மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

அன்றாட பழக்க வழக்கங்கள் மூலம் உடல் நலம் காத்தல்

முனைவர். ந. அரவிந்த்

Feb 5, 2022

முகவுரை

நான் ஓர் டாக்டர். ஆனால் மருத்துவன் அல்ல. கற்காரை எனும் காங்கிரீட்டைப் பற்றி ஆய்வு செய்து அமைப்பியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவன். கான்கிரீட்டை பற்றி படித்த அளவிற்கு மனித உடல்களை நான் படிக்கவில்லை. இருந்த போதிலும், நான் என்னுடைய உடல் மற்றும் மனம் மூலம் கற்றுக்கொண்ட பாடம் பிறருக்கும் உபயோகப்படவேண்டும் என்ற எண்ணத்தில் இதை எழுதுகிறேன். எனக்கு உடலில் இருந்த முடி உதிர்தல் மற்றும் அஜீரண கோளாறுகள் போன்ற சில வியாதிகள் எந்த மருந்திற்கும் அடங்காமல், அதே நேரத்தில் நல்ல வாழ்க்கை முறையினால் கட்டுக்குள் வந்ததை உலகு அறிய வேண்டுமென்பதே இக்கட்டுரையின் குறிக்கோள்.

இறைவன் தந்த இந்த உடல், சுற்றுப்புற சூழல், தவறான உணவு மற்றும் வாழ்க்கை முறைகளால் நோயால் பாதிக்கப்படுகிறது. இதிலிருந்து மீழ்வதற்காக நாம் உண்ணும் சில மருந்துகளால் பக்க விளைவுகள் உண்டாகின்றன. இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட நாம் நம்முடைய அன்றாட பழக்க வழக்கங்களை சரி செய்தாலே போதுமானது. நல்ல பழக்க வழக்கங்களை தினமும் தவறாது கடைபிடித்தால் உடலில் ஏதாவது ஒரு உறுப்பு பாதிப்படைதல் மற்றும் வேறு எந்த நோயாக இருந்தாலும் நம்மால் குணப்படுத்த முடியும். இதன்படி நடந்தால் நோய் இல்லாதவர்களுக்கு நோய் வராது. இந்த தொடர் கட்டுரைகளில் வரும் அனைத்தையும் நான் தினமும் கடைபிடிக்கிறேன். என்னுடைய உடலில் நிறைய நல்ல மாற்றங்களை தினமும் காண்கிறேன். நீங்களும் கடைபிடியுங்கள். நலம் பெறுங்கள்.

சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் என்பது பழமொழி. நம் உடல் மற்றும் உயிரை சுவர் மற்றும் சித்திரத்துடன் ஒப்பிடலாம். இறைவன் தந்த உடலையும் உயிரையும் அலட்சியப்படுத்துவது படைத்தவனை அவமதிப்பதை போன்றது. சில திரைப்படங்கள் ஒரே நாளில் நடக்கும் கதையை மையமாக வைத்து எடுப்பதைப்போல் இந்த புத்தகத்தில் ஒரு நாளில் நாம் காலை முதல் இரவு வரை கடைபிடிக்க வேண்டியவற்றை கோர்வையாக எளிய முறையில் தந்துள்ளேன். இந்த கட்டுரைகளை எழுத உதவிய மருத்துவர். திரு. கு. சிவராமன் அவர்களின் பேச்சுக்கள், திரு. ம. செந்தமிழன் மற்றும் திரு. அக்கு ஹீலர். அ. உமர் பாரூக் போன்றவர்கள் எழுதிய புத்தகங்கள் உதவின என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ஒருவரது உடலில் எந்த பிரச்சனை இருந்தாலும் தினமும் அதிகாலை முதல் இரவு தூங்கும் வரை இந்த கட்டுரைகளில் உள்ளவற்றை பின்பற்றினால் பழைய நிலைக்கு திரும்ப முடியும் என்பது நிச்சயம்.

அதிகாலையில் கண் விழித்தல்

அதிகாலையில் சேவல் கூவும் நேரத்தில் நாம் எழ வேண்டும். அதிகாலை எழுந்திருக்க வேண்டுமெனில், இரவில் சீக்கிரம் உறங்குவது அவசியம். குறைந்தது 8 மணி நேரம் உறங்கினால்  உடல் புத்துணர்ச்சி பெறும்.  அதிகாலை 4 மணிக்கு எழ வேண்டுமெனில் உத்தேசமாக 8 மணிக்கு படுக்கையறை செல்ல வேண்டும் அதிகபட்சம் இரவில் 9 மணி வரை விழித்திருக்கலாம்.

siragu adhigaalai1

நம் உடலானது வாதம், பித்தம், கபம் என்ற முப்பொருட்களால் ஆனது. இந்த மூன்றில் எது கூடினாலும், குறைந்தாலும் நோய் என்று வள்ளுவர் பெருமான் குறள் எண் 941ல் கூறியுள்ளார்.

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்

வளிமுதலா எண்ணிய மூன்று – குறள் 941

குறள்கூறிய இந்தமுப்பொருள்களில், பித்தம் அதிகமாக உள்ளவர்கள் இரவில் சீக்கிரம் உறங்கி அதிகாலை 4.30 மணிக்கு விழித்து குளிர்ந்த நீரில் குளித்தால் பித்தம் தணியும் என்று ஆயுர்வேத நூல்கள் கூறுகின்றன.

siragu adhigaalai2

காலையில் எழுந்தவுடன் மனம் தெளிவாக இருக்கும். இந்த நேரம் இறைவனை வணங்குவதற்கு மிக உகந்ததாகும். பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, ஏதாவது பாடம் கடினமாக இருந்தால் அவர்கள் காலைநேரத்தில் படித்தால் அது எளிதாக புரியும். உடற்பயிற்சி செய்வதற்கும் காலை நேரம் உகந்தது. காலையில் செய்யக்கூடிய உடற்பயிற்சிகளை மாலையில் செய்தால் உடல் வெப்பம் அதிகமாகும்.

அதிகாலையில் வீட்டு வாசலில் பெண்கள் கோலம் போடுவது தமிழ் நாட்டில் வழக்கமான ஒன்று. அதுவும் மார்கழி மாதம் முழுவதும் அதிகாலையில் ஆண்கள்  கோவிலிலும் தெருவிலும் இறைவனை புகழ்ந்து பாடி பஜனை செய்வதும் பெண்கள் வாசலில் கோலம் போடுவதும் காலங்காலமாக நடந்து வருகிறது. மார்கழி மாதத்தில் அதிகாலை வேளையில் அதிக அளவில் பிராண சக்தி கிடைக்கும். அதிகாலை வேளையில் உடலானது அதிகமான பிராண சக்தியை எடுப்பதால் பஜனை செய்யும் ஆண்களும் கோலம் போடும் பெண்களும் ஆரோக்கியமாக இருப்பார்கள்.

அது மட்டுமின்றி, நாம் வாழ்வில் கடைபிடிக்கும் அனைத்து செயல்களிலும் யோகாசனம் உள்ளது. குனிந்து பெருக்குதல்,  கோலம் போடுதல் மற்றும்  தண்ணீர் குடம் இடுப்பில் வைத்தல் என அனைத்தும் யோக முறைப்படி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும். இவைகளை பெண்கள் செய்வதால் அவர்களுக்கு தேவையான உடற்பயிற்சியானது தானாகவே அவர்களுக்கு கிடைக்கும். பெண்கள் கோலம் போடும்போது உட்கார்ந்திருக்கும் முறை அவர்களுக்கு கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட கோளாறுகள் வராமல் பெண்களை பாதுகாக்கிறது.


முனைவர். ந. அரவிந்த்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “அன்றாட பழக்க வழக்கங்கள் மூலம் உடல் நலம் காத்தல்”

அதிகம் படித்தது