மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பல் துலக்குவதில் இவ்வளவு விசயம் உள்ளதா?

முனைவர். ந. அரவிந்த்

Mar 19, 2022


siragu pal thulakkuthal1

நல்லெண்ணெயில் வாய் கொப்புளித்த பின்னர் நாம் நல்ல தண்ணீரால் வாய் கொப்பளிக்கும்போது நம் உடலில் உள்ள சளியானது தானாகவே அல்லது காரினாலோ வெளிவரும். இதனை வெளியே துப்பிய பின்னர் பல் துலக்க வேண்டும்.

பல்துலக்க பற்பசையை பயன்படுத்தாதீர்கள். இது முழுக்க முழுக்க இரசாயனம் நிறைந்தது. நாம் தினசரி உபயோகப்படுத்தும் பற்பசை குழாயின் அடிப்பகுதியில் நான்கு வெவ்வேறு நிறங்கலான கருப்பு, நீலம், சிவப்பு மற்றும் பச்சை போன்றவற்றில் ஏதாவது ஒன்றினால் ஆன பட்டை இருக்கும்.  ஒவ்வொரு நிறத்திற்கும் ஒவ்வொரு அர்த்தம் உண்டு.

  1. கருப்பு நிற பட்டை – பற்பசை இரசாயனங்களால் மட்டுமே செய்யப்படுகிறது
  2. நீல நிற பட்டை – இயற்கையானது அதே நேரத்தில் மருத்துவ குணம் நிறைந்தது
  3. சிவப்பு நிற பட்டை – இரசாயனம் மற்றும் இயற்கை பொருட்கள் கலந்தது
  4. பச்சை நிற பட்டை – முழுவதும் இயற்கையானது

இன்று பச்சை நிற பட்டையுடன் ஆயுர்வேத பற்பசைகள் கடைகளில் விற்பனைக்கு வருகின்றன. ஆயுர்வேத பற்பசையில் வெறும் 3% மட்டுமே இயற்கை பொருட்கள் உள்ளது என்றும், மீதி 97% இரசாயனம்தான் உள்ளது என்றும் ஆய்வுகள் கூறுகின்றன. ஆயுர்வேத பற்பசை பயன்படுத்துவதால் நம் உடலில் எந்த ஒரு நல்ல மாற்றமும் உண்டாவதில்லை. சிவப்பு நிற பட்டை உள்ள சாதாரண பற்பசையைவிட ஆயுர்வேத பற்பசை சற்று பரவாயில்லை அவ்வளவுதான்.

siragu pal thulakkuthal2

நம் உடலில் வாய் பகுதியில் மட்டும் 26 உமிழ்நீர் சுரப்பிகள் உள்ளன என்று ஆயுர்வேத நூல்கள் கூறுகின்றன. இவை உதடு, கன்னங்களின் உட்பகுதி, வாய் மற்றும் தொண்டை பகுதிகளில் உள்ளன. ஒவ்வொரு உமிழ்நீர் சுரப்பியும் வெவ்வேறு வகை உமிழ்நீர்களை சுரக்க வைக்கின்றன. இந்த உமிழ்நீர்கள் பலவகை உணவுகளையும் ஜீரணிக்க உதவுகின்றன. தினமும் இரண்டு முறை பற்பசையை வைத்து பல் துலக்குவதால் இந்த உமிழ்நீர் சுரப்பிகள் பாதிக்கப்பட்டு உமிழ்நீர் சுரப்பதை நிறுத்தி விடுகின்றன. நாம் தொடர்ந்து பல வருடங்கள் பற்பசையை வைத்து பல் துலக்கினால் நிச்சயம் ஒருநாள் உணவு செரிமானத்தில் பிரச்சனை வரும் என்பதில் ஐயமில்லை.

இதற்கு மாற்றாக பற்பொடியை பயன்படுத்தி பல் துலக்கலாம். பற்பொடியானது அனைத்து கடைகளிலும் கிடைக்கும். நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் மூலிகை பற்பொடி மிகவும் நல்லது. படிகாரம், இந்துப்பு, வேப்பிலை பொடி, புதினா பொடி, கருவேலம் பட்டை பொடி போன்றவற்றை வைத்து நாமே வீட்டில் பற்பொடி தயார் செய்யலாம். இந்துப்பு வாய், ஈறு, பற்கள் இருக்கும் இடங்களில் காயங்கள் உண்டாக்காமால் காக்கும். வேப்பிலை கிருமி நாசினி. வேப்பங்குச்சிக்கு மாற்றாக வேப்பிலை பொடி பயன்படுத்தலாம். வேப்பிலை வாய்க்குள் தங்கியிருக்கும் கெட்ட கிருமிகளை அழிக்க உதவும். ஈறில் இரத்தம் வடிதல், பல் வலிக்கு கருவேலம் பட்டை பொடி மிகவும் சிறந்தது.

பல் துலக்க ஆள்காட்டி விரலை பயன்படுத்தலாம். விரலை வைத்து பல் துலக்கினால் நல்லது. ஆனால், இவ்வாறு செய்வதால் பற்களின் நடுவே உள்ள அழுக்குகள் சில சமயத்தில் வெளியேறாது. அதற்கு பதிலாக, பற்களை வேம்பு அல்லது ஆல மரக் குச்சிகளை வைத்து பல் துலக்கலாம். ஆனால், குச்சிகளை தேவையான அளவில் தயார் செய்வதற்கு யாருக்கும் பொறுமையில்லை. இவை அனைத்திற்கும் பதிலாக, தரமான தூரிகையை (brush) வைத்து வேண்டுமானால் பயன்படுத்தலாம். இது தவறில்லை. ஆனால், கடைசியில் கை விரலை வைத்து ஈறுகளை தேய்க்க வேண்டும்.

பல் துலக்கி வாய் கொப்பளித்து முடித்த பின் முகம், முக்கியமாக காதுகளையும் நன்கு கழுவ வேண்டும். இரவு படுக்கையறை செல்வதற்கு முன்னரும் அவசியம் பல் துலக்க வேண்டும்.


முனைவர். ந. அரவிந்த்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பல் துலக்குவதில் இவ்வளவு விசயம் உள்ளதா?”

அதிகம் படித்தது