மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பன்னிரெண்டரை கிராம அரும்புக் கூற்றா இனம் ஓர் அறிமுகம்

ஈ. ரமாமணி

Jan 29, 2022

Dec-23-2017-newsletter1

தமிழகம் பல இன மக்களையும் அவர்களின் பண்பாடு, பழக்க வழக்கம் நாகரீகம் ஆகியவற்றை உள்ளடக்கிய மாநிலம் ஆகும். இம்மாநில்த்தில் வாழும் பல்வேறு குடிகள் சிற்சில வேறுபாடுகளுடன் தம் வாழ்க்கைமுறையை அமைத்துக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர். இவ்வேறுபாடுகள் அவ்வினக் குழுவின் தனித்த வேறுபாடுகளாகக் கொள்ளத்தக்கன. இவ்வகையில் குறிக்கத்தக்க ஓரினம் பன்னிரெண்டரை கிராம அரும்புக் கூற்றா இனம் ஆகும். இவர்கள் இராமநாதபுர மாவட்டத்தில் உள்ள திருவாடனை வட்டத்தில் பெரும்பாலும் வாழ்ந்து வருகின்றனர். இச்சமுதாயம் தாய்வழிச் சமுதாயம் சார்ந்த பல எச்ச மரபுகளைக் கொண்டுள்ளது. இச்சமுதாயத்தில் பெண்ணே முதன்மையும், அவளின் இல்லமே கணவனின் இல்லமாகவும் விளங்குகிற பெருத்த வேறுபாடு காணப்படும் சமுதாயமாக இச்சமுதாயம் விளங்குகின்றது. இச்சமுதாயம் பற்றிய அறிமுகத்தைத் தருவதாக இவ்வியல் அமைகிறது.

இராமநாதபுர மாவட்டம்

இராமநாதபுர மாவட்டம் வரலாற்றுச் சிறப்பும் அரச மாண்பும் மக்கள் பெருக்கமும் உள்ள மாவட்டம் ஆகும். இம்மாவட்டம் மிகப்பெரிதாக இருந்தது தற்போது இதில் இருந்து சிவகங்கை, விருதுநகர் போன்ற மாவட்டங்கள் பிரிக்கப்பெற்றுள்ளன. இதனை ராம்நாடு என்றும் முகவை என்றும் அழைக்ம். கடல் மட்டத்தில் இருந்து சராசரியாக இரண்டு மீட்டர் ஆறடி உயரத்தில் இருக்கிறது. இம்மாவட்டத்தின் தலைநகர் இராமநாதபுரம் ஆகும். மாவட்ட தலைநகர்க்குரிய அனைத்து வசதிகளையும் இம்மாவட்டம் கொண்டுள்ளது.

இராமநாதபுரத்தில் அமைந்துள்ள திருவாடானை  வட்டத்தில்  திருவெற்றியூர் அருள்மிகு பாகம்பிரியாள் கோயில் சார்ந்த ஊர்களில் பன்னிரெண்டரை கிராம அரும்புக்கூற்றா பிள்ளைமார்கள் என்ற இனக்குழுவினர் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் வெள்ளாளர் என்ற பெரும்பிரிவில் அமைந்த உட்பிரிவினர் ஆவர்.

‘‘சாதி என்பது சமுதாய அமைப்பில் இயங்கும் ஒரு தனிப்பட்ட குழுவைக் குறிக்கும். இக்குழவில் இடம்பெறும் தகுதி பிறப்பால் அமைகின்றது. அதனால் ஒரு சாதியில் பிறந்தவர் வேறு சாதிக்கு மாற இயலாது. ஒன்றுக்கு மேற்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் என்று கூறிக்கொள்ளவும் இயலாது. அவ்வாறே ஒரு சாதியினர் வேற்று சாதியினரை மணந்து கொள்ளுதலும் இயலாது. எனவே சாதி என்பது அகமண முறையைக் கொண்ட அமைப்பாகும்”1 என்று சாதி என்பதற்கான வரையறைத் தருகிறார் பக்தவத்சல பாரதி.

வெள்ளாளர் இனப்பிரிவில் அரும்பு கூற்றா இன மக்கள் ஒரு குழுவினராக, தமக்குள் கொண்டும் கொடுத்தும் மண உறவுகொள்பவராக வாழ்ந்து வருகின்றனர்.

வெள்ளாளர் என்ற இனப்பிரிவில் பல பகுப்புகள் உள்ளனர். அவர்களில் குறிக்கத்தக்க சில பிரிவுகள் பின்வருமாறு

  1. நாட்டு வெள்ளாளர்
  2. இசை வெள்ளாளர்
  3. குரும்ப வெள்ளாளர்
  4. வீரக்கோடி வெள்ளாளர்
  5. சைவ வெள்ளாளர்
  6. மேடிக்கார வெள்ளாளர்
  7. அரும்புக் கூற்றா வெள்ளாளர்
  8. வெள்ளாளக் கவுண்டர்
  9. கிறித்தவ வெள்ளாளர்

என்ற பிரிவினர் குறிக்கத்தக்க வெள்ளாளர் பிரிவினர் ஆவர். இவர்களுள் ஒரு பிரிவினர் அரும்பு கூற்றா வெள்ளாளர் ஆவர். இவர்கள் அனைவரும் வீரக்கோடி வெள்ளாளர் என்று சாதிச் சான்றிதழை அரசிடம் இருந்து பெற்று வருகின்றனர்..

பெயர்க் காரணம்

வெள்ளாளர் என்பது இவ்வின மக்களுக்கு பொதுவாக வழங்கப்படும் இனக்குழுப் பெயர் ஆகும். பன்னிரெண்டரை கிராம அரும்புக் கூற்றா பிள்ளைமார்  என்பது இப்பொது இனம் சார்ந்த சிறு வகுப்பினருக்கான பெயர் ஆகும். இப்பெயர் ஏற்பட்டதற்கு ஒரு காரணம் சொல்லப்படுகிறது.

‘‘இச்சமுதாயத்தில் உள்ள அனைத்து பெண்களுமே அரும்பு (மூக்கு) குத்தமாட்டார்கள் என்பதனால் இப்பெயர் ஏற்பட்டது”2 என்று இவ்வகுப்பினருக்கான காரணம் சுட்டப் படுகிறது.

இது தற்காலத்தில் சொல்லப்படும் காரணம் ஆகும். ஆனால் எட்கர் தட்சன் என்ற மானிடவியல் அறிஞர் இவ்வினக்குழு பற்றிய தகவல் ஒன்றினைத் தென்னிந்திய குலங்களும் குடிகளும் என்ற நூலில் தந்துள்ளார்.

அந்நூலில் அரும்புகட்டி அல்லது ஆரம்பூகட்டி என்று இவ்வினத்தார் அழைக்கப்பெற்றுள்ளதாக அவர் கருதுகிறார். ‘‘திரு. ஜெ. எ. பாய்லெயின் கருத்துப்படி இப்பெயர் சிவனுக்கு உரிய அலங்காரத்திற்கானவற்றுள் ஒன்றான மாலையான ஆரத்தைக் கழுத்தில் அணிந்தவர்களைக் குறிக்கும். இவர்களைப் பற்றி மேலும் அவர் கூறுவதாவது. இராமநாதபுரம் மாவட்டத்தினை அடுத்துள்ள கிராமங்களில் தங்கிவாழும் பழங்குடி இனத்தவர்கள் இவர்கள். இவர்கள் குடும்பங்களிடையே வழங்கும் வழக்கு வரலாறு ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன் தொண்டை மண்டலத்திலிருந்து குடி பெயர்ந்து வந்தவர்கள் எனவும், அவ்வாறு வரத் தேவேந்திர விமானம் எனப்படும் மூடப்பட்ட விமானத்தைப் பயன்படுத்தியதாகவும் கூறும் இவர்கள் இன்றும் திருமணத்தின்போது மணமக்கள் ஊர்வலமாகச் செல்ல இத்தகைய வாகனத்தையே பயன்படுத்துகின்றனர். இச்சாதிப் பெண்கள் இடைக்கு மேல் துணியேதும் அணியாது முழுக்க திறந்த மார்புடையவர்களாகவே உள்ளனர். இந்த மாவட்டத்தின் வடக்கு தெற்கு எல்லையாக அமைந்துள்ள இரு ஆறுகளையும் கடந்து அவற்றுக்கு அப்பால் இச்சாதியினைச் சார்ந்த பெண்கள் செல்ல அனுமதிப்பதில்லை. தஞ்சாவூரில் உள்ள புகழ்பெற்ற கோயிலில் உள்ள தெப்பத்திற்கு இவர்கள் நேர்ந்து கொள்வார்களியின் அக்கடனைச் செலுத்த அக்கோயிலுக்கு யாரும் அறியாதபடி இரகசியமாகவே பயணம் மேற்கொள்ளுவர். இது பற்றிய உண்மை வெளிப்படுமாயின் இவ்வாறு பயணம் மேற்கொண்டவர்கள் தண்டத் தொகை செலுத்த வேண்டிவரும். எல்லையாக அமைந்த ஆற்றுக்கு அப்பால வாழ்பவர்களோடு மண உறவு செய்து கொள்ளக் கூடாது என்ற தடை உள்ளது. இச்சாதியினைச் சார்ந்த ஆண்கள் சர்க்கார் (அரசு) உப்பினைத் தின்னமாட்டார்கள். அதாவது அரசுப் பணி ஏற்பதில்லை”2 என்ற குறிப்பு கிடைக்கிறது.

இக்குறிப்பின்படி அரும்பு கட்டி என்பதே அரும்பு கூற்றா என மருவியுள்ளது என்று தெளிய முடிகிறது. மேலும் இராமநாதபுரத்தின் பாம்பாறு, வைகை  ஆறு ஆகிய இரண்டு ஆறுகள் சார்ந்த ஊர்களில் இம்மக்கள் வாழ்ந்துவருகின்றனர். இவர்கள் பழங்குடியினர் என்பதும் மேற் கருத்தில் இருந்து தெரியவருகிறது. மேலும் இவர்கள் மற்ற வேளாளர் இனத்தைப் போல இடைக்கு மேல் ஆடை அணியும் வழக்கம் இல்லாமல் இருந்தவர்கள் என்பதும் தெரியவருகிறது. தற்போது இது மாறியுள்ளது.

இவ்வகையில் அரும்பு கூற்றா இன மக்கள் அரும்புகட்டி என்ற ஆதிகுடியினர் என்பது தெரியவருகிறது.

இதன் எச்சமாக தற்போது இம்மக்கள் வாழ்ந்து வரும் பன்னிரண்டரை கிராமங்கள் என்ற தொகுப்பமைப்பில் அரும்பூர் என்ற ஓர் ஊரும் உள்ளது. அரும்பு கட்டியவர்கள் வாழும் ஊர் அரும்பூர் என அழைக்கப்பெற்றிருக்க வேண்டும்.

இவைதவிர தற்போதைய பகுப்பில் அரும்பு கோத்த வெள்ளாளர் என்ற ஒரு பிரிவும் உள்ளது. இதுவும் இவ்வினத்துடன் தொடர்புடைய பெயரே ஆகும்.

இவர்களின் இனப்பெயரில் மற்றொரு அடையாளமாக அமைந்துள்ள பன்னிரெண்டரை கிராம என்ற அடையாளமானது இவர்கள் பன்னிரெண்டரை கிராமப் பங்கு உடையவர்கள் என்பதைக்குறிப்பதாகும். அப்பன்னி்ரண்டரை கிராம எண்ணிக்கை பின்வருமாறு.

1)   முகிழ்தகம்

2)   திருவெற்றியூர்

3)   ஏ.ஆர் மங்கலம்

4)   கொட்டகுடி

5)   கள்ளிக்குடி

6)   கொன்னக்குடி

7)   வாகைக்குடி

8)   கட்டுகுடி

9)   விளத்தூர்

10)அரும்பூர்

11)வெளியக்கோட்டை

12)சூரம்புளி

13)ஆயிரவேலி

இந்த கிராமங்களில் வசிப்பவர்களே அரும்புக்கூற்றா பிள்ளைமார் ஆவர். இதில் கட்டுக்குடி என்ற கிராமத்தில் மட்டும் அரை என்ற எண்ணிக்கை அமைந்ததால் பன்னிரெண்டரை கிராம என்ற அடையாளம் இவர்களுக்கு அமைந்தது. இப்பன்னிரெண்டரை கிராமங்கள் பற்றிய அறிமுகம் பின்வருமாறு.

1)   முகிழ்தகம்

இராமநாதபுர மாவட்டத்தில் உள்ள திருவாடானை வட்டத்தில் அமைந்தள்ள, முகிழ்தகம் என்ற கிராமத்தில் அரும்புகூற்றா இன மக்கள்,  வெள்ளாளர் கோட்டை என்னும் தெருவில் வாழ்ந்து வருகின்றனர். ஏழு தலைமுறையாக சொத்துக்களின் அடிப்படையில் அதிக வலிமை வாய்ந்த குடியினர் இவர்களாவர். ஒரு வீட்டு உறவினர்களே, காலப்போக்கில் எட்டு குடும்பங்களாக பரவி வாழ்கின்றனர். இன்னும் இவ்வீட்டுப் குடும்ப பெண்கள் தங்கள் மரியாதை கருதி கூலி வேலைகள் போன்றவற்றைச் செய்யச் செல்வதில்லை.

2)  திருவெற்றியூர்

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வட்டத்தில் அமைந்துள்ள திருவெற்றிளயூர் கிராமத்தில் அரும்பு கூற்றா இனத்தவர்கள், சுமார் இருபத்தி இரண்டு குடிகளாக வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் வசிக்கும் தெருவின் பெயர் வெள்ளாளர் தெரு என்று வழங்கப்படுகிறது. பல தலைமுறைகளாக இப்பிரிவினர் இவ்வூரில் வாழ்ந்து வருகின்றனர்.

3)  ஏ.ஆர். மங்கலம் (அரனூற்றி மங்கலம்)

இராமநாதபுர மாவட்டம் திருவாடானை வட்டத்தில்  ஏ. ஆர். மங்கலம் என்ற ஊரிலும் அரும்ப கூற்றா இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். ஏ. ஆர் . மங்கலம் என்ற ஊருக்கு உரிய விரிவான பெயர் அரனூற்றி மங்கலம் என்பதாகும். சுமார் பன்னிரெண்டு வீடுகளில் இவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.  இவர்களுடன் பல சாதிப்பிரிவினர்களும் வாழ்ந்து வருகின்றனர்.

4)  கொட்டகுடி

இராமநாதபுர மாவட்டம் ராஜ சிங்க மங்கலம் வட்டத்தில் உள்ள கொட்டகுடி கிராமத்தில் அரும்பு கூற்றா இன மக்களும் வாழ்ந்து வருகின்றர். இவர்களுடன் பல பிரிவு மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள்  சுமார் பத்து வீடுகளில் மட்டுமே இப்பிரிவினர் வசித்து வருகின்றனர்.

5)   கள்ளிக்குடி

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராஜ சிங்க மங்கலம் வட்டத்தில் உள்ள கள்ளிக்குடி என்னும் கிராமத்திலும் அரும்பு கூற்றா இன மக்களும் வாழ்ந்து வருகின்றனர். இவ்வூரில் இப்பிரிவினர் சுமார் பதினெட்டு குடிகள் என்ற அளவில் வாழ்ந்து வருகின்றனர்.

6)  கொன்னக்குடி

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வட்டத்தில் உள்ள கொன்னக்குடி கிராமத்தில் அரும்பு கூற்றா இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். முகிழ்த்தம் என்ற ஊரைப் போல இந்த ஊரிலும் ஒரு குடும்பமே காலப்போக்கில் மூன்று குடும்பமாக உருவாகி வாழ்ந்து வருகின்றர்.. இவ்வீட்டு பெண்கள் மட்டுமே இறைவனை வழிபட்டு பக்தி நிலையில் நிற்கின்றனர்.  ஆண்கள் இறை வழிபாட்டில் நம்பிக்கை இல்லாதவர்களாகவே வாழ்ந்து வருகின்றனர்.

7)  வாகைக்குடி

இராமநாதபுரம் மாவட்டத்தில், திருவாடானை வட்டத்தில் அமைந்த வாகைக்குடி கிராமத்திலும் அரும்பு கூற்றா இன மக்கள் வாழ்ந்து வருகின்றர். இங்கு சுமார் பன்னிரெண்டு வீடுகளில் இப்பிரிவினர் வசித்து வருகின்றனர். இங்கு பல பிரிவினரும் வசித்து வருகின்றனர்.

8)  விளத்தூர்

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வட்டத்தில் விளத்தூர் கிராமத்திலும் அரும்பு கூற்றா இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவ்வூரிலும் ஓரே குடும்பம் காலப்போக்கில் நான்கு குடும்பமாக உருவாகிப் பரவி வாழ்ந்து வருகிறது.. இந்த நான்கு வீட்டுப் பெண்களும் பல தலைமுறையாக அதே ஊரில் வசித்து வருகின்றனர்.

9)  அரும்பூர்

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வட்டத்தில் அமைந்துள்ள அரும்பூர்  கிராமத்திலும் அரும்பு கூற்றா இனத்தவர்கள் வாழ்ந்துவருகிறார்கள். இவ்வூரில் இப்பிரிவினர் சுமார் முப்பது வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களது தொழில் விவசாயம் ஆகும். இவ்வூர் மேல அரும்பூர், கீழ அரும்பூர் என்று இரு பகுதிகளாக அமைந்துள்ளது.

10)            வெளியக் கோட்டை 

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வட்டத்தில் வெளிய கோட்டை என்ற கிராமத்திலும் அரும்பு கூற்றா இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவ்வூரில் சுமார்  இப்பிரிவினர்  ஏழு வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர்.

11)            சூரம்புளி

இராமநாதபுரம் மாவட்டத்தில்,  திருவாடானை வட்டத்தில் சூரம்புளி என்ற கிராமத்தில், அரும்பு கூற்றா இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவ்வூரில்   இப்பிரிவினர் சுமார் பதினைந்து குடிகள் வாழ்ந்து வருகின்றனர்.

12)            ஆயிரவேலி

இராமநாதபுர மாவட்டத்தில், திருவாடனை வட்டத்தில் அமைந்துள்ள ஆயிரவேலி கிராமத்திலும் அரும்பு கூற்றா இனமக்களும் வாழ்ந்து வருகின்றனர். இவ்வூரில் இக்குடியினர் வாழும் பன்னிரண்டு வீடுகள் உள்ளன. பல தலை முறையாக இப்பிரிவினரான 12 குடிகளும் இவ்வூரில் தான்  வாழ்ந்து வருகின்றனர்

13)            கட்டுக்குடி 

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வட்டத்தில் அமைந்து உள்ள கட்டுக்குடி கிராமத்தில்  .அரும்பு கூற்றா இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இக்கிராமம் அரை கிராமம் என்ற  அளவினை உடையதாகும். பன்னிரெண்டரை என்ற அடையாளத்தில் உள்ள அரை என்பதற்கான ஊராக இவ்வூர் அமைந்துள்ளது. இவ்வூரில் பல சமுதாயத்தினரும் வாழ்ந்து வந்தாலும்  இப்பிரிவினர் மூன்று குடிகளே தலைமுறை தலைமுறையாக வசித்து வருகின்றனர்.

மேற்கண்ட கிராமங்கள்  பன்னிரண்டரை கிராம அரும்பு கூற்றா இன மக்கள் வாழும் பகுதிகள் ஆகும்.

     பன்னிரண்டரை கிராம அரும்புக் கூற்றா இனமக்கள் வேளாளர் என்றும் பிள்ளைமார் என்றும் அழைக்கப்படுவதுண்டு. இவ்வகையில் பன்னிரண்டரை கிராம அரும்பு கூற்றா  பிள்ளைமார்கள் என்ற பெயரின் பின்புலத்தை அறிந்து கொள்ள முடிகின்றது.

தனித்த மரபுகள்

அரும்பு கூற்றா இன மக்களிடம் தனித்த மரபு சார் கூறுகள் காணப்படுகின்றன. இவர்கள் தாய்வழிச் சமுதாய மரபினர் ஆவர். இவர்களில் பெண் குழந்தைகள் பிறந்தால் அவர்கள்  அவர்களின் வீட்டிலேயே வாழ்நாள் முழுவதும் இருக்க வேண்டும். அப்பெண் பிள்ளையைத் திருமணம் செய்து கொள்ளும் ஆடவன் தன் பிறந்த வீட்டை விட்டு விட்டு இங்கு வந்து சேர வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டாலும் பெண் பிள்ளையை ஆண் வீட்டுக்குக் கூட்டிச் செல்லும் மரபு இல்லை. இது தாய்வழிச் சமுதாயத்தின் எச்சமாகும்.

இம்மரபு சார்ந்த பெண்கள் வறுமை நிலை வந்தபோதும் பிறர் வீட்டில் வேலை பார்க்கும் பணியைச் செய்வது இல்லை. இதன் காரணமாக பெண் தலைமைச் சமுதாயம் இங்குக் காக்கப் பெற்று வருகின்றது. அரசு வேலைகள் பார்ப்பதில்லை என்ற முன்னவர்களின் மரபும் இதன்வழி காக்கப்பட்டு வருவதை உணரமுடிகின்றது.

இவ்வாறு தனித்த மரபுகள் பல உடைய சமுதாயமாக இச்சமுதாயம் விளங்குகின்றது. இச்சமுதாயத்தின் வாழ்வியல் பற்றிப் பின்வரும் பகுதி எடுத்துரைக்கின்றது.

அரும்பு கூற்றா இன  மக்கள் வாழ்வியல் முறை

மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரையான வாழ்க்கை நடைமுறை வாழ்வியல் எனப்படுகிறது. அரும்பு கூற்றா இன மக்கள் தங்களின் வாழ்க்கை முறையை மற்ற சமுதாயத்திலிருந்து வேறுபட்டு நடத்திக் கொள்கிறார்கள். அவ்வகையில் வேறுபடும் சில முறைமைகளை இங்குச் சுட்டுவது ஆய்விற்குத் தேவைப்படுவதாகும்.

 

குழந்தை பிறப்பு

அரும்பு கூற்றா இனத்தில் பெண் பிள்ளைகள் பிறப்பதே சிறப்பானதாகக் கருதப்படுகிறது. இவர்கள் பெண் பிள்ளைகள் தான் பிறக்கவேண்டும் என்ற கோயிலுக்கு நேர்த்திக்கடன் வைத்து வழிபடும் அளவிற்கு இச்சமுதாயத்தில் பெண் பிள்ளைகள் பெறுவதை நன்மை என்று கருதுகிறார்கள். அதுமட்டுமல்லாமல் எத்தனை பெண் பிள்ளைகள் பிறந்தாலும் இச்சமுதாயத்தினர் மகிழ்ச்சி அடைவார்கள்  அதே சமயத்தில் ஆண்பிள்ளை பிறந்தால் வருத்தப்படும் நிலை உள்ளது. பெண் பிள்ளைகள் தான் பிறந்த குடும்பத்தின் வாரிசாகக் கருதப்படுவதால் இந்நிலை இச்சமுதாயத்தில் நிலவுகின்றது.

பெயர் சூட்டுதல்

பெண் குழந்தை பிறந்தால் பிறந்த உடன் பெற்ற பெண்ணின் கணவரின் தாயின் பெயரை முதலில்  பெண் பிள்ளைக்கு அரும்பு கூற்றா இன மக்கள்  பெயராகச் சூட்டி மகிழ்கின்றனர். இதுபோன்று ஆண்பிள்ளை பிறந்தாலும் கணவரின் தந்தை பெயரை இட்டு அழைப்பது இவர்களின் பழக்கமாக உள்ளது.

செலவு

பெரும்பாலும் எல்லா இனத்திலும் குழந்தைப் பேறு என்பது தாய்வீட்டில் நடைபெறும்.  அரும்புக் கூற்றா இனத்தில் பெண்கள் புகுந்த வீட்டுக்குச் செல்லாத நிலையில் குழந்தைப் பேறு பெண்ணின் தாய்வீட்டிலேயே நடைபெறுகிறது.

தாய் வீட்டில் குழந்தைப் பேறு நடைபெற்றாலும் அதற்கான செலவுகள் அனைத்தும் கணவரின் வீட்டார் செய்ய வேண்டிய நிலை இங்குப் பின்பற்றப்படுகிறது.

திருமண நிச்சயம்

பன்னிரண்டரை  கிராம அரும்பு கூற்றார் இன மக்கள் சமுதாயத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்த உடனே அக்குழந்தைக்கு வருங்கால வாழ்க்கைத் துணையை  நிச்சயம் செய்துவிடும் முறை நடைமுறையில் உள்ளது. இதுவே இச்சமுதாயத்தின் வழக்கமாகும்.

இவ்வாறு நிச்சயம் செய்த பெண்ணுக்கு  நிச்சயம் செய்த நாள் முதல் அப்பெண்ணுக்கு வேண்டியனவற்றை மாப்பிளை வீட்டார் செய்து தரும் வழக்கமும், மாப்பிள்ளைக்கு வேண்டியவற்றை பெண் வீட்டார் செய்து தரும் வழக்கமும்  இச்சமுதாயத்தில் காணப்படுகிறது.

காதணி விழா

பிறந்த குழந்தைக்கு ஒரு வயது ஆகும் நிலையில் காதணிவிழா நடைபெறும் வழக்கமும் அரும்பு கூற்றா இன மக்களிடத்தில் காணப்படுகிறது. குழந்தையின்  தந்தையுடைய  தாய்வீடு  குழந்தைக்கான காதணி விழாவிற்கான செலவுகளை ஏற்றுக் கொள்வார்கள்.

பிற சமுதாயத்தைப்போல் பன்னிரெண்டரை கிராம அரும்புக் கூற்றா பிள்ளைமார்களின் சமுதாயத்தில் மாமன் மடியில் வைத்து காது குத்தும் வழக்கமோ, மாமன் சீர் கொண்டு வந்து காதணி விழா செய்ய வேண்டும் என்கிற வழக்கமோ இதுவரை இல்லை.

பிறந்தநாள் விழா

குழந்தை பிறந்த நிலையில் அக்குழந்தைக்கு ஓராண்டு நிறைவுறும் நி்லையில் பிறந்த நாள் விழா கொண்டாடும் வழக்கம் தற்போது இக்குலத்தில் அதிகரித்து வருகிறது. பிறந்த குழந்தை தாய் வீட்டில் இருப்பதால்,  பிறந்தநாள் விழாவும்  தாய் வீட்டில்தான் கொண்டாடப்பெறும்.

இவ்விழாவிற்கான புதிய உடை வாங்குதல், இனிப்புகள் வாங்குதல் முதலிய அனைத்து செலவுகளையும் தந்தை வீடுதான் செய்ய வேண்டும். பிறந்த குழந்தைக்கு நகை போடும் பழக்கம் உள்ளது அதுவும் அக்குழந்தையின் தந்தை வீட்டில் தான் போடுவது  இச்சமுதாயத்தின் வழக்கமாகும்.

இவ்வாறு குழந்தை வளர்ந்து வரும் நிலையில் பெண் குழந்தை ஆளாகும் வயதினை எட்டும். இப்போதும் பல வாழ்வியல் நடைமுறைகள் அமைந்துள்ளன.

தலைக்குத் தண்ணீர் ஊற்றுதல் (பெண் குழந்தை ஆளாகுதல்)

பன்னிரண்டரை கிராம அரும்பு கூற்றா பிள்ளைமார்களின் பெண் குழந்தைகள் தாய் வீட்டில்தான் இருப்பார்கள் எனவே ஒரு பெண் குழந்தை ருதுவானவுடன்  முதலில் அக்குழந்தை உடைய தந்தையின் தாய் வீட்டிற்கு முதலில்  தகவல் தெரிவிப்பர்.  இத்தகவல் அறிந்ததும், அக்குழந்தையின் தந்தையுடைய தாயாரும் தந்தையின்  சகோதரியும் தான் சீர் கொண்டு வந்து  தலைக்குத் தண்ணீர் ஊற்றும் விழாவை நடத்தி வைப்பார்கள். பிற சமுதாயத்தில் தாய்மாமன் சீர் கொண்டு வருவது பழக்கம். ஆனால் இச்சமுதாயத்தில்   இம்முறை இல்லை. இவ்விழாவிற்கு வரும் விருந்தினர்களுக்கு உணவு ர் வழங்கும் செலவினை அக்குழந்தையின் தாய் வீட்டு ஏற்றுக்கொள்வர்.

 

திருமண ஏற்பாடு

பெண் குழந்தை பிறந்த நிலையில் குழந்தைப் பருவத்திலேயே   திருமணம் நடத்தும் வழக்கமும் அரும்பு கூற்றா இன மக்களிடம் காணப்படுகிறது. இதன் மூலம் ஒரு காலத்தில் குழந்தைத் திருமணங்கள் இக்குலத்தில் பல நடந்துள்ளன. அவ்வாறு செய்தல் குற்றம் என்று அரசாங்கம் தடை செய்த நிலையில் இக்குழந்தைத் திருமணங்கள் தடை செய்யப்பட்டுள்ளன.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு திருமதி சொர்ணவல்லி என்பவரது மகள் கலா என்பவரின் திருமணம் நடைபெறும் நிலையில் அத்திருமணம்  குழந்தை திருமணம்  குழந்தைத் திருமணம் என்று தடைசெய்யப்பட்டது.3 அதுமுதல் இச்சமுதாயத்தில் குழந்தைத் திருமணம் நடைபெறுவதில்லை.

இந்த நிகழ்விற்கு பிறகு தான் பன்னிரண்டரை கிராம அரும்புக் கூற்றா பிள்ளைமார்கள் ஒரு பெண் எப்பொழுது ருது ஆகிராளோ அதன்பின்னரே பெண்ணிற்கு திருமணம் செய்து வைக்கும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொண்டார்கள்.

இவ்வாறு மிக முக்கியமான வாழ்வியலாகத் திருமணம் அமைகிறது.

இறப்பு

வாழ்வின் இறுதியான இறப்பிலும் சில நடைமுறைகள் அரும்பு கூற்றா இன மக்களிடத்தில் மாற்றங்களுடன் காணப்படுகின்றன.

ஒரு ஆண் திருமணம் ஆன பிறகு இறந்தால் அவரது இறப்புச் சடங்கானது அவருடைய பிறந்த வீட்டில் நடக்கும். பெண் வீட்டார் அங்குச் சென்று அந்நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டும்.

இறந்தவருக்கு எட்டாம் நாள் கிரியை போன்ற சடங்குகளைச் செய்வர். இறந்தவரின் மனைவிக்கு பன்னிரண்டரை கிராமத்தவர்களும் வெள்ளைப் புடவை எடுத்துக் கொடுப்பார்கள். கிரியை செய்பவருக்கு, மோதிரம் போடும் பழக்கமும் தற்போது நடைமுறையில்  உள்ளது. 4

எட்டாம் நாள் மாலை எண்ணெய் வைக்கும் சடங்கு நடைபெறுகிறது. இற்நதவருக்கு, இறந்த நாளில் இருந்து முப்பதாம் நாள் இரவு படையல் போடப்படுகிறது.

ஒரு வருடத்திற்கு இறந்தவரின் மனைவி வீட்டை விட்டு வெளியில் செல்ல மாட்டார்கள்.  இறப்பிற்குப் பிறகு அவருடைய மனைவி இறுதிவரை வெள்ளை புடவை தான் அணிய வேண்டும். தங்க நகை ஆபரணங்கள் எதுவும் போடக்கூடாது. ஆனால் காலப்போக்கில் இந்த முறை மாறி வயதானவர்கள் மட்டுமே வெள்ளைப்புடவை அணிகிறார்கள்.

இவ்வாறு பன்னிரண்டரை கிராம அரும்புக் கூற்றா இன மக்களின் வாழ்வியல் அமைகின்றது.

தொகுப்புரை

திருவெற்றியூர் அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை வன்மீக நாதர் திருக்கோயிலை மையமாக வைத்து வாழ்ந்து வரும் பன்னிரண்டரை கிராமத்தைச் சார்ந்த வெள்ளாளர் இன மக்கள் பன்னிரண்டரை கிராம அரும்பு கூற்றா  வெள்ளாள இன மக்கள்  என்று அழைக்கப்பட்டு வாழ்ந்துவருகிறார்கள்.

இவர்கள் யாரும் மூக்கு குத்திக் கொள்வதில்லை. இவர்கள் மூக்குத்தி அணிவதில்லை. இதன் காரணமாக இவர்கள் அரும்பு குற்றா இன மக்கள் என்று அடையாளம் காட்டப்பெற்றுள்ளனர். இது நாளடைவில் அரும்புக் கூற்றா இன மக்கள் என்ற பிரிவாக அழைக்கப்பெற்றிருக்க வேண்டும் என்பது செவி வழிச் செய்தியாக அமைகின்றது.

எட்கர் தாட்ஸன் எழுதிய நூலில் அரும்ப கட்டி வேளாளர் என்று இவ்வினக்குழுவினர் அடையாளப் படுத்தப்படுகின்றனர்.

முகிழ்தகம், திருவெற்றியூர், ஏ.ஆர் மங்கலம், கொட்டகுடி, கள்ளிக்குடி, கொன்னக்குடி, வாகைக்குடி, கட்டுகுடி , விளத்தூர், அரும்பூர், வெளியக்கோட்டை, சூரம்புளி, ஆயிரவேலி என்ற பதிமூன்று கிராமங்களில் கட்டுக்குடி மட்டும் அரை கிராமமாகக் கணக்கில் கொள்ளப்பட்டு பன்னிரண்டரை கிராம அரும்பு கூற்றா இன மக்கள் என்ற இனக்குழுவாக இவ்வூர்களில் வாழ்ந்து வருகின்றனர்.

இவ்வினக்குழுவில் திருமணம் ஆனபின் பெண்கள்  தங்கள் தாய்வீட்டிலேயே இருப்பர்.  இவ்வேறுபாடு தனித்த வேறுபாடாக இவ்வினக்குழுவில் காணப்படுகிறது.

பிள்ளை பிறந்தது முதல் பன்னிரண்டரை கிராம அரும்பு கூற்றா இன மக்கள் சிற்சில வேறுபாடுகள் கொண்டு வாழ்வியல் நடைமுறைகளைக் கொண்டுள்ளனர். பெண் குழந்தைகளைப் பெறுவதே இவ்வினக்குழுவில் சிறப்பு என்று கருதப்படுகிறது.

சான்றாதாரங்கள்

  1. பக்தவத்சலபாரதி, பண்பாட்டு மானிடவியல், ப.
  2. தகவலாளி மஞ்சுளா தந்த தகவல்
  3. கவலாளி நித்யா தந்த தகவல்
  4. தகவலாளி ராஜவள்ளி தந்த தகவல்

ஈ. ரமாமணி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பன்னிரெண்டரை கிராம அரும்புக் கூற்றா இனம் ஓர் அறிமுகம்”

அதிகம் படித்தது