மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

இந்தியா சாலை விபத்துகளின் நாடா?

பேராசிரியர் பு.அன்பழகன்

Feb 27, 2021

siragu road-accident
உலகின் சமூகப்பொருளாதார வளர்ச்சிக்கு போக்குவரத்து முக்கியப் பங்காற்றுகிறது. எனவேதான் பொருளாதார வல்லுனர்கள் இதனை நாட்டின் ரத்த நாளங்கள் என அழைக்கின்றனர். போக்குவரத்தின் அசுர வளர்ச்சியின் விளைவாக உலகின் பஞ்சம்-பட்டினிகள் பெருமளவு எந்தபகுதிகளிலும் தற்போது கோலாச்சுவதில்லை, பல நாடுகளில் வறுமையின் தீவிரம் பெருமளவிற்கு குறைந்துள்ளது, வேலைவாய்ப்பு உள்ள பகுதிகளை நோக்கி மக்கள் அதிக அளவில் புலம்பெயர்கின்றனர். ஒருநாட்டில் மிகை உற்பத்தி, தேவைப்படும் நாடுகளுக்கு அளிக்கப்படுகிறது. சமுதாயத்தில் விளிம்பு நிலையில் உள்ள மக்கள் மருத்துவம், கல்வி, வேலைவாய்ப்பு போன்றவைகளை எளிதாக அணுகமுடிகிறது. இதன் முக்கிய விளைவு உலகின் பாதிக்கு மேற்பட்ட மக்கள் நகரங்களில் வசிக்கின்றனர். (இந்தியாவில் 2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 31 விழுக்காடு மக்கள் நகர்புறங்களில் வசிக்கின்றனர்). பாரம்பரிய போக்குவரத்துகள் (விலங்குகளால் இயக்கப்படும் மாட்டு வண்டிகள், குதிரைவண்டிகள், மனித உடல் உறுப்புகளால் இயக்கப்படும் பல்லாக்குகள், கைஇழுவை வண்டிகள், நடை, மிதிவண்டிகள், ரிக்ஷா) தற்போது பயன்பாட்டிலிருந்து குறையத்தொடங்கி இயந்திரம் (மோட்டார்) பொருத்தப்பட்ட வாகனங்கள் (பொது, வாணிப மற்றும் தனிநபர் சார்ந்த வாகனங்கள்) பெருமளவு பயன்பாட்டில் உள்ளது. பெருகுகிற தலாவருமானம், தொழிற்சாலைகளின் வளர்ச்சி, நிதிநிறுவனங்களின் தாராளக் கடன்கள், சமூக மாற்றம், அரசியல் முக்கியத்துவம், போன்றவைகளால் இயந்திர வாகனங்களின் பயன்பாடு பலமடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக நகர்புறங்களின் இதன் பயன்பாடு கிராமங்ளைவிட அதிக அளவில் காணப்படுகிறது. பெருகிவரும் இயந்திர வாகனங்களுக்கு இணையாக சாலைவசதிகள் ஈடுகொடுக்க முடியாதது, சாலைஓர ஆக்கரமிப்புகள் போன்றவைகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சாலைவிபத்துகளும், சுற்றுப்புற சூழலும் பாதிக்கப்படுகிறது.

உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் 1.35 மில்லியன் மக்கள் சாலை விபத்துகளால் உயிரிழக்கின்றனர், 50 மில்லியன் மக்கள் காயமடைகின்றனர். ஒவ்வொரு நாளும் 3000க்கு மேற்பட்ட நபர்கள் சாலை விபத்தினை சந்திக்கின்றனர். வளரும் நாடுகளில் சாலைவிபத்து வளர்ந்த நாடுகளை ஒப்பிடும்போது மூன்று மடங்கு அதிகமாக உள்ளது. உலக அளவில் சாலை விபத்துகளால் உயிரிழப்பவர்களில் முதல் இடத்தினை இந்தியா பெற்றுள்ளது.,இந்திய அரசு 2020இல் வெளியிடப்பட்ட சாலைவிபத்து பற்றிய புள்ளிவிரத்தின்படி 2019ஆம் ஆண்டு இந்தியாவில் மொத்த சாலைவிபத்துகளின் எண்ணிக்கை 4.49 லட்சமாகும். இதில் 1.51 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது சாலைவிபத்தை எதிர்கொண்டவர்களில் மூன்றில் ஒருபங்கினர் உயிரிழக்கின்றனர், பெரும்பகுதியினர் ஊனம் அடைகின்றனர். இவ்விபத்துகள் தேசிய-மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் பிறவகைச் சாலைகளில் அதிகமாக நடைபெறுகிறது. இந்திய மாநிலங்களிலேயே அதிக அளவு சாலைவிபத்துகள் தமிழ்நாட்டில் (57228) நடைபெறுகிறது. அதற்கு அடுத்து மகாராஷ்டிரம் (50669) ஆகும். ஆனால் அதிக உயிரிழப்புகளை (22655) எதிர்கொண்ட மாநிலம் உத்திரப்பிரதேசம். அதற்கு அடுத்து மகாராஷ்டிரம் (12788). இந்திய மாநிங்களில் ஏற்படும் சாலைவிபத்துகளில் பாதிக்குமேல் ஐந்து மாநிலங்களில் (தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம், உத்திரப்பிரதேசம், கேரளா, கர்நாடகம்) மட்டுமே ஏற்படுகிறது. அதேசமயம் தமிழ்நாட்டில் அரசினால் எடுக்கப்பட்ட பல்வேறு முயற்சிகளால் சாலைவிபத்துகளும், உயிரிழப்புகளும் கடந்த ஐந்து ஆண்டுகளில் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு மில்லியனுக்கு அதிகமாக உள்ள 50 இந்திய நகரங்களில் நாட்டின் மொத்த சாலைவிபத்தில் 18.44 விழுக்காடும் இதனால் ஏற்படும் மொத்த உயிரிழப்பில் 11.78 விழுக்காடும் காணப்படுகிறது. இந்த நகரங்களில் அதிக அளவு சாலைவிபத்துகளை ஏற்படுத்தியதில் சென்னை முதலிடம் வகிக்கிறது (2019ஆம் ஆண்டு 6871 சாலை விபத்துகள், 1252 உயிரிழப்புகள்). நாட்டின் மொத்த சாலைவிபத்துகளில் மூன்றில் ஒருபங்கு நகர்புறங்களில் நடைபெறுகிறது. நகர்புறங்களில் பெருமளவு சாலைவிபத்திற்கான காரணம் இருசக்கரவாகனங்கள் அதிகரிப்பு, குறுகிய மற்றும் பராமரிப்பற்ற சாலைகள், போக்குவரத்து நெரிசல், சாலைவிதிகளை பின்பற்றாதது, சாலைகளில் ஆக்கிரமிப்புகள் போன்றவைகள் ஆகும். மேலும் ஐந்தில் ஒரு பங்கு சாலைவிபத்துகள் இரவு 6 முதல் 9 மணிகளில் நடைபெறுகிறது இந்த நேரங்களில் தங்களின் வேலைகளை முடித்துவிட்டு முன்டியடித்துக்கொண்டு வேகமாக வீட்டிற்கு திரும்புவதால் ஏற்படுகிறது.

இந்தியாவில் 1970ஆம் ஆண்டு 1.14 லட்சமாக இருந்த சாலைவிபத்து சுமார் நான்கு மடங்கு அதிகரித்து 4.49 லட்சம் சாலைவிபத்துகளாக 2019ஆம் ஆண்டு பதிவாகி உள்ளது. 1970ஆம் ஆண்டில் ஒரு லட்சம் நபருக்கு 2.7 நபர்கள் சாலைவிபத்துகளால் உயிரிழந்துள்ளனர் இது 2019ஆம் ஆண்டு 11.5 நபர்கள் என அதிகரித்துள்ளது. இவ் ஆண்டுகளில் சாலைவிபத்துகளால் உயிரிழப்பவர்கள் 14500லிருந்து பத்து மடங்காக அதிகரித்து 151113ஆக பதிவாகி உள்ளது. இதற்கு முக்கியக்காரணம் பெருமளவிலான வாகனங்கள் அதிகரித்ததாகும் 1970ல் 14 லட்சமாக பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் 200மடங்குக்கு மேல் அதிகரித்து 29.72கோடியாக 2019ஆம் ஆண்டு பதிவுசெய்யப்பட்டுள்ளது ஆனால் சாலையின் நீளம் ஐந்து மடங்கு மட்டுமே அதிகரித்துள்து (1970ஆம் ஆண்டு 11.89 லட்சம் கி.மீட்டரிலிருந்து 2019ஆம் ஆண்டு 61.26 லட்சம் கி.மீட்டராக அதிகரித்துள்ளது). 1991ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்களால் பல பன்னாட்டு வாகன உற்பத்தி நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்துள்ளது. இதற்கு காரணம் இந்தியாவில் குறைவான உற்பத்திச்செலவு மற்றும் வாகனங்களை அதிகஅளவில் சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்பு ஆகும். இதனால் வாகனங்களின் விற்பனை இந்திய சந்தையில் பெருமளவு அதிகரித்துள்ளது. இந்தியாவில் மூன்றில் ஒருபங்கு வாகனங்கள் மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் உத்திரப்பிரதேச மாநிலங்களில் பதிவு செய்யப்படுகிறது. வாகனங்களின் அடர்த்தி அளவு ஒரு கி.மீட்டருக்கு 40 என்ற அளவில் உள்ளது.

siragu road-accident2

தேசிய நெடுஞ்சாலைகளில் ஏற்படும் உயிரிழப்புகளில் மூன்றில் ஒரு பங்கு பாதிக்கப்படுபவர்கள் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் ஆவார்கள். இதேபோல் மொத்த சாலைவிபத்தில் உயிரிழப்பவர்களில் 37 விழுக்காட்டினர் இருசக்கர வாகன ஓட்டிகள், 17 விழுக்காட்டினர் பாதசாரிகள், 3 விழுக்காட்டினர் மிதிவண்டி ஓட்டுபவர்கள் ஆவார்கள். இது மொத்தத்தில் 57 விழுக்காடாகும். ஒவ்வொரு 10000 வாகனங்களுக்கு சாலைவிபத்தால் உயிரிழக்கும் வீதமானது 5.7 எண்ணிக்கையாகும். இதேபோல் ஒவ்வொரு 10000 வாகனங்களுக்கும் சாலைவிபத்து வீதம் 16.8 ஆகும்.

சாலைவிபத்துக்கான முக்கிய காரணம் அதிவேகமாக வாகனங்களை ஒட்டுதல் (2019ஆம் ஆண்டு இதனால் 1.01 லட்சம் உயிரிழப்பு, மொத்தத்தில் இதனால் 73.5 விழுக்காடு விபத்துகள்: 70.4 விழுக்காடு உயிரிழப்பு), மதுகுடித்துவிட்டு வாகனங்களை ஓட்டுதல் (5325 உயிரிழப்பு), தவறான திசையில் வாகனங்களை இயக்குதல் (9201 உயிரிழப்பு), சிக்னல் சமிஞ்சைகளை மீறி வாகனங்களை ஓட்டுதல் (1797 உயிரிழப்பு), கைப்பேசியை பயன்படுத்திக்கொண்டு வாகனங்களை இயக்குதல் (4945 உயிரிழப்பு) போன்றவைகளைக் குறிப்பிடலாம். இதுமட்டுமல்லாமல், ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனங்களை இயக்குவதும் விபத்துக்கு ஒருமுக்கியக் காரணமாகும். இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் தலைக்கவசம் அணிவதும், மகிழுந்துகளில் செல்பவர்கள் இருக்கை பெல்ட் அணிவதும் கட்டாயமாகும். ஆனால் 2019 ஆண்டின்படி தலைக்கவசம் அணியாததால் 44666பேரும், இருக்கை பெல்ட் அணியாததால் 20885பேரும் உயிரிழந்துள்ளனர். மேலும் சாலைகள் சரியாக பராமரிப்பு இல்லாததாலும், குறுகிய சாலைகள், சாலைதடுப்பு பிரிபான்கள் இல்லாதது, அதிக அளவிலான சாலைதடுப்புகள் போன்றவைகளாலும் அதிக சாலைவிபத்துகள் ஏற்படுகிறது. பனிமூட்டம், அதிக அளவிலான வெப்பம், மழை, போன்றவைகளும் சாலை விபத்துக்கான காரணமாக அறியப்படுகிறது. இந்தியாவில் பழையவாகன விற்பனை புதிய வாகனங்களைவிட அதிக அளவில் நடைபெறுகிறது. 10 ஆண்டுகளுக்கு மேல் புழக்த்தில் உள்ள வாகனங்கள் பெருமளவில் சுற்றுப்புறசூழலுக்கு கேடு விளைவிப்பதாகவும் அதிகஅளவில் (நான்கில் ஒருபங்கு) சாலைவிப்த்துகளை உண்டாக்குவதாகவும் உள்ளது. சரக்குபோக்குவரத்தில் அதிக அளவில் ஏற்றிச்சென்ற இரயில் போக்குவரத்தினை முந்தியுள்ள சாலைப் போக்குவரத்தினால் சரக்கு வாகனங்களின் (டிரக், லாரி, மினிலாரி) பயன்பாடு அதிகரித்துள்ளது குறிப்பாக, இவ்வாகனங்கள் அளவுக்கு அதிகமான பொருட்களை ஏற்றிச்செல்வதினாலும் சாலைவிபத்துகள் ஏற்படுகிறது.

இதுபோன்றே வளருகின்ற மக்கள் தொகைக்குத் தேவையான பொதுப் போக்குவரத்தினை ஈடுசெய்ய முடியாதது, தனிநபர் வருமானம் அதிகரிப்பது, தவணை முறையிலான வாகனத்திற்கான கடன் வசதி, சமூக மாற்றம், போன்ற காணங்களால் தனிப்பட்ட வாகனங்களின் (மகிழுந்து, இருசக்கர வாகனங்கள்) எண்ணிக்கை கடந்த இருபது ஆண்டுகளில் பெருமளவு அதிகரித்துள்ளது. குறிப்பாக நகர்புறங்களில் இவற்றின் அளவு மிகவும் அதிகம். ஆனால் இதற்கான சாலை விரிவாக்கம், அதற்கு ஈடாக அதிகரிக்கவில்லை. எனவே பெருமளவிலான வாகனங்கள் குறைவான அளவில் உள்ள சாலைகளில் பயணிக்கும்போது சாலைவிபத்துகள் ஏற்படுகிறது (குறிப்பாக நகர்புறங்களில் – நாடடின் மொத்த சாலையில் சுமார் 9 விழுக்காட்டு பங்கினைப் பெற்றுள்ளது). அதுமட்டுமல்லாமல் போக்குவரத்து நெரிசல்கள், சாலை ஓரங்களில் வாகனங்களை நிறுத்துதல், சாலை-நடைபாதைகளில் ஆக்கரமிப்புகள் (சாலையோரக் கடைகள், மின்கம்பங்கள், பேருந்து நிருத்தங்கள், விளம்பரங்கள், வாகன நிறுத்தங்கள், வழிபாட்டு இடங்கள்) போன்றவைகளால் சாலைவிபத்துகள் ஏற்படுகிறது. இதில் அதிகமாக பாதசாரிகள், மிதிவண்டி ஓட்டுபவர்கள், அதிக அளவில் உயிரிழக்கின்றனர்.

உலக அளவில் இந்தியாவில் போக்குவரத்து வாகனங்கள் 1 விழுக்காடு பங்குகளை பெற்றுள்ளது. ஆனால் 6விழுக்காடு சாலைவிபத்து நடைபெறுகிறது, 11 விழுக்காடு சாலை விபத்துகளால் உயிரிழக்கின்றனர். ஒவ்வெரு 4 நிமிடங்களுக்கு ஒருவர் சாலைவிபத்தினால் உயிரிழக்கின்றார். இதேபோல் ஒவ்வொரு மணிக்கும் 53 சாலைவிபத்துகள் நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் சாலைவிபத்துகளால், ஒன்றரை லட்சம் மக்கள் உயிரிழக்கின்றனர். இதில் சுமார் முக்கால் பங்கினர் வேலைசெய்ய உகந்த 18 லிருந்து 45 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவார்கள், 7.5 லட்சம் பேர் ஊனமாகின்றனர். சாலைவிபத்துகளை அதிக அளவில் நகர்புறங்களைவிட கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் சந்திக்கின்றனர். இதற்குக் காரணம் நகர்புறங்களில் சாலைவிபத்தினைத் தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. ஆனால் கிராமப்புற சாலைகள், மாவட்ட சாலைகளில் பராமரிப்பு குறைவு மேலும் இவற்றில் போதுமான பாதுகாப்பு அம்சங்களை நடைமுறைப்படுத்துவதில்லை. இவ்விபத்துகளால் கிராமப்புறத்தில் வருமான இழப்பு அதிக அளவிலும் நகர்புறங்களில் குறைவாகவும் காணப்படுகிறது.

சாலைவிபத்தினால் ஆண்கள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர், அதாவது சாலைவிபத்தால் ஆண்களின் பாதிப்பு 86 விழுக்காடாகும் பெண்கள் 14 விழுக்காடாகும். சாலைவிபத்தினால் ஆண்களை இழந்த குடும்பங்களில் குடும்ப வருமானம் இழப்பு ஏற்பட்டு பொருளாதார சிக்கலை குடும்பங்கள் எதிர்கொள்கிறது. எனவே பெண்கள் குடும்பத்தை சுமக்கவேண்டிய கட்டாயம் எற்பட்டு வேலைக்கு செல்லவேண்டிய நிலை ஏற்படுகிறது. அத்துடன் மனரீதியிலான பாதிப்புகளுக்கும் உள்ளாகின்றனர். இந்தியாவில் டிரக்குகள் வழியாக 67 விழுக்காடு சரக்குகள் எடுத்துச்செல்லப்படுகிறது. எனவே டிரக் ஓட்டுநர்கள் நாட்டிற்கான பொருளாதாரத்தின் முதுகெலும்பாகக் கருதப்படுகின்றனர். இந்தியாவில் ஏற்படுகிற சாலைவிபத்துகளால் 10விழுக்காடு, டிரக் ஓட்டுநர்கள் ஒவ்வொரு ஆண்டும் உயிரிழக்கின்றனர். 57000 டிரக் வண்டிகள் விபத்துக்குள்ளாகின்றன. டிரக் ஒட்டுநர்கள் மிக சொற்பமான வருமானத்தினையே பெறுகின்றனர். இவர்களுக்கு பணிப்பாதுகாப்பு, சமூகபாதுகாப்பு, வருங்கால வைப்புநிதி, ஆயுல் காப்பீடு, மருத்துவக்காப்பீடு, ஓய்வூதியம், பணிக்கொடை போன்ற எவையும் உறுதிசெய்யப்படுவதில்லை. எனவே சாலைவிபத்தினை எதிர்கொள்ளும்போது இவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடுகிறது. மேலும் சாலைவிபத்துக்கான காப்பீடு பற்றி பெரும்பாலானவர்களுக்கு தெளிவற்ற நிலை உள்ளது, மூன்றாம் நபர் காப்பீடு பற்றி அதிகமானவர்களுக்கு தெரியாததால் அவற்றை பெற இயலாத நிலையும் உள்ளது. காப்பீடு செய்தவர்கள் மருத்துவம் பெறும்போது மருத்துவச் செலவுகளை முழுமையாக அளிக்கப்படுவதில்லை. சட்டப்பூர்வமாக அணுகி விபத்திற்கான இழப்பீடுகளை பெற இயலாத நிலையும் காணப்படுகிறது.

சாலைவிபத்தினால் அதிக அளவில் வேலைசெய்ய உகந்த வயதுடையவர்கள், அன்றாட கூலி ஆட்கள், முறைசாரா தொழிலில் ஈடுபடுபவர்கள் அதிகமாக பாதிக்கப்படுவதால் தனிப்பட்ட நிலையில் குடும்பம் பெரும் துயரத்துக்குள்ளாகிறது, அதிக அளவு பொருளாதார இழப்புகளை அக்குடும்பம் சந்திக்கிறது. இதனால் இந்தியாவின் வறுமைகோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க இது காரணமாகிறது. மேலும் இது நாட்டின் மொத்த பொருளாதார வளர்ச்சி குறைக்கிறது, பொதுநல இழப்பு ஏற்பட்டு மனித திறன் அதிக அளவில் பாதிக்கப்படுகிறது. இச்சாலை விபத்துகளால் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.14விழுக்காடு ஒவ்வெரு ஆண்டும் இந்தியாவில் இழப்பு ஏற்படுகிறது (உலக வங்கி 2016). உலக வங்கியின் ஆய்வின்படி சாலைவிபத்துகளை பாதியாக குறைக்கப்பட்டால் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் தலா வருமானம் 15லிருந்து 22 விழுக்காடு, அடுத்த 24 ஆண்டுகளில் அதிகரிக்கும் என்கிறது.

சாலைவிபத்துகளால் அதிக அளவு பாதிக்கப்படுவது பாதசாரிகள், மிதிவண்டி ஓட்டுனர்கள், இருசக்கர ஓட்டுனர்கள். இவர்கள் பெரும்பாலும் சமூகத்தில் அடிமட்டத்தில் உள்ளவர்கள் ஆவார்கள். இவர்களுக்கு போதுமான மருத்துவ பாதுகாப்பு இல்லை, சமூக பாதுகாப்பு இல்லை, மருத்துவ செலவுகளை அதிக அளவில் இவர்கள் சொந்த பணத்திலிருந்தே செலவுசெய்கின்றனர். இதனால் மொத்த குடும்பமே பாதிப்படைகினறனர். மோட்டார் வாகன சட்டம் 1988-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டு 30ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இதில் உள்ள பல்வேறு வகையான அம்சங்கள் சாலைவிபத்தினை தடுப்பதற்கோ அல்லது பாதுகாப்பான போக்குவரத்துக்கோ போதுமானதாகவும் தற்காலத்திற்கு ஏற்றதாகவும் இல்லை என்ற காரணத்தினால் 2016ஆம் ஆண்டு மோட்டர்வாகனச் சட்டம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது 2019ஆம் ஆண்டு சட்டவடிவமாக்கப்பட்டு 1 செப்டம்பரில் நடைமுறைக்கு வந்துள்ளது. இதன்படி சாலைவிபத்தினால் பாதிக்கப்படுபவர்களுக்கு பணமில்லா சிகிச்சையும், சாலைவிதிகளை மீறுபவர்களுக்கு அதிகஅளவிலான தண்டம் விதிப்பது, குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு ஆறுமாதம் சிறைதண்டனை அல்லது தண்டம் விதிப்பது அல்லது இரண்டும், முழுமையான மோட்டார் வாகன காப்பீடு பாதுகாப்பான சாலைப்பயணத்தை உறுதி செய்தல், பொது போக்குவரத்தின் சேவையினை அதிகப்படுத்துதல், சாலைவிபத்தில் பாதிக்கப்படுபவர்களின் பொருளாதார இழப்பினை ஈடுசெய்வது போன்றவற்றிற்கான வழிவகைகளைச் செய்துள்ளது.

சாலைவிபத்தினை கட்டுப்படுத்த பல்வேறு உத்திகளை மத்திய-மாநில அரசுகள் தொடர்ந்து கையாண்டுவருகின்றன. கேமரா மூலம் கண்காணித்து சாலைவிதிகளை மீறுபவர்களுக்கு தண்டம் விதிப்பது, தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, வாகன விதிமீறல்களைக் கட்டுப்படுத்துதல், நகர்புறங்களில் வாகனவகையின் அடிப்படையில் சாலைகளைப் பிரித்து பயன்படுத்துவது, நடைபாதைகளில் உள்ள ஆக்கரமிப்புகளை களைவது, சாலைகளில் நிறுத்தப்படும் வாகனங்களை கட்டுப்படுத்துதல், பொதுப் போக்குவரத்து பயன்பாட்டினை அதிகரித்தல், குழந்தைகளுக்கான சாலைப் போக்குவரத்து கல்வியினை தீவிரப்படுத்துதல், வளர்இளம் பருவத்தினரிடம் சாலை விதிகளைப்பற்றிய தெளிவினை உருவாக்குதல் போன்றவைகளால் பெருமளவிற்கு சாலைவிபத்துகளை குறைக்கலாம்.
——————————-
இக்கட்டுறையின் ஆசிரியர், திரு.ந.பாலசுந்தரம் அவர்களுக்கு இக்கட்டுரை வடிவம் பெற உதவியதற்கு தனது நன்றியினை பதிவுசெய்துள்ளார்.


பேராசிரியர் பு.அன்பழகன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “இந்தியா சாலை விபத்துகளின் நாடா?”

அதிகம் படித்தது