மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

அழிந்த அணையும், பெருவெள்ளமும் தொன்மையான நாகரிகமும்

தேமொழி

Aug 20, 2016

அணை உடைந்ததால், பெருவெள்ளம் ஒன்று ஏற்பட்டு அதன் முடிவில் பண்டைய நாகரிகம் ஒன்று உருவானதற்குச் சான்றுகள் கிடைத்துள்ளன என்று விளக்கமளித்த அறிவியல் கட்டுரை ஒன்றும்; அணை உடைந்ததால், பெருவெள்ளம் ஒன்று ஏற்பட்டு அதன் முடிவில் பண்டைய நாகரிகம் ஒன்று அழிந்தது என்ற ஒரு கற்பனைக் கதையினை அடிப்படையாகக் கொண்டு உருவான திரைப்படம் ஒன்றும் அடுத்தடுத்து வெளியாகி அண்மையில் கவனத்தைக் கவரும் வகையில் அமைந்தன.

Siragu Alindha anai1

அணை உடைந்து, பெருவெள்ளம் ஏற்பட்டு இறுதியில் நாகரிகம் ஒன்று உருவானது நிகழ்ந்தது சீனாவில். மாமன்னர் யூ உருவாக்கிய “ஷா குலப் பேரரசு” (Xia dynasty) குறித்த தொல்லியல் சான்றுகள் கிடைத்துள்ளதாக தொல்லியல் ஆய்வுகள் கூறுகின்றன. சிந்து ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணை உடைந்ததால் பெருவெள்ளம் ஏற்பட்டு, மொஹஞ்சதாரோ நகரம் அழிந்ததால் அந்நகரம் கைவிடப்பட்டது என்பது சுதந்திர தினத்திற்காக பாலிவுட் திரையுலகம் வெளியிட்டுள்ள “மொஹஞ்சதாரோ” படம் கூறும் கதை. இவையிரண்டையும் அடுத்தடுத்துத் தருகிறது இக்கட்டுரை.

நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், சீனாவின் யூ மாமன்னரின் பேரரசு இருந்ததாக சீனத் தொன்மக் கதைகள் கூறுவதுண்டு. இதுவே சீன நாகரிகத்தின் துவக்கம் என்றும் கருதப்படுகிறது. இருப்பினும், இக்கதை உலகெங்கும் பலநாடுகளிலும் வழங்கிவரும் மாபெரும் வெள்ளம் பற்றிய கதைகள் போல, அதாவது, ‘நோவா’வின் கதை போன்ற ஒரு தொன்மக்கதை என்றும் நம்பப்பட்டு வந்தது. ஆனால், மாமன்னர் யூ மஞ்சள் ஆற்றில் ஏற்பட்ட மாபெரும் வெள்ளத்தைக் கால்வாய்கள் வெட்டித் திசைதிருப்பி கட்டுக்குள் கொண்டுவந்து நல்லாட்சி செய்தார் என்று வழிவழியாகக் கூறப்பட்டு வந்த கதைகளுக்கு இப்பொழுது சான்றுகள் கிடைத்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

Siragu-Alindha-anai13

Siragu Alindha anai2யூ மன்னரின் ஷா குலப் பேரரசுக்கு தொல்லியல் சான்றுகள் இருப்பதாகக் கூறும் அறிவியல் கட்டுரை தரும் விளக்கம்: நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், பொ.ஆ.மு. 1920 காலகட்டத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில், நிலச்சரிவு ஏற்பட்டுமலைப்பாறைகள் விழுந்ததால் மஞ்சளாற்றின் குறுக்கே இயற்கையாகவே ஓர் அணை உருவானது. அதில் தேங்கத் தொடங்கிய நீர் அணையின் உயரத்தையும் தாண்டி கரை கடந்து பாயத் தொடங்கியதால், வெள்ளத்தை தாக்குப் பிடிக்க இயலாமல் அந்த அணை உடைந்தது என்றும் கூறுகிறார்கள். இதனால் நதியில் அளவுக்கு அதிகமான வெள்ளம் ஏற்பட்டு, நதியின் போக்கும் மாறியது. கடந்த 10,000 ஆண்டுகளில் மனித வரலாற்றில் நிகழ்ந்த ஒரு மாபெரும் வெள்ளமாக இது கருதப்படுகிறது. நிலநடுக்கமும், மாபெரும் வெள்ளமும் அடுத்தடுத்து ஒரே காலகட்டத்தில் நிகழ்ந்திருப்பது அகழாய்வின் மூலம் தெரிய வருகிறது. ஆற்றுப்படுகையின் படிவுகளையும், ஆற்றின் தடத்தில் நிலநடுக்கத்தில் உயிரிழந்து புதையுண்டவர்களின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டு இவையிரண்டும் காலக் கணிப்புச் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. கரிமச்சோதனை வழியே வெள்ளம் மற்றும் நிலநடுக்கம் ஏற்பட்ட காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இக்காலம் சீன நாகரிக வரலாற்றில் கற்காலம் முடிவடைந்து சீனப்பகுதிக்கான வெண்கலக் காலத்தின் “எர்லிட்டோ” (Erlitou culture) நாகரிகத்தின் துவக்கத்துடன் ஒத்திருப்பதாகத் தெரியவந்துள்ளது. இந்த வெள்ளம் தொன்மக்கதை கூறுவது போலவே மிகப் பெரிய வெள்ளமென்றும், ஆற்றின் வழக்கமான நீரோட்டத்தையும்விட124 அடிகள் உயரத்திற்கு நீர் எழும்பியிருக்கிறது என்பதையும் வெள்ளம் குறித்த மாதிரிகளை உருவாக்கி ஆராய்ந்ததன் மூலம் தெரிய வந்துள்ளது.

Siragu-Alindha-anai5

ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றி, மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வரை (3300–1300 பொது ஆண்டுகளுக்கு முன்னர் / பொ.ஆ. மு / BCE) சற்றொப்ப இரண்டாயிரம் ஆண்டுகள் சிறந்து விளங்கியது சிந்து சமவெளி நாகரிகம். இது இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் சிந்து ஆற்றங்கரையில் உருவான நகர நாகரிகம். பண்டைய உலகில் புகழ் பெற்று விளங்கியிருந்த சுமேரிய, எகிப்து, சீன நாகரிகங்கள் போன்று, வெண்கலக் கால உலகின் சிறந்து விளங்கிய ஆற்றங்கரை நகர நாகரிகம். சுட்டக் களிமண் செங்கற்களால் சீரிய முறையில் அமைக்கப்பட்ட கட்டடங்களும், நேரான வீதிகளும், பொதுமக்கள் குழுமும் இடங்களும், நீர்த் தேக்கங்களும், குளமும், திட்டமிடப்பட்டு அமைக்கப்பட்டிருந்த நகரின் கழிவுநீர் வடிகால்களும், நீர்நிலைகளும், வணிக முத்திரைகளும் இன்றைய நாகரிகத்தில் வாழும் பலரையும் வியப்பில் மூழ்கச் செய்யும் (http://science.nationalgeographic.com/science/archaeology/mohenjo-daro/). இதற்கும் மேலாக ஏன் அந்த நாகரிகம் அழிந்து போனது, அங்கிருந்தவர்கள் எங்கு போனார்கள் என்ற கேள்வியும், இன்றைய மக்கள் விளங்கிக் கொள்ள வழியில்லாத வகையில் மர்மமாக அமைந்துவிட்டது. சிந்து சமவெளி முத்திரை எழுத்துக்கள் என்னதான் கூறுகின்றன என்பதும் பொதுமக்கள் மற்றும் ஆய்வாளர்களின் ஆர்வத்தைத் தூண்டிய வண்ணமே இருக்கிறது. கடந்த ஒரு நூற்றாண்டாகச் சிந்து சமவெளிப்பகுதியில் அகழாய்வுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. பல தடயங்களும், ஆயிரத்திற்கும் மேலான நகரக் குடியிருப்புகளும் அவற்றில் பல ஆயிரக்கணக்கான மக்களும் வாழ்ந்து வந்தனர் என்பது மட்டுமே இப்பொழுது நமக்கு உறுதியாகத் தெரியும் தகவல்.

Siragu-Alindha-anai8சுற்றுச் சூழல் பாதிக்கப்பட்டு, நீரற்றுப் போன இந்த நகரத்தில் வாழ்ந்த மக்கள், புதிய நீர்நிலையைத் தேடி இடம் பெயர்ந்து கங்கைச் சமவெளியில் குடியேறினார்கள் என்றும், சிந்து ஆறு தனது தடத்தை மாற்றிக் கொண்டதால் நீரற்று, உழவுத்தொழில் நலிவடைந்து மக்கள் நகரைக் கைவிட்டு வெளியேறினர் என்பதும் ஆய்வாளர்களின் கருத்து. ஆனால், வெள்ளத்தால் சிந்துசமவெளி நாகரிகம் அழியவில்லை என்பதும், அத்துடன் அந்த நகரம் ஒரேடியாக, ஒரேகாலத்தில் முற்றிலுமாக கைவிடப்படவில்லை என்பதும், ஆறு தடம் மாறிச் சென்றதால் மிகப்பெரிய நாகரிகம் ஒன்றே அழிந்திருக்கவும் வாய்ப்பில்லை என்பதும் ஆய்வாளர் “ஜானதன் மார்க் கெனோயர்” (University of Wisconsin, Madison, archaeologist Jonathan Mark Kenoyer) என்பவரது கருத்து. ஆனால், இன்றுவரையிலும் உண்மையில் என்ன நடந்திருக்கலாம் என்பதை உறுதி செய்ய முடியாத நிலையில்தான் கைவிடப்பட்ட மொஹஞ்சதாரோ நகரத்தின் வரலாறு இருக்கிறது.

Siragu-Alindha-anai6

ஏன் மொஹஞ்சதாரோ நகரம் கைவிடப்பட்டது என்பதைக் கற்பனை செய்த பாலிவுட் திரையுலகம் வெளியிட்டுள்ள படம் “மொஹஞ்சதாரோ” (மொஹஞ்சதாரோ நகர் என்று அந்நகர மக்கள் தங்கள் நகரை அழைக்கவில்லை, அந்த இடம் ‘இறந்தவர்கள் மேடு’ என்று பின்னாளில் அழைக்கப்பட்டது என்பது வரலாற்று அறிஞர்களின் கருத்து). இன்றைக்கும் சரியாக நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், சிந்து சமவெளி நாகரிகம் அதன் சிறப்பான உச்ச நிலையில் இருந்த காலமான பொ.ஆ.மு 2016 இல் நடைபெறுவதாகக் கதை புனையப்பட்டுள்ளது. அத்துடன் இது வரலாற்றுத் தகவல் அல்ல புனையப்பட்ட ஒரு கதையே என்ற பொறுப்புத் துறப்பையும் முதலிலேயே தவறாமல் வெளியிட்டு விடுகிறார்கள். பிறகு கதாசிரியரின் கற்பனையில் விரிகிறது மொஹஞ்சதாரோ நகரம் கைவிடப்பட்டதன் காரணமும், எதனால் மொஹஞ்சதாரோ நகர மக்கள் கங்கைச் சமவெளிப்பகுதிக்கு இடம் பெயர நேர்ந்தது என்ற விளக்கமும். பாராட்டப்பட வேண்டிய கதையமைப்பு முயற்சி என்றாலும்; கதையில் புதுமையில்லை. பொதுவான இந்திய மசாலாப்படங்களின் பொது விதிகளில் கதை நகர்கிறது. காலம் காலமாக அழிவுக்குக் காரணமாகக் கூறப்படும் மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை இங்கும் நகரை ஆட்சி செய்யும் தலைவரையும் அவரது மகனையும் கவிழ்க்கிறது; இது வழக்கமான இந்தியத் திரைப்படக் கதைப் போக்குதான்.

Siragu-Alindha-anai15‘அம்ரி’ என்ற கிராமத்தில் கருநீலச் சாயம் (இண்டிகோ நீலம்) தயாரிக்க உதவும் அவுரி அல்லது நீலி என்னும் செடி (Indigofera tinctoria) வளர்த்து அதனை மொஹஞ்சதாரோ நகரச் சந்தைக்கு எடுத்துச் சென்று விற்கும் குடும்பத்து இளைஞன் “சர்மன்”. சர்மன் வீரம் நிறைந்தவன், பொதுமக்கள் நலத்திற்காக எந்த இடரையும் எதிர்த்துப் போராடும் துணிவு பெற்றவன். அவனுக்குத் தோன்றும் பொருள் புரியாத கனவுகளும், அதில் வரும் ஒற்றைக் கொம்பு கொண்ட மான் போன்ற விலங்கும் அவனுக்கு எதையோ குறிப்பால் உணர்த்துவதாக எண்ணிக் குழம்புகிறான். பெற்றோரை இழந்த சர்மன் தனது மாமா குடும்பத்தால் வளர்க்கப்பட்டவன். மொஹஞ்சதாரோ நகரத்திற்குச் செல்ல விரும்பும் அவனது விருப்பம் குடும்பத்தினரால் தடை செய்யப்படுகிறது. அது நகரமல்ல, பேராசை கொண்டவர்கள் குழுமியிருக்கும் இடம் என்று காரணம் சொல்லப்படுகிறது. இறுதியில் அவனது உறுதியைக் கண்டு அவனது விருப்பப்படி அவுரிச்சாயக் கட்டிகளை விற்க மொஹஞ்சதாரோ நகர சந்தைக்குச் செல்ல அனுமதிக்கப்படுகிறான்.

Siragu-Alindha-anai10மொஹஞ்சதாரோ நகரத்தின் நகராட்சித் தலைவர் “மஹம்” (கிடைத்த தடயங்கள் படி சிந்துசமவெளி நாகரிகம் முடியாட்சி நாகரிகமல்ல; அரசர், அரசி போன்றோர் ஆட்சி செய்யாத ஒரு நாகரிகம்). இவர் சர்வாதிகாரி போன்று மொஹஞ்சதாரோ நகரத்தில் யார் வாழ வேண்டும், அல்லது யார் இறக்க வேண்டும் என்ற வகையில் தீர்மானித்து அடக்குமுறையில் ஈடுபடுபவர். இவரது தலைவருக்குரிய கொம்புகள் வைத்த தலையணி, சிந்துசமவெளி தடயங்களில் “பசுபதி” என்று குறிக்கப்படும் முத்திரையில் அமைக்கப்பட்டுள்ளது போல (https://upload.wikimedia.org/wikipedia/commons/2/2f/Shiva_Pashupati.jpg) வடிவமைக்கப்பட்டுள்ளது. அவரது அடக்குமுறையில் இருந்து மொஹஞ்சதாரோ நகரமக்களை விடுவிப்பது கதாநாயகனின் கடமையாகிறது.

சர்மனின் தந்தையைக் கொன்று ஆட்சிக்கு வந்தவர் மஹம் என்பதைப் பின்னர் சர்மன் மதத் தலைவர் மூலம் அறிகிறான். தந்தையைக் கொன்றவனை பழி வாங்கி தனது உரிமையை நிலைநாட்டி, மொஹஞ்சதாரோ நகர மக்களை சிந்து ஆற்றில் ஏற்படும் பெருவெள்ளத்தில் இருந்து காப்பாற்றுகிறான் சர்மன். இதற்கிடையில் மொஹஞ்சதாரோ நகரத்தின் மதத்தலைவரின் மகளைச் சந்திக்கிறான். விற்பனைக்காக வெளிநாட்டில் இருந்து சந்தைக்கு வரும் குதிரைகள் வெறித்து ஓட, அவற்றைக் கண்டு அச்சத்தில் உறைந்துவிட்ட அவளைக் காப்பாற்றிக் காதலிக்கிறான். ஆனால், தற்காலத்தில் இந்தியாவில் காணப்படும் குதிரை (Equus caballus), மத்திய ஆசியப் பகுதியில் இருந்து இந்தியப்பகுதிக்கு அறிமுகப்படுத்தப்பட்ட காலமானது சிந்து சமவெளி நாகரிகம் மறையத் தொடங்கிய பிற்காலத்தில்தான் என்பதும், அது பொ.ஆ. மு. 1800க்குப் பிறகு என்பதும் ஆய்வாளர்கள் கருத்து (http://www.thehindu.com/thehindu/op/2002/03/05/stories/2002030500130100.htm – கதை நடப்பது பொ.ஆ. மு 2016 இல்).

வரியை அதிகரிக்கும் நகராட்சித் தலைவர் மஹம்மை எதிர்த்து மக்களைத் தூண்டிவிட்டு புரட்சி செய்ய வைத்து அவரது பகையையும்; அவரது மகன் மூஞ்சாவிற்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணான மதத்தலைவரின் மகள் ‘சானி’ யைக் காதலித்து அவனது வெறுப்பையும் சம்பாதித்துக் கொள்கிறான் சர்மன். தண்டனைக்கு உள்ளாகி, அதன் விளைவாக மனிதர்களைக் கொன்று உண்ணும் இருவருடன் போரிட நேர்கிறது. தனி ஒருவனாகப் போரிட்டு அவர்களை வெல்வதுடன், அதனால் கயவனான மூஞ்சாவை மணக்கக் கட்டாயப்படுத்தப்படும் காதலியையும் நிர்ப்பந்தத்தில் இருந்து விடுவிக்கிறான். மக்கள் விரும்பும் தலைவனாகிறான். இதுவும் வழக்கமான திரைப்பட கதையின் தடத்தில்தான் அமைந்திருக்கிறது. ஆனால், இக்கதையில் சர்மன் எவ்வாறு சிந்து ஆற்றின் வெள்ளத்தில் இருந்து மக்களைக் காப்பாற்றுகிறான் என்பதும், சிந்து ஆற்றின் பெருவெள்ளப்பெருக்கு ஏன் ஏற்பட்டது என்பதும், எவ்வாறு மொஹஞ்சதாரோ நகரம் அழிந்தது என்பதைக் கூறுவது திரைப்படத்தின் மைய நோக்கம். அதனால் வெள்ளம் ஏன் ஏற்பட்டது எனக் கூறப்படும் காரணத்தையும் கருத்தில் கொள்ள வேண்டி இருக்கிறது.

Siragu-Alindha-anai14

கதையின்படி மொஹஞ்சதாரோ நகரத்தின் நகராட்சித் தலைவர் மஹம்தான் சிந்துவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கிற்குக் காரணம். இதற்குக் காட்டப்படும் காரணமும் மற்றொரு வழக்கமான இந்தியத் திரைப்படக் கதைக் கட்டமைப்பே. ஹரப்பா நகரின் வணிகரான மஹம் சட்டத்திற்குப் புறம்பாக கள்ள வணிகத்தில் ஈடுபட்டு சுமேரியர்களுக்கு தேக்கு மரங்களை(Dalbergia sissoo) விற்று கள்ளக்கடத்தல் செய்ததால் ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்படுகிறார். இவர் மொஹஞ்சதாரோ நகரத்தில் குடிபுகுந்து வணிகராகவும், பிறகு வணிகக்குழு தலைவராக உயர்ந்து நகராட்சியின் தலைமையிடத்தை அடைகிறார். பிறகு இவர் சொல்வது சட்டமாகிறது, மீறுபவர்கள் உயிருடன் இருப்பதில்லை. தன்னை அவமதித்த ஹரப்பா நகரை அழிக்க, பழிவாங்கும் நோக்கில் சுமேரியர்களிடம் இருந்து செம்பாலான ஆயுதங்களை வாங்குகிறார் (சிந்து சமவெளி இரும்புக் காலத்திற்கும் முற்பட்டது, அதனால் செம்பாலான போர்க்கருவிகள்.ஆனால் சிந்துசமவெளி நாகரிக மக்களிடம் போர்க்கருவிகள் இருந்ததில்லை என்பது வரலாற்று அறிஞர்களின் கருத்து). போர்க்கருவிகள் வாங்க ஏராளமான தங்கம் தேவைப்படுகிறது.

சிந்து ஆற்றின் படுகையில் தங்கம் இருப்பதை அறிகிறார் மஹம். அதைச் சேகரிக்க ஆற்று நீரின் தடத்தை மாற்ற ஆற்றின் குறுக்கே அணை கட்டவேண்டும் என்கிறார் (ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த மக்களுக்கு அணை கட்டும் தொழில் நுட்பம் தெரிந்திருந்தாலும், வற்றாத ஜீவநதியாக, நீர் நிறைந்திருக்கும் ஆற்றின் குறுக்கே அணை கட்டும் தொழில்நுட்பம் இருந்ததா என்ற தகவலும், அணை குறித்த தடயங்களும் இதுவரை கிடைத்ததில்லை). ஆற்று நீரைத் தடுத்து வழிமாற்றிய காரணத்தால் அதனால் பயனடைந்த உழவர்கள் பாதிக்கப்பட, அவ்வாறு எழுந்த எதிர்ப்பையும் முறியடித்து, எதிர்த்தவர்களைக் கொன்று (சர்மனின் தந்தை உட்பட) அணை கட்டப்படுகிறது. இதனால் உழவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். ஆற்றுப் படுகையில் இருந்து தங்கம் சேகரிக்கப்பட்டு, அதன் உரிமையாளர்களான மொஹஞ்சதாரோ நகர மக்களிடம் அவை சேர்க்கப்படாமல் கொள்ளையடிக்கப்பட்டு, தங்கக் கடத்தல்செய்யப்பட்டு சுமேரியர்களிடம் ஆயுதம் வாங்க அது பயன்படுத்தப்படுகிறது. இதுவும் வழக்கமான இந்தியத் திரைப்படக் கதையின் போக்குதான்.

Siragu-Alindha-anai9

ஆற்றின் போக்கில் கட்டப்பட்ட அணை வெள்ள ஆபத்தை உருவாக்கும் நிலையை எட்டுகிறது. மொஹஞ்சதாரோ நகர மக்களிடம் மஹம் செய்த சூழ்ச்சிகளை வெளிப்படுத்தி, சர்மன் அவரது முகத்திரையைக் கிழிக்கிறான். சர்மன் தலைவனாக ஏற்றுக் கொள்ளப்படும் பொழுது பெரும் மழை ஏற்படுகிறது. அணையின் விளிம்பையும் தாண்டி வெள்ளம் பாய்ந்து, அணை சிதைந்து நகரம் பெரும் வெள்ளத்தில் மூழ்கி அழிந்து விடுகிறது. ஆனால், அணையினால் ஏற்படக்கூடிய இடரை எதிர்பார்த்து எச்சரிக்கையுடன் இருந்தவன் சர்மன். ஆகவே, வெள்ளம் வருவதற்குள் மொஹஞ்சதாரோ நகர மக்கள் யாவரும் சர்மனால் எச்சரிக்கப்பட்டு, படகுகளின் மீது ஒரு தற்காலிக பாலம் அமைக்கப்பட்டு, அதன்வழியே மேட்டுப்பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டு காப்பாற்றப்படுகிறார்கள். அவர்கள் கண்முன்னே நகரம் அழிந்துவிட, கங்கை ஆற்றுப் பகுதிக்கு குடிபெயர்கிறார்கள்.

ஆக, சிந்து சமவெளி நாகரிகம் ஆற்றங்கரை நாகரிகம் அடியோடு அழிந்தது சிந்து ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணையின் காரணமாக என்றும், அந்த அணை சிதைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் மொஹஞ்சதாரோ நகரம் கைவிடப்பட்டது என்றும் கற்பனை செய்யப்பட்டுள்ளது மொஹஞ்சதாரோ திரைப்படக் கதைக்குழுவினரால்.

_____________________________________________________________________________________

Outburst flood at 1920 BCE supports historicity of China’s Great Flood and the Xia dynasty.Science 05 Aug 2016:Vol. 353, Issue 6299, pp. 579-582. DOI: 10.1126/science.aaf0842. http://science.sciencemag.org/content/353/6299/579.full

New evidence suggests China’s legendary ‘great flood’ might have actually happened. The flood that started a civilisation.

http://www.sciencealert.com/new-evidence-suggests-china-s-legendary-great-flood-might-have-actually-happened

“Faceless” Indus Valley City Puzzles Archaeologists.

http://science.nationalgeographic.com/science/archaeology/mohenjo-daro/

Harappan horse myths and the sciences

http://www.thehindu.com/thehindu/op/2002/03/05/stories/2002030500130100.htm


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “அழிந்த அணையும், பெருவெள்ளமும் தொன்மையான நாகரிகமும்”

அதிகம் படித்தது