மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பன்னிரண்டரை கிராம அரும்பு கூற்றா இனம்

ஈ. ரமாமணி

Jan 14, 2023

siragu tamilinam

பன்னிரண்டரை கிராம அரும்பு கூற்றா பிள்ளைமார்களின் வாழ்வியல் என்ற தலைப்பில் செய்யப்பெற்றுள்ள ஆய்வின் வழியாகப் பெறப்பட்ட முடிவுகள் பின்வருமாறு.

பன்னிரண்டரை கிராம அரும்பு கூற்றா பிள்ளைமார்கள் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருவாடானை வட்டத்தில் திருவெற்றியூர் என்ற ஊரினை ஒட்டி வாழ்ந்துவரும் இனக்குழுவினர் ஆவர்.

இவர்களைப் பற்றிய குறிப்பு எட்கர் தாட்சன் எழுதிய தென்னிந்திய குலங்களும் குடிகளும் என்ற நூலில் இடம்பெற்றுள்ளது. அரும்பு கட்டி வேளாளர் என்று இவர்களை எட்கர் தாட்சன் குறிப்பிட்டுள்ளார். அரும்பு போன்ற ஒன்றை சிவ அடையாளத்தை இவர்கள் அணிந்தவர்களாக இதன்வழி அறியமுடிகிறது.

அரும்பு கூற்றா என்பதற்கு மூக்கு குத்தாத நிலை என்று தற்போதைய நாட்டுப்புற வழக்கு  காரணம் சொல்கிறது. இருப்பினும் அரும்பூர் என்ற ஊர் இருப்பதாலும், அரும்பு கோத்த வெள்ளாளர் என்ற இனம் இருப்பதாலும் அரும்பு கட்டி என்ற பெயரே அரும்பு கூற்றா என்று மருவி வழங்கி வருதல் வேண்டும் என்று முடியமுடிகின்றது.

இவ்வினத்துப் பெண்கள் பிறந்த வீட்டிலேயே இருப்பர். திருமணம் முடிந்த பின்னரும் பெண்ணின் தாய்வீடே அப்பெண்ணின் வாழ்விடமாக அமைகிறது. கணவன் வீட்டார் அவ்வப்போது பெண் இருக்குமிடத்திற்கு வந்து செல்லும் நடைமுறை இன்னமும் இவ்வினக்குழுவில் தொடர்கிறது.

இந்நிலை தாய்வழிச் சமுதாயமாக இவ்வினக்குழு அமைந்திருக்கலாம் என்ற முடிவை பெற வைக்கின்றது.

இவர்கள் திருவெற்றியூரைச் சுற்றி பன்னிரண்டரை கிராமங்களில் வசித்து வருகின்றனர். பிள்ளைமார்கள் என்றும் வேளாளர்கள் என்றும் இவர்கள் அழைக்கப்படுகின்றனர். இருப்பினும் தற்போது வீரகுடி வெள்ளாளர் என்ற இனத்திற்குள் இவர்களை அரசு அமைத்துள்ளது.

இவர்களின் வாழ்வியலில் பல வேறுபட்ட நடைமுறைகள், சடங்குகள் காணப்படுகின்றன.

இவர்கள் திருவெற்றியூர் அருள்மிகு பாகம் பிரியாள்  உடனாய வன்மீகநாதர் என்ற தெய்வத்தை முன்வைத்தே வாழ்ந்துவருகின்றனர். இவ்வினக் குழுவினர் இக்கோயிலின் சித்திரைத் திருவிழாவில் பத்துநாள் மண்டகப்படிதாரர்களாகவும் விளங்கி வருகின்றனர்.

திருவெற்றியூர் கோயிலுக்கான தேரினை முன்பும் தற்போதும் இவ்வினக்குழுவினர் செய்து அளித்துள்ளனர்.

இவ்வினக்குழுவினரின் திருமணத்தின்போது பெண் அணிந்துள்ள கருகமணியை மாப்பிள்ளையின் உடன்பிறந்தால் நீக்கிட, அதன்பின் மங்கலஅணி அணிவிக்கப்படுகிறது. தாயப்பானை வைத்தல் என்ற திருமணநாள் சமையல் தொடங்கும் நிகழ்ச்சியும்  மணப்பெண்ணை வைத்து நடத்தப்படுகிறது. இவை போன்ற பல வேறுபாடுகள் கொண்ட நடைமுறைகளை இவ்வினம் கொண்டுள்ளது.

இவர்களின் குடும்பத்தில் பெண் பிள்ளைகள் பிறப்பதையே செல்வமாகக் கருதுகின்றர். மேலும் மாமியார் வீ்ட்டோடு இக்குலப் பெண்களின் தொடர்பு மிகக் குறைவாக விளங்குதால் தாய்வீட்டில் அமைதியாக இப்பெண்களின் வாழ்க்கை அமைகிறது.

பிறப்பு, திருமணம், இறப்பு போன்ற நிலைகளில் பல சடங்குகளில் இவர்களின் வேறுபாடுடைய சிறப்புக் கூறுகள் பல சடங்குகளாக அமைகின்றன.

மொத்தத்தில் பன்னிரண்டரை கிராம அரும்பு கூற்றா பிள்ளைமார்கள் தமிழகத்தின் பூர்வீக குடிகள் என்பது உறுதியாகின்றது.


ஈ. ரமாமணி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பன்னிரண்டரை கிராம அரும்பு கூற்றா இனம்”

அதிகம் படித்தது