திருத்தேர்வளை திருக்கோயில் திருவுருவ அமைதி
என். சூர்யாJul 2, 2022
மக்களின் நாகரிகம், பண்பாடு, கலை, வெளிப்பாடு ஆகியவற்றை வெளிப்படுத்துவதில் திருக்கோயில்கள் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெறுகின்றன. கோயில்களில் உள்ள இறை திருவுருவங்கள் கலையின் வெளிப்பாடாகவும், கருணையின் வெளிப்பாடாகவும் அமைகின்றன.
மனிதன் தன்னுடைய தேவைகளின்போது தெய்வத்தை நாடுகிறான். மனிதன் தெய்வத்தை நேரடியாகக் கண்ணால் காணக்கூடிய அடையாளமாக அமைக்க எண்ணினான். அப்போது அவனுக்கு கடவுளின் திருஉருவங்கள் அடையாளச் சின்னங்களாக கற்பனையில் அமைந்தன. அக்கற்பனைகளே கல்திருவுருவங்களாக, செப்புத் திருமேனிகளாக வடிவம் கொள்ள ஆரம்பித்தன.
ஒரு திருக்கோயிலின் மேன்மையை உணர்த்துவன அக்கோயிலில் உள்ள இறை திருவுருங்களாகும். அவ்வகையில் திருத்தேர்வளை அருள்மிகு ஆண்டு கொண்டேஸ்வரா் திருக்கோயிலில் உள்ள திருவுருவங்களில் அமைப்பை விளக்குவதாக இவ்வியல் அமைகின்றது.
தமிழ் மரபில் இறை திருவுருவ அமைப்பு
தொல்காப்பியத்தில் காட்சி, கால்கோள், நீர்ப்படை போன்ற புறத் திணை சார்ந்த செய்திகள் கடவுள் திருவுருவங்கள் இருந்தமையைக் காட்டுகின்றன. சங்க இலக்கியங்களில் காணப்படும் திணை நிலைத்தெய்வங்களான முருகன், திருமால், வருணன், இந்திரன் போன்றோர் பற்றிய செய்திகளிலும் இறை திருவுருவ அமைப்புகளைக் காணமுடிகின்றது. பரிபாடலில் செவ்வேள் பற்றிய செய்திகளும், தி்ருமால் பற்றிய செய்திகளும் இடம்பெற்றுள்ளன.
‘‘ சீமையைச் சென்னி தெய்வம் பரசிக்
கைவினை முற்றிய தெயவப் படிமத்து”
என்னும் சிலப்பதிகார அடிகள் கண்ணகிக்குத் தெய்வப்படிமம் அமைத்த செய்தியை விளக்குகின்றன. “படிமம் என்பதற்கு தெய்வ வடிவம்“ என்று உரை கூறகிறார் .ந.முஇவேங்கடசாமி நாட்டார்.
” மண்ணினும் கல்லினும் மரத்தினும் சுவரினம்
கண்ணிய தெய்வம் காட்டுநர் வகுக்க”
என்னும் மணிமேகலைக் காப்பிய அடிகள் மணிமேகலைக் காப்பிய காலத்தில் திருவுருவங்கள் அமையும் விதத்தை விளக்குகின்றன.
திருமுறைகள் இறைவனை அருவம், உருவம், அருவுருவம் என்ற அமைப்பில் கண்டன. குனித்த புருவமும் ,கோவைச் செவ்வாயில் குமிழ் சிரிப்பும் என்று நடராச வடிவத்தைத் திருமுறைவாணர்கள் கண்டனர்.
இவ்வகையில் தமிழ் மரபில் இறை திருவுருவ மரபு என்பது தொடர்ந்து இடம்பெற்று வழிபடப் பெற்று வருகின்றது.
இம்மரபினை ஒட்டியே திருத்தேர்வளை அருள்மிகு ஆட்கொண்டீஸ்வரர் ஆலயத்தில் திருவுருவ மரபுகள் அமைக்கப்பெற்றுள்ளன.
அருள்மிகு ஆண்டுகொண்டீஸ்வரா்
திருத்தேர்வளைத் தலத்து இறைவனான ஆண்டு கொண்டீஸ்வரா் கருவறையில் கிழக்கு நோக்கிய நிலையில் சிவலிங்க வடிவில் காட்சி அளிக்கிறார். இவர் சுயம்பு லிங்கமாவார். உருவமாகவும் அமையாமல், உருவமில்லாமலும் அமையாமல் அருவுருவமாக லிங்க வடிவில் திருத்தேர்வளையில் அருள்மிகு ஆட்கொண்டீஸ்வரர் அமர்ந்து அருள்பாலிக்கிறார்.
அருள்மிகு ஆனந்த வள்ளி அம்மன்
திருத்தேர்வளையில் உள்ள ஆட்கொண்டீஸ்வரரின் துணையாக விளங்கும் அருள்மிகு ஆனந்தவள்ளி அம்மனின் திருவுருவம் நான்கு கைகளுடன் நின்ற கோலத்தில் காட்சி் தருகிறது. இவ்வம்மனின் இரு கைகளிலும் ஆயதங்களுடன் காணப்பெறுகிறது. ஒருகரம் மலர்ச்செண்டை ஏந்திய வண்ணம் காணப்படுகிறது. இவ்வம்மன் கிழக்குப் பார்த்த வண்ணம் காட்சி அளிக்கிறார்.
அருள்மிகு விநாயகர்
இத்திருக்கோயிலின் திருசுற்றின் தென்மூலையில் விநாயகப் பெருமான் சன்னதி உள்ளது. இப்பெருமான் நான்கு கைகளுடன் அமர்ந்த வண்ணம் காட்சி அளிக்கிறார். இவரின் இடபக்கம் உள்ள கைகளில் அங்குச ஆயதமும் மற்றொரு கையில் ஞானப்பழம் அமைக்கப்பெற்றுள்ளது. . வலது பக்க கையொன்றில் பாசக் கயிறும் மற்றொரு கையானது அருள் பாலிக்கும் நிலையிலும் அமைந்துள்ளது. விநாயகருக்கு முன்னால் அவர் வாகனம் அவரைப் பார்த்த வண்ணம் காணப்படுகிறது.
அருள்மிகு முருகன்
திருத்தேர்வளை அருள்மிகு ஆட்கொண்டீஸ்வரர் கோயிலில் அருள்மிகு முருகன் தனது துணைவியர்களான வள்ளி, தெய்வானையுடன் நின்ற வண்ணம் காட்சி அளிக்கிறார். இவர் நான்கு கரங்களுடன் காட்சி தருகிறார். இவருடன் இணைந்து இவருடைய வேல் வெண்கலத்தில் தனியாக வைக்கப்பட்டுள்ளது.
அருள்மிகு சண்டிகேசுவரா்
சிவனின் சொத்துக்களைக் காக்கும் பொறுப்பினைப் பெற்றவரான அருள்மிகு சண்டிகேஸ்வரருக்குத் தனி சன்னதி அனைத்து சிவன் கோயில்களிலும் காணப்படும். இத்திருக்கோயிலில் கருவறைக்கு அருகில் வடக்குப் பக்கத்தில் தெற்கு நோக்கிய வண்ணம் இருந்த கோலத்தில் அருள்மிகு சண்டிகேசுவரர் காணப்படுகிறார். இவர் இரண்டு கைகளுடன் யோக நிலையில் காட்சி தருகிறார்.
அருள்மிகு பைரவர்
திருத்தேர்வளை அருள்மிகு ஆட்கொண்டீசுவரர் திருக்கோயிலில் அருள்மிகு பைரவர் நின்ற கோலத்தில் காடசி அளிக்கிறார். இவர் நாயைத் தன் வாகனமாக கொண்டு உள்ளார். அவர் வைத்திருக்கக் கூடிய சூலாயுதம் வெண்கலத்தில் உள்ளது. வடகிழக்கு மூலையில் மேற்கு நோக்கிய நிலையில் இவர் அமைந்துள்ளார்.
அருள்மிகு தெட்சணாமூர்த்தி
அருள்மிகு தெட்சணாமூா்த்தி தெற்கு பக்கம் பார்த்த வண்ணம் இத்திருக்கோயிலில் இருந்த நிலையில் காட்சி அளிக்கிறார் .இவரின் நான்கு கரங்களில் இரண்டு கைகளில் உடுக்கை, தீ போன்றனவற்றை ஏந்தியுள்ளார். மூன்றாவது கையில் உருத்திராட்ச மாலையும் இன்னொரு கை ஞானம் அருளும் நிலையிலும் காட்சி அளிக்கிறது. அவருக்கு முன்பு நான்கு முனிவர்களின் சிலைகள் இருந்த கோலத்தில் காணப்படுகிறது.
அருள்மிகு நந்தி
திருத்தேர்வளை திருக்கோயிலில் சிவபெருமானின் வாகனமான நந்தி மகா மண்டபத்தில் கொடி மரத்தின் அருகில் உள்சுற்று பிரகாரத்தில் சிவலிங்கத்தை பார்த்த வண்ணம் படுத்த நிலையில் உள்ளது. இதனை அடுத்து கொடிமரமும்,பலிபீடமும் அமைந்துள்ளன.
இவ்வாறு திருத்தேர்வளை திருக்கோயிலில் இறை திருவுருவங்கள் அமைந்து அருள் பாலித்து வருகின்றன.
தொகுப்புரை
திருத்தேர்வளை அருள்மிகு ஆண்கொண்டீஸ்வரர் ஆலயத்தில் மூல தெய்வமான அருள்மிகு ஆட்கொண்டீஸ்வரர் சுயம்பு வடிவில் சிவலிங்க மூர்த்தியாகக் காட்சி தருகிறார். இவரின் துணையான ஆனந்தவல்லி அம்மன் பெயருக்கு ஏற்றாற் போல ஆனந்த நிலையில் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். இத்தெய்வங்கள் தவிர விநாயகர், முருகன், தட்சிணாமூர்த்தி, பைரவர், நந்தியெம்பெருமான், சண்டிகேசுவரர் போன்ற இறைதிருவுருவங்களும் ஆகம முறைப்படி அமைந்துள்ளன. சிவ ஆலயத்தின் நியதிப்படி இவ்வாலயத் திருவுருவங்கள் அமைந்துள்ளன.
என். சூர்யா
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “திருத்தேர்வளை திருக்கோயில் திருவுருவ அமைதி”