மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

அண்ணலும் தமிழும்

காசி விசுவநாதன்

Oct 1, 2013

ஒரு முறை இந்தியாவின் முதல் நிதி அமைச்சர் திரு.ஆர்.கே.எஸ் என அழைக்கப்படும் இரா.க.சண்முகனார் அண்ணல் காந்தியாரைப் பார்த்து உரையாட, பிர்லா தோட்டத்திற்கு சென்றார். டில்லியில் அவர் அங்குதான் தங்குவார். அப்போதுதான் அவர் வங்காளத்தில் இருந்து வந்திருந்தார்.  நிதி அமைச்சர் திரு.இரா.க.சண்முகனார் தன்னைக் காண வருவதை அறிந்த அண்ணல் காந்தியார், அவரைக் கண்டதும் ” வாருங்கள் ஐயா ! உட்காருங்கள். நலமா ? ” என்று முழுமையாகத் தமிழில் வரவேற்று உரையாடத் துவங்கினார். பல ஆண்டுகளுக்கு முன் தனக்கு தென் ஆப்பிரிக்காவில் தமிழ் சொல்லிக் கொடுத்த அன்னை தில்லையாடி வள்ளியம்மையின் மாணவனாக.

இதனைக் கேட்ட நிதி அமைச்சர், நான் நலம் தான். இன்றைய நாள் முழுவதும் என்னுடன் தமிழிலேயே உரையாட வேண்டும் என்று அன்புக் கட்டளையிட்டார். அதன் பின் மறு மொழி சொல்லத்தெரியாத அண்ணல், ஆங்கிலத்திலேயே உரையாடத் துவங்கினார். சண்முகம், நீங்கள் இப்போது இந்தியா முழுமைக்கும் நிதி அமைச்சராக இருக்கின்றிர்கள். இங்கு உள்ள அமைச்சர்கள் அனைவரையும் ஓராண்டிற்குள் தமிழ் பேசும் படி கற்பிக்க வேண்டும், அது முடியவில்லை என்றால் நீங்கள் இந்துஸ்தானி கற்றுக் கொள்ள வேண்டும் என்றார் நிபந்தனையுடன். அதற்கு  சண்முகனார், என்னால் அந்த இரண்டுமே முடியாது, ஏன் என்றால், உங்களுடன் கடந்த முப்பது ஆண்டுகளாகப் பழகிய சக்ரவர்த்தி ராஜ கோபாலாச்சாரியார் அவர்களாலேயே சரிவர இந்துஸ்தானி பேசமுடியவில்லையே, பிறகு என்னால் எப்படி முடியும் என்றார்.

இந்த உரையாடல் நிகழ்ந்த போது திரு.இராஜாஜி அவர்கள் முதலாவது கவர்னர் ஜெனரலாகவும், திரு.இரா.க. சண்முகனார் அவர்கள், விடுதலைபெற்ற இந்தியாவின் முதல் நிதியமைச்சராகவும் இருந்தனர். அண்ணல் காந்தியாருடன் அரசியல், கட்சி கடந்த நட்புடன் பழகி வந்தவர் சண்முகனார். சண்முகனார் ஒருவரே அண்ணலை நேர் எதிராகவே விமர்சிக்கும் உரிமை கொண்ட மனிதராக இருந்தார் என்பது நேரு,படேல், நவுரோஜி, இராஜாஜி  போன்றவர்கள் நன்கு அறிவர். அப்படிப்பட்ட ஒரு உன்னதமான அரசியல் சான்றாண்மை படைத்த ஐயா இரா.க.சண்முகனார் தனது நிதி அமைச்சர் பதவியினை பதவியேற்ற ஓராண்டு நிறைவு நாள் அன்று அதாவது, ஆகத்து-15,1948ம் ஆண்டு,  தன் பெயருக்கு களங்கம் என்ற போது  தூக்கி எறிந்தார். அன்று அவரைத் தக்க வைக்க அண்ணல்  அவருடன் இல்லை.


காசி விசுவநாதன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “அண்ணலும் தமிழும்”

அதிகம் படித்தது