மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மனிதம்

பா. வேல்குமார்

Jul 23, 2016

Siragu-manitham1

நாம் வாழக்கூடிய நமது வாழ்க்கையானது, ஒருமுறைதான். நம் வாழ்க்கையானது அர்த்தமுள்ளதாகவும், பிறருக்கு முன் உதாரணமாகவும் விளங்கக்கூடிய மகத்தான மனிதர்களின் வாழ்வியலை, சமூக அக்கறையுள்ள அம்மனிதர்களின் பதிவு தான் இம் மனிதம்,

கள்ளக்குறிச்சி ராஜா, திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதிகளுக்கு மனநல ஆலோசனை வழங்கும் நிபுணர்.

Siragu-manitham4

சிறைக் கைதிகளின் ஒவ்வொரு நாள் வாழ்க்கையினையும் அவர்களது அன்றாட பழக்க வழக்கங்களையும் அருகில் இருந்து கவனித்து, அவர்களும் இச்சமூகத்தில் தங்களது வாழ்க்கையினை வாழ்வதற்கு வழிகாட்டும் மகத்தான மனிதர்

கைதிகளுக்கு ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைத்து, அவர்களுக்கு தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் மனதில் தோன்ற விடாமல், நல்வழிப்படுத்தும் சமூக அக்கறையுள்ள மனிதர்.

Siragu-manitham5திரு. ராஜா அவர்கள் பாளை மத்திய சிறையின் மனநல ஆலோசகராக பணியில் சேர்ந்த பிறகு, இதுவரை ஒரு தற்கொலை நிகழ்வுகள் கூட நடைபெறவில்லை என்பது, அவரது சாதனை என்பதைவிட, அவருக்குள் இருக்கும் மனிதம் தான், சிறைக்கைதிகளின் குழந்தைகளை படிக்க வைப்பது, அவர்களின் குடும்பத்தின் வறுமைநிலை அறிந்து அவர்களுக்கு தனது நண்பர்கள் மூலம் ஓடோடிச் சென்று உதவுவது, அக்கைதிகளின் குழந்தைகளுக்கு மனநல ஆலோசனை வழங்குவது உள்ளிட்ட எண்ணற்ற பல நற்பணிகளைச் செய்து வருகின்றார்.

மேலும் இவரின் பணித் திறமையை அறிந்து, சிறைகளில் கைதிகள் தற்கொலை செய்வதைத் தடுக்கவும், சிறைக் கைதிகளுக்கு மனநல ஆலோசனை வழங்கவும் தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் புதியதாக 17 மனநல ஆலோசகர்களை அரசு நியமனம் செய்துள்ளது.

Siragu-manitham6

சென்னைப் பெரு வெள்ளத்தின் போதும், கடலூரில் நிகழ்ந்த வெள்ள பாதிப்பின் போதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தாங்களும் உதவி செய்திட வேண்டும் என்று பாளை மத்திய சிறையில் உள்ள ஆயுள் கைதிகள் சிலர் முடிவு செய்து, அதனை திரு. ராஜா அவர்களிடம் தெரிவித்துள்ளனர். ராஜா அவர்கள் பாளை மத்திய சிறையில் உள்ள உயர் அதிகாரிகளின் அனுமதியைப் பெற்று, பாதிக்கப்பட்ட மக்களுக்கு 4000 சப்பாத்திகளையும், 150 கிலோ கோதுமை மாவையும் தயார் செய்து அனுப்பி வைத்துள்ளனர், மேலும் இப்பணியில் 25 ஆயுள் கைதிகள் தங்களுடைய பங்களிப்பை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறைவாசிகளின் குடும்பத்தினர் இச்சமூகத்தில் படும் இன்னல்களையும், துன்பத்தையும் அருகில் இருந்து கவனித்து அவர்களுக்குத் தேவையான மனநல உதவிகளை தொடர்ந்து விடாமல் செய்து வரும் ராஜா அவர்கள், சிறைவாசிகளின் குடும்பத்தில் நடக்கும் நிகழ்வுகளிலும் தவறாமல் கலந்து கொள்கின்றார். ஒரு சிறைவாசியின் மகன் அல்லது மகள் தன்னுடைய தந்தை செய்த தவறுக்காக, இச் சமூகத்தில் அவர்கள் எப்படிப்பட்ட இன்னல்களையெல்லாம் அனுபவிக்கிறார்கள் எனபதை கண்கூடாக அருகில் இருந்து கவனித்து, அவர்களுக்கு சிறு வயதில் மனதில் தாழ்வு மனப்பான்மை ஏற்படாத வண்ணம், நல் சிந்தனை கூறி, கல்வி உதவி செய்து நல்வழிப் பாதைக்கு அழைத்துச் செல்கின்றார்.

Siragu-manitham3சிறைவாசிகளும் அவர்களது குடும்பமும் தன்னுடைய வாழ்வில் ஒரு அங்கம் என்று கூறும் திரு ராஜா அவர்கள், தன்னுடைய திருமண நிகழ்வில் அவர்களின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்று முடிவெடுத்து, பாளை மற்றும் நெல்லை அருகில் உள்ள சிறை வாசிகளின் குடும்பத்தினருக்கு நேரில் சென்று, அழைப்பிதழ் கொடுத்து, அவர்களையும் கலந்து கொள்ள வைத்துள்ளார்.

பாளை சிறையில் இருக்கும் கைதிகள் அனைவருக்கும் தன்னுடைய திருமண நிகழ்வின் நினைவாக, சிறைவாசிகள் அனைவருக்கும் ஒரு நாள் உணவளித்து, அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்தி உள்ளார்.

பொதுவாக சிறையில் இருப்பவர்களுக்கு, தனி நபர் சம்பந்தப்பட்ட விழாக்களுக்கு உணவளிக்க கூடாது என்பது விதிமுறை, அதனால் ஆகஸ்ட் 15ம் தேதி நம்முடைய சுதந்திர தினத்தன்று திருமண விருந்து அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

திரு ராஜா அவர்களின் மனதில் உள்ள ஈரமும், சுயநலமற்ற அவரின் குணமும் அவருடைய வாழ்வில் இன்னும் பல சிகரங்களை அடைய நாமும் வாழ்த்துவோம். தான் கற்ற கல்வியை சமூகத்திற்கு எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் இவரைப் போன்ற மனிதர்கள் தான்.

ராஜாவைப் போன்ற மகத்தான மனிதர்கள் வாழும் போது, இம்மண்ணுலகில் மனிதம் என்றும் நிலைத்திருக்கும்.


பா. வேல்குமார்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மனிதம்”

அதிகம் படித்தது