மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பெண்ணிய பாதை

ப்ரிசில்லா

Mar 18, 2023

Siragu penniyam1
பெண்ணியம் என்ற சொல் 1960க்குப் பிறகே இந்தியாவில் அதிகமாகப் பேசப்பட்டது. தொடர்ந்து பெண்ணியம் பற்றி சிந்திப்பது பல தளங்களில் விரிவடைந்து வளர்ந்து வருகிறது. எனினும் பெண் முழுமையாக விடுதலை அடைந்துவிட்டாளா? என்பதை இக்கட்டுரை ஆய்வுக்குட்படுத்துகிறது.

பெண்ணியம் பல லட்சக்கணக்கான சிந்தனைகளால் ஆன சமூக அமைப்பு. இது ஆணுக்கு எதிரானதல்ல. இல்லற வாழ்க்கைக்கு எதிரானதுமல்ல. நீயும் நானும் ஒன்றுபட்டுத் தோழமை உணர்வோடு வாழ்க்கை நடத்துவோம் என்ற எண்ணம் உடையது. புதுமைப்பெண் ஆணை தனது தோழனாகக் கருதுகிறாள்.

சங்ககாலத்தில் பெண்கள் மனைக்கு விளக்கமாக புலமைமிக்கவராக, வீர உணர்வுடையோராக, அரசியல் தூதுவராக விளங்கிய போதிலும்

“அச்சமும் நாணும் மடனும் முந்துறுத்த
நிச்சமும் பெண்பாற்குரிய.” (தொல்.களவு -15)
என்ற தொல்காப்பியரின் சிந்தனை மூலம் பழங்காலந்தொட்டே பெண் எப்படி இருக்க வேண்டும் என்ற ஆணாதிக்க பண்பாட்டு உருவாக்கத்தை இதன்முலம் உணர்ந்து கொள்ளலாம்.

“உண்டிசுருங்குதல் பெண்டிற்கு அழகு” என்று பெண்களின் உணவிலேயே சில வரையறைகள். “முளி தயிர் பிசைந்த காந்தள் மெல்விரல” என்று போற்றும் நிலைகள். “மண்மகள் அறியா வண்ணசீறடிகள்” என்று வீட்டிலேயே அடைத்து வைக்கும் சிறைக்கைதிகள். இப்படியாக பெண்களின் உணர்வுகள் ஒவ்வொன்றும் மற்றவர்களாலேயே தீர்மானிக்கப்படுகிறது. பெண் அஞ்சி வாழவேண்டியவள். அதிர்ந்து நடக்கக்கூடாது, உரத்தக் குரலில் பேசக் கூடாது, பொறுமையும் தியாகமுமே அவளது அணிகலன் என்று நாள்தோறும் அறிவுறுத்தி வளர்க்கப்படுகிறாள். அதிகாரமற்ற பொம்மைகளாகவே அலங்கரிக்கப்படுகிறாள். இவை அனைத்தும் சமூகத்தால் ஏற்படுத்தபட்ட கட்டமைப்புகள்.

ஆரியர் வருகைக்குப்பின் பெண் மிகவும் தாழ்த்தப்பட்டவளாகவே கருதப்பட்டாள். மனு தமது மனுதர்மத்தில் மிகக்கடுமையான சாதிக் கட்டுப்பாட்டையும் பெண் அடிமைத்தனத்தையும் வரவேற்றார். இவர் தமது மனுதர்மம் எனும் நூலில் “பெண்ணின் திருமண வயது ஏழு என்றும், மனைவி கணவனை எப்போதும் கடவுளாக நினைத்துப் போற்ற வேண்டுமென்றும் கூறுகிறார். கணவன் நற்பண்புகள் இல்லாதவனாக இருந்தாலும் அவனை வழிபட வேண்டும். பெண்ணாகப் பிறந்தவள் எந்நிலையிலும் ஆணுக்கு அடிமையே. ஒரு பெண் குழந்தைப் பருவத்தில் தந்தைக்கும், மங்கைப் பருவத்தில் கணவனுக்கும், பின் மகனுக்கும் அடிமையாக இருக்க வேண்டுமென்று பெண்ணடிமைத் தனத்தை சட்டமாக்கியவர் மனு. இதன் தொடர்ச்சியாகத்தான் பெண்கள் பல நூற்றாண்டுகளாக அடிமையாக வாழ்ந்தனர். பெண் உரிமைகள் பறிக்கப்பட்டன. ஆணும் பெண்ணும் சமம் என்று பேசப்படும் இன்றைய நாளிலும் பெண்கள் மண்ணுக்கு பாரமென்றே நினைக்கிறார்கள்.

Siragu penniyam3

பெண்ணை நோக்குகையில் மட்டுமே சமூகத்தின் கண்கள் மாறுகண் பார்வை உடையதாகிறது. இந்தியாவில் ஒரு பெண் பிறவி எடுத்ததன் பயனே அவள் தாய்மை அடைவதில்தான் உள்ளது என அழுத்தமாக தலைமுறை தலைமுறையாக சொல்லப்பட்டுவருகிறது.

பெண்ணாக பிறந்ததற்கு  – 25 மதிப்பெண்கள்
பூப்படைதல்                           – 25 மதிப்பெண்கள்
திருமணம்                               – 25 மதிப்பெண்கள்
தாய்மை                                    – 25 மதிப்பெண்கள்
மொத்தம்                                  – 100 மதிப்பெண்கள்
என தாய்மையால் மட்டுமே நூறு மதிப்பெண்கள் வழங்கும் சமூதாயம் இது. குழந்தை பெறாத பெண்களை இந்த சமூகம் வினோதமாகப் பார்க்கிறது. நிமிர்ந்த நன்னடையும், நேர்கொண்ட பார்வையும், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும் கொண்டு வாழும் புதுமை பெண்களும் கூட தாய்மைப் பேறு இல்லையெனில் அவமானத்திற்கும் ஏளனத்திற்கும் உள்ளாகிறார்கள். குழந்தையைப் பெற்றெடுக்க மரணவாசலை முத்தமிட்ட பெண்கள் எத்தனையோ? ஆனாலும் பிள்ளைகள் பெற்றுத்தரும் இயந்திரமாக பெண்களை மதிப்பிடுகிறார்கள். ஒரு பெண் வெறும் தாயாகவும் மனைவியாகவும் இருந்தால் மட்டும் போதாது. அவள் தன்னை உயர்ந்த நிலையில் நிறுத்திக்கொள்ளல் வேண்டும்.

ஒரு பெண் தாய்மை அடையாத போது சமூகம் அவளை கீழ்நிலைக்குத் தள்ளிவிடுவதைப் போன்று, ஒரு ஆண் பொருட்செல்வமும் கல்விச் செல்வமும் இல்லாத போது கீழ்நிலைக்குத் தள்ளப்படுகிறான். இதனை புரிந்துக்கொள்வது எப்படி என்று ஒருகணம் சிந்தித்தறிதல் வேண்டும். ஒருவன் இரு செல்வங்களையும் பெறுவது எப்படி? கல்வி ஒன்றின்மூலம் மட்டுமே. ஆக, ஆண் உயர் கல்வி கற்கிறான். உயர்பதவிகளை வகிக்கிறான். இதனால் அவன் அறிவுடையவனாகத் திகழ்கிறான். இந்த அறிவு அதிகாரத்தைக் கொடுக்கிறது. அதிகாரம் அடிமைப்படுத்துகிறது. இதுவே பெண்ணடிமையாக மாறுகிறது.

சென்ற நூற்றாண்டுகளை விட பெண்ணின் வாழ்க்கைத் தரம், கல்வி, வேலைவாய்ப்பு ஆகிய பலத்துறைகளிலும் இன்று பன்மடங்கு மேம்பட்டே இருக்கிறது. பெண் குறித்த சமூக கண்ணோட்டங்களிலும் சில வரவேற்கத்தக்க மாறுதல்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஆனால் இன்று இந்தியப்பெண்கள் அனைவரும் எல்லா உச்சங்களை தொட்டுவிட்டதாகவும் சாதனை சிகரங்களில் ஏறி நிற்பதுமான பிரம்மை மிகைப்பட்டு வருகின்றன. உண்மை அதுவல்ல. ஆண் ஆதிக்கம் செலுத்தும் துறையில் அவனுக்கு சமமாகவோ சிறப்பாகவோ பெண் வந்துவிட்டால் ஏதோ ஒரு பயம் அவனை ஆட்கொண்டு விடுகிறது. பெண் எனக்கு போட்டியா? என நினைக்கிறான். எத்தனை உயர்பதவிகள் பல வகித்தாலும் ஒரு ஆணுக்கு கீழ்தான் பெண் என்ற சமூக கற்பிதங்களை கண்டுஅஞ்சுகிறான்.

“அநாதைக்குத்தான் தெரியும்
அன்பின் தேவை
வறிஞனுக்குத்தான் இருக்கும்
செல்வத்தின் மோகம்
அடிமைக்குத்தான் இருக்கும்
சுதந்திர தாகம்
பெண்ணுக்குத்தான் புரியும்
விடுதலையின் அருமை!!”

இது கவிஞர் திலகவதியின் கவிதை.

Siragu pudhiya paadhai1

எத்தனை ஆண்டு மகளிர் தினங்களைக் கொண்டாடினாலும் உண்மையாகவே பெண் விடுதலை அடைந்து விட்டாளா என்பது கேள்விக்குறிதான். உண்மையான பெண் விடுதலை வேண்டுமானால், ஆணுக்கும் பெண்ணிற்கும் இருவேறு நீதி வழங்கும் முறை அழிந்து போக வேண்டும். பெண்ணின் மீது திணிக்கப்படும் ஆதிக்க செயல்கள் ஒழிந்து தூசுகளாய் சிதைந்து வெட்டவெளியில் மறைய வேண்டும் என்று சாடுகிறது பெரியாரின் பெண்ணிய சிந்தனைகள். பெண்கள் நாட்டின் கண்கள் என்று வெறும் வார்த்தைகளால் மட்டும் வெளிப்படுத்தாமல் அவளும் ஆணைப் போன்ற அறிவு ஜீவி என்ற சமன்பாட்டை கருத்தில் கொள்ளவேண்டும்.

“எட்டுமறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை” என்னும் பாரதியின் வாக்கினை மெய்ப்பிக்கும் வகையில் பெண்கள் தம் ஆற்றலை அனைத்து தளங்களிலும் தடம்பதித்து வருகிறார்கள். என்றாலும் முழுமையான அளவில் ஆணுக்கு நிகராகப் பெண்கள் சமத்துவம் பெறுவதற்கு இன்னும் நெடுந்தொலைவு செல்ல வேணடியுள்ளது என்பது உண்மை. இந்திய பெண்கள் இந்த அளவு சுதந்திரம் பெற்றவர்களாக இருப்பதற்கு பகுதறிவு பகலவன் தந்தை பெரியாரும் அவரது போராட்டங்களும் காரணமாக இருக்கின்றன. 1940ஆம் ஆண்டு பெண் கல்வியை வலியுறுத்திய அவர், “பெண்களை ஆண்கள் படிக்கவைக்க வேண்டும்” என்று அறிவுத்தினார். மேலும் பகுத்தறிவு ஒளி எழும்பினால் எதையும் சிந்தித்து வரும் சக்தி வளர்ந்தால் மூட நம்பிக்கைகள் மிரண்டோடும் என்ற பெண்ணிய தீப்பொறிகளை பற்றவைத்து அடிமைத்தனத்திலுள்ள பாசத்தை வேரோடு அறுத்து எறிந்தார்.

பெண்கள் கிணற்றுத்தவளைகளாய் வாழ்தல் கூடாது. ஆணும் பெண்ணும் ஒத்த உரிமையுடன் நாட்டைக் காப்பது, ஆண் வீட்டைக் காப்பது, பெண் என்ற நிலைமாறி இருவரும் ஒத்து நாட்டையும் வீட்டையும் காக்க வேண்டும்.

பெண்களின் சுதந்திரம் பொது உடைமைக் கொள்கை மூலந்தான் ஏற்பட முடியும். ஏனெனில் பொது உடைமைக் கொள்கை அவர்களுக்கு வாழ்க்கையின் எல்லா இடங்களிலும் சம அந்தஸ்து கொடுப்பதோடு, பொருளாதார சுதந்திரமும் கொடுக்கிறது. அது ஒவ்வொரு பெண்ணும் தனது தேவைக்கு சம்பாதிப்பதை ஆதரிப்பதால், ஆண்களோடு சம அளவில் வாழ்வதற்கு சந்தர்ப்பமளிக்கிறது. பெண்கள் ஆண்களைவிட குறைவான தகுதியுடையவர்கள் அல்ல என்று கருதுகிறது.

“நீ என் முன்னால் போகாதே
நான் உன்னை பின்தொடரமாட்டேன்….
நீ என் பின்னால் வராதே
நான் உன்னை வழிநடத்த மாட்டேன்….
என்னோடு சமமாக வா….
இணைந்து உலகை வெல்வோம்…..”
என்பதே இன்றையப் பெண்களின் கருத்தாகும்.
பெண்களின் “முணுமுணுப்புகள்
முழக்கங்களாகட்டும்
பெருமூச்சுகள்
புயலாக மாறட்டும்”.

என்ற மு.மேத்தா அவர்களின் வரிகள் பெண்களின் வாழ்க்கை வெற்றி முழக்கங்களாகட்டும் “மகளிர் தினம் பூரணத்துவம் பெற்று திகழட்டும்”.


ப்ரிசில்லா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பெண்ணிய பாதை”

அதிகம் படித்தது