மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பாலின சமத்துவம் இல்லாததால் பின்தங்கும் இந்தியா

தேமொழி

Dec 26, 2015

paalina samaththuvam4பாலின சமத்துவம் இல்லாததால் பின்தங்கும் இந்தியா … ஐக்கிய நாடுகள் சபை சமீபத்தில் (டிசம்பர் 15, 2015) வெளியிட்ட அறிக்கையில் காணும் தகவல் இது. ஐ.நா.வின் வளர்ச்சி திட்டப் பிரிவு (United Nations Development Programme – UNDP) ஒவ்வொரு நாட்டின் மனிதவள மேம்பாட்டின் நிலையை அளவிடும் மனிதவள மேம்பாட்டுக் குறியீட்டின் (Human Development Index -HDI) அடிப்படையில் நாடுகளின் நிலையை ஆய்ந்து, தரவரிசைப்படுத்தி ஆண்டறிக்கைகள் வெளியிட்டு வருகிறது. இந்த அறிக்கையில் மனிதவளம் மேம்பாடு அடைவதன் அறிகுறியாக; நீண்ட ஆரோக்கியமான ஆயுள், கல்வி கற்கும் வாய்ப்பு, அடிப்படை வசதிகள் கொண்ட வாழ்க்கைத் தரம் (a long and healthy life, access to knowledge and a decent standard of living) ஆகியவை உலகளவில் 188 நாடுகளுக்கிடையே ஒப்பிடப்பட்டுத் தரவரிசைப்படுத்தப்படுகிறது.

ஒவ்வொரு நாட்டிலும் ஆட்சியில் இருக்கும் அரசு இத்தகவலை உரிய முறையில் பயன்படுத்தி தங்கள் எதிர்காலத் திட்டத்தை வகுக்க உதவ வேண்டும் என்பதே இந்த ஐ. நா. அறிக்கை வெளியிடப்படுவதன் நோக்கம். தங்களது நாட்டு மக்களின் உடல்நலம், கல்வி, வாழ்க்கைத்தரம் ஆகியவற்றை மற்றநாட்டு தரவரிசையுடன் ஒப்பிட்டு நாட்டு மக்களும் தங்களது வாழ்க்கை நிலை பற்றிய ஒரு புரிதலை இந்த அறிக்கையின் மூலம் பெறலாம். உடல்நலம், கல்வி, வாழ்க்கைத்தரம் ஆகியவற்றில் காணப்படும் குறைபாடுகள் தனிமனித முன்னேற்றத்தையும் குலைக்கும், அதனால் அந்த நாடும் வளர்ச்சியில் பின்தங்கும்.

paalina samaththuvam2அறிக்கைகள் வெளியிடப்படுவது என்பது முதல் படிதான். அதில் உள்ள தகவல் சேரவேண்டியவர்களைச் சென்று சேர்கிறதா என்பதே மிக முக்கியமானது. இந்த அறிக்கை கூறும் தகவல்கள் பற்றி இந்தியப் பத்திரிக்கைகளில் ஆங்கிலப் பத்திரிக்கைகள் கவனம் செலுத்திய அளவிற்குத் தமிழ் நாளிதழ்கள் கவனம் செலுத்தவில்லை. ஓரிரு இணைய இதழ்களும் ஓரிரு பத்திரிக்கைகளும் செலுத்திய கவனமும் அந்த அறிக்கையின்படி இந்தியப் பெண்களில் 80 சதவீதம் பேருக்கு வங்கிக் கணக்கு இல்லை, இந்தியப் பெண்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது என்பது போன்ற மிக மேலோட்டமான தகவல்களே. அதாவது, தமிழ்த் திரைப்படச் சங்கத்தின் தேர்தலுக்குக் கொடுத்த அளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்று ஊடகங்களிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை. எனினும் கொஞ்சம் விரிவான செய்தியாக, மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்பொழுது இந்திய மக்களின் நிலை என்ன என்று மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் என்பதை தமிழ்ப் பத்திரிக்கைகள் உணர வேண்டியத் தேவை இருக்கிறது என்பதை இங்குக் குறிப்பிட வேண்டியிருக்கிறது.

ஐ. நா. மனிதவள மேம்பாடு குறித்த 2015 ஆண்டிற்கான அறிக்கையின்படி, முதல் மூன்று இடங்களில் இருக்கும் நாடுகள் முறையே நார்வே, ஆஸ்திரேலியா மற்றும் சுவிட்சர்லாண்ட் ஆகிய நாடுகள். சென்ற ஆண்டின் நிலையுடன் ஒப்பிடும் பொழுது இந்தியா சற்றே தர வரிசையில் முன்னேறியிருக்கிறது. அறிக்கையின்படி, 188 நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா பெற்றிருக்கும் இடம் 130, சென்ற ஆண்டின் 135 என்பதிலிருந்து கொஞ்சமே முன்னேறியிருக்கிறது. உலகநாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் நிலை சராசரிக்கும் கீழே உள்ளது. ஆனால் இது போன்ற பின்தங்கிய நிலையிலேயே பலகாலமாக இந்தியா இருந்து வருவதும் இங்குக் குறிப்பிடத்தக்கது. அத்துடன் முன் காணப்பட்ட ஆரோக்கியமான வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில், 2010 ஆம் ஆண்டிற்குப் பிறகு வளர்ச்சி நிலை மிக மந்தநிலையிலும் உள்ளது. பிரிக்ஸ் (BRICS – Brazil, Russia, India, China and South Africa) கூட்டணியில் உள்ள நாடுகளில் இந்தியாவே கடைசி நிலையில் உள்ளது. இது உலகின் ஒன்பதாவது பணக்கார நாடான இந்தியாவின் நிலை. தெற்காசிய பிராந்தியக் கூட்டமைப்பில் (SAARC) உள்ள நாடுகளில் பங்களாதேஷ் 142 வது இடத்தையும், பாகிஸ்தான் 147 இடத்தையும் பிடித்துள்ளன.

சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில் வளர்ச்சியில் சற்றே மேம்பட்டதன் காரணம், மக்களின் ஆயுள் சிறிது நீண்டிருப்பதும், வருமானம் சற்று அதிகரித்திருப்பதுமாகும். ஆயுள் சென்ற ஆண்டின் 67.6 ஆண்டுகள் என்பதிலிருந்து, 68 ஆண்டுகள் என்று உயர்ந்திருக்கிறது. இதனையே 35 ஆண்டுகளுக்கு முன்னர் 1980 ஆண்டின் தகவலுடன் ஒப்பிட்டால் 53.9 ஆண்டுகள் என்பதிலிருந்து நல்ல முன்னேற்றம் என்பது தெரியும். அவ்வாறே நாட்டின் மொத்த வருமானம் (Gross National Income – GNI) சென்ற ஆண்டில் தலைக்கு 5,180 (அமெரிக்க டாலர்களில்) இருந்து இந்த ஆண்டு 5,497 ஆக உயர்ந்துள்ளது. இது 1980 இல் 1,255 ஆக இருந்தது. ஆனால் சராசரி கல்வி பயின்ற ஆண்டுகளான 5.4 என்பதில் கடந்த ஐந்தாண்டுகளாக எந்த குறிப்பிடத்தக்க முன்னேற்றமும் இல்லை.

Obamaபாலின சமத்துவத்திலும், பெண்களின் முன்னேற்றத்திலும் இந்தியா மிகவும் பின்தங்கியுள்ளது. ஆண் பெண் வேறுபாடுகளில் காணும் அதிகப்படியான இடைவெளியின் காரணமாக இந்தியாவின் வளர்ச்சியின் நிலை தரவரிசையில் பின்தங்க நேர்ந்துள்ளது கவனிக்கப்படவேண்டிய ஒன்று. பெண்களின் முன்னேற்றம் என்ற அளவீட்டில் அண்டை நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் நிலை பங்களாதேஷைவிடவும், பாகிஸ்தானைவிடவும் பின்தங்கியிருப்பதாக தெரிகிறது. பாலின சமத்துவ அளவீட்டில் (Gender Inequality Index – GII) 155 நாடுகளுடன் ஒப்பிடுகையில் தரவரிசையில் இந்தியா பெற்ற இடம் 130. இந்தியாவின் 15-24 வயது இளைஞர்களில் கல்வி கற்ற பெண்கள் 74.4% சதவீதம் என்பது அதே வயது கல்விபெற்ற ஆண்களின் 88.4% சதவீதம் என்பதுடன் ஒப்பிடுகையில் குறைவே. சராசரியாக, வயதுவந்த ஒரு இந்திய ஆணின் கல்வித்தகுதி, வயது வந்த இந்தியப் பெண்ணின் கல்வித் தகுதியுடன் ஒப்பிடுகையில் இருமடங்கு அதிகமாக உள்ளது.

மகப்பேறு மருத்துவ உதவி, மகப்பேறுகாலத்தில் தாயின் மரணம், நாடாளுமன்ற அதிகாரமிக்க உறுப்பினர் பதவிகளில் பெண்களின் எண்ணிக்கை, பெண்களின் கல்வி நிலை, பொருளாதாரம் மற்றும் ஊதியம் பெறும் பணிகளில் பெண்களின் பங்கேற்பு போன்ற காரணிகள் கொண்டு ஒரு நாட்டின் பெண்களின் நிலை மதிப்பிடப்படுகிறது (The index captures inequalities in gender-specific indicators: reproductive health measured by maternal mortality ratio and adolescent birth rates, empowerment quantified by share of parliamentary seats and attainment in education, and economic activity measured by labour market participation rate – measured by comparing male and female life expectancy, expected years of schooling and Gross National Income per capita as well as looking at reproductive health and empowerment). இந்தப் பாலின சமத்துவ அளவீட்டில், பிற தெற்காசிய நாடுகளுடன் இந்தியாவை ஒப்பிடுகையில், ஆப்கானிஸ்தானை விட மட்டுமே இந்தியா சிறந்த நிலையில் உள்ளது என்பது அதிர்ச்சி தரும் தகவல். இந்தியாவின் இடம் 130, ஆப்கானிஸ்தான் 152. பங்களாதேஷும், பாகிஸ்தானும் கூட தரவரிசையில் முறையே 111 மற்றும் 121 இடங்களைப் பெற்று இந்தியாவைவிடச் சிறந்த நிலையில் இருக்கின்றன. மனிதவள மேம்பாட்டுத் தரவரிசையில் இந்தியாவையும் விடப் பின்னுள்ள நிலையில் இருக்கும் பங்களாதேஷும் பாகிஸ்தானும், பாலின சமத்துவம் என்ற அடிப்படையில் ஒப்பிடுகையில் இந்தியாவை விட முன்னேறிய நிலையில் உள்ளன.

முன்னர் இந்தியாவின் பகுதிகளாக இருந்த பங்களாதேஷுடனும் பாகிஸ்தானுடனும் ஒப்பிடுகையில் …

  • இந்தியாவில் 12.2% பாராளுமன்ற பெண் உறுப்பினர்களே உள்ள நிலையில் பாகிஸ்தானில் 19.7 %ம், பங்களாதேஷில் 20%ம் இருக்கிறார்கள்.
  • மகப்பேறு காலத்தில் ஒருலட்சம் பிறப்புகளில் இந்தியாவின் 190 பெண்கள் உயிரிழக்கிறார்கள், பேறுகால தாய் இறப்பு விகிதம் பங்களாதேஷிலும் பாகிஸ்தானிலும் 170 ஆக இருக்கிறது.
  • இந்தியாவில் மேல்நிலைக் கல்வி பெரும் பெண்கள் 27 %, ஆனால் பங்களாதேஷிலோ 34 % பெண்கள் மேல்நிலைக் கல்வியைப் பெறுகிறார்கள்.
  • ஊதியம் தரும் பணிகளில் 27% இந்தியப் பெண்கள் பங்கேற்கிறார்கள், பங்களாதேஷிலோ 57 % பெண்கள் வருமானம் ஈட்டுகிறார்கள்.

மேற்காணும் இத்தனை அளவீட்டிலும், தெற்காசிய நாடுகளில் இந்தியா பின்தங்கிய நிலையில் காணப்படுகிறது. பதின்மவயது பெண்கள் தாயாவதில் மட்டுமே பாராட்டக்கூடிய வகையில் இந்தியா குறைவான விகிதத்தைப் பெற்றுள்ளது. அத்துடன் போரினால் நிலைகுலைந்த சிரியா, ஈராக் போன்ற நாடுகளையும் விட இந்தியாவில் பெண்களின் நிலை மோசம். இந்தியப் பெண்களின் வாழ்க்கைத்தரம் சகாரா பாலைவனத்தினைச் சூழ்ந்துள்ள ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஒப்பாக இருக்கிறது. இது மிகவும் கவலைக்குரிய நிலை. இதைவிடவா 80% இந்தியப் பெண்களுக்கு வங்கிக் கணக்கு இல்லை என்பது இந்த அறிக்கை தரும் மிக முக்கியமான செய்தி?

தரவரிசையில், வளர்ச்சி ஒப்பீட்டில் இந்தியா 28.6% அளவு மதிப்பீடுகளை இழந்து பின்தங்க நேர்ந்ததன் காரணம் கல்வியில் காணும் பாலின சமத்துவமின்மையே (India loses 28.6% HDI due to inequality, largely due to inequality in education (42.1%) என்று அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. இந்தியப் “பெண்களின் நிலையை” மட்டும் வைத்து மனிதவள மேம்பாட்டைக் கணக்கிட்டிருந்தால் இந்தியா 155 நாடுகளுக்கான இந்தத் தரவரிசையில், இப்பொழுது இருக்கும் 130 வது இடத்தில் இருந்து 151 வது இடத்திற்குத் தள்ளப்பட்டிருக்கும். ஆனால் “ஆண்களின் நிலையை” மட்டும் வைத்துக் கணக்கிட்டிருந்தால் 120 வது இடத்தைப் பிடித்திருக்குமாம். இந்த வேறுபாடு மிகத் தெளிவாக சுட்டிக் காட்டுகிறது இந்தியாவில் புழக்கத்திலிருக்கும் பாலின வேறுபாடுகளையும் பேதங்களையும்.

paalina samaththuvam1மேலும், பெண்கள் தொடர்ந்து குறைந்த அளவே ஊதியம் பெறுவதாகவும், அவர்கள் உழைப்பு சுரண்டப்படுவதாகவும், தலைமைப் பதவிகளைப் பெறுவதில்லை என்பதையும் அறிக்கை கூறுகிறது. தனது உழைப்பில் முக்கால் பங்கு உழைப்பிற்குப் பெண்கள் ஊதியம் இன்றியே வேலை செய்கிறார்கள். இந்த ஒப்பீட்டுக்காக ஊதியம் பெறும் பணியில் ஆற்றும் உழைப்பை மட்டும் கணக்கிடாது, ஊதியம் பெற்றோ பெறாமலோ உழைக்கும் மொத்த உழைப்பும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. அவ்வாறு உழைக்கும் பொழுது ஊதியம் கொடுக்கப்பட்டாலும் அந்த ஊதியமும் குறைத்தே கொடுக்கப்படுகிறது. உலக அளவில் பெண்கள் பணியில் ஈடுபடும் எண்ணிக்கை ஒட்டுமொத்தமாகவே இந்த அறிக்கை ஆண்டில் குறைந்துள்ளது. அதற்கு, பணிபுரியும் இந்தியப் பெண்களின் எண்ணிக்கை குறைந்ததும் (1990 இல் இருந்த 35% இல் இருந்து இப்பொழுது 27% ஆகக் குறைந்துள்ளது), சீனாவில் பணிபுரியும் பெண்களின் எண்ணிக்கை குறைந்ததும் (1990 இல் இருந்த 73% இல் இருந்து இப்பொழுது 64% ஆகக் குறைந்துள்ளது) காரணமாக இருக்கிறது. உலக அளவிலும் பெண்களின் உழைப்பிற்குச் சராசரியாக ஆண்களைவிட 24% ஊதியம் குறைவாக கொடுக்கப்படுவதும், பெண்களில் 25% க்கும் குறைவானவரே தலைமைப் பதவியையும் பெறுகிறார்கள்.

இந்த நிலையை மாற்ற உழைப்பிற்குத் தகுந்த சம அளவு ஊதியம், மாறுபட்ட வேலை நேரங்கள், ஊதியமற்ற பணிச்சுமையைக் குறைப்பது, பெண்களை வருமானம் தரும் பணிகளில் ஈடுபட வாய்ப்புகளை உருவாக்குவது, சமூகப் பாதுகாப்பு தரும் நல்ல சேமநிதி திட்டங்களை உருவாக்குவது, பெற்றோருக்கான பேறுகால விடுப்புகள், பணியிட பாலின தீவிரவாதங்களையும் வன்முறைகளைக் குறைக்க நடவடிக்கை போன்ற கொள்கைகளை வகுத்து பெண்களை ஊதியம் தரும் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பை அதிகரிக்க இந்த அறிக்கை ஆலோசனை கூறுகிறது.

இந்தியப் பெண்களின் நிலையை உயர்த்துவதால், பாலின சமத்துவம் பெறுவதால் இந்தியாவின் பொருளாதார நிலை உயரும் என்பதை மெக்கின்சி அறிக்கையும் (McKinsey report) கூறுகிறது. மேலும் ஐ.நா. அறிக்கை குறிக்கும் அதே அளவீடுகளில் ஆய்வு செய்த மெக்கின்சி அறிக்கையும், ஐ.நா. அறிக்கை குறிக்கும் அதே முடிவுக்கு வருவதால், பிறநாடுகளுடன் ஒப்பிடுகையில் பாலின பேதம் கொண்ட இந்திய சமுதாயத்தில் பெண்களின் வாழ்க்கை நிலை உயராமல் இருப்பது உறுதியாகிறது. இந்தப் பிற்போக்கான நிலை இந்தியாவின் முன்னேற்றத்தையும் பின்னடையச் செய்கிறது. இந்தியப் பெண்களின் நிலை உயர அரசு சரியான கோள்கைகளை வகுக்க வேண்டும். ஊடகங்களும் தங்கள் கடமையைப் பொறுப்புடன் சரிவரச் செய்து மக்களுக்கு உலக நிலையை உணர்த்த வேண்டும்.

______________________________________________________________________________________________________

மேலும் தகவலுக்கு:

[1] Human Development Report. 15 December 2015

http://report.hdr.undp.org/

[2] Human Development Report 2015

http://www.undp.org/content/undp/en/home/presscenter/events/2015/december/HDR2015.html

[3] Two billion move out of extreme poverty over 25 years – UN flagship development report

http://www.un.org/apps/news/story.asp?NewsID=52811#.Vm-gYfkrL4Y

[4] The Human Development Index – what it is and what it is not

http://www.undp.org/content/undp/en/home/blog/2015/3/10/The-Human-Development-Index-what-it-is-and-what-it-is-not.html

[5] UNDP urges that no one is left behind in the fast-changing world of work

http://www.undp.org/content/undp/en/home/presscenter/pressreleases/2015/12/14/-address-challenges-and-seize-opportunities-of-the-new-world-of-work-undp-urges/

[6] Inequality Pulls India’s Human Development Score Down

http://thewire.in/2015/12/15/inequality-pulls-indias-human-development-score-down-17294/

[7] India could boost 2025 GDP by 60% by promoting gender diversity at work: McKinsey report, India is clubbed among the lowest scorers in parameters such as gender equality in work

http://www.business-standard.com/article/economy-policy/india-could-boost-2025-gdp-by-60-by-promoting-gender-diversity-at-work-mckinsey-report-115092401091_1.html

[8] Gender parity to add Rs 46 lakh cr to India’s GDP: McKinsey report, The report said that about 70% of the increase would come from raising India’s female labour-force participation rate from the existing 31% to 41% in 2025

http://www.business-standard.com/article/companies/gender-parity-to-add-rs-46-lakh-cr-to-india%E2%80%99s-gdp-mckinsey-report-115110201045_1.html


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பாலின சமத்துவம் இல்லாததால் பின்தங்கும் இந்தியா”

அதிகம் படித்தது