திருத்தேர்வளை திருக்கோயில் வழிபாடும், விழாக்களும்
என். சூர்யாJul 9, 2022
மக்கள் மன அமைதிக்காகவும், தம் விருப்பங்கள் நிறைவேற்றித் தருவதற்காகவும் இறைவனைத் திருக்கோயில்களுக்குச் சென்ற வழிபடுகிறார்கள். இவ்வழிபாடு என்பது மக்களுக்கு நிம்மதியையும், அருளையும் தருவனவாக உள்ளன. திருக்கோயில்கள் சிலவற்றில் இவ்வழிபாடு இயற்றினால் இந்தப் பலனைப் பெறலாம் என்ற நிலைப்பாடுகளும் உள்ளன. பல கோயில்களில் பொதுவான வழிபாடும், பொதுவான பலன்களும் கிடைக்கப்பெறும் நிலையில் அமைந்துள்ளன. எனவே வழிபாடு என்பது மக்களின் மனதில் உள்ள விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் செய்யப்படும் இறைவனுக்கான பூசை முறை என்பதை உணரமுடிகின்றது.
திருத்தேர்வளை அருள்மிகு ஆண்டு கொண்டேஸ்வரா் திருக்கோயில் பெருந்தெய்வ வழிபாட்டு மரபைச் சேர்ந்தது ஆகும். இக்கோயிலில் பெருந்தெய்வ வழிபாட்டு மரபிற்கு ஏற்ப வழிபாடுகள் ஆகம முறைப்படி செய்து வரப்பெறுகினற்ன. திருவிழாக் காலங்களில் சிறப்பு வழிபாடுகளும் செய்யப்பெறுகின்றன. அவ்வகையில் இக்கோயிலில் நிகழ்த்தப்பெறும் வழிபாடுகள் பற்றியும் விழாக்கள் பற்றியும் திருக்கோயில் தொடர்பான நம்பிக்கைகள் பற்றியும் இவ்வியல் எடுத்துரைக்கின்றது.
திருத்தேர்வளை அருள்மிகு ஆட்கொண்டீஸ்வரர் ஆலயத்தில் நாள் தோறும் நாள் வழிபாடும் திருவிழாக் காலங்களில் சிறப்பு வழிபாடுகளும் இயற்றப்பெறுகின்றன.
நாள் வழிபாடு
அருள்மிகு ஆண்டு கொண்டேஸ்வரா் திருக்கோயிலில் நாள்தோறும் செய்யப்படும் வழிபாட்டு முறையில் கு ஆறு காலப்பூசைகள் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு பூசைக்கும் நேரம் வகுக்கப்பெற்றுள்ளது.
நாள் வழிபாட்டில் முதல் பூசை காலை ஆறு மணிமுதல் ஏழு மணி வரையிலும் நடைபெறுகிறது. இது உஷாக் கால பூசை எனப்படுகிறது.
இரண்டாம் கால பூசையான கால சந்தி காலை ஏழு மணிமுதல் எட்டு மணி வரை நடைபெறுகிறது.
மூன்றாம் கால பூசை பத்தரை மணியில் இருந்து பதினொன்றரை மணிக்குள் நடைபெறுகின்றது.
நான்காவது உச்சிக் கால பூசை எனப்படும் பூசை பதினொன்றரை மணியில் இருந்து பன்னிரண்டு மணி வரை நடைபெற்று திருக்கோயிலின் நடை சாத்தப்படுகிறது.
அடுத்து திருக்கோயில் நடை மாலை நான்கு மணிக்கு திறக்கப்படுகிறது. ஐந்தாவது பூசை சாயலிச்சை என்பதாகப் பிற்பகல் ஐந்து மணிமுதல் ஆறு மணிவரை நடைபெறுகிறது.
இரவுக்கால பூசை பள்ளியறை பூசையாக நடைபெறுகிறது. இது ஆறாவது பூசையாக இரவு ஏழு மணிமுதல் எட்டு மணி வரையிலும் நடைபெறுகின்றது.
பூசையின் போது அதிகாலையில் வேதம் ஓதி மூர்த்திகளின் பழைய அலங்காரங்களை நீக்கிவிட்டு நன்னீராட்டப்படுகிறது. அதன் பின்னர் எண்ணைக் காப்பிட்டு ஆடை அணிவித்து சந்தனம், குங்கும், மஞ்சல், பால், தயிர்,பன்னீர், திரவியப்பொடி போன்ற வாசனைத்திரவியங்கள் முதலியவற்றால் அலங்கரித்து தீபாராதனையின் போது வேத மந்திரங்கள் ஓதப்படுகிறன. இவ்வேளையில் மேளமும், நாதஸ்வரமும் இசைக்கப்படுவதோடு ஆலயமணியும் ஒலிக்கப்படுகிறது.
வழிபாட்டு முறையில் முதலில் விநாயகருக்கும், அதன் பின்னர் மூலத்தெய்வமான அருள்மிகு ஆண்டு கொண்டீஸ்வரருக்கும் வழிபாடு செய்யப்படுகிறது. அதன் பிறகு அருள்மிகு ஆனந்தவள்ளி அம்பாளுக்கு பூசை நிகழ்த்தப்படுகிறது. அதன் பிறகு தென் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள தெட்சணாமூர்த்திக்கு வழிபாடு செய்யப்படுகிறது. அடுத்ததாக கருவறைக்கு வடக்கே இருக்கும் சண்டிகேஸ்வரருக்கு பூசை செய்யப்படுகிறது. இதனைத்தொடர்ந்து வடகிழக்கு மூலையில் நின்ற கோலத்தில் உள்ள பைரவருக்கும் வழிபாடு நடத்தப்படுகிறது. பின்னர் பலிபீடத்திற்குச் சிறப்பாக பூசை நிகழ்த்தப்படுகிறது.
அமுது படையல் முறை
ஆறுகால பூசை நேரத்திலும் இறைவனுக்கு அமுது படைக்கப்படுகின்றன. ஒவ்வொரு வேளையும் ஒவ்வொரு விதமான உணர்வுகள் ஆண்டவனுக்குப் படைக்கப்பெறுகிறது.
முதல் பூசையின் போது அவலும், சர்க்கரையும் படைக்கப்படுகிறது. இரண்டாவது பூசையின் போது தோசையும்,வெண்பொங்கலும் படைக்கப்படுகின்றன. மூன்றாவது பூசையின்போது புளியோதரை படைக்கப்படுகிறது. நான்காம் பூசையின்போது வெண்சாதம் ,காய், பருப்பு ஆகியன படைக்கப்படுகின்றன. ஐந்தாவது பூசையின் போது புளியோதரையும் ஆறாம் பூசையின்போது மிளகுசாதம், வடை, அப்பம் போன்றனவும் படைக்கப்படுகின்றன.
இரவு பள்ளியறை பூசையின் போது பள்ளியறையில் பசும்பால் காய்ச்சி கொடுக்கப்படுகிறது. இவ்வுணவுகள் அனைத்தும் வெளிச்சுற்றுப் பிரகாரத்தின் தென்கிழக்கு மூலையில் அமைக்கப்பெற்றிருக்கும் மடப்பள்ளியில் சமைக்கப்படுகின்றன.
சிறப்பு வழிபாடு
திருத்தேர்வளை ஆண்டுகொண்டீஸ்வரா் திருக்கோயிலில் தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றிலும் வரும் சிறப்பு நாள்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பெறுகின்றன.
- சித்திரை மாதத்தில் சித்ரா பௌர்ணமி
- வைகாசி மாதத்தில் விசாகம்
- ஆனி மாதத்தில் திருமஞ்சணம்
- ஆவணி மாதத்தில் விநாயகர் சதுர்த்தி
- ஆடிப்பூரத்தின் அம்மனின் ஆடித்தவசு
- புரட்டாசி மாதத்தில் நவராத்திரி
- ஐப்பசி மாதம் அன்னாபிஷேகமும்
- மார்கழியில் திருவாதிரை
- தைமாதம் தைப்பூசம்
- மாசி மாதம் சிவராத்திரி
- பங்குனி மாதத்தில் உத்திரம்
என்ற நிலையில் சிறப்பு வழிபாடுகள் இக்கோயிலில் நடத்தப்படுகின்றன. இவை தவிர
- சங்கடகர சதுர்த்தி நாளில் விநாயகருக்கும்,
- பிரதோஷ நாளில் சிவபெருமானுக்கும், அம்பிகைக்கும், நந்திக்கும்
- தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கும்
வழிபாடுகள் நிகழ்த்தப்பெறுகின்றன. மேலும் புது வருட பிறப்புகள், தீபாவளி, பொங்கல் போன்ற நாள்களிலும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.
மகா சிவராத்திரி
இத்திருக்கோயிலில் மற்ற கோயில்கள் போல மகா சிவராத்திரி அன்று ஒருநாள் மட்டும் இரவு நேரத்தில் ஆறு காலப் பூசைகள் நிகழ்த்தப்படுகின்றன. ஆறு கால பூசைகளுக்கும் மக்கள் பூசைப் பொருள்கள் போன்றவற்றை வழங்குகிறார்கள். அன்று இரவு பக்தர்கள் உறங்காமல் விரதத்தை மேற்க்கொண்டு வழிபடுவார்கள். சிவனுக்கு ஒரு ராத்திரி சிவராத்திரியாகும்.
நவராத்திரி
சிவபெருமானுக்கு ஒரு ராத்திரி சிவராத்திரி என்றால் அம்மனுக்கு ஒன்பது ராத்திரிகள் அதாவது இரவுகள் நவராத்திரியாகக் கொண்டாடப்பெறுகின்றன. இத்திருக்கோயிலில் நவராத்திரி விழா சிறப்புடன் கொண்டாடப் பெறுகிறது. ஒன்பது நாளும் ஒன்பது அலங்காரங்களில் அம்பிகை அருள்பாலிக்கிறாள். ஒன்பது நாள்களிலும் ஒன்பது மண்டகப்படிதாரர்கள் இவற்றை ஏற்று நடத்துகின்றனர்.
நவராத்திரி உருவான கதை
ஒருகாலத்தில் மகிஷாசுரன் என்பவன் நெருப்பிலிருந்து மனிதனின் உடலும் எருமைத் தலையும் கொண்டுத் தோன்றினார். அவன் அரக்கர் குலத்திற்குத் தலைமை ஏற்றான்.
அரக்கர் தலைவரன் மகிஷாசுரன் தன்னுடைய சக்தியை அதிகரிக்க பிரம்மதேவனை நோக்கிப் பல்லாயிரம் ஆண்டுகள் கடும் தவம் புரிந்தான். பதினாராயிரம் ஆண்டுகள் உணவு ஏதும் அருந்தாமல் ஒற்றைக்காலில் நின்று தவம் செய்து வந்தான். ஒரே இடத்தில் அசையாமல் தவம் புரிந்த காரணத்தால் அவனை சுற்றி கரையான் புற்று உருவாகி இருந்தது.
மகிஷாசூரனின் தவத்தைக் கண்ட பிரம்மதேவர் அவன் முன் தோன்றி அவன் கேட்ட வரத்தைக் கொடுத்து அருள்புரிந்தார். இவ்வுலகத்தில் உள்ள ஆண்கள் யாராலும் தன்னை அழிக்க முடியாத வரத்தை பிரம்மாவிடம் இருந்து பெற்று விட்டான் மகிஷாசுரன்.
அவன் தன்னுடைய வரத்தை ஆக்கத்திற்கு பயன்படுத்துவதைத் தவிர்த்து அழிவுக்கு பயன்படுத்தத் தொடங்கினான். மூன்று உலகத்தவர்களையும் அடிமைப்படுத்தி கொடுமைப்படுத்த ஆரம்பித்தான். அவனுடைய கொடுமையைத் தாங்க முடியாமல் மூன்று உலக மக்களும் தேவர்களும் சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர்.
ஆண்களால் அழிக்க முடியாத வரத்தை அவன் பெற்றிருந்த காரணத்தால் சிவன், பிரம்மா, விஷ்ணு என்ற மூன்று கடவுள்களும் இணைந்து, தங்கள் சக்தியையெல்லாம் ஒன்று திரட்டி ஒரு பெண்ணை அதாவது அன்னை பராசக்தி தேவியை உருவாக்கினர். அன்னை சக்திதேவி சிம்ம வாகனத்தில் கைலாயத்திற்கு ஆகாய வழியாக சென்றாள்.
அப்பொழுது அவளின் அழகில் மயங்கிய மகிசாசுரன் அன்னை சக்தியை மணந்து கொள்ள ஆசைப்பட்டான். அப்பொழுது அவன் தன் பணியாளரை அனுப்பி செய்தியை சக்தி தேவியிடம் தெரிவித்தான். இதுதான் சரியான நேரம் என்பதை உணர்ந்த சக்தி “எவர் தன்னை வீழ்த்துகிறார் அவரை என்னை மணந்து கொள்ளலாம்” என்று கூறி அந்தப் பணியாளரை அனுப்பினாள்.
இதன் காரணமாக அன்னை சக்திக்கும் மகிஷாசுரனுக்கும் இடையே கடுமையான போர் நடந்தது. அன்னை சக்தி அவனை வீழ்த்த அவன் ரத்தம் விழும் இடமெல்லாம் எருமைத்தலை உடைய அரக்கர்கள் உயிர்த்தெழுந்தனர். உடனே அன்னை சக்தி தன்னுடைய சக்தியால் மகாகாளியை உருவாக்கி அவளை மகிஷாசூரனின் இரத்தம் கீழே விழாமல் குடிக்கச் செய்தாள்.
ஒன்பதுநாள்கள் உக்கிரமாக நடைபெற்ற இப்போர் பத்தாம் நாளில் நிறைவுக்கு வந்தது. அன்னை பராசக்தி மகிஷாசுரனை அழித்து உலக மக்களைக் காப்பாற்றினாள். இதுவே நவராத்திரியாகக் கொண்டாடப் படுகிறது.
நவம் என்றால் ஒன்பது என்றும் பொருள். ஒன்பது ராத்திரிகள் அம்பிகையை வழிபடக்கூடிய ஒரு உன்னதமான திருவிழாதான் இந்த நவராத்திரி திருநாள்
நவராத்திரி வழிபாட்டுமுறை
நவராத்திரி விரதம் முழுக்க முழுக்க பெண்மைக்கு உரியது. நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் இச்சா சக்தியின் தோற்றமான துர்க்கை அம்மனையும் நடுவில் உள்ள மூன்று நாட்களும் ஞான சக்தியின் தோற்றமான லட்சுமியை நினைத்து வழிபாடு நடத்துகின்றனர் இறுதி மூன்று நாட்களும் கிரியா சக்தியான சரஸ்வதியை பூஜிக்கவேண்டும். நவராத்திரியின் முதல் நாள் பூஜைக்கு கொலு மேடை பூஜையில் லட்சுமி தாயே உன்னருளால் உலக உயிர்கள் இன்புற்று இருக்க வேண்டும் என்று பிராத்தித்து வணங்கவேண்டம்.
அப்போத ஐந்து முக விளக்கேற்றி சாம்பிராணி ஏற்றி பூசை நடத்தப்படும். இவ்விழா கலைவிழாவாகவும் கொண்டாடப்படுகிறது. இந்தியா முழுக்க தசரா என்று பெரும் சிறப்புடன் கொண்டாடப் பெறுகிறது.
அம்மனுக்குரிய பாடல்களை பாடியும், நடனங்கள் ஆடியும் பெண்கள் இவ்விழாவைக் கலை விழாவாகக் கொண்டாடுவர். அம்பிகையும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் அமைந்து அருள் புரிவாள்.
ஒவ்வொரு நாளும் இரவு பூஜை முடிந்து விட்டு அங்கு இருப்பவர்களுக்கு பூஜைக்குப் படைத்த பொருள்களைக் கொடுப்பார்கள்.
நவராத்திரியின்போது கொலு எனப்படும் பொம்மைகளை அடுக்கிக் கொண்டாடுவது சிறப்பாகும். இக்கோயிலில் இவை அனைத்தும் செய்யப்படுகின்றன.
இக்கொலுவில் கும்பம் வைப்பது மிகவும் முக்கியமானது. நறுமணமிக்க புனுகு, கோரோனை, பச்சை கற்பூரம், கஸ்தூரி மஞ்சள், சந்தனம், குங்குமப்பூ, பன்னீர் ஆகியன கும்பத்தில் நீருடன் இடப்படும். சந்தனம் பூ இவைகளைக் கொண்டு கும்பம் அலங்கரிக்கப்படும். தேங்காய், மாதுளை வாழைப்பழம் முதலியன கும்பத்தை அம்மனாகப் பாவித்துப் படைக்கப்படும்.
நவராத்திரியில் குமாரி பூஜை மிகவும் முக்கியமானதாகும். இரண்டு வயது முதல் பத்து வயதிற்குட்பட்ட பெண் குழந்தையை அழைத்து அப்பிள்ளையை அம்மனாக பாவித்து அவளுக்குத் தேவையான பொட்டு, வளையல், உணவு, இனிப்புப் பலகாரம், ஆடை கொடுத்து அம்மனாகக கருதி அப்பெண்ணை வழிபடுவார்கள்.
நவராத்திரியின் பத்தாம் நாளில் விளக்கு பூஜை செய்து மிகவும் சிறப்பாகும். மேலும் சுமங்கலிப் பெண்களுக்கு மஞ்சள் குங்குமம் தாலிக்கயிறு போன்ற மங்களகரமான பொருள்களைக் கொடுத்து சுமங்கலி வழிபாடு செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்தது.
இவ்வாறு பல நிலைகளில் சிறப்புடை நவராத்திரி இக்கோயிலில் கலை விழாவாகக் கொண்டாடப் பெறுகிறது.
இவ்வாறு இக்கோயிலில் நாள் வழிபாடும் சிறப்பு வழிபாடுகளும் நடத்தப்படுகின்றன.
தொகுப்புரை
திருத்தேர்வளை அருள்மிகு ஆட்கொண்டீஸ்வரர் திருக்கோயில் வழிபாடு என்பது நாள் வழிபாடு, சிறப்பு வழிபாடு என்று இருமுறைகளில் நடைபெறுகிறது. நாள்வழிபாடு என்பது ஆறுகால பூசையாக நாள்தோறும் நியமப்படி செய்துவரப்பெறுகிறது.
இந்நாள் வழிபாடு தவிர பிரதோஷம், சங்கட கர சதுர்த்தி, தேய்பிறை வழிபாடு போன்ற முறையே நந்தி எம்பெருமான், விநாயகர், பைரவர் ஆகிய தெய்வங்களுக்கு நிகழ்த்தப்படுகின்றன.
சிறப்பு வழிபாடு தமிழ் மாதங்கள் தோறும் வருகின்ற சிறப்பு நாள்களில் செய்யப்படுகிறது. சித்திரா பௌர்ணமி, சிவராத்திரி, நவராத்திரி போன்றன சிறப்பு வழிபாடுகளில் குறிக்கத்தக்கனவாகும்.
என். சூர்யா
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “திருத்தேர்வளை திருக்கோயில் வழிபாடும், விழாக்களும்”