பிப்ரவரி 16, 2019 இதழ்
தமிழ் வார இதழ்

அணங்கு

தேமொழி

May 26, 2018

 

முன்னுரை:

அணங்கே விலங்கே கள்வர்தம் மிறையெனப்

பிணங்கல் சாலா அச்சம் நான்கே

          – தொல்காப்பியம், பொருளதிகாரம்: மெய்ப்பாட்டியல்-8/1

அணங்கு   முதலாய   நான்கும்   பற்றி    அச்சம்   பிறக்கும் என்று தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் சூத்திரம் (257) வரையறுக்கிறது.  அதாவது,  ‘அணங்கு’,  ‘விலங்கு’,  ‘கள்வர்’,  ‘அரசர்’ ஆகியோர்  அச்சமென்னும்   மெய்ப்பாட்டிற்குக் காரணமாகியவர் என்கிறார் தொல்காப்பியர்.

அணங்கு என்பதற்குப் பொருள் கூறுமிடத்து பேராசிரியர், “அணங்கென்பன பேயும் பூதமும் பாம்பும் அசுரர் ஈறாகிய பதினென்கணனும் நிரயப்பாலரும், பிறரும் அணங்குதற்றொழிலராகிய சவந்தின் பெண்டிரும் உருமிசைத் தொடக்கத்தனவும்” என்பார். அவர், “கட்புலனாகாமல் தம்  ஆற்றலாற்றீண்டி  வருத்தும் சூர்முதலாய தெய்வங்களும் அணங்குதற்றொழிலுடைய பிறவுமாம்”, என்று இவ்வாறு தரும் இந்த விரிவான விளக்கத்தின் வழியாக ‘அணங்கு’ எனப்படுவது, ‘வருத்தும் திறன் கொண்டு, வருத்தும் தொழிலைச் செய்யும் ஆற்றல் கொண்டவை’  என்று புரிந்து கொள்ளலாம். ஆக, அணங்கு வருத்துவது அதனால் அது மக்களுக்கு அச்சம் விளைவிக்கிறது, அது கண்ணுக்குப் புலனாகாத ஒன்றாகவும் இருக்கலாம். இது பொதுமைப்படுத்தும் ஒரு விளக்கமாக, அச்சத்தை விளைவிக்கக் கூடிய அணங்கு வகைகளைக் குறிக்கிறது.

 siragu ananku1

I. இலக்கியங்களில் அணங்கு:

பொதுவாக இலக்கியங்களில் “அணங்கு” என்ற சொல் வருத்தும்-தெய்வத்தன்மை கொண்ட பெண் என்ற வகையில் பயன்கொள்ளப்படுவதைக்  காணமுடிகிறது. இங்கு எடுத்துக்காட்டுகளாகக் குறளில்  இருந்தும் சிலப்பதிகாரத்தில் இருந்தும் காணலாம்.

 (i) குறள்: அணங்கு என்ற சொல் குறளில் மூன்று இடங்களில் காட்டப்படுகின்றன.

(1)     ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கென்ப

மாய மகளிர் முயக்கு. (குறள் 918)

பொருள்: வஞ்சம் நிறைந்த பொதுமகளிரின் சேர்க்கை, ஆராய்ந்தறியும் அறிவு இல்லாதவர்க்கு அணங்கு தாக்கு(மோகினி மயக்கு) என்று கூறுவர். (மு. வரதராசனார் உரை)

(2)    அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை

மாதர்கொல் மாலும்என் நெஞ்சு. (குறள் 1081)

பொருள்: தெய்வப் பெண்ணோ! மயிலோ, கனமான குழை அணிந்த மனிதப் பெண்ணோ, என் நெஞ்சம் மயங்குகின்றதே. (மு. வரதராசனார் உரை)

(3)    நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு

தானைக்கொண் டன்ன துடைத்து. (குறள் 1082)

பொருள்: நோக்கிய அவள் பார்வைக்கு எதிரே நோக்குதல் தானே தாக்கி வருத்தும் அணங்கு, ஒரு சேனையையும் கொண்டு வந்து தாக்கினாற் போன்றது. (மு. வரதராசனார் உரை)

மேற்காணும் குறள்களில் அணங்கு என்பது  வருத்துந் தெய்வம் என்ற பொருளையே காட்டி நிற்கிறது.

(ii) சிலப்பதிகாரம்: அணங்கு என்ற சொல் சிலப்பதிகாரத்தில் பதின்மூன்று இடங்களில் காட்டப்படுகின்றன, அவற்றுள்மதுரைக் காண்டம்-வழக்குரை காதைப் பகுதியில், கோவலன் கொலைக்கு நீதி கேட்டு, கண்ணகி  பாண்டிய மன்னனை அவன் அவையில்  எதிர்கொள்ளும் பகுதியில் காணப்பெறும் இருவிடங்களை மட்டும் இங்கு கீழே காண்போம், அணங்கு குறித்து வரும் மற்றைய இடங்கள் ஆர்வமுள்ளோருக்காகக் கட்டுரையின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளது.

(1)

கண்ணகி:

…………வாயி லோயே

இணையரிச் சிலம்பொன் றேந்திய கையள்

கணவனை யிழந்தாள் கடையகத் தாளென்று

அறிவிப் பாயே அறிவிப் பாயே (26-29)

          (10. வழக்குரை காதை)

பொருள்:

வாயில் காப்போய், இரண்டு சிலம்பினுள் ஒன்றினைக் கையில் ஏந்தியவாறு தன் கணவனை இழந்தவள் ஒருத்தி வாயிலில் நிற்கின்றாள் என்று அறிவிப்பாயே அறிவிப்பாயே.

வாயிற்காப்போன்:

செழிய வாழி தென்னவ வாழி

பழியொடு படராப் பஞ்சவ வாழி

அடர்த்தெழு குருதி யடங்காப் பசுந்துணிப்

பிடர்த்தலைப் பீடம் ஏறிய மடக்கொடி

வெற்றிவேற் றடக்கைக் கொற்றவை யல்லள்

அறுவர்க் கிளைய நங்கை இறைவனை

ஆடல்கண் டருளிய அணங்கு சூருடைக்

கானகம் உகந்த காளி தாருகன்

பேருரங் கிழித்த பெண்ணு மல்லள்

செற்றனள் போலும் செயிர்த்தனள் போலும்

பொற்றொழிற் சிலம்பொன் றேந்திய கையள்

கணவனை இழந்தாள் கடையகத் தாளே

கணவனை இழந்தாள் கடையகத் தாளே. (33-44)

          (10. வழக்குரை காதை)

பொருள்:

siagu ananku2

செழியனே வாழி, தென்னவன் பாண்டியனே வாழி, மறநெறிவழி சென்றிராது அறவழியில் ஒழுகும் பஞ்சவனே நீ வாழ்வாயாக. வாயிலில் நிற்பவள், வெட்டுப்பட்ட மகிடாசுரனின் எருமைக்கடாத் தலையின் வாயில் குருதி கொப்பளித்துக் கொண்டிருக்க, அந்தத் தலையினை பீடமாக்கி  ஏறிநின்று, வெற்றிதரும் வேலினை கையேந்தியவாறு பாலை நிலம் காக்கும் கொற்றவை அல்லள், ஏழுகன்னியருள் இளையவளான அசுரர் தலைகளை மாலையாக அணிந்து கண்டோர் நடுக்கும் தோற்றம் கொண்ட  பிடாரியும் அல்லள், சுடுகாட்டில் இறைவனோடு தாண்டவமாடிய பத்ரகாளியும் / “அணங்கும்” அல்லள், அச்சம் தரும் விலங்குகள் வாழும் காட்டைத் தன் இருப்பிடமாகக் கொண்ட தெய்வமாகிய காளியும் அல்லள், தாருகன் என்னும் அரக்கனின் மார்பினைப் பிளந்து உதிரம் குடித்து வஞ்சம் தீர்த்த துர்க்கையும் அல்லள், தனது  உள்ளத்துக் கறுவுகொண்டவளாகவும்,  மிகுந்த சினமுற்றவளாகவும் தோன்றி, பொன்னால் ஆன சிலம்பு ஒன்றைக் கையில் ஏந்தி,  தன் கணவனையிழந்த பெண்ணொருத்தி தலைவாயிலில் நிற்கின்றாள், தன் கணவனையிழந்த பெண்ணொருத்தி தலைவாயிலில் நிற்கின்றாள் அரசே.

(2)

கண்ணகி யென்பதென் பெயரேயெனப், பெண்ணணங்கே

கள்வனைக் கோறல் கடுங்கோ லன்று

வெள்வேற் கொற்றங் காண்என ஒள்ளிழை  (63-65)

          (10. வழக்குரை காதை)

பொருள்:

“அணங்கு” போலும் பெண்ணே, கள்வனைக் கொலை செய்தல் கொடுங்கோன்மை அல்ல, அதுவே அரச நீதி  என்று அரசன் கண்ணகியிடம் கூற, மேற்காணும் எடுத்துக்காட்டுகளிலும் அணங்கு என்பது  வருத்துந் தெய்வம் என்ற பொருளையே காட்டி நிற்கிறது.

  1. அணங்கும் அறிவியல் கோணமும்:

இலக்கியப் பயன்பாட்டில் அணங்கு என்பது தெய்வத்தன்மையும் சினமும் கொண்ட பெண் என்றே பெரும்பாலும் கையாளப்படுகிறது.  இலக்கியத்தில் பெண்களுடன் மட்டுமே தொடர்புப்படுத்தும் நிலையாகவும் இது வழக்கத்தில் இருந்துள்ளது. சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பது போல, மிக அமைதியாக வாழும் பண்பு கொண்ட பெண்கள் பாதிக்கப்படும் பொழுது, அவர்களின் வழமையான இயல்புக்கு மிக  முற்றிலும் மாறுபட்ட விதத்தில், வெகுண்டெழுந்து வெறிபிடித்தவர் போல நடந்து கொள்ளும் விதம் பிறருக்கு அச்சமூட்டும் வகையில் அமைந்துவிடும்.  கண்ணகியும் கட்டுக்கடங்கா சினத்தின் வெளிப்பாடாக மதுரை நகரைத் தீயிட்டு அழித்தாள் என்பது சிலம்பு கூறும் கதை நிகழ்வு.  இத்தகைய பண்பை இலக்கியம் அணங்கு என்றோ, வெறியாடும் தெய்வத்தன்மை என்றோ கூறுவதாகக் கருதலாம். சிலப்பதிகாரத்தில் கோவலனின் இறப்பிற்கு நீதி கேட்டு அவையில் நுழைந்த கண்ணகியின் தோற்றமும் நடத்தையும் இருந்த நிலையை, பாண்டிய மன்னன்  அவளைப் ‘பெண்ணணங்கே’ என்றும் அழைக்கும் விதத்தில் இருந்து அறியலாம்.

ஒரு காலத்தில், உளவியலிலும் வெறிபிடித்தவர் போல செயல்படுபவரை “ஹிஸ்டீரியா” (hysteria) என்ற, கட்டுப்பாடு மீறிய உணர்வுகளின் வெளிப்பாடு கொண்ட, ஒரு  உளவியல் கோளாறாகக் குறிப்பிடும் வழக்கம் இருந்தது.  ஆனால், மருத்துவம் முன்னேறிவிட்ட இக்காலத்தில் அவ்வாறு அடையாளப்படுத்தும் நிலையை உளவியல் மருத்துவர்களே இன்று கைவிட்டுவிட்டனர்.

siagu ananku3

ஆனால்,  ஹிஸ்டீரியா என்னும் நிலை பெண்களுடன் மட்டுமே தொடர்புப்படுத்தும் நிலையாக வரலாற்றில் இருந்துள்ளது. ‘ஃபீமேல் ஹிஸ்டீரியா’ (Female hysteria) என்றும் பரவலாகப் பேசப்பட்டது.  பெண்கள்  குறித்த உளவியல் கோளாறாக முதன் முதலில் வரலாற்றில் குறிப்பிடப்படுவதே ஹிஸ்டீரியாதான் எனவும் கூறலாம். ஹிஸ்டீரியா என்ற சொல்லின் தோற்றமே பெண்களின் கர்ப்பப்பைக்கான கிரேக்க சொல்லில் இருந்து தோன்றியதுதான் (the word “hysteria” originates from the Greek word for uterus, hystera). பெண்களின் கர்ப்பப்பையில் நிகழும் மாறுதலுக்கும் கட்டுப்படுத்த முடியாத உணர்வின் வெளிப்பாடுகளுக்கும் தொடர்புள்ள நிலை  எனக் கருதி, துர்தேவதையின் (demon) தாக்கம் போன்ற  வகையில் நடத்தை அமைந்துவிடும் பெண்களின் உளவியல் கோளாறு என்று மட்டுமே அன்றைய உலகம் கருதியது. பரிமேலழகர், ‘அணங்கு’- காமநெறியான் உயிர்கொள்ளும் தெய்வமகள் (குறள் 918 விளக்கம்) என்ற விளக்கமளிப்பதையும் இங்கே கவனத்தில் கொள்ளலாம். அணங்கு தமிழிலக்கியங்களிலும் பெரும்பாலும் வருத்தும் செய்கையைச் செய்யும் பெண்களுடன் தொடர்புப்படுத்தியே குறிப்பிடப்படுகிறது.

நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், கிமு 2,000 இல் இருந்தே ஹிஸ்டீரியா எனக் குறிப்பிடப்படும் உளவியல் மாற்றம் கொண்ட தன்மை பெண்களிடம் காணப்படுவதை பண்டைய கிரேக்க, ரோம், எகிப்து நாடுகளின் இலக்கியங்களில் ஆவணப்படுத்தப்பட்டிருப்பதை அறிவியல் ஆய்வுக் கட்டுரைகள் குறிப்பிடுகின்றன. அதே வகையில், இத்தகைய போக்கையே ‘அணங்கு’ என்ற தமிழிலக்கிய சொல்லின் பயன்பாடும் காட்டி நிற்கிறது என்பது வெளிப்படை.

இக்கால அறிவியல், வெறிபிடித்தது போல நடந்துகொள்ளும் மனநிலை பெண்களுக்கு மட்டும் ஏற்படுவது அல்ல, இத்தகைய மனநிலை பாதிப்பு ஆண்களிடமும் உள்ளது என்பதை அறிந்து கொண்டதால்  ஹிஸ்டீரியா எனக் குறிப்பிடும் வழக்கத்தை மருத்துவத்துறையினர் கைவிடும் நிலையை எடுத்துள்ளனர்.

_________________________________________

 சான்றாதாரங்கள்:

[1] தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம், பேராசிரியர் க. வெள்ளைவாரணனார், மதுரை காமராசர் பல்கலைக்கழகம்.

https://ta.wikisource.org/s/69rb

[2] திருக்குறள்

[3] சிலப்பதிகாரம் மூலமும் உரையும், நாவலர் பண்டித ந.மு.வேங்கடசாமி நாட்டார், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.

http://www.tamilvu.org/ta/library-l3100-html-l3100uv1-132375

[4] திருக்குறள், சிலப்பதிகாரம்- தொடரடைவு, முனைவர்.ப.பாண்டியராஜா

http://tamilconcordance.in/concordance_list-B.html

[5] Women And Hysteria In The History Of Mental Health

https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3480686/

_________________________________________

பின்னிணைப்பு:

(1)

புழுக்கலும் நோலையும் விழுக்குடை மடையும்

பூவும் புகையும் பொங்கலுஞ் சொரிந்து

துணங்கையர் குரவைய ரணங்கெழுந் தா (68-70)

          (5. இந்திரவிழவூரெடுத்த காதை)

பொருள்: வேகவைத்த புழுக்கலையும், எள்ளுருண்டையினையும், ஊன் சோற்றையும்,  பூவினையும், புகையினையும், பொங்கலையும் அளித்து துணங்கைக் கூத்தாடுபவரும் குரவைக் கூத்தாடுபவரும் தெய்வ மேறி ஆடினர்.

அணங்கெழுந்தாடி = வருத்தும் பெண் தெய்வம் எழுந்தாடிய நிலை

(2)

நறுஞாழல் கையி லேந்தி

மணங்கமழ் பூங்கானல் மன்னிமற் றாண்டோர்

அணங்குறையும் என்ப தறியேன்  (75-77)

          (7. கானல்வரி)

பொருள்: நறிய புலிநகக்கொன்றை பூங்கொத்தைக் கையில் ஏந்தி, மணம் நாறுகின்ற பூக்களையுடைய கானலிடத்தில் ஓர் தெய்வம் உறையுமென்பதை அறியேன்

அணங்கு = வருத்தும் பெண் தெய்வம்

(3 & 4)

அலவநோய் செய்யும் அணங்கிதுவோ காணீர்

அணங்கிதுவோ காணீர் அடும்பமர்தண் கானற்

பிணங்குநேர் ஐம்பாலோர் பெண்கொண்டதுவே. (95-97)

          (7. கானல்வரி)

பொருள்: நோக்கியவருக்கு வருத்தத்தைக் கொடுக்கும் அணங்கோ இது காணீர், அடும்பின் மலர்கள் பொருந்திய குளிர்ந்த கானலிலே செறிந்த மெல்லிய கூந்தலையுடைய ஓர் பெண் வடிவு கொண்டதாகிய அணங்கோ இது காணீர்.

அணங்கு = வருத்தும் பெண் தெய்வம்

(5)

மின்னுக்கோடி யுடுத்து விளங்குவிற் பூண்டு

நன்னிற மேகம் நின்றது போலப்

பகையணங் காழியும் பால்வெண் சங்கமும்

தகைபெறு தாமரைக் கையி னேந்தி  (45-48)

          (1. காடுகாண் காதை)

பொருள்: நல்ல நிறத்தினையுடைய மேகம் மின்னும் புது ஆடையை உடுத்தி,  விளங்குகின்ற வில்லேந்தி  நின்றாற்போல, பகைவரை வருத்தும் சக்கரத்தினையும் பால்போலும் வெளிய சங்கத்தினையும் அழகிய தாமரை போன்ற கையிலே ஏந்தியவாறு.

பகையணங் காழி = பகைவரை வருத்தும் சக்கரம்

(6)

ஆறெறி பறையுஞ் சூறைச் சின்னமும்

கோடும் குழலும் பீடுகெழு மணியும்

கணங்கொண்டு துவைப்ப அணங்குமுன் னிறீஇ (40-42)

          (2. வேட்டுவ வரி)

பொருள்:  வழிபறி செய்யும்பொழுது கொட்டும் பறையும் சூறை கொள்ளும்பொழுது  ஊதும் சின்னமும், கொம்பும் புல்லாங்குழலும் பெருமை பொருந்திய மணி ஆகியவற்றை  குழுவினராக இசைக்க,  பெண்ணின் மீது வருத்தும் தெய்வத்தை ஏற்றி முன் நிறுத்த

அணங்கு = வருத்தும் பெண் தெய்வம்

(7)

கரியின் உரிவை போர்த்தணங் காகிய

அரியின் உரிவை மேகலை யாட்டி (61-62)

          (2. வேட்டுவ வரி)

பொருள்:  யானையின் தோலைப் போர்த்து  வருத்துந் தன்மையுடைய சிங்கத்தின் தோலை மேகலையாக உடுத்தியவள் (கொற்றவை)

அணங்காகியஅரி = வருத்தும் சிங்கம்

(8)

எட்டுக் கடைநிறுத்த ஆயிரத் தெண்கழஞ்சு

முட்டா வைகல் முறைமையின் வழாஅத்

தாக்கணங் கனையார் நோக்குவலைப் பட்டாங்கு (158-160)

          (4. ஊர்காண் காதை)

பொருள்:  ஆயிரத்தெட்டு என்னும் எண்ணினையுடைய கழஞ்சினை, நாள்தோறும் தவறாது  பெறும் முறைமையிலிருந்து  வழுவாமல், தாக்கி வருத்தும் தெய்வம்  போன்றவரின்  கண்ணாகிய வலையில் சிக்கி

அணங்கு = வருத்தும் பெண் தெய்வம்

(9)

சாரணர் கூறிய தகைசால் நன்மொழி

ஆரணங் காக அறந்தலைப் பட்டோர்

அன்றப் பதியுள் அருந்தவ மாக்களும் (192-194)

          (5. அடைக்கலக் காதை)

பொருள்:  அந் நாளில், சாரணர் உரைத்த தகுதி யமைந்த நல்ல அறவுரையை, தெய்வ வாக்காகக் கொண்டு அறத்துவழி நின்றோராகிய அந் நகரத்தில் வாழ்ந்த அரிய தவம்  செய்யும் மக்களும்.

ஆரணங்கு = தெய்வவாக்கு

(10)

பெருங்குலை வாழையின் இருங்கனித் தாறும்

ஆளியி னணங்கும் அரியின் குருளையும் (47-48)

          (2. காட்சிக் காதை)

பொருள்: பெரிய தாற்றினையுடைய வாழையின் பெரிய பழம் நிறைந்த குலையினையும், ஆளி மற்றும்  சிங்கம்  என்பவற்றின் குட்டிகளையும்.

ஆளியின்அணங்கு = வருத்தும் தெய்வம்

(11)

அவர் முடித்தலை அணங்காகிய பேரிமயக் கல்சுமத்திப் பெயர்ந்து

          (29. வாழ்த்துக் காதை)

பொருள்:  ஆரிய நாட்டு அரசு ஓட்டி அவர் முடித்தலை அணங்காகிய பேர் இமயக் கல் சுமத்திப் பெயர்ந்து போந்து

அணங்கு = வருத்தும் பெண் தெய்வம்

http://www.tamilvu.org/ta/library-l3100-html-l3100pl1-132372

_________________________________________


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “அணங்கு”

அதிகம் படித்தது