அன்பின் ஐந்திணை – மருதம்
தேமொழிJan 16, 2021
திணைமாலை நூற்றைம்பது நூலில் ஊடலும், ஊடல் நிமித்தமுமாகிய மருதத் திணை ஒழுக்கம் குறித்த பகுதி நூலின் இறுதியில் (பாடல்கள்:124 – 153) 30 பாடல்களைக் கொண்டு அமைகிறது. தலைவனின் பரத்தையர் தொடர்பால் தலைவனுக்கும் தலைவிக்கும் இடையே ஊடல் தோன்றுவது பாடல்களில் இடம் பெறும் பொருண்மை. மகாவித்வான் ரா. ராகவையங்கார் மற்றும் திரு. அ. நடராசபிள்ளை உரை நூல்களில் 128 ஆம் செய்யுள் முதல் அதன் பின் வரும் இருபத்தேழு செய்யுட்கட்கும் பழைய பொழிப்புரை கிடைக்கப் பெறவில்லை.
தலைவி, தலைவன், தோழி, தலைவனின் பாங்கர் கூட்டம், பாணன், விறலி, பெரியோர், செவிலித்தாய், காமக்கிழத்தியும் அவளது தோழியும், தலைவன் தலைவியின் சிறு மகன், பரத்தையர் என இந்த பாடல்களில் பலரும் பங்கு பெறுகிறார்கள். ஆனால் தலைவனின் பெற்றோர் பற்றிய குறிப்புகள் எதுவும் திணைமாலை நூற்றைம்பது நூலின் பாடல்களில் இடம் பெறவில்லை. தலைவியின் செவிலித்தாயிடம் தோழி பேசுவதாகவும் தலைவி மருதநிலத் தலைவனின் மகள் என்ற குறிப்பும் ஒரு பாடலில் கிடைக்கிறது. பரத்தையர் குறித்து ஒரு சில பாடல்கள் தவிர்த்து, பெரும்பாலான பாடல்கள் குறிப்பிட்டாலும், பரத்தையர் நேரடியாக இடம் பெறவில்லை, ஒரே ஒரு பாடலில் மட்டும் காமக்கிழத்தி தலைவன் எப்படி மாறிவிட்டான் என்று அவளது தோழியிடம் கூறி வியப்பதாக இடம் பெறுகின்றது. தலைவிக்குப் பின்னர்த் தலைவனாற் கொள்ளப்பட்ட காமக்கிழத்தியையும், பரத்தையரையும் தலைவி எங்கையர் (என் தங்கை போன்று பின்னர் வந்தவர்கள்) என்று குறிப்பிடுகிறாள்.
பாலையென்னும் பண், விளரி என்னும் பண், செவ்வழிப்பண் எனப் பல பண்களையும் மட்டுமின்றி அவற்றைக் கலவையாகவும் யாழில் இசைக்கும் திறமை உள்ளவனாகப் பாணன் காட்டப்படுகிறான். தலைவிக்கும் பாணனுக்கும் இடையிலேதான் உரையாடல்கள் மிகுதியாக இடம் பெறுகின்றன. சற்றொப்ப மூன்று பாடல்களில் ஒரு பாடல் இவர்களுக்கு இடையேயான உரையாடல்களே. தலைவி பாணனைக் கடிவதும், விரட்டுவதும், இகழ்ந்து பேசுவதும் என்ற பொருளில் இப்பாடல்கள் அமைகின்றன. தலைவி தோழியிடம் தனது ஆற்றாமையையும், புறத்து ஒழுக்கம் மேற்கொண்டு தலைவன் பரத்தையருடன் திரிகிறான் என்றும், ஊடலைக் கைவிட்ட பிறகு தலைவனைக் குறித்து தோழியிடம் புகழ்வதும் என சில பாடல்கள் அமைந்துள்ளன. தலைவி தனக்குள் பேசிக் கொள்வதாக இரு பாடல்களும், தோழியும் அவ்வாறு தனக்குள் பேசிக் கொள்ளும் பாடல் ஒன்றும் அமைந்துள்ளன.
சங்க இலக்கியங்களில் மருதத்திணைப் பாடல்களில் மரபாக, புறத்து ஒழுக்கம் மேற்கொண்டு பரத்தையருடன் திரியும் தலைவனின் செயலை மருதநிலக் கருப்பொருட்களின் மீது ஏற்றி உள்ளுறை உவமமாகப் பாடல்கள் அமைக்கப்படுவது ஒரு வழக்கம். எடுத்துக்காட்டுகள்: மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் இயற்றிய அகநானூற்றுப் பாடல் (பாடல்-56); பரணர் இயற்றிய நற்றிணைப் பாடல் (பாடல்-260). பாடலில் வரும் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வோர் உவமேயத்தைப் பொருத்திக் காட்டும்படி குறிப்பாக அமைந்தால் அது உள்ளுறை உவமம் என்று சொல்லப்படும். பரத்தையர் உறவில் களிக்கும் தலைவனின் செயலைக் குறிப்பிடுகையில் உள்ளுறை உவமமாக, அவனை ஊர் மேயும் எருமை மாடாகவும், மருத நில எருமை குளத்தில் புகுந்து ஆம்பல்களைக் கிழித்து (அதாவது, ஆம்பல்களான தலைவியின் தோழியர்களை வருத்தி) குவளை மலர்களை உண்டு அசைபோடுவதாகவும் (பரத்தையர் குவளை மலர்களுடன் ஒப்பிடப்படுவார்) காட்டப்படும். தலைவியை மெல்லிய கரும்பாகவும், தனக்குக் கிடைத்துள்ள கரும்பின் அருமை அறியாமல், அந்தக் கரும்பை மோதி விலக்கி குளத்தில் பாய்ந்து குவளை மலர்களை உண்டு அசைபோடும் எருமை மாட்டுடன் தலைவனை ஒப்பிடுவதை இந்த நூலிலும் காண முடிகிறது. தலைவியே தலைவனை அவ்வாறு குறிப்பிடவும் செய்கிறாள் (பாடல்கள் – 137, 147, 148).
மருத நில அகத்திணை ஒழுக்கத்தையும் இயற்கைக் காட்சிகளையும் அறிய திணைமாலை நூற்றைம்பது நூலின் பாடல்கள் மிகவும் உதவுகின்றன. திணைமாலை நூற்றைம்பது நூலின் மருதத் திணைப் பாடல்கள் அனைத்திலும் குறிப்பிடப்படும் தலைவன், தலைவி, தோழி, பாணன், பரத்தையர் போன்ற எந்த ஒரு பாத்திரப் படைப்பும் ஒருவரே என்றோ, அல்லது அவர்கள் வாழுமிடம் குறிப்பிட்ட ஒரு மருத நில ஊர் என்றோ கூறுதலும் இயலாது. இருப்பினும், திணைமாலை நூற்றைம்பது நூலின் மற்ற பிற திணைப் பாடல்களைத் தொகுத்து ஒரே கதைக்களமாக அமைக்கக் கையாண்ட அதே முறையில், இத்திணைக்குரிய 30 மருத நிலப் பாடல்களையும் (பாடல்கள்:124 – 153) ஒரே தலைவனுக்கும் தலைவிக்கும் இடையே நிகழும் ஊடலாகக் கொண்டு ஒரு வரிசைப்படுத்தி அவற்றிலிருந்து ஒரு கதையையும் உருவாக்கலாம். அத்தகைய முயற்சியே இக்கட்டுரை. வரிகளுக்குப் பின்னர் அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்படும் எண், திணைமாலை நூற்றைம்பது நூலில் உள்ள பாடல்களின் வரிசை எண்.
அன்பும் பண்பும் நிறைந்த தலைவி வளமான வயல்கள் நிறைந்த அழகிய மருதநில ஊரின் தலைவனின் ஆசை மகள். அவள் தான் வாழும் ஊருக்கு அருகில் உள்ள மற்றொரு ஊரின் தலைவனிடம் காதல் கொள்கிறாள். அவனும் அவ்வாறே அவள் மீது காதல் கொண்டவனாக இருக்கிறான். அவனும் மருத நிலத்தின் ஊர்த் தலைவன்தான். அவனது ஊரில் அழகிய சிரல் (மீன்கொத்திப்) பறவை தனது பாட்டினை தங்கிப் பாடுகின்ற, பாய்ந்தோடும் நீர் வளம் நிறைந்திருக்கிறது. கழனிகளில் மலர்ந்த தாமரை மலர்கள் நிறைந்திருக்கின்றன. செந்தாமரை மலரோடு ஒன்றாக வளர்ந்து நிற்கின்ற பசுமையான கதிர்க் குலைகளையுடைய செந்நெற் பயிர்கள் நிரம்பிய வயல்கள் கண்ணுக்கு விருந்தாக இருக்கின்றது. மண்ணில் படிந்தது போன்று தாழ்ந்து தொங்கும் குலையினையுடைய வாழை மரங்கள் நிறைந்த பசுமையான நல்ல வளம் மிகுந்த வயல்கள் நிறைந்துள்ளன. அவனை மணம் முடிக்க விரும்பும் தலைவிக்கு அவளது வீட்டில் பெற்றோரும் உற்றாரும் மறுப்பு தெரிவிக்கிறார்கள். தனது காதலுக்கு தன் இல்லத்தில் வரவேற்பில்லை என்பதால் தலைவியும் வேறுவழியின்றி தோழியிடம் தனது முடிவைத் தெரிவித்து விட்டு தலைவனுடன் உடன்போக்கு செய்கிறாள். தலைவனுக்கும் தலைவிக்கும், உடன்போக்கின் பின் தலைவன் மனையில் மண விழா நிகழ்கிறது. அதனைக் கேள்வியுற்ற செவிலித்தாய் மணமக்களைக் காண வந்தபொழுது தோழி மணமக்களின் அன்புடன் கூடிய இல்லற வாழ்க்கையினை செவிலித்தாய்க்கு எடுத்துச் சொல்கிறாள்.
தலைவன் மீது மேல் மையல் கொண்டவளான, மருதநிலக் கிழாரின் மகளான நமது தலைவி, தனது கண் நிறைந்த கணவனாகிய காதல் தலைவனின் தோற்றம் சிறக்கும் வண்ணம் அவனுக்காக அழகிய மலர் மாலை தொடுக்கிறாள்(140). மணம் மிக்க சந்தனக் குழம்பு அணியப் பெற்ற அகன்ற மார்பின் மீது கூடியிருக்கும் தலைவி, அவன் மார்பை விட்டு நீங்காது பொழுதும் புலர்ந்துவிடும் வரை இணைந்திருக்கிறாள். அந்த விடியல் வேளையிலே, இல்லத்தின் அருகில் இருக்கும் நெற் குதிர்களின் உச்சியிலே தங்கியிருக்கும் சேவலானது கூவி உறக்கத்திலிருந்து எழுப்ப, அதைக் கேட்டுப் பிற உயிரினங்களும் விழித்தெழுந்து இசையோடு பாடல்களைப் பாடத் துவங்கிவிடும் செவிலித்தாயே! (143) என்று தலைவியும் தலைவனும் ஒருவர் மீது ஒருவர் கொண்ட அன்பில் திளைத்து நடத்தும் இல்லறத்தை மகிழ்ச்சியுடன் செவிலித்தாயிடம் கூறுகிறாள் தோழி.
தலைவி கரு கொள்கிறாள். பிறக்கப் போகும் தனது குழந்தையின் வரவை எண்ணி மனதில் மகிழ்ச்சி கொள்கிறாள். ஆனால், நிலை மாறுகிறது! தலைவனுக்கு பரத்தையர் தொடர்பு ஏற்படுகிறது. அவன் அவர்களுடன் புனலாடி மகிழும் செய்திகள் தலைவியை எட்டுகிறது. தலைவி மனம் வருந்துகிறாள், அந்த செய்தியைத் தலைவனுடன் தொடர்பில் உள்ள பாணனே வந்து தலைவியிடம் சொல்கிறான். பாணனே! எனக்குத் தேவையற்ற செய்திகளை இங்கு வந்து கூறாதே. முள் போன்று துன்புறுத்தும் சொற்களைக் கூறாது இவ்விடத்தை விட்டுச் சென்றுவிடு. புதிய பரத்தையர் இல்லதிற்குள் தலைவன் நுழையும் முன்னர் அங்கு சென்று அவன் வருகையை அவர்களுக்கு அறிவிப்பாயாக (126). தலைவன் பற்றிய உண்மைகளை எனக்குச் சொல்லிக் கொண்டிராமல், எழுந்து செல். இங்கு தலைவனின் இல்லத்தில் தனது மனைவியுடன் கூடிக் களிப்பதைக் காரமான செய்கையாய்க் கருதி தலைவன் விலகுகிறான். பரத்தையருடன் கூடுவதை மிக விரும்பி வருகிறான் என்று தன்னை அலங்கரித்துக் கொண்டு காத்திருக்கும் நல்லவர்களாகிய அந்த பரத்தையரிடம் சென்று சொல் (127) என்று தலைவி பாணனிடம் கூறி அவனை விரட்டுகிறாள்.
தனிமையில் ஆழ்ந்துள்ள பொழுது, தலைவனின் நடவடிக்கை அவள் மனதில் துயரத்தைக் கிளறுகிறது. இவ்வாறு பரத்தையர் அணைத்து மகிழும் தலைவனின் மார்பை இனி நான் அணைப்பது சரியல்ல(129). பரத்தை அவளது மார்பின் மீது அணிந்திருக்கும் அழகிய மாலையின் வயப்பட்டு, அவளது மனம் போலச் செயல்படும் மருத நிலத்து ஊர்த்தலைவனது தொடர்பின்றி நயமாக விலகிச் சென்று அந்தத் துயருடன் வாழ்வதே மேலானது (128) என்றும் எண்ணி தனது நிலையை நொந்து கொள்கிறாள். தன்னைக் காண வரும் தோழியிடமும் புறத்து ஒழுக்கம் மேற்கொண்டு பரத்தையருடன் தொடர்பில் இருக்கும் தலைவன் பற்றிக் கூறி தலைவி வருந்துகிறாள். கரிய பெரிய கொம்புகளையும், சிவந்த கண்களையும் கொண்ட எருமை, வயலில் பெரிய கொம்பு போல வளர்ந்துள்ள மெல்லிய கரும்புகளை மோதித் தள்ளி, அதன் சிறந்த கொம்புகளால் ஆம்பல் மலர்களைக் களைந்து, அழகிய குவளை மலர்களையும் தின்று அழகான பற்கள் அசை போட வாயைத் தாழ்த்தி உண்பது போலத் தலைவனும் கரும்பு போன்ற என்னை விலக்கி, ஆம்பல் போன்ற எனது தோழியரைப் புறம் தள்ளி, குவளை போன்ற பலவேறு பரத்தையர் பெண்களுடன் தலைவன் உறவாடுகிறான் பாராய் தோழீ! (137, 147) என்கிறாள். ஆனால், தனக்குப் பிறக்கவிருக்கும் குழந்தையைப் பார்க்கத் திரும்பவும் வருவான் (148) என்பதை அறிவேன் என்கிறாள்.
அவ்வாறு தலைவன் வருகையில் அவனிடம் கொண்டிருக்கும் ஊடலைக் கைவிட்டுவிடு என்று தோழி தலைவியிடம் கூறுகிறாள். ஆனால் தனக்கு இரண்டகம் செய்த தலைவனை ஏற்க தலைவியின் மனம் இடம் தரவில்லை. துயர் தரும் மனப் பிரிவினை பொதுவான ஊடல் நிலை என்று எண்ணிப் பேசாதே தோழி! தொடர்ந்து பலகாலம் கனிந்த அன்பினை தலைவனின் உறவில் நான் பெறவில்லை. ஆகவே, வெறுப்புற்று இருக்கும் எனது மனநிலை மாறினாலும் கூட, தனது செயலுக்காக வெட்கி நடுங்கும் தலைவனை நான் எப்பொழுதுமே காண விரும்ப மாட்டேன் (153) என்று தோழியிடம் கூறுகிறாள். தலைவிக்கு மகிழ்ச்சி ஏற்படும் வகையில் அழகிய குழந்தை பிறக்கிறது. தலைவன் பிரிந்த துயரை மறந்து தனது மகனைப் பாலூட்டி சீராட்டி வளர்க்கிறாள். தலைவி எதிர்பார்த்தது போலவே, மகன் பிறந்த செய்தி கேட்டு தலைவன் தனது மகனைக் காண ஆவலுடன் இல்லம் திரும்புகிறான். தனது மனைவியைத் தழுவ முற்படுகிறான். ஆனால், தலைவி அவனை ஏற்க மறுக்கிறாள். தனது முலைகளாலும், அணிகளாலும் முன்னே பரத்தையர்கள் தம் உறவுக்காகப் பெற்றுக் கொண்ட பொருளாலும் உனது மார்பில் அவர்கள் பொருந்தியதற்கான சுவடு கலையும் முன்பே, உமிழ் நீரினைச் சிந்துகின்ற வாயினையுடைய என் மகன் முன்னர் வரும் தலைவனே! (நீ என்னைத் தழுவினால்) எனது மார்பில் சுரக்கும் பால் உன் மார்பில் அணிந்துள்ள மாலையினை சிதைத்துவிடும், ஆகவே என்னைத் தழுவாதே, என்று தலைவி தலைவனின் அணைப்பை மறுத்துக் கூறுகிறாள்(152).
தலைவியைச் சமாதானப்படுத்தும் வகை அறியாத தலைவன் மீண்டும் பரத்தையர் இல்லம் திரும்புகிறான். பரத்தமை மேற்கொண்டு தலைவியை மறந்து நடந்த தலைவனிடம் தலைவி பிடிவாதமான ஊடலைக் கொண்டிருந்ததால் அவன் அவளை விலக, அதனைக் கண்ட பெரியோர் தலைவி தலைவனிடம் கொண்டுள்ள உண்மை அன்பை எடுத்துக் கூறி தலைவனை அவளுடன் சேர்ந்து வாழும்படி நல்வழியில் நடத்தும் பெரியோர் இடித்துரைக்கிறார்கள். தலைவனே! வீரப்போர்ப் புண்கள் மிகப்பெற்ற மனுவென்னும் அரசன் வகுத்த அறநெறி வழி நடப்பது என்ற பண்பு உன்னை விட்டு நீங்கி, நன்னெறி விலகி நீ வாழ்ந்தாலும், செங்கயல் மீனினைப் போன்ற கண்களையுடைய தலைவி, உன் நடத்தை கண்டு வருந்தாமல் நாணம் கொள்ளும் நிலையானது தலைவியிடம் பெண்மைப் பண்பு நிறைந்துள்ளதைக் காட்டுகிறது. இது புது வகை இசை போல உலகம் அறிந்திராத ஒரு புதுமை என்கிறார்கள்(149).
நாட்கள் கடக்கின்றன. வளர்ந்து வரும் மகன் குறித்த செய்திகள் வந்து சேரும் பொழுதெல்லாம் தலைவனுக்குத் தனது மகனைப் பார்க்க ஆவல் மேலிடுகிறது. பரத்தையர் இல்லத்தில் தங்கியிருக்கும், தனது யாழில் பல பண்களையும் இசைக்கும் திறமை கொண்ட பாணனிடம் தனது மனக்குறையைக் கூறுகின்றான். அழகிய குரல்வளம் கொண்டு பாடும் பரத்தையருடன் புணர்ந்து நான் விளையாடினேன் என்பதால், மணியொலி போன்ற குரலையுடைய மேன்மையான எனது தலைவி என்னுடன் பிணக்கு கொண்டுள்ளாள் பாணனே! என்று தலைவன் பாணனிடங் கூறுகின்றான் (141). தலைவனுக்கும் தலைவிக்கும் இடையில் உள்ள மனவேறுபாட்டைக் களைய உதவும்படி தலைவன் கூறுகிறான். தான் வரவிருப்பதைத் தலைவியிடம் கூறச் சொல்கிறான். அவனது வேண்டுகோளை ஏற்று பாணனும் தலைவியின் இல்லத்திற்குத் தூது செல்கிறான்.
தலைவனின் புகழ் பாடி அவனது செயலுக்கான விளக்கங்களைக் கூறும் பாணனின் உரையைக் கேட்கும் பொழுது தலைவி பொறுமை இழக்கிறாள். பாணனே! அருமையான சிறு தேரினை தனது கையினாலே இழுத்து உருட்டி விளையாடும் எனது மகன் பிறக்கும் முன்னர், இந்த இல்லத்தில் என்னுடன் அன்புடன் கூடி விளையாடியவன் எனது தலைவன். மாறாக, பின்னர் எனக்குப் பின் வந்தவர்களாகிய பரத்தையர்களின் தோள்களில் மிகவும் விருப்பத்துடன் கூடி மகிழ்வதை விரும்பினான் (124). மண்ணால் உருவாக்கப்பட்ட யானை சிலை மீது அமர்ந்து பாகன் போலக் கையில் கோலுடன் ஓட்டி விளையாடும் எனது மகன் பிறப்பதற்கு முன்னர் எனது தலைவன், அழகிய வளைவுகளைக் கொண்ட வளையல்களை அணிந்த பரத்தையரது சேரிக்குச் சென்றானா என்று சொல்வாயாக. அவனது வாழ்க்கைத் துணையான எனது வீட்டின் வாயிலைத் தாண்டிச் சென்றானா அவன்? சொல்வாயாக என்று தலைவி பாணனிடம் வினவினாள் (125). எனக்குப் பின்னவளாகிய பரத்தையோடு தலைவன் இயல்பாகக் கூடி மகிழ்ச்சியுடன் கிளர்ச்சியடைந்து வாழ்கின்றான். அவ்வாறே, தனது சின்னஞ்சிறு கைகளை அசைத்தும், மழலை பேசியும் பொருள் புரியாத வகையில் இங்கே குழறும் மொழியுடன் ஓடிவிளையாடி நன்கு வளரும் எனது மகனுடன் நானும் நலமாகவே வாழ்கிறேன். ஆதலால், எனக்கொரு குறையும் இல்லை. தலைவன் வருகையைக் கூற வந்த பாணனே, என் மகனோடு மகிழ்ச்சியுடன் நான் வாழும் வாழ்க்கையே எனக்குப் போதும் (136) என்று என்று தலைவி பாணனிடம் கூறி அவனை அனுப்பிவிடுகிறாள்.
தலைவியையும் குழந்தையையும் காண வருகை தரும் உறவினரும், பெரியவர்களும் பிரிந்திருக்கும் இருவரையும் இணைத்து வைக்க தங்களால் இயன்றதைச் செய்ய முடிவெடுக்கின்றனர். இருவரிடம் ஒருவர் குறித்து மற்றவர் பெருமையைப் பேசி தலைவன் தலைவி இருவரது மனங்களையும் மாற்ற முயல்கின்றனர். தலைவனே! இம்மண்ணில் வாழ்பவர்களில் சான்றோர்களும் சிறிது நாட்களிலேயே தலைவியின் பெருமை உணர்ந்து அவளைப் பாராட்டி அவளுக்குத் தொண்டு செய்யும் வண்ணம், பெண்ணின் மேன்மையை வெளிப்படுத்தும் வகையில் மார்பில் முத்துமாலைகளைத் தவழ விட்டுள்ள தலைவி மிகவும் எளிமை இனிமை அன்பின் உறைவிடமாக இல்லறம் நடத்தி வருகிறாள் என்று தலைவியின் இல்லத்தில் நுழைந்து பழகி அவள் இல்லறம் நடத்தும் பாங்கினை கண்ணுற்ற ஒருவன் தலைவனிடம் சென்று, தலைவி இல்லறத்தினை ஊரார் மெச்சும் வண்ணம் மாண்புடன் நடத்துவதை அவனுக்குத் தெரிவிக்கிறான் (146). மற்றும் சிலர் தலைவியிடம் வந்து தலைவன் கூறும் விளக்கங்களைக் கூறி தலைவனின் பிழையைப் பொறுக்கும் படியும், அவன் அவளுடன் இணைய விரும்புவதாகவும் கூறுகிறார்கள். உண்மையான போக்கினைக் கொண்டிராத தலைவனின் பொய்மையான மாய மொழிகளைக் கேட்டது போதும். தலைவனின் செயல்களே அவன் புகழைக் காட்டுகிறது. என்னிடம் காதல் கொண்டு தலைவன் செய்யும் செயல்களே கூடல் கருதி நிற்கும் அவனின் விருப்பத்தைக் காட்டுகிறது, ஆகவே மேலும் பொய் உரைக்காமல் போய்ச் சேருங்கள் என்று தலைவி வாயில் தேடி வந்து தலைவனைப் புகழ்பவர்களுக்கு மறுமொழி கூறி அனுப்பிவிடுகிறாள் (130).
தலைவனின் தோழர்களும், தலைவியின் தோழியரும் பிரிந்திருக்கும் தலைவனையும் தலைவியையும் இணைக்கும் முயற்சியில் அடுத்து களம் இறங்குகிறார்கள். தலைவியின் தோழியர்களில் ஒருத்திக்கு செம்பட்டினை உடுத்து வித்து, அவள் அணிந்துள்ள அணிகலன்கள் எல்லாம் நிறம் மாறும்படி செஞ்சாந்தைப் பூசு வித்து, மிகுந்த அக்கறையோடு சிவந்தகுவளை மலர்களையும் சூட்டி அவளைத் தலைவனே நீ வாழும் பரத்தையர் வீடு நோக்கி அனுப்புகிறாள் தோழி. தன்னைப் பிரிவதற்காகப் பரத்தை உன்மீது என்னதான் வசைபாடினாலும், பரத்தைக்கு மறுமொழி எதுவும் கூறாது வீடு திரும்புக, உன் குலம் தழைக்க தலைவியுடன் நீ இணைய வேண்டும் என்ற அறிவுரையையும் கூறச் சொல்லி தோழி ஒருத்தியை அனுப்பியுள்ளாள் தலைவனே. ஆகவே, தோழி தரும் குறிப்பறிந்து நடப்பாயாக என்று தலைவனிடம் அவனது பாங்கர்கள் கூறுகின்றார்கள் (144). விறலியைத் தலைவன் தலைவியின் மனதை மாற்ற அனுப்பிவிட்டு, தலைவனும் வீடு திரும்புகிறான். விறலி தலைவியைப் பாராட்டிப் பேசி தலைவன் இனி தவறிழைக்காமல் இருப்பான் என்று கூறுகிறாள். தலைவி விறலியின் கூற்றை ஆராய்ந்து மனம் மாறுகிறாள். தலைவனை ஏற்றுக் கொள்கிறாள். தலைவன் அனுப்பிய பல தூதுகளை மறுத்து விட்ட தலைவி விறலியின் தூதினை மதித்து ஏற்று, தலைவனோடு மீண்டும் மகிழ்ந்திருப்பதைக் கண்டு மனம் நெகிழ்ந்த விறலி, அருகே இருந்த தோழியினிடத்தே தனக்குக் கிடைத்த நல்வாய்ப்பிற்கு நன்றி பாராட்டிக் கூறுகின்றாள். தலைவிக்கு யாவரையும் தனது உறவு என்று பாராட்டும் பெருந்தன்மையான குணம் குறையாது இருப்பதாலோஅல்லது பழமையானவை மக்களுக்குப் பலவகையில் பயன் தருவதை உணர்ந்திருக்கும் நிலையினாலோஉரிமையுடன் தக்க குலத் தலைவர்கள் பலகுடிமக்களையும் உறவாக ஏற்றுக் கொள்ளும் முறையில் தலைவியும் நாய் போன்று மிகவும் தாழ்மையுள்ள என்னையும் ஏற்றுக் கொண்டுள்ளாள். தலைவியின் அருள் கிடைக்கப் பெற்றேன் நான் என்கிறாள் விறலி (134).
தோழியும் தனது பங்கிற்குத் தலைவனைப் புகழ்ந்து அவன் மனதை மாற்றுகிறாள். குளிர்ந்த குளத்தினிடத்திலே மலர்ந்துள்ள தாமரைப்பூவிலேயுள்ள, பெரிய ஆண் அன்னப் பறவையினை கீழ்ப்படியும் பெண் அன்னப்பறவையானது நீரிலிருந்து விரும்பும் படியான கழனிகள் சூழப் பெற்ற மருத நிலத்து ஊர்த் தலைவனே! வளம் மிக்க குளத்தினைப் போன்ற உனது பரந்த மார்பானது, புளியம்பழத்தினை மேலும் மேலும் சுவைக்க ஏற்படும் விருப்பம்போல் விரும்பும் சிறப்பைக் கொண்ட ஒன்றாகும். உன்னுடன் கூடி வாழும் தலைவி உன் மீது கொண்ட மாறாத மயக்கத்திற்கு அதுவே நோய் நீக்கும் மருந்து, என்று தோழி தலைவனைப் புகழ்ந்து அவனிடம் கூறுகின்றாள் (142). பிரிந்தவர் கூடினர். தலைவன் களிப்புடன் தனது மகனுடன் விளையாடுகிறான். தலைவியின் மீது அன்பைப் பொழிகிறான். இதனால் தலைவியும் மனம் மாறிவிடுகிறாள். மருதமரங்களுடன் காஞ்சி மரங்களும் இணைந்து உயர்ந்து வளர்ந்துள்ளதால் அவை பரப்பும் நிழலின் கீழே, காளைகளுடன் உழவில் ஈடுபட்டுள்ள உழவர்கள் எழுப்பும் ஒலியுடன், கழனியில் நாரைகளும் வாத்துக்களும் எழுப்பும் ஒலியும் சென்று கலந்திருக்க; குளிர்ந்த அழகிய வயல்கள் நிறைந்தது; அமர்ந்து பயணிக்க முடியாத சிறிய பொம்மைத் தேரினை உருட்டும் எனது மகனின் தந்தையாகிய எனது தலைவனின் மருத நிலத்தின் ஊர் ஒரு சிறந்த வாழிடம் என்று ஊடலைக் கைவிட்டு, தான் தலைவனுடன் மீண்டும் இணையக் காரணமாக இருந்த மகனையும் தன் தலைவனையும், அவர்கள் வாழும் ஊரின் சிறப்பையும் புகழ்ந்து தலைவி தோழியிடம் கூறுகிறாள் (138, 139).
தலைவியின் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கினாலும், தலைவனின் காமக்கிழத்தி தன்னைப் பிரிந்து சென்றுவிட்ட தலைவன் மீது ஆத்திரம் கொள்கிறாள். தலைவன் தலைவியிடம் சென்றவுடன் தன்னை மறந்து எப்படி மாறிவிட்டான்? தலைவி ஆட்டுவிக்கும்படி எல்லாம் ஆடுகிறானே என்று மனம் குமைகிறாள். தோழியே! என்ன இது!!! இந்த மண்ணிலும் விண்ணிலும் இதற்கு முன்னர் கேட்டதும், கண்டதும் இல்லை, அதனால் அது குறித்து ஒரு முடிவும் அறியேன் நான். நம்மை விட்டு நீங்கிய தலைவன், மனைவியின் பின் சென்று, அவள் கூறுவதைக் கேட்டு, அணங்குபோன்ற தலைவி ஆட்டுவிக்கும் படி நடந்து அவள் கட்டளைகளைத் தட்ட விரும்பாமல், அவன் அணிந்துள்ள அணிகலன்கள் குலைந்தாடும் வண்ணம், மிகவும் பணிவுடன் தலைவியின் ஏவல்களை நிறைவேற்றுகிறானே!!! என்று காமக்கிழத்தி தன் தோழியிடம் கூறுகின்றாள்(135). பாணனை தலைவன் வீட்டிற்குத் தூது அனுப்புகிறாள் காமக்கிழத்தி. அவனைத் தலைவனைச் சந்திக்க விடாமல் தலைவாயிலேயே தடுத்து நிறுத்தும் தலைவி பாணனை விரட்டி அனுப்புகிறாள்.
பரத்தையர் வீட்டில் இருக்கும் பாணனே! நான் வாழும் இந்த இல்லத்தை நீ அத்தகைய பிற பெண்கள் வாழும் வீடு என்று தவறாகக் கருதி விட்டாய் போலிருக்கிறது. அது போன்ற பெண்கள் வாழும் வீடு இது என்று தவறாக எண்ணாமல், இங்கிருந்து கிளம்பு. என் பின்னவர்களாகிய பரத்தையரின் வீட்டில் மாலைப் பொழுது மறையும் நேரம் மணவிழாத் தொடங்கப் போகும் நேரத்திற்குள் பரத்தையர் மனைக்குச் சென்றுவிடு (132). சேற்றில் விளையாடுகையில் கிண்கிணி என ஒலிக்கும் கால் சலங்கை அணிந்த என் மகனின், செம்மையான பொன்னில் செய்யப்பட்ட நெற்றிச் சுட்டியில் புழுதி படர, இந்த வீட்டின் முன் முற்றத்தில் தன் மகனுடன் விளையாடும் என் தலைவன், பண்பால் வேறுபட்ட பெண்களான பரத்தையரின் வீடு சென்று விளையாட விரும்புவானோ? (விரும்பமாட்டான்) ஆகவே, அழகிய கோலுடன் அமைந்த யாழைக் கொண்ட பாணனே, நீ வீணே காலந்தாழ்த்தாது எனக்குப் பின்னவர்களான பரத்தையர் இல்லம் நோக்கிச் சென்றுவிடுவாயாக (151). முன்னர் தலைவனுக்கு மாலை நேரத்தில் இசைக்கவேண்டிய பண்ணினைப் பாடி அவனுக்கு நீ பணி செய்ததில்லையோ; காலைவேளைக்குரிய பண்ணினைப் பாடவேண்டிய நிலையினை அறியாதவனாக விளங்கினாய் அப்பொழுது. உனது நோக்கமும், நீ எப்படிப்பட்டவன் என்பதையும் நான் நன்கே அறிவேன். குறைவறாது நீ கூறும் பொய்களுக்கு மயங்குபவர் இடம் தேடிச் சென்றுவிடு (133). நற்பண்பு சிறிதும் அற்ற பாணனே! தலைவனது கடந்த காலச் செய்திகளை, கொடிய சொற்களால் விவரித்துக் கிண்டலாக என்னிடம் நினைவூட்டும் வகையில் சொல்லி, ஊடல் விலகி எனக்கும் தலைவனுக்கும் இடையே மீண்டும் தொடங்கப் பெற்றுள்ள உறவினை உனது சொற்களால் துண்டிக்க வேண்டாம். தலைவனின் கடந்த கால வாழ்வு குறித்து புரிந்தது புரியாதது, தெரிந்தது தெரியாதது அனைத்தும் நான் நன்கு அறிவேன் (131) என்று தலைவி பாணனிடம் கூறி அவனை வீட்டிலிருந்து வெளியேற்றுகிறாள்.
தனது முயற்சி பலிக்காது சோர்ந்து திரும்பும் பாணனை வழியில் சந்தித்து விவரம் அறிகிறான் தலைவன். பல பண்களையும் கலந்து யாழில் இசைக்க வல்ல பாணனே! ஆராய்ந்து பார்த்தால் தலைவியைப் போலச் சிறந்த ஒரு பெண்ணை எங்கும் காண இயலாது. எண்ணிப் பார்த்தாலும் இன்று என் தலைவிக்கு நிகரான பெண்ணொருத்தி கடல் சூழ்ந்த இந்த மண்ணுலகில் இல்லை. மறைந்து நடுகல்லாய் சமைந்துவிட்ட முன்னோர்களிலும் அத்தகைய பெண் இருந்ததில்லை. சிறப்பான விண்ணுலகில் யாரேனும் இவளுக்கு இணையான சிறப்பு கொண்டவராய் இருக்கக் கூடும் (150) என்று ஊடலைக் கைவிட்டு, மன்னித்து தன்னை ஏற்றுக் கொண்டு தனக்கு வாழ்வளித்த தலைவியைப் புகழ்ந்து கூறும் தலைவன், பாணனிடம் தன்னைத் தொடர்வது இனி பயனளிக்கப் போவதில்லை என்று உணர்த்துகிறான். தலைவனும் தலைவியும் தங்கள் மகனுக்கு ஐம்படைப் பூட்டி, பெயர் சூட்டும் விழா நடத்துகிறார்கள். மகிழ்ச்சியுடன் அவர்கள் ஒருசேர இருப்பதைக் காண்கிறாள் தோழி. பாடல்களின் ஒலியும், இன்னிசைக் கருவிகள் எழுப்பிய பண் ஒலியும், வளையாது நேராக அமைந்த புல்லாங்குழலினது இசையும் என வகை வகையான பல இசைகளும் கூடி ஒலிக்கும் வேளையில்வளைந்த நச்சுப்பற்களைக் கொண்டிருந்த பாம்பினை கயிறாகக் கொண்டு பாற்கடலைக் கடைந்த மந்திரமலை போன்ற சிறப்பு அடைந்த தலைவன் தனது மகனைச் சுமந்து கொண்டு மருத நிலத் தெய்வமாகிய இந்திரனைப் போல தலைவியின் இடப்பக்கம் வந்து நிற்கின்றான் (145) என்பதைத் தலைவியின் மகனுக்கு ஐம்படை பூட்டி பெயரிடும் விழாவில் காணும் தோழி மனம் மகிழ்கிறாள்.
குறிப்பு – கதையாகக் கோர்க்கப்பட்ட பாடல்களின் வரிசை, பாடல் எண்களுடன் கொடுக்கப்பட்டுள்ளது:
140. தனது கணவனின் தோற்றம் சிறக்கும் வண்ணம் அவன் மேல் காதல் கொண்ட தலைவி அவனுக்கு அழகிய மலர்மாலை தொடுக்கிறாள் செவிலித்தாயே!
143. தலைவனும் தலைவியும் கொண்டிருக்கும் அன்பின் நெருக்கத்தால் விடியும் வரையும் ஒருவரை விட்டு ஒருவர் பிரிவதில்லை செவிலித்தாயே!
126. தேவையற்ற செய்திகளை என்னிடம் கூறாது சென்றுவிடு, பரத்தையரிடம் சென்று தலைவன் அங்கு வந்து கொண்டிருக்கிறான் என்று சொல் பாணனே!
127. மனைவியைக் கூடி மகிழ்வதைவிட பரத்தையரே தலைவனுக்கு விருப்பம் என்று அந்தப் பரத்தையரிடம் போய்க் கூறு பாணனே!
129. தலைவன் தலைவியைப் பிரிந்து சென்று பரத்தையுடன் புனலாடும் செய்தி கேட்ட தலைவி மனம் வருந்தி பரத்தையர் கூடும் தலைவனின் மார்பைத் தான் இனி அணைப்பது நல்லதல்ல என்று எண்ணுகிறாள்.
128. ஆற்று நீரில் பாய்ந்து ஆடும் பரத்தையர் மனம் போலச் செயல்படும் தலைவனை விலகி, அவன் இல்லாது துயர் நிறைந்த வாழ்க்கையை வாழ்வதே நல்லது என்று தலைவி எண்ணுகிறாள்.
137. தலைவன் வயலில் புகுந்து பல்வேறு மலர்களைத் தின்னும் எருமை போல பற்பல பெண்களுடன் உறவாடிக் கொண்டிருக்கிறான் தோழி!
147. புறத்து ஒழுக்கம் மேற்கொண்டு தலைவன் பரத்தையருடன் திரிகிறான் தோழியே!
148. புறத்து ஒழுக்கம் மேற்கொண்ட தலைவன் பரத்தையர் உறவுக்குப் பின்னர் தனது மகனை நினைத்துக் கொண்டு வீடு திரும்புவான் தோழியே!
153. துயர் தரும் மனப் பிரிவினை பொதுவான ஊடல் நிலை என்று எண்ணிப் பேசாதே தோழி! நான் எப்பொழுதுமே தலைவனைக் காண விரும்ப மாட்டேன்.
152. உன் மார்பில் நீ அணிந்துள்ள மாலையினை என் முலைப்பால் சிதைக்கும், ஆகவே என்னைத் தழுவ வேண்டாம் தலைவனே!
149. தலைவியின் ஊடல் கண்டு விலகும் தலைவனிடம், தலைவி அவனிடம் கொண்டுள்ள உண்மை அன்பை எடுத்துக் கூறி தலைவனைச் சேர்ந்து வாழும்படி நல்வழியில் நடத்தும் பெரியோர் இடித்துரைக்கிறார்கள்.
141. எனக்குப் பரத்தையர் தொடர்பு உள்ளது என்று என்னுடன் பிணக்கு கொண்டுள்ளாள் எனது தலைவி பாணனே !
124. எனது மகன் பிறக்கும் முன்னர் என்னுடன் கூடி மகிழ்ந்திருந்த என் தலைவன் இப்பொழுது பரத்தையர்களை விரும்பி அவர்களைக் கூடி மகிழ்கிறான் பாணனே.
125. பாணனே, என் மகன் பிறப்பதற்கு முன்னர் எனது தலைவன் இந்த வீட்டின் வாயிலைத் தாண்டி பரத்தையர் இல்லம் சென்றதுண்டோ? சொல்வாயாக!
136. தலைவன் வருகையைக் கூற வந்த பாணனே, என் மகனோடு மகிழ்ச்சியுடன் நான் வாழும் வாழ்க்கையே எனக்குப் போதும்.
146. தலைவி தனது பண்பின் மேன்மையால் சான்றோர் மெச்சும்படி இல்லறம் நடத்துகிறாள்.
130. தலைவனின் செயல்களே அவன் புகழைக் காட்டுகிறது, மேலும் பொய் உரைக்காமல் செல்லுங்கள் மக்களே என்கிறாள் தலைவி.
144. தலைவனே! தோழியின் குறிப்பை அறிந்து, பரத்தை என்ன வசை கூறினாலும் அதற்கு மறுமொழி ஒன்றும் கூறாது, உன் குலம் தழைக்க தலைவியுடன் கூட நீ இல்லம் திரும்புக என்று பாங்கர்கள் கூறுகின்றார்கள்.
134. தலைவியின் பெருந்தன்மையால் அவள் என்னை ஏற்றுக் கொண்டது நான் அடைந்த பேறு என்று விறலி தோழியிடம் கூறுகிறாள்.
142. தலைவனே! உன் மீது மயக்கம் கொண்ட தலைவிக்கு உன் சிறந்த மார்பைச் சேர்வதே அவளது காதல் நோயைத் தீர்க்கும் மருந்தாக அமையும்.
138. எனது மகனும் அவனின் தந்தையாகிய எனது தலைவனும் வாழும் இந்த மருத நிலத்தின் ஊர் சிறப்பான இடம் தோழி!
139. எனது மகனும் அவனின் தந்தையாகிய எனது தலைவனும் வாழும் இந்த மருத நிலத்தின் ஊர் சிறப்பான இடம் தோழி!
135. தோழியே! தலைவன் தனது மனைவி ஆட்டுவித்தபடி அவள் ஏவிய பணிகளைச் செய்து கொண்டிருக்கிறான் என்கிறாள் காமக்கிழத்தி.
132. பரத்தையர் வீட்டில் வாழும் பாணனே, இந்த வீடு அத்தகைய பெண்கள் வாழும் வீடல்ல, பரத்தையர் வீடுகளுக்கேச் சென்றுவிடு.
151. பாணனே! தலைவன் தன் மகனுடன்தான் விளையாட விரும்புவான், பரத்தையர்களுடன் அன்று.
133. பாணனே! நீ சொல்லும் பொய்களுக்கு மயங்குபவர் உள்ள இடம் தேடிச் சென்றுவிடு என்று தலைவி கூறுகிறாள்.
131. தலைவனின் கடந்த கால நடத்தை குறித்து நான் நன்கே அறிவேன், எங்களுக்குள் கலகம் மூட்டும் முயற்சியைக் கைவிடுக பாணனே!
150. என் குற்றத்தை மன்னித்து என்னை ஏற்றுக் கொண்ட என் தலைவியைப் போல சிறந்த பெண்ணொருத்தி இவ்வுலகில் கிடையாது பாணனே!
145. தலைவன் தனது மகனைச் சுமந்து கொண்டு தலைவியின் இடப்பக்கம் நின்று விழாவில் பங்கேற்றான்.
உதவிய தளங்கள்:
1. கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது
மூலமும் உரையும் – மகாவித்வான் ரா. ராகவையங்கார்
செந்தமிழ்ப் பிரசுரம், 1927 (இரண்டாம் பதிப்பு)
திணைமாலை நூற்றைம்பது.pdf: https://ta.wikisource.org/s/31hg
2. கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது
விளக்க உரை – தமிழ்ப் புலவர் திரு. அ. நடராச பிள்ளை
http://www.tamilvu.org/library/l2F00/html/l2F00ind.htm
3. கணிமேதாவியார் இயற்றிய திணைமாலை நூற்றைம்பது
உரையாசிரியர்: பால சங்கரன், எம்.ஏ., பி.எட்.
https://www.chennailibrary.com/pathinenkeelkanakku/thinaimaalai150.html
4. திணைமாலை நூற்றைம்பது – கணிமேதாவியார்
தமிழ் இலக்கியத் தொடரடைவு, முனைவர்.ப.பாண்டியராஜா
http://tamilconcordance.in/TABLE-THINAIMALAI150-TEXT.html
5. திணைமாலை நூற்றைம்பது, வைதேகி ஹெர்பர்ட்,
https://pathinenkeelkanakku.wordpress.com/திணை-மாலை-நூற்றைம்பது/
_____________________________________________
தேமொழி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “அன்பின் ஐந்திணை – மருதம்”