மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழ்நாட்டின் அரசியல் தளத்தில் சமூக-பெருளாதார மேம்பாடு

பேராசிரியர் பு.அன்பழகன்

Jun 26, 2021

 Financial growth chart

சமூக சீர்திருத்தம் பொருளாதார வளர்ச்சியின் அடிப்படையாகும். இந்திய அளவில் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கேரளா போன்ற மாநிலங்கள் சமூக-பொருளாதார தளங்களில் முதன்மையான மாநிலங்களாக உள்ளன. இதற்குக் காரணம் இம்மண்ணில் சமூக சீர்திருத்தக் கருத்துக்களை விதைத்த தந்தை பெரியார், மகாத்மா ஜோதிராவ் புலே, ஸ்ரீ நாராயண குரு காரணமானவர்கள். இம்மூன்று மாநிலங்களிலேயே தமிழ்நாடு சமூக பொருளாதார தளங்களில் உயர்ந்து நிற்கின்ற மாநிலங்களில் முதன்மையாது ஆகும். சமுதாயத்தில் பெரும்பான்மையான மக்கள் விளிம்பு நிலையிலும், சமூக வேறுபாடுடனும், அடிமை நிலையிலும் வாழ்ந்த காலகட்டங்களில் இரமலிங்க அடிகளார் தொடங்கி, பெரியார், அண்ணா, கருணாநிதி போன்ற சமூக சீர்திருத்த அறிஞர்களால் தமிழகத்தில் நிலவிவந்த சமூக நிலையிலான ஏற்றத் தாழ்வினை போக்கும் வகையில் பல்வேறு போராட்டங்கள், கருத்துகள், செயல்பாடுகள் வழியாக தமிழ்நாடு முழுமைக்கும் விழிப்புணர்வினை கொண்டுவந்தனர். இதன் விளைவு தமிழ்நாட்டில் பிற மாநிலங்களில் இல்லாத வகையில் சமூக புரட்சி பரவத்தொடங்கி இன்று சக மனிதனை மனிதனாக நடத்தக்கூடிய நிலையும், சாதிபெயர்களைத் துறந்த மாநிலமாகவும் திகழ்கிறது. இச்சமூக கருத்துகளை செயல்வடிவம் கொண்டுவர அரசியல் இயக்கங்களின் பங்களிப்பு முக்கியமானதாகும்.

சமூக மேம்மபாடு அரசியல் வழியாகத்தான் நடைமுறைபடுத்த முடியும் இவ்வாறு நடைமுறைபடுத்தப்படும்போது பொருளாதார நிலை மேம்படும். இந்த நிகழ்வுதான் தமிழ்நாட்டில் நடைபெற்றுள்ளது. தமிழ்நாட்டைப் பொருத்தமட்டில் அரசியல் தளங்களை மூன்று கூறுகளாகப் பிரிக்கலாம் அவை நீதிகட்சி காலம், இந்திய தேசிய காங்கிரசு காலம், திராவிட கழகங்களின் காலம் எனலாம். திராவிடக் கட்சிகளின் வேர்மூலமாக திகழ்வது நீதிகட்சியாகும். இக்கட்சியின் ஆளுகை தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை அடுத்து நீதிக் கட்சி முன்னெடுத்த செயல்பாடுகளை திராவிடக் கட்சிகள் ஏற்றது மட்டுமல்ல காங்கிரசு கட்சியும்,ஏற்று அதே வழியில் சமூக சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தியுள்ளன. இதன் விளைவு கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, வறுமை ஒழிப்பு, தொழில் வளர்சசி, என பல தளங்களில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னேற்றம் கண்டு இந்திய நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி வருகிறது. இக்கட்டுரையின் முதன்மை நோக்கம் தமிழ்நாட்டை ஆண்ட இம் மூன்று கட்சிகளின் பங்களிப்பினால் எவ்வாறு சமூக-பொருளதார தளங்களில் பல்வேறு காலகட்டங்களில் முன்னேறியது என்பதாகும். இதனை ஒப்பீட்டு அளவில் மூன்று கட்டங்களலாக பிரித்து ஆய்விட முனைகிறது இக்கட்டுரை.

  1. நீதிக்கட்சி 1920 முதல் 1934 வரை 14 ஆண்டுகள் அன்றைய மெட்ராஸ் மாகாணத்தை ஆட்சி செய்தது. இதில் திரு.ஏ.சுப்ராயலு ரெட்டியார் தொடங்கி திரு. குமார வெங்கட்ட ரெட்டி நாயுடு வரை 6முதலமைச்சர்கள் ஆட்சி செலுத்தினர்.
  2. இந்திய தேசிய காங்கிரசு கட்சி 1937 முதல் 1967 முதல் 30 ஆண்டுகள் தமிழ் நாட்டை ஆண்டது. இதில் திரு.சி.ராஜகோபாலாச்சாரியார் தொடங்கி திரு. ந.பக்தவச்சலம் வரை 6 முதலமைச்சர்கள் ஆட்ச்சி செய்தார்கள். திரு.ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், திரு.காமராசர் போன்ற திறன்மிக்க முதலமைச்சர்கள் இவர்களில் அடங்குவர்.
  3. திராவிடக் கழக கட்;சிகள் 1967 முதல் தற்போது வரை 54 ஆண்டுகள் திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன. அறிஞர் அண்ணா தொடங்கி, கலைஞர் கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, முதலமைச்சராக இக்கால கட்டங்களில் ஆட்சியிலிருந்தனர். இதன் தொடர்ச்சியாக தற்போது திரு.மு.க.ஸ்டாலின் முதல்வராக தொடர்கிறார்.

சமூக மேம்பாடு – கல்வி, சுகாதாரம்

20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிராமணர் அல்லாத கல்வி பெற்றவர்கள் மத்தியில் சமூகத்தில் கல்வி வேலைவாய்ப்பு போன்றவற்றில் ஒதுக்கப்படுவதை அடிப்படையாகக் கொண்டு, அவர்களின் உரிமைகளைப் பெறுவதற்காக உருவாக்கப்பட்டதே நீதி கட்சி. அன்றைய நிலையில் மக்கள் தொகையில் 3.2 விழுக்காடாக மட்டுமே இருந்த பிராமணர்கள், மொத்தமான 130 உதவி ஆட்சியாளர்களில் 77 பேர் இருந்தனர்,அதவது 55 விழுக்காடு ஆகும். இதுபோன்றே நீதித்துறை, மருத்துவம், கல்வி போன்ற துறைகளில் உயர் பதவிகளில் இவர்களின் ஆதிக்கம் பெருமளவில் இருந்தது. 1920ல் மெட்ராஸ் மாகாணத்தில் ஆட்சியினை பிடித்த நீதிக்கட்சி தொடக்க கல்வி பெறுவதை ஊக்குவிக்க மதிய உணவு திட்டம் மெட்ராஸில் (ஆயிரம் விளக்கு பகுதியில்) 1925ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது, மாணவர்களுக்கான உறைவிடங்கள் ஏற்படுத்தப்பட்டது, 1920ஆம் ஆண்டு மெட்ராஸ் தொடக்க கல்விச் சட்டம் கொண்டுவரப்பட்டு தொடக்க கல்வி கட்டாயம் என்றானது. இதனால் பெருமளவிற்கு தொடக்க கல்வி நிலையங்கள்; தொடங்கப்பட்டன, உயர்கல்வி பெறுவதற்கு சென்னை பல்கலைக் கழக சட்டம் இயற்றப்பட்டது, ஆந்திரா பல்கலைக்கழகம் (1929ஆம் ஆண்டு) மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் (1926ஆம் ஆண்டு) போன்றவைகள் தொடங்கப்பட்டன. வேலைவாய்பில் பிராமணர் அல்லாதோர் பயனடையும் வகையில் இந்தியாவில் முதன்முதலாக இடஒதுக்கீடு 16 செப்டம்பர் 1921ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இதன் விளைவு நீதித்கட்சி ஆட்சி காலத்தில் கல்வி அறிவு பெற்றோர் 1921 மற்றும் 1941ஆம் ஆண்டுகளுக்கிடையே இரண்டு மடங்கு அதிகரித்தது. வேலைவாய்ப்பினை அனைத்து பிரிவினரும் பெற இந்தியாவிலேயே முதன் முதலாக அரசு தேர்வாணைக்குழு 1929ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.

siragu kuruttaattam1

அடுத்து வந்த காங்கிரசு அதிக அளவில் தொடக்க கல்விக்கு முக்கியத்துவம் அளித்தது. மேலும் இடஒதுக்கீட்டிற்கு எதிராக நீதி மன்றத்தின் மூலம் முட்டுக்கட்டை ஏற்பட்டபோது தமிழகமே கொதித்து எழுந்தது. அதற்கு தலைவணங்கிய ஒன்றி அரசு 1950ஆம் ஆண்டு முதன் முதலாக இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தில்திருத்தம் மேற்கொள்ளப்பட்டு பிற்படுத்தப்பட்டோரும் பயன்பெரும் வகையில் நடைமுறைபடுத்தப்பட்டது. காமராஜர் ஆட்சி காலத்தில் 300 மக்கள் தொகையுள்ள ஒவ்வொரு கிராமத்திலும் ஆரம்ப பள்ளியினை அமைக்க திட்டமிட்டார். மதிய உணவுத்திட்டத்தை பெரிய அளவில் விரிவுபடுத்தி ஏழை எளிய மக்கள் கல்வி பயில வழிவகை செய்தார். இதனால் 1951ஆம் ஆண்டு 16037 எண்ணிகையிலான ஆரம்ப பள்ளிகள் 1967ஆம் ஆண்டு 33529 பள்ளிகளாக உயர்ந்தன. இதில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையும் 1951ஆம் ஆண்டு 1852 மில்லியனிலிருந்து 1961ஆம் ஆண்டு 3558 மில்லியனாக உயர்தது. மதிய உணவு திட்டத்தினால் 8.8 லட்சம் மாணவர்கள் பயனடைந்தனர். இலவச சீருடைத் திட்டம் இக்காலகட்டங்களில்தான் துவக்கப்பட்டது. இது போன்றே உயர்கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

திராவிட கட்சிகளின் ஆட்சிகாலங்களில் சமூக உரிமைக்கான முக்கியத்துவம் தலையானதாக இருந்து வருகிறது. அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் ஆட்சிகளில் இடஒதுக்கீட்டு கொள்கையில் பல மாற்றங்களைச் செய்து சமூகத்தில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் கல்வி, வேலைவாய்ப்பில் பயன்பெரும் வகையில் 69 விழுக்காடு முறையை நடைமுறைபடுத்தினர். நாட்டிலேயே பெண்களுக்கு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கலைஞர் ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. மேலும்மத்திய அரசின் வேலைவாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு ஒதுக்கீடு, மண்டல் கமிசன் நடைமுறைப்படுத்த அழுத்தம் தரப்பட்டு 1992ல் நடைமுறைப்படுத்தப்பட்டது. தெடக்கக் கல்வி முதல் உயர்கல்வி வரை பல்வேறு திட்டங்கள் (இலவச மிதிவண்டி, மடிக்கணினி, மதிய உணவு திட்டம், இலவச பேருந்து பயணம், முதல் பட்டதாரிகளுக்கு கட்டணச் சலுகைகள்) நடைமுறைப்படுத்தப்பட்டன. கல்வி நிறுவனங்கள் அதிக அளவில் உருவாக்கப்பட்டன. 2017-18ஆம் ஆண்டின்படி உயர் கல்வி நிறுவனங்களின் (பொதுக் கல்வி) எண்ணிக்கை 1535ம், தொழில் நுட்பக் கல்லூரிகள் 580ம் தொடக்க, இடைநிலை கல்வி நிறுவனங்கள் 45161ம் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் 8312ம் தற்போது தமிழ்நாட்டில் இயங்கி வருகின்றன. (GoTN, Statistical Hand Book 2019).

siragu education1

இந்தியவிலேயே உயர்கல்வி பெறுபவர்கள் 50 விழுக்காடு அளவிற்கு உள்ளனர், முழு அளவிலான மாணவர் சேர்கை தொடக்க கல்வியிலும், படிப்பை தொடர முடியாமல் விடுபடுபவர்கள் அளவு மிகக் குறைவாகவும் உள்ளது. தமிழ்நாட்டைப் பொருத்தவரை பெரிய அளவில் இயற்கை வளங்கள் இல்லை, ஆனால் மனிதவளம் அதிக அளவில் உள்ளது. கல்வி அறிவு மனிதனின் பொருளாதாரத்தை உயர்த்தும் என்பதற்கு எடுத்துக்காட்டான மாநிலமாக தற்போது தமிழ்நாடு திகழ்கிறது. கல்வியறிவு பெற்றவர்களின் விழுக்காடு கொண்டு நாட்டின் கல்வி நிலையினை அளவிட முடியும். அவ்வகையில் நீதிகட்சி காலத்தில் கல்விஅறிவு பெற்றவர்கள் அளவு 1921ஆம் ஆண்டு 7.6 விழுக்காடாக இருந்து 1941ஆம் ஆண்டு 14.30 விழுக்காடாக அதிகரித்தது, அதாவது 6.7 விழுக்காடு கூடுதலானது (அதாவது ஒரு 10 ஆண்டுக்கு சராசரியாக 3.35 விழுக்காடு உயர்துள்ளது). இந்திய தேசிய காங்கிரசு ஆட்சி காலத்தில் இது 25.43 விழுக்காடு கூடுதலாக அதிகரித்து, 1971ஆம் ஆண்டு 45.43 விழுக்காடாக உயர்ந்தது (அதாவது ஒரு 10ஆண்டிற்கு சராசரியாக 8.47 விழுக்காடு உயர்ந்துள்ளது) மேலும் திராவிட கட்சிகளின் ஆட்சியில் இது 34.9 விழுக்காட்டு புள்ளிகள் கூடுதலாக அதிகரித்து. 2011ஆம் ஆண்டின்படி 80.33 விழுக்காடு மக்கள் கல்வி அறிவு பெற்றவர்களாக உள்ளனர் (அதாவது ஒரு 10ஆண்டிற்கு சாராசரியாக 8.72 விழுக்காடு உயர்ந்துள்ளது).

சமூக மேம்பாட்டின் ஒரு முக்கிய அங்கமாக திகழ்வது சுகாதாரமாகும். இவற்றை வாழ்நாள் எதிர்பார்ப்பு என்பது மூலம் அளவிட முடியும். நீதி கட்சி காலத்தில் ஆண்களுக்கான வாழ்நாள் எதிர்பார்ப்பு 1911-21ஆம் ஆண்டில் 19.74ஆண்டுகள் என்றிருந்தது 1931-41ஆம் ஆண்டில் 36.22 ஆண்டுகளாக உயர்ந்தது இது போலவே பெண்களின் வயது இவ்வாண்டுகளில் 24.33லிருந்து 36.17ஆக உயர்நதது. இந்திய தேசிய காங்கிரசு ஆட்சிகாலத்தில் 1941-51 மற்றும் 1961-71ஆம் ஆண்டுகளுக்கிடையே கூடுதலாக 16.47 ஆண்டுகள் ஆண்களுக்கும் 11.94 ஆண்டுகள் பெண்களுக்கும் அதிகரித்தது. திராவிடக் கட்சிகளின் ஆட்சி காலங்களில் 1971-81 மற்றும் 2015ஆம் ஆண்டுகளுக்கிடையே 21.6 ஆண்டுகள் ஆண்களுக்கும் 26.5 ஆண்டுகள் பெண்களுக்கும் கூடுதலாக வாழ்நாள் எதிர்பார்ப்பு அதிகரித்தது. அதாவது 2015ஆம் ஆண்டு கணக்கின்படி 69.10 ஆண்டுகள் ஆணகளுக்கும் 73 ஆண்டுகள் பெண்களுக்கும் வாழ்நாள் எதிர்பார்ப்பு உள்ளது. இதில் குறிப்பிடத்தக்க அம்சம் திராவிடக் கட்சிகளின் ஆட்சிகளில் பெண்களின் வாழ்நாள் எதிர்பார்ப்பு பெருமளவிற்கு ஆண்களைவிட அதிக அளவில் பதிவாகியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் பெண்களுக்கான கல்வி, வேலைவாய்பபு, சுகாதாரப் பாதுகாப்பு.

சுயதொழில் செய்ய உதவி, பெண்குழந்தைகளை பாதுகாப்பது போன்ற சில முக்கிய திட்டங்கள் திராவிட கழகங்களின் ஆட்சியில் கொண்டுவரப்பட்டதை குறிப்பிடலாம். இது மட்டுமல்லாமல் சுகாதார கட்டமைப்பை பெருமளவிற்கு வலுப்படுத்தியதையும் குறிப்பிடலாம். 1966ஆம் ஆண்டு 1249 அரசு சுகாதார மையங்களாக இருந்து 2015-16ஆம் ஆண்டு 11453 ஆக உயர்தது. இன்றைய நிலையில் பெண்கல்வி, சமத்துவம் போன்றவற்றில் தமிழ் நாடு சிறப்பாக முன்னிலையில் உள்ளதற்கு அரசின் திட்டங்கள் முக்கிய பங்கினை ஆற்றியுள்ளன. டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு திட்டம், மருத்துவக் காப்பீடு, விரிவுபடுத்தப்பட்ட மற்றும் மேம்படுத்தப்பட்ட சத்துணவு திட்டம், பெண்கள் மேம்பாட்டு கழகம் போன்றவைகள் திராவிடக்கட்சிகளின் முக்கிய சமூகநல திட்டங்களாகும். இதன் விளைவு திராவிடக் கழகங்களின் ஆட்சியில் இந்தியாவிலேயே பெண்கருவுறுதல் வீதம் தமிழ்நாட்டில் மிகக்குறைவான அளவாக ஒரு தாய்க்கு 1.7 குழந்தைகள் என்று பதிவாகியுள்ளது, மருத்துவமனைகளில் சென்று தாய்மார்கள் பிரசவிக்கும் அளவு 99 விழுக்காடு ஆகும் (இந்திய அளவில் 78.9 விழுக்காடு), குழந்தை இறப்பு வீதம் 1000ம் குழந்தைகளுக்கு 21 (இந்திய அளவில் 42) என பல நிலைகளில் தமிழ்நாடு உயர்ந்துள்ளது. மேலும் மக்கள் தொகை கட்டுப்பாடு பொதுமக்கள் இயல்பாகவே எந்த உந்துதலும் இல்லாம் ஏற்றுக் கொள்ளக்கூடிய நிலையினை தற்போது காணமுடிகிறது.

தொழில்துறை

siragu thozhil thurai1

தொழில் துறையினை மேம்படுத்த நீதிக்கட்சி ஆட்சியில் மாநில தொழில் உதவி சட்டம் 1922ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இதன்படி தொழில் தொடங்குவதற்கு கடன் வழங்கப்பட்டது. காங்கிரசு ஆட்சி காலத்தில் பொதுத்துறை நிறுவனங்கள் (பெரம்பூர் இரயில் பெட்டி தொழிற்சாலை, நெய்வேலி நிலக்கரி நிறுவனம், இந்துஸ்த்தான் போட்டோ தொழிற்சாலை (உதகமண்டலம்), பல்நோக்கு மின்சாரம் தயாரித்தல், கல்பாக்கம் அனல் மின் நிலையம், சக்கரை ஆலைகள், திருச்சி பாரத் கனரக மின்உற்பத்திபாக நிறுவனம், 22 தொழிற்பேட்டைகள் (கிண்டி, அம்பத்தூர், ஓசூர், திருச்சி, இராணிப்பேட்டை, விருதுநகர் உட்பட) துவங்கப்பட்டன. அனைத்து கிராமங்களுக்கும் மின்சார இணைப்பு, வேளாண்மை நீர்பாசனத்திற்கு மின்மோட்டார் பயன்படுத்துவது போன்றவைகள் நடைமுறைபடுத்தப்பட்டன. இதன் விளைவு இந்திய மாநிலங்களில் தமிழ்நாடு மூன்றாம் இடத்தில் தொழில் துறை உற்பத்தியில் அங்கம் வகித்தது.

திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் தொழில் முதலீட்டுக் கழகம், தொழில் நுட்பப் பூங்காக்கள், சிறப்பு பொருளாதார மண்டலங்கள், சிறப்பு ஏற்றுமதி மண்டலங்கள், என ஏராளமாக துவங்கப்பட்டன. வேளாண்மையினை மேம்படுத்த இலவச மின்சாரம், உழவர் சந்தைகள் என வேளாண்துறை வளர்ச்சிக்கு வித்திட்டது. இதன் ஒட்டு மொத்த விளைவு அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்பதில் தமிழ்நாடு முன்னியில் உள்ளதை தற்போதும் காண முடிகிறது. மோட்டார் வாகன உற்பத்தியில் தழிழ்நாடு முதன்மையானது. உலக புகழ்பெற்ற ஹ_ண்டாய், ஃபோர்ட், ரெனோல்டு, பி.எம்.டபில்யு, அசோக் லைலேண்டு, டி.வி.எஸ் என மோட்டர் வாகன உற்பத்தி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. எனவேதான் சென்னை இந்தியாவின் டெட்ராயிட் என அழைக்கப்படுகிறது. இன்று இந்திய அளவில் தமிழ்நாடு தொழில் உற்பத்தியில் 11 விழுக்காடும், தொழில் நிறுவனங்களில் 17 விழுக்காடும், தொழில் துறை வேலைவாய்ப்பில் 16 விழுக்காடும், அந்நிய நேரடி முதலீட்டில் 6 விழுக்காடு பங்குகளை தற்போது பெற்றுள்ளது.

தமிழ்நாடு தொழில் மேம்பாட்டில் முன்னியில் இருப்பதற்கு மற்றோரு காரணம் இயற்கையாகவே நீண்ட கடற்கரை (1076 கி.மீ) பெற்றுள்ளது, இந்தியாவில் உள்ள பெரிய 12 துறைமுகங்களில் 3 (சென்னை, தூத்க்குடி, எண்ணூர்) தமிழ்நாட்டில் உள்ளது, பன்னாட்டு விமான நிலையங்கள் 4 உள்ளது. சாலை-இரயில் போக்குவரத்து நாட்டின் பல பகுதிகளையும் நேரடியான இணைப்பினைப் பெற்றுள்ளது. இதற்கு முக்கிய காரணம், திராவிட கட்சிகள் ஒன்றிய அமைச்சரவையில் பங்கேற்றதையும் அவர்களால் கொண்டு வரப்பட்ட பல திட்டங்கள் தமிழ் நாட்டின் கட்டமைப்பை மேம்படுத்தியதையும் குறிப்படலாம். இன்று திருப்பூர் (பின்னலாடை), சென்னை (வாகன உற்பத்தி), மதுரை, திருச்சி போன்ற நகரங்கள் உலக அளவில் தொழில் துறைகளில் குறிப்பிடும் இடத்தை பெற்றுள்ளது. இன்றைய நிலையில் தமிழ்நாடு இந்தியாவில் நகரமயமாதலில் முதன்மையானதாகும் (49விழுக்காடு அளவில் மக்கள் நகர்புறங்களில் வாழ்கின்றனர்). இதனால் உற்பத்தி மற்றும் சேவைத்துறைகள் அதிக அளவில் ஒட்டுமொத்த மாநில பொருளாதாரத்திற்கு பங்களிப்பினை அளிக்கிறது. தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் இயற்கைவள ஆதாரங்கள் மிகவும் குறைவு. ஆனால் மனிதவள ஆதாரங்கள் அதிகம் குறிப்பாக திராவிடக் கட்சிகள் பின்பற்றி இருமொழிக்கொள்கையின் விளைவு தொழில் நுட்ப மேம்பாட்டில் பன்னாட்டு அளவில் சிறந்து விளங்குகிறது. உலக அளவிலும் வல்லுநர்களை உருவாகியுள்ளது. இதன் தொடர்ச்சியான சேவைத்துறையின் பங்களிப்பு தொடர்ந்து அதிகரித்துள்ளது. குறிப்பாக, ரியல் எஸ்டெட், வங்கிதுறை, போக்குவரத்து துறை, மருத்துவம், காப்பீடு, சுற்றுலா, போன்றவைகளில் தலைசிறந்து விளங்குகிறது. சென்னை நகரம் இந்தியாவின் மருத்துவத்திற்கான மையமாக திகழ்கிறது.

பொருளாதார மேம்பாட்டினை துறைவாரியாக பார்த்தால் காங்கிரசு மற்றும் திராவிடக் கழகங்களின் ஆட்சிகளை ஒப்பிடும் போது வேளாண்மைத் துறையின் ஒட்டுமொத்த மாநில மொத்த வருவாயில் 1960-61ஆம் ஆண்டு 51 விழுக்காடாக இருந்தது திராவிட கட்சிகளின் ஆட்ச்சி காலமான 2016-17 முதல் 2020-21 உள்ள ஆண்டுகளில் 11 விழுக்காடு பங்களிப்பும் (இந்திய அளவில் தற்போது 15.3 விழுக்காடு), தொழில் துறையினைப் பொருத்த வரையில் காங்கிரசு ஆட்சி காலத்தில் 18 விழுக்காட்டிலிருந்தது திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் 37.6 விழுக்காடாக இதே காலகட்டங்களில் அதிகரித்துள்ளது (இந்திய அளவில் தற்போது 30.5 விழுக்காடு), இதுபோன்று சேவைத்துறை 31 விழுக்காட்டிலிருந்து 51.5 விழுக்காடாக அதிகரித்துள்ளது (இந்திய அளவில் தற்போது 54.2 விழுக்காடு) (Rajkumar et al, EPW, 12.07.2021). காங்கிரசு ஆட்சி காலத்தில் 1960-61ல் ரூ.330ஆக இருந்த தலா வருமானம் 1970-71ஆம் ஆண்டு ரூ. 581ஆக அதிகரித்தது. இது தற்போது ரூ.138805 என 2018-19ஆம் ஆண்டு பதிவாகி உள்ளது. காங்கிரசு ஆட்சியில் இருந்த மொத்த மாநில வருவாயில் தலா வருமானம் 1960-61 மற்றும் 1970-71ல் 5.82 விழுக்காடாக அதிகரித்துள்ளது. ஆனால் இது திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் இருமடங்காக 11.82 விழுக்காடாக 1980-81 மற்றும் 2015-16ஆம் ஆண்டுகளில் அதிகரித்துள்ளது.

ஒட்டுமொத்த பார்வையில் நீதிக்கட்சியானது பல்வேறு எதிர்புகளுக்கிடையே சமூக சீர்திருத்தத்திற்கு அடிப்படையாக பல திட்டங்களை குறுகிய காலத்தில் நடைமுறைபடுத்தியது. அடுத்து வந்த இந்திய தேசிய காங்கிரசு கல்வி மேம்பாட்டிற்கான அடித்தளத்தினையும் பொதுத்துறை நிறுவனங்களையும் ஏற்படுத்திக் கொடுத்தது. திராவிடக் கட்சிகளின் ஆட்ச்சியில் சமூக-பொருளாதார தளங்களின் தங்களின் சித்தாந்தை நடைமுறைப்படுத்தியது, கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்பு, பொருளாதார மேம்பாடு என அனைத்திலும் தடம்பதித்துள்ளது. இந்தியாவிலேயே வறுமை ஒழிப்பில் அதிகஅளவில் குறைத்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது காங்கிரசு ஆட்சி காலத்தில் கிராமப்புறங்களில் 1957-58ஆம் ஆண்டு 67.8 விழுக்காடாக இருந்தது திராவிடக் கழகங்களின் ஆட்சியில் 2011-12ஆம் ஆண்டு 15.80 விழுக்காடாக குறைந்துள்ளது அதாவது 1973-74 மற்றும் 2011-12ஆம் ஆண்டுகளுக்கிடையே கிராமப்புறங்களில் வறுமை 41.63 விழுக்காட்டு புள்ளிகள் குறைந்துள்ளது. நகர்புறங்களில் 2011-12ஆம் ஆண்டு 6.50 விழுக்காடு மக்கள் வறுமை கோட்டின்கீழ் வாழ்ந்ததாக பதிவாகியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் இந்தியாவிலேயே பொதுவிநியோக திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது, உணவு பாதுகாப்பு, முதியோர், பெண்கள், குழந்தைகளுக்கான பாதுகாப்பு திட்டங்களை திராவிடக் கழகங்களின் ஆட்சி காலங்களில் நடைமுறைபடுத்தியதை குறிப்பிடலாம். இவற்றின் ஒட்டு மொத்த விளைவு கிராம-நகர, ஆண்-பெண், வட்டாரங்களுக்கிடையேவும், சமூக-பொருளாதார எற்றுத்தாழ்வின் இடைவெளி மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் மிகக் குறைவாகவே உள்ளது.

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி மட்டுமே கணக்கில் கொண்டு அவற்றின் நிலையினை மதிப்பிடுவது சரியாக இருக்காது சமூக கூறுகளையும் கணக்கில்கொள்ள வேண்டும் என்று பல பொருளியல் அறிஞர்கள் அன்மைக்காலமாக வலியுருத்தி வருகின்றனர். எனவே சமூக, பொருளாதாரம் உள்ளடக்கிய கூறுகளான கல்வி, சுகாதாரம், தலாவருமானம் ஆகியவற்றின் வெளிப்பாடான மனிதவள மேம்மபாட்டுக் குறியீட்டை ஐக்கிய நாடுகளின் சபை 1990ஆம் ஆண்டு முதல் உலக அளவில் வெளியிட்டு வருகிறது. மனிதவள மேம்பாட்டு குறியீட்டெண்ணில் தமிழ்நாடு 1981இல் 0.343 புள்ளியில் இருந்தது 2019ஆம் ஆண்டு 0.709 புள்ளிகளைப் பெற்று இந்தியாவில் உள்ள பெரிய மாநிங்களில் நான்காவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஒட்டுமொத்தமாக இந்திய அளவில் தமிழ்நாடு சமூக-பொருளாதார நிலைகளில் முன்னேடியாக இருப்பதற்கு காரணம் சமூக நீதி, சமூக சீர்திருத்தங்கள் என தொடர்ந்து நடைமுறைபடுத்தப்படுவதே ஆகும். இதன் விளைவு இயைந்த, நீடித்த வளர்ச்சிக்கான பாதையில் தமிழ்நாடு பயனித்துக்கொண்டுள்ளது.


பேராசிரியர் பு.அன்பழகன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழ்நாட்டின் அரசியல் தளத்தில் சமூக-பெருளாதார மேம்பாடு”

அதிகம் படித்தது