மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

நல்லெண்ணெயில் வாய் கொப்புளிப்பதால் உண்டாகும் பயன்கள்

முனைவர். ந. அரவிந்த்

Mar 5, 2022

vaai koppaliththal1

அதிகாலையில் எழுந்தவுடன் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டால் அதற்கு பொதுவாக பல் துலக்க வேண்டும், மலசலம் கழிக்க வேண்டும் என்று பதில் கிடைக்கும்.

இவை இரண்டுமே தவிர, இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் காலையில் எழுந்தவுடன் முதல் வேலையாக அலைபேசியைத்தான் பார்க்கின்றார்கள். இது ஒரு தவறான பழக்கம். அதிலும் சிலர் மின் விளக்குகளை போடாமல் இருட்டிலேயே அலைபேசியை பார்க்கின்றார்கள். இருட்டில் அலைபேசி பார்ப்போருக்கு விரைவாக கண்பார்வையில் பிரச்சனைகள் வரும் என்பதில் ஐயமில்லை.

பல் துலக்குவதற்கு முன்னர் மற்றொரு வேலையை நாம் செய்தால் நம்முடைய உடல் ஆரோக்கியமாக இருக்கும். அது நல்லெண்ணெயில் வாய் கொப்புளிப்பதாகும். இது மிகவும் எளிதானது. காலை எழுந்தவுடன் சிறுநீர் கழித்த பின்னர் தண்ணீரால் ஒரு முறை வாய் கொப்பளித்து அதை வெளியே துப்பிய பின்னர் சுமார் 15 முதல் 20 மில்லி லிட்டர் அளவிற்கு நல்லெண்ணெயை வாயில் ஊற்றி, வாயை நன்கு மூடி, வாய் கொப்புளிக்க வேண்டும்.

பொதுவாகவே, இரவில் தூங்கி காலையில் விழிக்கும் போது நம்முடைய உடல் சூடாக இருக்கும். இவ்வாறு நல்லெண்ணெய்யில் வாய் கொப்பளிப்பதால் உடல் குளிர்ச்சியடையும். முகம், கழுத்து தைராய்டு சுரப்பிகள், மூளை போன்ற பகுதிகள் ஆரோக்கியமடையும். முகம் பளபளப்பாகவும் இருக்கும். சூட்டினால் உண்டாகும் கண் எரிச்சல், வாய்ப்புண் குணமாகும். இரவில் தூக்கமில்லாமல் அவதிப்படுபவர்களுக்கு ஆழ்ந்த தூக்கம் வரும். தைராய்டு சுரப்பிகள் நன்றாக வேலை செய்யும். மிக முக்கியமாக உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும்.

சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வாய் கொப்பளிக்க வேண்டும். அதற்கு பின்னர் நல்லெண்ணெயில் உள்ள பசைத்தன்மை தானாக மறைந்து நமக்கு வாயில் தண்ணீர் வைத்து வாய் கொப்புளிப்பது போல் ஒரு உணர்வு ஏற்படும். உடனே வாய் கொப்புளிப்பதை நிறுத்தி, வாயில் உள்ள அந்த கழிவு நீரினை வெளியே துப்பி விடுங்கள்.

இது ஒரு நச்சு நீர். இது உடலில் உள்ள, முக்கியமாக இரத்தத்தில் உள்ள விஷங்களை உறிந்து வைத்திருக்கும் ஒரு கெட்ட கழிவு நீர்.  இதில் ஒரு சொட்டு தொண்டைக்குள் சென்றால் கூட அது எதிர்வினைகளை உண்டு பண்ணும். எனவே இந்த கழிவு நீரை கவனமாக வெளியேற்ற வேண்டும். அதற்கு பின்னர் நாம் நல்ல தண்ணீரால் வாய் கொப்பளித்துவிட்டு பல் துலக்க வேண்டும்.

இந்தக் கழிவு நீரில் விஷத்தன்மை உண்மையிலேயே உள்ளதா என்பதை நாம் எளிதாக கண்டு கொள்ள முடியும். நம் வீட்டில் உள்ள, ஏதாவது ஒரு தேவை இல்லாத செடியின் அடி பகுதியில் தொடர்ந்து ஒரு மாதம் இந்த நீரை துப்பி வந்தால் அந்த செடியானது பட்டு போகும். அந்த அளவிற்கு இதில் விஷத்தன்மை நிறைந்துள்ளது.

இதனை நான் செய்யாவிட்டால், அந்த விஷம் நம் உடலிலேயே தங்கி விடும். ஒரு நாளைக்கு காலையில் மட்டும் ஒரு முறை செய்தால் போதுமானது. நாம் உண்ணும் தானியங்கள், காய்கறிகள் மற்றும் பழங்கள் விவசாயம் செய்யும்போது செயற்கை உரங்களையும் பூச்சிக்கொல்லி மருந்துகளையும் பயன்படுத்துவதால் நம்முடைய உணவு விஷமாகிறது. இந்த விஷம்தான் நம் உடலில் கலக்கின்றது.

vaai koppaliththal2

இதற்கு மரச் செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய் பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். கடையில் நேரடியாக வாங்கும் நல்லெண்ணையில் கலப்படம் இருக்க வாய்ப்புள்ளது. யாராவது தூக்கம் சம்பந்தப்பட்ட பிரச்சனை அல்லது நரம்பு கோளாறுகளினால் பாதிக்கப்பட்டு இருந்தால் அவர்கள் நல்லெண்ணெய்க்கு பதிலாக ஷீரபலா தைலத்தை (Ksheerabala Thailam) உபயோகப்படுத்தலாம். இவ்வாறு செய்வதால் உடலில் உள்ள நரம்புகள் பலப்படும். ஷீரபலா என்பது பசு நெய்யும், பாலா இலைகளும், நல்லெண்ணெயும் கலந்த ஒரு தைலமாகும். இந்த தைலம் சித்தா அல்லது ஆயுர்வேத மருந்து கடைகளில் கிடைக்கும்.


முனைவர். ந. அரவிந்த்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “நல்லெண்ணெயில் வாய் கொப்புளிப்பதால் உண்டாகும் பயன்கள்”

அதிகம் படித்தது