமிழ்நாட்டில்தான் (அப்போது சென்னை மாகாணம்) முதன் முதலாக 16 செப்டம்பர் 1921ஆம் ஆண்டு இடஒதுக்கீட்டை அன்றைய நீதிக் கட்சி ஆட்சி கொண்டுவந்தது. 1928ல் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கொண்டுவரப்பட்டது. இந்த இடஒதுக்கீட்டை நீர்த்துப்போக பல்வேறு சட்டப்போரட்டங்கள் நடத்தி ஆதிக்க வகுப்பினர் தடையினைப் பெற்றனர்.இதற்கு எதிராக தமிழகமே கொந்தளித்தபோது இந்திய அரசு தலைவணங்கி இந்தியாவில் முதல் சட்ட சீர்திருத்தம் 1950இல் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டு இடஒதுகீட்டை சட்டப்படி சமூகத்தில் சமூக, கல்வி நிலையில் பின்தங்கியவர்களுக்கு உறுதி செய்தது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் இதன்வழியாக பயன் சென்றடைந்தது. அன்மையில் (ஆகஸ்ட் 2021இல்) 127 சட்ட சீர்த்திருத்தம் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை தீர்மானிக்கும் இடஒதுக்கீட்டை நடைமுறைபடுத்தும் அதிகாரம் அந்தந்த மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

1950களில் காங்கிரசு ஆட்சியில் தமிழ்நாட்டில் 42 விழுக்காடு (பிற்பட்ட வகுப்பினருக்கு 25 விழுக்காடு, ஆதி திராவிடர்களுக்கு 17விழுக்காடு) என்று இருந்ததை கலைஞர் கருணாநிதி 1971இல் 50 விழுக்காடாக அதிகரித்தார் (பிற்படுத்தப்பட்டோருக்கு 31 விழுக்காடு, ஆதி திராவிடர்களுக்கு 18 விழுக்காடு, பழங்குடியினருக்கு 1 விழுக்காடு). 1981இல் எம்.ஜி.ஆர் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை 31 விழுக்காட்டிலிருந்து 50 விழுக்காடாக அதிகரித்தார். இதனால் மொத்த இடஒதுக்கீட்டின் அளவு 69 விழுக்காடாக உயர்ந்தது. 1989இல் கலைஞர் கருணாநிதி பிற்படுத்தப்பட்ட வகுப்பினை பிரித்து மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 விழுக்காடும் பிற்படுத்தப்பட்டோருக்கு 30 விழுக்காடும் என வழங்கினார். மீண்டும் 2006இல் முஸ்லீம்களுக்குப் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடாக 3.5 விழுக்காடும், 2009இல் ஆதி திராவிடர் இடஒதுக்கீட்டில் 3 விழுக்காடு உள் இடஒதுக்கீடாக அருந்ததியினருக்கும் ஒதுக்கினார். 2021இல் திரு.எடப்பாடி பழனிச்சாமி அரசால் கொண்டுவரப்பட்ட மிகப்பிற்படுத்தப்பட்டோருக்கான உள்ஒதுக்கீட்டை திரு மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தபின்பு வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடும்,குற்றப்பரம்பரையினருக்கு 7விழுக்காடும், இதர மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 2.5விழுக்காடும் பிரித்து வழங்கி நடைமுறைப்படுத்தியுள்ளார். இதுமட்டுமல்லாம் பெண்கள், கிராமப்புற மாணவர்கள் பயன்பெரும் வகையிலும் இடஒதுக்கீடு தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ளது.

நீதிக் கட்சியின் முக்கிய நோக்கம்

அன்றைய சென்னை மாகாணத்தில் முற்பட்ட சாதியினர், கல்வி, வேலைவாய்ப்புகளில் அதிக அளவில் பங்குபெற்றிருந்தனர். இதனால் மற்ற வகுப்பினர் பெருமளவிற்கு பாதிக்கப்பட்டனர். இதனை அடிப்படையாகக் கொண்டு 20 நவம்பர் 1916இல் டாக்டர் சி. நடேச முதலியார், டி.எம்.நாயர், பி.தியாகராய செட்டியார் ஆகியோரால் நீதிக் கட்சி துவங்கப்பட்டது. இதன் முக்கிய குறிக்கோள்கள், சமூக நீதி     மற்றும் பாலின சமத்துவம் அடைவதாகும். இதற்காக கல்வி, வேலைவாய்ப்பில் அனைத்து வகுப்பினருக்கும் சம வாய்பினை பெற உருவாக்கித் தந்தது. நீதிக்கட்சியினை அடிப்படையாகக்கொண்டு உருவானதே திராவிடர்,கழகம். பின்னாளில் திராவிட முன்னேற்றக்கழகம், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என இது உருவெடுத்தது. திராவிடக்கழகங்கள் சமூகநீதியினை தலையாய சித்தாந்தமாகக் கொண்டுள்ளன. இவற்றை அரசுதிட்டங்கள் வழியாக நடைமுறைப்படுத்தி கொண்டுவருகின்றன. இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டு தற்போது 100 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு சட்டமன்றம் 100 ஆண்டுகள் வரலாற்றுப் பின்னணியைக் கொண்டது. இதில் தற்போதைய நிதிஅமைச்சர் திரு. பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அரசியல் தளத்தில் நான்காம் தலைமுறையினை சார்ந்தவர். நீதிக் கட்சியின் முக்கியத் தலைவரும் நீதிக் கட்சியின் ஆட்சிகாலத்தில் முதலமைச்சராக இருந்த திரு. பி.டி. ராஜனின்பேரன் ஆவார். அவரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள 2021-22ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை அடுத்த ஆறு மாதங்களுக்கு மட்டுமே பொருந்தக்கூடியது. கோவிட் பெருந்தொற்றாலும், மாநிலத்தின் நிதிநிலைமை சாதகமான இல்லாத நிலையில் இந்;த நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சமூக பாதுகாப்பு – ஓய்வூதியம்.

முதியோர்களின் நலன்காக்க தமிழ்நாடு தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்களைத் தீட்டி வருகிறது. அண்மையில் நோபல் பரிசு பெற்ற எஸ்தர் டஃப்ளோ முதியோர்களை பாதுகாப்பது அரசின் முக்கிய கடமையாகும் என்று குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டில் 31 லட்சம் பேர் முதியோர் உதவித் தொகை பெறுகின்றனர். இந்தியாவிலேயே அதிக முதியவர்கள் வாழும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு இரண்டாம் (மொத்த மக்கள் தொகையில் 13.6%) இடத்தில் உள்ளது (முதல் இடம் கேரளா 16.5%). இதில் 10 விழுக்காடு முதியவர்கள் மிகவும் பாதிப்படையக்கூடியவர்கள். எனவே அவாகளின் ஓய்வூதியம் தகுதிவாய்ந்த அனைவருக்கும் கிடைக்க உறுதியேற்று இதற்காக ரூ.4807 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

பொது விநியோகத் திட்டம்

இந்திய மாநிலங்களிலேயே பொதுவிநியோகம் சிறப்பாக செயல்படுத்தப்படும் மாநிலம் தமிழ்நாடாகும். இதன் முக்கிய நோக்கம் அனைவருக்குமான உணவு பாதுகாப்பாகும். இதனால் தமிழ்நாட்டில் வறுமைகோட்டிற்குக்கீழ் உள்ளவர்கள் அளவு பெருமளவிற்கு குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது (2011-12ன் படி 11.28ம% மக்கள் வறுமை கோட்டிற்குக்கீழ் உள்ளனர்). தமிழ்நாட்டில் 2.1 கோடி குடும்ப அட்டைகள் உள்ளன. இவர்களுக்கு கொரோனா காலத்தில் அனைத்து அட்டைதாரர்களுக்கும் ரூ.4000, அரிசி, மளிகைப்பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டது. பொதுவிநியோக திட்டத்தை மேலும் வலுபடுத்த ரூ.8437 கோடி நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஊரக வளர்ச்சி

இந்திய அளவில் கிராம-நகர வேறுபாடுகள் அதிக அளவில் இருந்தாலும் இது தமிழ்நாட்டில் குறைவாகவே உள்ளது. கிராமப்புறங்களில் ஏழைமக்கள் தரமான வீடுகளில் வசிக்க கான்கீரிட் வீடுகள் கட்டித்தரும் திட்டத்தினை தமிழ்நாடு சிறப்பாக செயல்படுத்தியுள்ளது. தற்போது 8.03 லட்சம் குடும்பங்களுக்கு கான்கீரிட் வீடுகள் இல்லை. எனவே அடுத்த ஐந்து ஆண்டுகளில் அனைவருக்கும் கான்கீரிட் வீடுகள் கட்டித்தர உள்ளது. இதன் முதல் கட்டமாக 2021-22இல் 2.89 லட்சம் வீடுகள் கட்ட தீர்மானிக்கப்பட்டு அதற்கு ரூ.8017 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்துடன் கிராமங்களில் சுத்தமான குடிநீர், கழிப்பறை வசதிகள் போன்றவைகளை ஏற்படுத்தி தர திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டம் இந்தியாவிலேயே சிறப்பாக நடைமுறைப்படுத்தும் மாநிலம் தமிழ்நாடாகும்.

இந்த திட்டத்தினால் பட்டியல் இன, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களும், பெண்களும் பெருமளவிற்கு பயனடைகின்றனர். ஒன்றிய அரசு நிதி பங்கேற்புடன் இந்த திட்டம்நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை ஆண்டுக்கு 100 நாளிலிருந்து 150 நாட்களாக வேலைவாய்ப்பு உத்திரவாதம் தந்து உயர்த்தவும் ரூ.300 நாளொன்றுக்கு கூலி வழங்கவும் ஒன்றிய அரசினை வலியுறுத்தப்படும் என்கிறது இந்த நிதிநிலை அறிக்கை. இதுபோன்றே இந்தியாவிலேயே சுய உதவிக்குழு சிறப்பாக நடைமுறைபடுத்தப்படும் மாநிலம் தமிழ்நாடு ஆகும். கிராமப்புற பெண்கள் இதனால் பெருமளவிற்கு பயனடைகின்றனர். எனவே இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கை சுய உதவிக்குழுக்கள் பயனடையும் வகையில் கடன் உதவியினை அதிகரிக்கப்பட உள்ளது என குறிப்பிட்டுள்ளது.

நகர்புற உறுதி வேலைவாய்ப்பு

கோவிட் பெருந்தொற்றினால் நகர்புற ஏழைகள் விளிம்பு நிலையில் உள்ளவர்கள் வேலை இழந்து வாழ்வாதாரம் இழந்து பெரும் துயருக்கு ஆளானார்கள். இவற்றைப் போக்க நகர்புற வேலைவாயப்பு உறுதி திட்டத்தினை நடைமுறைப்படுத்தவேண்டும் என பல ஆய்வுகள் வலியுறுத்துகின்றன. தமிழ்நாடு அரசு கோவிட்-19 பெருந்தொற்று தொடர்பான பொருளாதாதார நிலையினை மதிப்பீடு செய்ய திரு. சி.ரங்கராஜன் அவர்களின் தலைமையிலான குழு அமைக்கப்பட்டது, இக்குழுவின் பரிந்துரையின்படி நகர்புற வேலைவாய்ப்பு உறுதி திட்டத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கியுள்ளது. இதனால் நகர்புறங்களின் கட்டமைப்புகள் வலுப்பெறும், வேலைவாய்ப்பும் உருவாகும். தமிழ்நாட்டில் 1971ல் தமிழ்நாடு குடிசைமாற்று வாரியம் துவக்கப்பட்டது. தமிழ்நாட்டின் நகர்புற ஏழைகளுக்கு 9.53 லட்சம் வீடுகள் தேவைப்படுகிறது. இதற்காக ரூ3954 கோடி நகர்புறங்களில் குடிசைமாற்றுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

பெண்கள் முன்னேற்றம்

பெண்களின் முன்னேற்றத்திற்கு கலைஞர் கருணாநிதியின் ஆட்சியில் 30 விழுக்காடு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதனால் பெண்கள் பொருளாதார ரீதியாக வலுபெற வாய்ப்புகள் உண்டாக்கப்பட்டது. இதை தவிர டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டம், மூவலூர் இராமமிர்தம் அம்மையார் திருமண உதவி திட்டங்கள் பெண்களின் வளர்சிக்கு வழிவகுத்துள்ளன. ஆண்-பெண் சமத்துவமின்மையினைப் போக்க பெண்கள் பொருளாதார ஈட்டலை ஊக்குவிக்க, நகரப் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய தமிழ்நாடு அரசு அனுமதித்துள்ளது. இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் மூன்று நாடகளிளே 7.8 மில்லியன் மகளிர் இலவச பேருந்து பயணம் செய்து பயன் அடைந்துள்ளனர்.

கல்வி

Siragu-India-Education3

சமூக முன்னேற்றத்தின் அடிப்படை கூறுகளில் ஒன்று கல்வியாகும். இது மனிதவள மேம்பாட்டுக் குறியீட்டை வடிவமைக்க பயன்படுத்தும் மூன்று கூறுகளில் ஒன்றாகும். தமிழ்நாட்டில் தொடக்க கல்வியில் மொத்த சேர்க்கை விகிதம் (GER) – 99 விழுக்காடாக உள்ளது. இதுபோல் தொடக்க கல்வி இடைநிற்றல் 0.75 விழுக்காடு இடைவெளி உள்ளது. எனவே இதனை சரிசெய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. தமிழ்நாடு, இந்திய அளவில் பள்ளிக்கல்வியில் தனித்துவமானது. இதனடிப்படையில்தான் பள்ளிக் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அதனை மேம்படுத்தி உயர்த்திட ரூ.32599 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கோவிட் பெருந்தொற்றினால் எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு அரசு தொடக்க பள்ளிகளில்அதிக அளவிற்கு மாணவ, மாணவியர் சேர்க்கை உயர வாய்ப்புள்ளதால் கூடுதலாக வகுப்பறைகள் (ஸ்மார்ட் வகுப்புகள் உட்பட), 3000 ஆசிரியர்கள் நியமிப்பது, ஆசிரியர்களின் தொழில்நுட்ப திறன் மேம்பாடு. பள்ளிகளின் தரம் உயர்த்துதல், மாணவர்களின் கணினி அறிவினை பெருக்குதல், உள்கட்டமைப்புகளை வலுப்படுத்துதல், புதிய பள்ளிகளைத் துவக்குதல் போன்றவைகளுக்கு அதிக கவனம் செலுத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. “எண்ணும் எழுத்தும் இயக்கம்” என்ற திட்டத்திற்கு ரூ. 66.7 கோடி மதிப்பில் கணிதஅறிவினை வளர்க்கும் வகையில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. மாதிரி பள்ளிகள் அமைக்கப்பட்டு கற்றல் திறன் மேம்படுத்தப்படுகிறது.

தமிழ்நாடு உயர்கல்வியில் 51.4 விழுக்காடு (இந்திய அளவில் 27 விழுக்காடு) பயில்பவர்கள் உள்ளனர். தற்போது 10 புதிய கல்லூரிகளை உருவாக்கவும், இருக்கின்ற கல்லூரிகளில் கட்டமைப்பினை மேம்படுத்தவும் உள்ளது. இதற்காக ரூ.5359 கோடி நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கியுள்ளது. மேலும் பின்தங்கிய மாவட்டங்களான விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களை மேம்படுத்த இங்குள்ள கல்லூரிகளை அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

மக்களைத் தேடி மருத்துவம்

siragu budjet2

தமிழ்நாட்டில் பொது சுகாதாரத்துறை சிறப்பாக இயங்கி வருகிறது. மருத்துவம் பார்ப்பவர்களில் சுமார் பாதிஅளவு பொதுத்துறை சுகாதார மையம் அல்லது மருத்துவமனைகளின் வழியாக பயனடைகின்றனர். தமிழ்நாட்டில் 20 லட்சம் பேர் அரசு மருத்துவமனைகளில் நீரழிவு, ரத்த அழுத்தம் காரணமாக மருந்துகளை வாங்கி சாப்பிடுகின்றனர். கொரோனா காலத்தில் இறந்தவர்களில் 60 விழுக்காட்டினர் நீரழிவு, ரத்த அழுத்தம், உடல் பருமன் போன்ற இணை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள். கொரோனா காலத்தில் இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவம் பெறவும் மருந்துகள் வாங்கவும் மிகவும் துயர் உற்றனர். எனவே இவர்களை காக்கும் பொருட்டு அவர்களின் இருப்பிடங்களுக்கு சென்றடையும் “மக்களைத் தேடி மருத்துவம்” திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.257.16 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தாய்-சேய் நலன் சிறப்பாக உள்ளதால் இவர்களின் இறப்பு (2018ன்படி தாய் 1 இலட்சத்திற்கு 57 பேரும், சிசு இறப்பு வீதம் 1000க்கு 15) வீதத்தை குறைக்க சிறப்பு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும். சுகாதார சீரமைப்பு திட்டம், பேறுசார், குழந்தைகள் நல திட்டங்களில் உள்ள ஏற்றத்தாழ்வினைப் போக்க நடவடிக்கை எடுக்க உள்ளது.

தொழிலாளர் நலன்

தமிழ் நாட்டில் 27.37 லட்சம் அமைப்புசாரா தொழிலாளர்கள் 17 நல வாரியங்களில் உறுப்பினர்களாக உள்ளனர். இதில் 12.35 லட்சத்தினர் கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா காலத்தில் பெருமளவிற்கு இவர்கள் பாதிக்கப்பட்டனர். அமைப்புசாரா தொழிலாளர்களின் நலனைக் காக்க இவ்வாரியத்திற்கு மானியங்கள் வழங்க ரூ.215 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இளைஞர்களின் திறன் மேம்பட பயிற்சிகள் மாவட்டம் தோறும் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சமூக நலம்

மகளிர் திருமண நிதியுதவி, மகளிர் கல்வி மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றிற்கு ரூ.762 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 1071 கைவிடப்பட்ட திருநங்கைகளுக்கு 1.05 கோடி ஒதுக்கப்பட்டு ஓய்வூதியம் வழங்கப்பட உள்ளது. கோவிட் பெருந்தொற்றினால் பெற்றேர் இருவரையும் இழந்த ஒவ்வெரு குழந்தைகளுக்கும் ரூ.5 லட்சம், பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.3 லட்சம் என வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் வழியாக 5963 குழந்தைகள் பயன் பெற உள்ளனர். இதுபோன்றே சத்துணவு மையங்களின் தரம் உயர்தப்படும்.

ஆதி திராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் நலன்

தமிழ்நாட்டில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 20 விழுக்காடு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி மக்கள் உள்ளனர். இவர்கள் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கியுள்ளனர். உள்ளடக்கிய வளர்சியினை உறுதிசெய்ய ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலனை மேம்படுத்த சிறப்பு கூறுகள் திட்டம் உருவாக்கப்பட உள்ளது. இதற்காக ரூ.14696 கோடியும், பழங்குடியினர் துணைத் திட்டத்திற்கு ரூ.1306 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வெளிநாடு சென்று பயிலும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை அதிகரிக்கப்படுகிறது. முனைவர் பட்டம் பயிலும் மாணவர்களுக்கு மாதம்தோறும் ரூ.1 லட்சம் வழங்கப்படும். ஆதி திராவிடர் விடுதிகள் தரம் உயர்தப்படும், ஆதி திராவிடர் தொழில் முனைவோர்களாக்க திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்ற அறிவிப்பும் நிதிநிலை அறிக்கையில் காணப்படுகிறது.

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டடோர் நலனை மேம்படுத்த மாணவர்கள் விடுதிகளின் தரம் உயர்த்தப்படும். 20 விழுக்காடு மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு உள்ள இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. முதுநிலை, இளநிலை மருத்துவ படிப்பிற்கு ஒன்றிய அரசின் அகில இந்திய தொகுப்பில் இதரபிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு ஒதுக்கீட்டிற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. 127வது சட்டத்திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு இதரபிற்படுத்தப்பட்டோர் பயனடையும் வகையில் சட்ட திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தும் தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளின் பலனாகும். சிறுபான்மையினர் நடத்தும் பள்ளி, கல்லூரிகளுக்கு நிதி உதவி. கிறிஸ்த்தவ, முஸ்லிம் பெண்களுக்கு நிதி உதவி, மசூதி, தேவாலயங்களைச் சீர்செய்ய நிதி ஒதுக்கீடு செய்யபடபட்டுள்ளது.

மற்றவைகள்

மாற்றுத் திறனாளிகள் தங்ளின் உதவியாளர்களுடன் அரசு பேருந்தில் இலவசமாக பயணிக்க அனுமதி. இவர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சியும் அளிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. பெண் அரசு ஊழியர்களுக்கு பேறு கால விடுப்பு 9 மாதங்களிலிருந்து 1 ஆண்டாக உயர்தப்படுகிறது. பணியிலிருக்கும்போது உயிரிழக்கும் அரசு பணியாளரின் குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படுகிறது. குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கப்படும், இதனால் ஏழை எளிய மக்கள் பயனடைவார்கள். மகளிர் சுய உதவிக்குழுக்காக கடன் வழங்கப்படுகிறது.

ஒட்டுமொத்தத்தில் சமச்சீரான வளர்ச்சியினை உறுதிசெய்யும் நோக்குடன் இந்த நிதிநிலை அறிக்கை உள்ளது. சமூகப் பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம், பெண்கள் முன்னேற்றம், போன்றவைகளை முன்னிறுத்தியுள்ள ஒரு முற்போக்கான நிதிநிலை அறிக்கையாகும். தமிழ்நாட்டின் நிதிநிலை அறிக்கை, சமூக முன்னேற்றம் ஒன்றே பொருளாதார முன்னேற்றத்தின் அடிப்படை என்பதை நிலைநிறுத்தும் என்ற சித்தாந்தத்தை அடிப்படையாக கொண்டது என்பதை உறுதி செய்துள்ளது. நாட்டில் உள்ள மொத்த மக்களில் பெருமளவிற்கு விளிம்பு நிலையில் வாழகின்றனர் இவர்கள் சமூக அளவில் பின்தங்கிய வகுப்பினராகும். இவர்களுக்கான வாய்புகள் அனைத்து தளங்களிலும் வழங்கப்படவேண்டும். தமிழ்நாடு இதற்கான முயற்சிகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. இந்த ஆண்டு தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள நிதிநிலை 2021-22ஆம் ஆண்டு அறிக்கையில் காணமுடிகிறது.

 


பேராசிரியர் பு.அன்பழகன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் (2021-22) சமூகநீதியின் தாக்கம்”

அதிகம் படித்தது