மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

திருத்தேர்வளை திருக்கோயில் நிர்வாகமும் பணியாளர்களும்

என். சூர்யா

Jul 16, 2022

siragu thiruthervalai1

ஓர் அமைப்பின் அனைத்து செயல்பாடுகளையும் கண்காணித்து நிர்வகிக்கும் பொறுப்பு நிர்வாகம் என்று பெயர் பெறும். குறிப்பாக திருக்கோயில் நிர்வாகம் என்பது பலவகைகளில் நிகழ்கிறது. அரசுக்கு உட்பட்ட கோயிலாக இருந்தால் அறநிலையத் துறை சார்பிலும், சமஸ்தானக் கோயிலாக இருந்தால் சமஸ்தான நிர்வாகத்தாலும், ஊர்க்கோயிலாக இருந்தால் ஊர் நிர்வாகத்தார்களாளும் நிர்வகிக்கப்பெறும்.

கோயில் வருமானம், செலவீனம் இவற்றை ஒழுங்கு செய்து கோயில் சிறப்புடன் நடக்க நிர்வாகம் சிறப்புடன் செயல்பட்டாக வேண்டும். கோயில் பணியாளர்களுக்கான ஊதியம், அபிடேகப் பொருள்களுக்கான செலவு, திருவிழைாச் செலவு, மடப்பள்ளியில் உணவு தயாரிப்பதற்கான செலவு, மின் சாரச் செலவு போன்ற பல செலவுகள் கோயில் நிர்வாகத்தின் பொறுப்பில் செய்யப்பட வேண்டியனவாக உள்ளன. எனவே கோயிலைத் திறம்பட நிர்வகிக்க நிர்வாகக் குழு ஒன்று நிச்சயம் தேவைப்படுகிறது. அருள்மிகு ஆட்கொண்டீஸ்வரர் திருக்கோயில் நிர்வாகம் மற்றும் பணியாளர்கள் குறித்த செய்திகளை இவ்வியல் விளக்குகின்றது.

தேவஸ்தான நிர்வாகம்

சேது நாட்டில் இராமநாதபுர சமஸ்தானத்தின் தேவஸ்தான நிருவாகத்தின் கீழ் நூற்றுப் பதினான்கு கோயில்கள் நிர்வகிக்கப்பெற்று வருகின்றன. இவற்றுள் பல கோயில்கள் பெருமளவு வருமானத்தைப் பெற்று விளங்குகின்றன. சில கோயில்கள் வருமானத்தை எதிர்நோக்கியே நிர்வாகத்தை நடத்தி வருகின்றன. அருள்மிகு ஆண்டு கொண்டேஸ்வரா் திருக்கோயில் குறைந்தளவு வருமானத்தைப் பெற்றுச் செயல்பட்டு வருகிறது.

இராமநாதபுர சமஸ்தான தேவஸ்தானம்

சேது நாட்டுக் கோயில்கள் பெரும்பாலும் இராமநாதபுர சமஸ்தானத்திற்கு உட்பட்ட தேவஸ்தானத்தினால் நிர்வகிக்கப்பெற்றுவருகின்றன. இத்தேவஸ்தானம் நான்கு சரகங்களாகப் பிரிக்கப்பட்டு நிருவாகம் செய்யப்படுகிறது.

oஇராமநாதபுரம் சரகம்

oதிருவாடானை சரகம்

oநயினார் கோவில் சரகம்

oதிருச்சுழி சரகம்

என்பன இந்நான்கு சரகங்கள் ஆகும். திருத்தேர்வளை அருள்மிகு ஆட்கொண்டீஸ்வரர் திருக்கோயில் திருவாடானை சரகத்திற்கு உட்பட்ட நிர்வாகத்தில் அமைந்துள்ளது.

நிர்வாக வரலாறு

கி.பி, ஆயிரத்து ஐம்பத்தொன்றாம் ஆண்டுவரை இத்திருக்கோயில் இராமநாதபுரம் சேது சமஸ்தானம் சார்ந்த சேதுபதி மன்னர் ஆட்சியின் கீழ் சுயமாக நிருவாகம் செய்து வரப்பட்டது. தமிழக அரசின் இனம் ஒழிப்புச் சட்டத்தின் கீழ் அருள்மிகு ஆண்டுகொண்டீவரா் ஆலயத்திற்கு உரியதான நிலங்கள் சொத்துக்கள் யாவும் அரசால் கையகப்படுத்தப்பட்டன. அவ்வாறு அரசால் எடுத்து கொள்ளப்பட்ட நிலங்கள், சொத்துக்கள் யாவற்றுக்கும் நஷ்ட ஈட்டு தொகை ஆண்டுக்கு ஒருமுறை வழங்கப்பட்டு வருகிறது. இவ்வகையில் இக்கோயில் அவ்வகை வருமானத்தைப் பெற்று ஓரளவிற்கு செயல்பட்டுவருகிறது.

இத்திருக்கோயிலின் பெயரில் இருந்து பெறப்படும் வட்டியின் வழியாக திருக்கோயில் பணியாளர்களின் ஊதியம் மற்றும் கோயிலுக்கு உண்டான படித்தரச் செலவுகள், இதர செலவுகள், திருவிழாச் செலவுகள், மரமாத்துச் செலவுகள் போன்றவை ஓரளவிற்குச் செய்து கொள்ளப்படுகின்றன.

சேதுபதிகளும் கோயில்களின் நிர்வாக அமைப்பும்

மறவர்களின் தலைவர்களான சேதுபதிகள் இராமயண காலத்திலிருந்து புகழ் பெற்று விளங்கிய சேது பாலத்தையும் அதற்குச் செல்லும் வழியையும் காத்து வரும் பொறுப்பு மிக்க காவல் பணியில் தொடர்ந்து அமைந்துவருகின்றனர். இவர்கள் செம்பிய நாடு மறவர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர். கி.பி. ஆயிரத்து அறுநூற்று நான்காம் ஆண்டில் மதுரையை ஆண்ட முத்துகிருட்டின நாயக்கர் என்பவர் சேதுபதி மரபினரை ஆட்சிக்குக் கொணர்ந்தார்.

சேதுபதி பரம்பரை

சேதுபதி மன்னர்களின் பரம்பரை மேற்காண் காலத்தில் இருந்துத்தொடங்கி தொடர்ந்து சேது நாட்டை ஆட்சி மற்றும் நிர்வாகம் செய்துவந்துள்ளது.

 • சடைக்கதேவர் என்ற உடையன் சேதுபதி கி.பி. 1605 –ஆம் ஆண்டிலிருந்து 1671 வரை ஆட்சி செய்தார்.
 • கிழவன் சேதுபதி கி.பி. 1761ஆம் ஆண்டிலிருந்து கி.பி. 1772 ஆண்டுவரை ஆட்சி செய்தார்.
 • சேதுபதி மன்னர்களில் கி.பி. 1761 லிருந்து 1772 வரையும் கி.பி.1780 லிருந்து 1794 வரை ஆகிய ஆண்டுகளில் ஆட்சிபுரிந்த முத்து ராமலிங்க சேதுபதி மிக முக்கியமானவர்.

இவருக்கு பின் நாகநாத சேதுபதி கடைசி ஜமீன்தாராக விளங்கினார். இவர் சென்னை சட்டமன்றத்தில் 1946 முதல் 1962 வரை இப்பகுதியின் உறுப்பினராக இருந்தார். இவர் இராஜாஜி, காமராசர் ஆகியோரின் அமைச்சரவையில் 1952 முதல் 1957 வரை அமைச்சராய் இருந்தார். இவருக்கு பின் இன்று வரை பலர் தேவஸ்தானத்தின் செயல்பாடுகளை கவனிக்கின்றனர்.

அறங்காவலர்

தேவஸ்தான நிர்வாக அலுவலரின் பொறுப்பின் கீழ் செயல்பட்டு வருபவர் அறங்காவலர் எனப்படுகின்றார். இவ்வறங்காவலர் பரம்பரை பரம்பரையாக பணியாற்றி வருகின்றனர். பரம்பரையாக அலுவலகப் பணியாற்றும் அறங்காவலர் கோயிலுக்குரிய செயல்பாடுகள் அனைத்திலும் தன்னை ஈடுபடுத்தி கொண்டு வருகிறார் .

இத்திருக்கோவில் மரியாதைக்குரிய சேதுபதி பரம்பரை அறங்காவலர் குழுவைச் சார்ந்து செயல்பட்டு வருகிறது. தற்போது பரம்பரை அறங்காவலராக சேதுபதி மன்னர் பரம்பரையைச் சேர்ந்த ஆர்.பி.கேராகேசரி நாசேசுவரி நாச்சியார் அவர்கள் விளங்கி வருகிறார். இக்கோயிலின் விழாக்களின் போது முதல் மரியாதை இவர்களுக்கு அளித்த பின்புதான் மற்ற மரியாரைதகள் நடைபெறும் . இவருக்கு முன் சேதுபதி ராணி ஸ்ரீமதி இந்திரா தேவி நாச்சியார் பி.எ அவர்கள் பரம்பரை அறங்காவலராக இருந்து வந்தார்.

சேதுபதி பரம்பரையின் ஆட்சி பற்றிப் பின்வரும் பட்டியல் தெளிவுபட எடுத்துரைக்கிறது.

இராமநாதபுரம் தேவஸ்தான சமஸ்தானத்தின் நிர்வாகிகளின் காலமும் பெயரும்

வ.எண் காலம் பெயர்
 1 1605 – 1621 சடைக்க தேவர் என்ற உடையன் சேதுபதி
 2 1622 – 1635 கூத்தன் சேதுபதி
 3 1635 – 1646 இரண்டாம் சடைக்கதேவர் என்ற தளவாய் சேதுபதி
 4 1647 – 1672 இரகுநாத சேதுபதி என்ற திருமலை
 5 1672 இராஜ சூரிய சேதுபதி
 6 1673 ஆதானா இரகுநாத சேதுபதி
 7 1674 – 1710 இரகுநாத சேதுபதி என்ற கிழவன் சேதுபதி
 8 1711 – 1725 திரு உடைக்கதேவர் என்ற விஜயரகுநாத சேதுபதி
 9 1726 கந்த ரேசுவர இரகுநாத சேதுபதி
 10 1726 – 1729 பவாணி சங்கர் சேதுபதி
 11 1730 – 1735 கட்டத்தேவர் என்ற விஜயரகுநாத சேதுபதி
 12 1736 – 1748 சிவக்குமார் முத்து விஜய ரகுநாத சேதுபதி
 13 1748 – 1749 சேதுபதி ராக்கத் தேவர்
 14 1749 – 1762 செல்லமுத்து விஜயரகுநாத சேதுபதி
 15 1763 – 1772 முத்துராமலிங்க சேதுபதி
 16 1795 – 1803 ஆங்கிலேய நிர்வாகம்
 17 1803 – 1807 இராணி மங்களேசுவரி சேதுபதி நாச்சியார்
 18 1807 – 1820 முத்து விஜய ரகுநாத சேதுபதி
 19 1820 – 1829 விஜய ரகுநாத ராமசாமி சேதுபதி
 20 1829 – 1830 இராணி சேதுபதி முத்து வீராயி நாச்சியார்
 21 1830 – 1845 மங்களேசுவரி நாச்சியார் துரை ராஜ நாச்சியர்
 22 1846 – 1862 இராணி சேதுபதி பர்வதவர்தினி நாச்சியார்
 23 1862 – 1873 முத்து ராமலிங்க சேதுபதி
 24 1873 – 1888 இளவரசர் பாஸ்கர சேதுபதி
 25 1889 – 1903 இராஜ பாஸ்கர சேதுபதி
 26 1903 – 1909 மாற்ற நிர்வாகம்
 27 03.06.1910 – 04.08.1928 முத்து ராமலிங்க சேதுபதி
 28 04.08.1928 – 02.04.1945 ரு.சண்முக ராஜேசுவர நாகநாத சேதுபதி
 29 06.08.1935 – 02.04.1945 ரு. சண்முக ராஜேசுவர நாகநாத சேதுபதி
 30 02.04.1945 – 04.03.1967 ரு. சண்முக ராஜேசுவர நாகநாத சேதுபதி
 31 05.03.1967 – 12.04.1779 இராமநாத சேதுபதி
 32 12.04.1979 இராணி இந்திரா தேவி நாச்சியார்

 

என்ற நிலையில் சேதுபதி மரபினர் சேது நாட்டுக் கோயில்களுக்கான அறங்காவலராக விளங்கி வந்துள்ளனர்.

விரவினங்கள்

இத்திருக்கோயிலுக்கு உண்டான முக்கியமான வருமானம் கீழ்கண்டவாறு வகைப்படுத்தப்படுகிறது.

 • முதலீடுகளிலிருந்து கிடைக்கும் வட்டி
 • திருமணங்கள் நடக்கும் போது கிடைக்கும் கட்டணப் பணம்
 • அரசுமானியம்
 • உண்டியல் வருமானம்

ஆகியவை முக்கிய வருமானங்களாக கருதப்படுகின்றன.

செலவினங்கள்                                                                                                                                                                                                                                                    

இக்கோயிலுக்கு உண்டான செலவினங்கள் கிழ்கண்டவாறு அமைகின்றன.

ஊழியர்களின் ஊதியம்

திருவிழாச் செலவுகள்

கோயிலுக்கு வேண்டிய தினசரி பூஜைக்குரிய செலவுகள்

நெய்வேத்திய அரிசி

மின்கட்டணச் செலவு

மராமத்துச் செலவு

போன்றவை செலவுகளாக அமைகின்றன. இக்கோயிலுக்கு வருமானத்தை காட்டிலும் செலவு அதிகமாகக் காணப்படுகிறது.

பணியாளர்கள்

திருக்கோயிலில் பணியாற்றுபவர் பணியாளர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். அவர்களின் பணி நிரல் பின்வருமாறு.

 • விசாரணர்
 • பூசகர்
 • பரிசாரகர்
 • காவலர்
 • துப்புரவாளர்

என இத்திருக்கோயில் பணியாளர்கள் வகைப்படுத்தப் படுகிறார்கள் .இவர்கள் பணிக்கு ஏற்றவாறு ஊதியம் வழங்கப் பெற்றாலும் அது மிகக் குறைவானதே ஆகும். . இவர்களின் பணிகள் பின்வருமாறு

விசாரணர்

திருக்கோயிலில் பூசைகள் மற்ற வேலைகள் அனைத்தும் ஒழுங்காக நடைபெறுகிறதா என்று கண்காணிப்பதும், ஊழியர்களின் சம்பள ரசீது, மின்கட்டண ரசீது மற்றும் இதர ரசீதுகள் போன்றவற்றைத் தன் கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்து அதற்குண்டான தொகையை தேவஸ்தானத்திலிருந்து பெற்று பட்டுவாட செய்வது இவருடைய வேலை ஆகும். இப்பணியில் இருப்பவர்கள் பரம்பரை பரம்பரையாக இவ்வேலையைச் செய்து வருகின்றனர். தற்போது இப்பணியை திருத்தேர்வளையைச் சேர்ந்த திரு. சாத்தப்பன் கவனித்து வருகிறார்.

பூசகர்

திருக்கோயிலில் பூசை நிகழ்த்துபவர் பூசகர் என்று அழைக்கப்படுகிறார். இக்கோயிலுக்கு தினசரி ஆறு காலப் பூசை நடத்தப்படுகிறது. இப்பூசைகளின்போது, பூசை செய்யும் பணியினை பூசகர் செவ்வனே செய்து வருகிறார்.

பரிசாரகர்

திருக்கோயில் விக்கிரகங்களுக்கு வேண்டிய நெய்வேந்தியப்பொருள்களை தயாரிப்பது இவரது பணியாகும். இப்பணியிலும் இத்திருக்கோயிலில் ஒருவர் அமைந்துள்ளார். மேலும் இவர் நாள்தோறும் அதிகாலையில் அனைத்துத் தெய்வத் திருவுருவங்களையும் நீருற்றி சுத்தம் செய்வதும் அதன் பிறகு அனைத்துத் திருவுருவங்களுக்கும் எண்ணெய் காப்பு இட்டு பூசைக்கான ஏற்பாடுகளையும் செய்து கொடுப்பது இவருடைய வேலை ஆகும்.

காவலர்

அர்த்த சாம பூசை முடிந்த பின் கோயில் நடையைச் சாத்துவதும் அதன் பின் கோயிலைக் காப்பதும், அதிகாலையில் பூசைக்காக திருக்கோயிலில் நடையை திறந்து வைப்பதும் கோயில் காவலரின் பணியாகும்.

கோயிலை இரவு நேரங்களிலும், பகல் நேரங்களிலும் காவல் காத்து வருவது இவருடைய முக்கியப் பணியாகும். இப்பணியிலும் ஒருவர் இக்கோயிலில் அமைந்து வருகிறார்.

துப்புரவாளர்

அதிகாலையில் திருக்கோயிலுக்குச் சென்று திருக்கோயிலை அதன் வளாகத்தைப் பெருக்கிச் சுத்தம் செய்வது இவருடைய முக்கிய வேலையாகும். இறைவனுக்குப் பூசை செய்வதற்கு முன் இவருடைய பணியை செய்து முடிப்பர்.

சொத்துகள்

இத்திருக்கோயிலின் சொத்துகள் என பார்க்கும் போது அசையும் சொத்துகளே உள்ளன. இத்திருக்கோயிலுக்கு அசையா சொத்துக்கள் என்று எதுவும் இல்லை.

அசையா சொத்துக்கள் அனைத்தும் அரசால் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் பலரும் சேர்ந்து, தங்க நகைகள் வெள்ளி ஆபரணங்கள் போன்றவற்றை அளித்துள்ளனர். இச்சொத்துகளாகிய அணிகலன்கள் இறைவனுக்கு விழாக்களின் போது அணிவிக்கப்படுகின்றன.

இவ்வாறு நிர்வாக அமைப்பானது சிறப்பான நிலையில் திருத்தேர்வளை கோயிலில் அமைந்துள்ளது.

தொகுப்புரை

திருத்தேர்வளை திருக்கோயிலானது இராமநாதபுர மன்னர்தம் ஆட்சிக்குட்பட்ட தேவஸ்தானத்தினால் நிர்வகிக்கப்பெற்று வருகிறது. இதன் நிலங்கள் தமிழக அரசின் கீழ் சென்று விட்டாலும் அதற்கான ஆண்டு இழப்பீட்டுத்தொகை கொண்டு செலவுகள் செய்யப்பெற்று வருகின்றன. பரிசாரகர், பூசகர், விசாரணர், பாதுகாவலர், துப்புறவாளர் போன்றோர் பரம்பரை பரம்பரையாக இக்கோயிலுக்குப் பணியாற்றி வருகின்றனர். இக்கோயில் நிர்வாகம் பொருளாதாரப் பற்றாக்குறையில் இயங்கி வருகிறது. அசையா சொத்துக்கள் எதுவும் அற்ற நிலையில் அசையும் சொத்துக்களான ஆபரணங்களைக் கொண்டு இவ்வாலயம் திகழ்கிறது. இந்த ஆபரணங்கள் திருவிழாக்களின்போது இறை உருவங்களுக்கு அணிவிக்கப்பெறுகின்றன.

இருப்பினும் செம்மைபட திருத்தேர்வளை ஆட்கொண்டீஸ்வரர் திருக்கோயில் நிர்வகிக்கப் பெற்றுவருகிறது.

முடிவுகள்

திருத்தேர்வளை அருள்மிகு ஆண்டுகொண்டீஸ்வரா் திருக்கோயில் வரலாறும், வழிபாட்டு முறைகளும்” என்ற தலைப்பிலான இவ்வாய்வின் வழியாகக் கண்டறியப்பெற்ற முடிவுகள் பின்வருமாறு.

இராமநாதபுர மாவட்டம், இராஜ சிங்க மங்கலம் வட்டத்தில் அமைந்துள்ள திருத்தேர்வளை என்ற ஊரில் அருள்மிகு ஆனந்தவள்ளி உடனுறை ஆட்கொண்டீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.

இக்கோயில் சுயம்பு லிங்கமாகத் தோன்றிய ஆட்கொண்டீஸ்வரரரை மையமாக வைத்து எழுப்பப்பெற்றுள்ளது. இதே ஊரில் மற்றொரு இடத்தில் ஆகாய முத்து மாரியம்மன் என்ற ஒரு அம்மனும் சுயம்பு நிலையில் எழுந்து அருள்பாலிக்கின்றது. இவ்விரு தெய்வங்களும் இவ்வூருக்கு இறைபக்தியை மிகுவித்துக் கொண்டுள்ளன.

ஒரு பெரியவரால் வணங்கப்பெற்ற ஆட்கொண்டீசுவரர் சுயம்பு லிங்கத்திற்கு, தளபதி சேதுபதி என்பவர் கோயில் கட்ட எண்ணி அது நிறைவேறாமல் போனது. பின்பு ஊர்மக்கள், மற்றும் பிறர் உதவியால் தற்போது இக்கோயில் புனரமைக்கப்பெற்றுள்ளது.

அருள்மிகு ஆட்கொண்டீசர் கோயில் மதில் சுவர்கள், சுற்றுச் சன்னதிகள், கருவறை, மகாமண்டபம், சோபன மண்டபம் போன்ற அமைப்புகளைப் பெற்று பெரும் பரப்பளவில் விரிந்து காணப்படுகிறது.

இவ்விறைவனுக்கு ஆறுகால பூசைகள் நடைபெற்றுவருகிறது. இறைவியான ஆனந்தவள்ளி அம்மைக்கும் தகுந்த நிலையில் பூசைகள் செய்யப்படுகின்றன.

தமிழ் மாதங்களில் வரும் சிறப்பு விழாக்கள் இங்குச் சிறப்புற கொண்டாடப் படுகின்றன. குறிப்பாக சிவன் ராத்திரி, நவராத்திரி போன்றன சிறப்புடன் இக்கோயிலில் நடத்தப்படுகின்றன.

இக்கோயிலின் நிர்வாகம் இராமநாரபுரம் சமஸ்தானத்திற்கு உட்பட்ட தேவஸ்தானத்தால் நிர்வகிக்கப்பெற்றுவருகிறது. இதன் வருமானம் போதிய அளவு இல்லாநிலையிலும் இதன் நிர்வாகம் சிறப்புடன் நடைபெற்றுவருகிறது.

எதிர்காலத்தில் இக்கோயில் பொருளாதார அளவிலும், இறை நம்பிக்கை அளவிலும் வளர வேண்டிய நிலையில் உள்ளது.


என். சூர்யா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “திருத்தேர்வளை திருக்கோயில் நிர்வாகமும் பணியாளர்களும்”

அதிகம் படித்தது