மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

திருத்தேர்வளை திருக்கோயில் அமைப்பு

என். சூர்யா

Jun 4, 2022

siragu thiruthervalai1திருக்கோயில் அமைப்பு

உலகில் உள்ள மக்கள் அனைவருக்கும் தெய்வ நம்பிக்கை என்பது தொன்று தொட்டு அமைந்துவருகிறது.  இம்மரபில் தெய்வ வழிபாடானது நிலவியல் அமைப்பிற்கு ஏற்பவும் சூழலுக்கு ஏற்பவும் மாற்றமடைகிறது. வழிபாட்டிற்காக மனிதன் ஒர் இடத்தை தேர்ந்தெடுத்து ஆலயம் அமைத்தான் அவ்விடம் திருக்கோயில் எனப்பட்டது. அக்கோயில்  என்பது தன்னுள் பல்வேறு அமைப்புகளைக் கொண்டதாக விளங்குவதாயிற்று. மரங்கள், செடிகள் தலவிருட்சங்களாக விளங்கின.  நீர்நிலைகள் திருக்குளங்களாயின. கட்டடங்கள் மண்டபங்களாயின. கோயிலின் மேற்புரம் கோபுர அமைப்பினைப் பெற்று தனித்துவமாக அமைக்கப்பெற்றது. இவ்வாறு ஆலயங்கள் தமக்கென தனித்த அமைப்பினைப் பெற்று ஊரின் அடையாளங்களாக விளங்குகின்றன.

திருத்தேர்வளையின் அடையாளமாக விளங்கும், அருள்மிகு ஆட்கொண்டீஸ்வரர் திருக்கோயிலின்  ஆலய அமைப்பினை இவ்வியல் ஆராய்கின்றது.

பொதுவான அமைப்பு

திருத்தேர்வளை ஆண்டுகொண்டேஸ்வரா் திருக்கோயிலானது கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், சோபன மண்டபம், கொடிமர மண்டபம், விமானம், இராச கோபுரம் ஆகியவற்றை உள்ளடக்கிய நிலையில் இரு திருச்சுற்றுடன் விளங்குகிறது.

 இக்கோயில் மொத்தம் ஒன்றேகால் ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இக்கோயில் கிழக்கு மேற்காக நூற்றைம்பது  அடி நீளமும் வடக்கு தெற்காக எழுபத்தைந்து அடி அகலமும் கொண்டதாக விளங்குகின்றது. திருமதில்கள் செங்கல் காரைக்கட்டு சுவரால்  கட்டப்பட்டுள்ளன.

கருவறை

கோயிலில் தெய்வம் எழுந்தருளியிருக்கும் இடம் கருவறை எனப்படும். திருத்தேர்வளை அருள்மிகு ஆட்கொண்டீஸ்வரர் கோயிலின் கருவறை நாற்பதுக்கு முப்பத்திரண்டு  என்ற சதுர உள் அளவு உடையதான அமைப்பில் அமைக்கப்பட்டுள்ளது. கருவறையின் நீள் செவ்வக மேடையின் மீது,  கிழக்கு நோக்கிய நிலையில் அருள்மிகு ஆட்கொண்டீஸ்வரர் லிங்கம் வடிவில் காட்சியளிக்கின்றார். கருவறையைச் சுற்றியுள்ள சுவர்களில் தேவகோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் தேவகோட்டத் தெய்வங்கள் அமைக்கப்பெறவில்லை.

அர்த்த மண்டபம்

கருவறையை அடுத்துக் காணப்படுவது அர்த்த மண்டபம் ஆகும். அருள்மிகு ஆட்கொண்டீஸ்வரர் ஆலயத்திலும் கருவறையைத் தொடர்ந்து அர்த்த மண்டபம் அமைக்கப்பெற்றுள்ளது. இம்மண்டபம் நூற்றுக்கு நான்கு, மற்றும் அறுபத்தைந்துக்கு நான்கு என்ற நீள அமைப்பில் அமைக்கப்பட்டுள்ளது.

மகாமண்டபம்

அர்த்த மண்டபத்திற்கு அடுத்தபடியாக அமைக்கப்பட்டு இருப்பது மகாமண்டபம் ஆகும். திருத்தேர்வளை அருள்மிகு ஆட்கொண்டீஸ்வரரின் ஆலயத்தில் மகாமண்டபம் பதினெட்டுக்குப் பதினெட்டு என்ற நீள அகல அமைப்பில் அமைக்கப்பட்டுள்ளது.

இம்மண்டபத்தின் வடக்குப் பகுதியில் பொருள்கள் பாதுகாக்கும் அறை உள்ளது. மேலும்  அர்த்த மண்டபத்திற்கு செல்லும் வாயிலின் முகப்பில் விநாயகர் சிலை ஒன்று சிறியதாக உள்ளது. தெற்குப் பகுதியில் சுற்றுப் பிரகாரத்திற்கு ஒரு வாயில் ஒன்றும் இம்மண்டபத்தில் உள்ளது.

சித்திரக்கால் மண்டபம்

இக்கோயிலில் கொடி மரம் இல்லை. ஆனால்  அறுபத்தாறரை அடி அளவு நீளமும் நாற்பத்துநான்கறை  அடி அளவு அகலமும் உடைய சித்திர கால் மண்டபம் என்பது அமைக்கப்பெற்றுள்ளது. இம்மண்டபம் செங்கல் திருப்பணியாக அமைக்கப்பட்டுள்ளது.

ஈசான பகுதியில் பைரவர் சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. இம்மண்டபத்தின் முகப்பில்  வேலைபாடுகளுடைய பூத கணங்களுடன் பாயும்  தோற்றத்துடன்  ஒரு வீரன் அமைந்திருப்பது போல அமைக்கப்பட்டுள்ளது. இம்மண்டபத்தில் காணப்படும் தூண்கள் சித்திர வேலைபாடுகளுடன் காணப்படுகிறுது.

இவ்வாலயத்தின் உள்பிரகார மேற்குப் பகுதி சுவற்றில் பரிவார தெய்வங்களின் சன்னதிகள் அமைக்கப்பெற்றுள்ளன.

மூலஸ்தானத்திற்குச் செல்லும் படிக்கட்டு ஆலய முகப்பின் நேர்பகுதியில் இல்லாமல் கிழக்கு மற்றும் மேற்குப் பக்கவாடடில் அமைந்துள்ளது. இம்மண்டபத்தின் தென்கிழக்கு மூலையில்  விநாயகர் சிலையும் வடகிழக்குப் பகுதியில்  தட்சிணாமூர்த்தி சிலையும் அமைக்கப்பட்டுள்ளன.

விமானம்

ஆண்டுகொண்டீஸ்வரா் கருவறை விமானத்துடன் அமைந்துள்ளது.  இவ்விமானமானது இருபது அடி உயரம் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது.

அருள்மிகு ஆனந்தவல்லி அம்மன் சன்னதி

அருள்மிகு ஆட்கொண்டீஸ்வரரின் சக்தியாக துணையாக விளங்குபவள் அருள்மிகு ஆனந்தவல்லி ஆவாள். கருவறைக்கு தென்மேற்கு மூலையில் அருள்மிகு ஆனந்தவள்ளி அம்மன் சன்னதி அமைக்கப்பெற்றுள்ளது. நின்ற நிலையில் புன்முறுவல் பூத்த வடிவில் அருள்மிகு ஆனந்தவல்லி காட்சி தருகிறாள்.  இதுவும் கருவறை, விமானம் ஆகிய அமைப்பில் அமைந்துள்ளது.

மடைப்பள்ளி

வெளிச்சுற்று பிரகாரத்தில் தென்கிழக்கு மூலையில்  இறைவனுக்காக அமுது சமைப்பதற்காக அறை ஒன்று இவ்வாலயத்தில் உள்ளது.  அதனை அடுத்து அமுதுகளுக்கு தேவைப்படும் பொருள்கள் வைப்பதற்கான வைப்பறை உள்ளது

பள்ளியறை

இறைவன் துயில் கொள்வதற்காக அமைக்கப்படும் ஓர் அமைப்பு பள்ளியறை எனப்படும். இப்பள்ளியறை இக்கோயிலில், மகாமண்டபத்தின் வடக்குப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. பள்ளியறையின் எதிரில் உள்சுற்று பிரகாரத்திற்கு செல்வதற்கு தெற்குப் பகுதியில் வாயில் ஒன்று உள்ளது.

திருக்குளம், திருக்கிணறு

இக்கோயிலின் வடக்கு பகுதியில் ஒரு குளம் உள்ளது. இது இக்கோயிலுக்குரிய திருக்குளம் ஆகும். இக்குளத்தில் பூக்கும் தாமரை மலர்கள் இறைவனின் பூசைக்கு ஏற்றதாக உள்ளன. . இது திருத்தேர்ப்பொய்கை என்ற பெயரில் வழங்கப்படுகிறது.

இக்கோவிலுக்குரிய கிணறு ஒன்றும் கோயிலின் அருகில் உள்ளது. வெளிச்சுற்று பிரகாரத்தில்  வடக்கு பகுதியில் இக்கிணறு அமைந்துள்ளது.

சோபன மண்டபம்

இக்கோயிலில் மகா மண்டபத்திற்கு சித்திரக்கால் மண்டபத்திற்கும் இடைப்பகுதியில் அமைந்துள்ள மண்டபம் சோபண மண்டபம் என்று அழைக்கப்படுகிறது.

திருச்சுற்றுகள்

இக்கோயிலில் இரண்டு திருச்சுற்றுக்கள் காணப்படுகின்றது. முதல் சுற்று கருவறை, அர்த்த மண்டபம் அம்மன் சன்னதி போன்றவற்றவைகளைக் கொண்டு   உள் சுற்றுப்பிரகாரமாக அமைந்துள்ளது.

இரண்டாம் திருச்சுற்று  சோபன மண்டபம்,அர்த்த மண்டபம்,மகா மண்டபம்,கருவறை போன்ற அமைப்புகளை உள்ளடக்கியதாக வெளிச்சுற்றுப் பிரகாரமாக அமைந்துள்ளது. இத்திருச்சுற்றை அடுத்து நான்கு பக்கங்களிலும் திருமதில்கள் அமைந்துள்ளன.

தூண் சிற்பங்கள்

திருக்கோயிலின் வாயிலின் முன்பு இரண்டு குதிரையின் சிற்பங்கள் உள்ளன. திருக்கோயிலின் உள்பகுதி மற்றும் வடக்கு, தெற்கு, மேற்கு, கிழக்கு என நான்கு பிரகாரங்களிலும் சித்திர வேலைப்பாடுகள் காணப்படுகின்றன.

யாகசாலை

இத்திருக்கோயிலின் வெளிச்சுற்றுப்பிரகாரத்தில் வடகிழக்கு மூலையில் யாகசாலை ஒன்று உள்ளது. திருவிழா காலங்களில் யாகங்கள் அனைத்தும் இங்கு நிகழ்த்தப்படுகின்றன.

தலவிருட்சம்

இத்திருக்கோயிலின் வெளிச்சுற்று பிரகாரத்தில் தல விருட்ச மரமாக வில்வ மரம் இருந்துள்ளது.  இயற்கையின் சீற்றத்தின் காரணமாக மரம் அழிந்துவிட்டது  என்று ஊர் மக்களால் கூறப்படுகிறது.

இராசகோபுரம்

இத்திருக்கோயிலின் இராசகோபுரம் கருவறைக்கு நேராக மேற்பகுதி மூன்று நிலைகளைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இதன் உயரம் முப்பத்தி ஏழு அடிகள் ஆகும். இக்கோபுரம் ஏழு கல் விரியமைப்பில் கட்டப்பட்டுள்ளது. இக்கோபுரம் முன் பகுதியான ஆலயப் பகுதி இருபத்தியிரண்டு அடிகளாகவும் அதனுடைய பக்கவாட்டில் பதினைந்து அடிகளாகவும் அமைந்துள்ளன. இத்திருக்கோயிலின் ராஜகோபுரத்தின் சிற்பங்கள் மிக நுண்ணிய கலை நுணுக்கத்துடன் காணப்படுகின்றன. ராஜகோபுரத்தின் உச்சியில் பதுமக்கலசங்களாக மூன்று கலசங்கள்  அமைக்கப்பெற்றுள்ளன.

தொகுப்புரை

திருத்தேர்வளை திருக்கோயில் மிகப் பெரும் அளவிலான் கட்டட அமைப்பினைப் பெற்றுள்ளது. மதில்கள், மகாமண்டம், சோபன மண்டபம், அர்த்த மண்டபம், தட்சிணாமூர்த்தி, பிள்ளையார், முருகர், நடராசர், ஆனந்தவல்லி அம்மை, ஆட்கொண்டீஸ்வரர் போன்றோர் தம் சந்நதிகள் இதனுள் அமைந்துள்ளன. திருக்குளம், திருக்கிணறு போன்றனவும் இத்திருக்கோயிலில் அமைந்துள்ளன.


என். சூர்யா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “திருத்தேர்வளை திருக்கோயில் அமைப்பு”

அதிகம் படித்தது