மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

கீதாரி நாவலில் வழி ஆளுமைப் பண்புகள்

முனைவர் மு.பழனியப்பன்

Mar 4, 2023

siragu-pen-ezhuthalargal2-150x150
கீதாரி நாவலில் வழி ஆளுமைப் பண்புகள்

இராமு கீதாரி தனது மனைவி இருளாயி, மகள் முத்தம்மாள், வெள்ளைச்சாமி எனும் வளர்ப்பு மகனோடு வளசையில் (குடிசை) இருக்கிறார். ஒரு நாள் இரவில் மழை பெய்கின்றது. அந்நேரத்தில் மனநலம் குன்றிய கர்ப்பிணிப் பெண் ஒருத்தி வருகின்றாள். அவள் இரட்டைப் பெண் பிள்ளைகளைப் பெற்றெடுக்கிறாள். அப்பெண்ணிற்குப் பிரசவம் பார்ப்பது ராமு கீதாரிதான். ஆட்டிற்குப் பிரசவம் பார்த்த அனுபவம் அவருக்கு இங்கு உதவுகிறது. அந்தக் குழந்தைகளின் பெயர் மூத்தவள் சிவப்பி, இளையவள் கரிச்சா. மறுநாள் காலையில் ஊர் மக்களைக் கூப்பிட்டு இவ்வாறு மனநலம் குன்றிய ஒரு பெண்ணுக்கு இரு பெண் குழுந்தைகள் பிறந்த தகவலைக் கூறுகிறார்.

ஒரு குழந்தையைத் தான் வளர்த்துக் கொள்கிறேன் என்று இராமு கீதாரி உறுதியளிக்கிறார்.

கரையாங்காட்டுப் பண்ணைக்காரர் சாம்பசிவம் இன்னொரு குழந்தையை நான் எடுத்து வளர்க்கிறேன் என்கிறார். ஆனால், இப்போது என்னால் குழந்தையை எடுத்துச் செல்ல இயலாது. காரணம் எனக்கு இரண்டு மனைவிகள். ஏனென்றால், வளர்ப்பதில் பிரச்சனை வரும். அதனால் அக்குழந்தை பள்ளிக்குச் செல்லும் பருவத்திலும் வந்து வாங்கி கொள்வதாகவும் உறுதியளிக்கிறார். அவர் சொன்னது போலவே ஆறு வருடங்கள் கழித்து சிவப்பியை வாங்கிக் கொண்டு செல்கிறார் கரையாங்காட்டுப் பண்ணையார் சாம்பசிவம். சாம்பசிவத்திற்கு இரண்டு மனைவிகள் அதனால், அந்தப் பெண்ணை வீட்டு வேலை செய்யச் சொல்லி துன்புறுத்தி வளர்க்கிறார்.

இந்நிலையில் ராமு கீதாரி – இருளாயி பெற்றேடுத்த மகள் முத்தம்மாளும் அவளுடைய கணவரும் அவர்களைத் தங்களுடன் வந்து தங்குமாறு அழைக்கின்றனர். அதனால், ராமு கீதாரி – இருளாயி இருவரும் தனியாகக் கரிச்சா, வெள்ளைச்சாமியை குடிசையில் விட்டுவிட்டுச் செல்கின்றனர்.

கரிச்சா, வெள்ளைச்சாமியோடு உதவியாக வளசையில் இருக்கிறாள். வளர்ந்து பெரியவள் ஆகின்றாள். தான் பெரிய மனுசி ஆனதைத் தன்னுடைய அக்கா சிவப்பியிடம் போய்க் கூறுகின்றாள். சிவப்பி தான் பெரிய மனுசி ஆனதையும், தான் படுகின்ற துன்பத்தையும் கரிச்சாவிடம் பகிர்ந்து கொள்கிறாள். அதனால், ராமு கீதாரியிடம் செல்லுமாறு அறிவுறுத்துகிறாள் சிவப்பி. அவ்வாறு செல்லாமல் மீண்டும் கரிச்சா வெள்ளச்சாமி குடிசைக்கு செல்கிறாள். சிவப்பி ஒரு நாள் ராமு கீதாரி இருக்கும் இடத்திற்குச் சென்று கரிச்சா இங்கு வந்தாளா என்று கேட்கிறாள். கரிச்சாவிற்கு நடந்த செய்தியைச் சிவப்பி மூலமாக அறிந்த ராமு கீதாரியும் இருளாயியும் தன் மகள் முத்தமாள் வீட்டிற்கு அழைத்துச் சென்று கரிச்சாவிற்குச் சடங்குகளைச் செய்து முடிக்கின்றனர். சில நாள் கழித்து கரிச்சாவை பெண் பார்க்க வருகின்றனர். பெண் பார்க்க வந்த கூட்டத்தினர் வெள்ளையனையும், கரிச்சாவையும் இணைத்துத் தவறாகப் பேசுகின்றனர். ராமு கீதாரி வெள்ளைச்சாமிக்கும் கரிச்சாவிற்கும் இருவருக்கும் திருமணம் செய்து வைத்து இருவரையும் தனிக்குடிசை போட்டுக் கொண்டு இருக்குமாறு பணித்துவிட்டு தன்னோட மகள் மருமகனோடு சேர்ந்து வாழ்கிறார்.

அந்தப் பக்கம் உன்னோட அண்ணனே உன் தங்கச்சி கரிச்சாவைக் கல்யாணம் பண்ணிக்கும் போது என்னோட இருப்பதில் என்ன தவறு இருக்கிறது என்று சிவப்பியைத் தத்தெடுத்து வளர்த்த கரையன்காட்டு பண்ணைக்காரன் சாம்பசிவம் வெள்ளச்சிக்குப் பாலியல் துன்புறுத்துவதால் தற்கொலை செய்து இறந்துவிடுகிறாள். இச்செய்தி தெரியாமல் கரிச்சா ஒருநாள் தன் அக்கா சிவப்பியைப் பார்க்கச் செல்கிறாள் அப்போதுதான் சிவப்பி இறந்துவிட்ட துக்கச் செய்தியை அறிந்து மனம் நொந்து போகின்றாள்.

தொடக்கத்தில் தயக்கம் இருந்தாலும் கரிச்சாவும், வெள்ளைச்சாமியும் குழந்தை இல்லை என்கிற கவலையைத் தவிர, எவ்விதச் சிக்கல் இல்லாமல் வாழ்க்கையை நடத்தினர். ஆனால், சரியான மேய்ச்சல் நிலம் இல்லாததால் சிதம்பரம் என்ற ஊருக்கு நகர்ந்து செல்லும் சூழ்நிலை ஏற்படுகிறது. தன் மனம் மாறுவதற்கு இது ஒரு நல்ல நேரம் என்று கரிச்சாவும் நினைத்துச் செல்கிறாள். ஆனால், நடப்பதோ வேறு நிகழ்வு.

அங்குதான், ராமு கீதாரியின் மைத்துனன் வீட்டில் வெள்ளைச்சாமியின் அண்ணன் பெரியசாமி இருக்கிறான். பெரியசாமியும் திருமணம் செய்து கொண்டு நல்லபடியாக மனைவி, குழந்தைகள், மைத்துனன், கொளுந்தியாள் என்னும் உறவுகளோடு வாழ்ந்து வருகிறான்.

குறிப்பிட்ட ஆடுகளை மட்டும் வைத்துக்கொண்டு மற்ற ஆடுகளை விற்று வெள்ளைச்சாமிக்கு சொந்த ஊரில் இராமநாதபுரத்தில் நிலம் வாங்குவதற்கு தன்னுடைய மகள் முத்தமாளின் கணவனையும் வெள்ளைச்சாமியையும் அனுப்புகிறார் ராமு கீதாரி. அதன்பின்பு சிதம்பரம் வந்த வெள்ளைச்சாமி அங்கு சிறுவயதில் பிரிந்த தனது அண்ணன் பெரியசாமியைச் சந்திக்கிறான். அப்போதுதான் குழந்தையின்மையைக் காரணம் காட்டி கரிச்சாவை விரட்டிவிட்டு தனது தங்கச்சியைத் திருமணம் செய்து வைக்க அண்ணனின் மனைவியும், அண்ணனின் மைத்துனன் ஓடையப்பனும் முடிவு செய்கின்றனர். வெள்ளைச்சாமியும் மற்றொரு திருமணத்திற்கு ஒத்துக்கொள்கிறான்.

இந்தச் செய்தி கரிச்சாவின் காதில் படுகிறது. தன் மேல் உயிரையே வைத்திருந்த வெள்ளைச்சாமி இவ்வாறு மனசு மாறிவிட்டான் என்று வருத்தப்பட்டு, கரிச்சா வெள்ளைச் சாமியைப் பிரிந்து ராமு கீதாரியிடம் வந்து சேர்கின்றாள். ராமு கீதாரியோ பயங்கர பண நெருக்கடியில் இருக்கிறார். வெள்ளைச்சாமியிடம் ராமு கீதாரி கரிச்சாவோடு சேர்ந்து வாழச்சொல்லியும் அவன் கேட்கவில்லை. அதனால், ராமு கீதாரி மனம் வருந்தி வெள்ளைச்சாமிக்குச் சாபம் கொடுத்துவிட்டு வந்துவிடுகிறார். வெள்ளைச்சாமியின் திருமணம் ஏதோ ஒரு காரணத்தினால் நின்று விடுகின்றது. ஆனாலும், கரிச்சாவை மீண்டும் அழைக்க வெள்ளைச்சாமி வரவில்லை.

வெள்ளைச்சாமியைப் பிரிந்து வந்த சில நாட்களிலே கரிச்சா கருவுற்றிருப்பதை இருளாயிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதைச் சரிசெய்ய வந்த மருத்துவர் மூலம் அறிகின்றாள். ஆனால், வெள்ளைச்சாமியிடம் போகாமல் தானே சுயமாக நிற்கவேண்டும் என்ற வைராக்கியத்தில் ராமு கீதாரியிடம் ஆடுகளைப் பிடித்துக் கொடுக்க சொல்லி வளர்க்கிறாள். ஆண் குழந்தை பிறக்கிறது. ஆண்குழந்தையை நன்றாகப்படிக்க வைக்கவேண்டும் என்று நினைக்கின்றாள். ஆட்டைப் பிடிக்கவும், கட்டிவைக்கவும் தங்களுடைய ஆடு மேய்க்கும் தொழில் அனைத்தையும் தன் மகனுக்குக் கற்றுக்கொடுக்கிறாள். ஒருநாள் இரவில் சரிச்சா பாம்பு கடித்து இறந்துவிடுகிறாள். இறுதியில் ராமு கீதாரி கரிச்சாவின் மகனை வளர்க்கிறார்.

இப்படி இந்நாவலின் கதை அமைகிறது. கரிச்சா என்ற பெண் எந்நிலையிலும் தன்னிலை மாறாமல் நெருக்கடிகளைச் சாமாளிக்கின்ற போக்குடையவளாக வாழ்கிறாள் என்பதே அவளின் ஆளுமையாக விளங்குகின்றது.


முனைவர் மு.பழனியப்பன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கீதாரி நாவலில் வழி ஆளுமைப் பண்புகள்”

அதிகம் படித்தது