மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

இசையறிஞர் சுப்பராம தீட்சிதர்

தேமொழி

Apr 14, 2018

Subbarama Dlksitar

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்திலும் எட்டயபுர அரண்மனையின் அரசவைக் கர்நாடக இசைக் கலைஞராக இருந்தவர் திரு. சுப்பராம தீட்சிதர். இவர் எழுதிய “சங்கீத சம்பிரதாயப் பிரதர்சினி” (Sangita Sampradaya Pradarsini/ “ஸங்கீத ஸம்ப்ரதாய ப்ரதர்சினீ”) என்ற நூல் மிகவும் அரிய இசை நூல் எனப் பாராட்டப்படும் ஒரு இசைக்களஞ்சியம்.

திரு. சுப்பராம தீட்சிதர் (1839-1906) இசை மும்மூர்த்திகள் எனப்படுபவர்களில் ஒருவரான முத்துசுவாமி தீட்சிதர் அவர்களின் இசைக்குடும்பத்தைச் சார்ந்தவர். எட்டயபுரம் மன்னரின் அரசவை கர்நாடக இசைக் கலைஞராக தனது இறுதி நாட்களில் பணியாற்றினார் முத்துசுவாமி தீட்சிதர்.  அவருக்குப் பின்னர் அவரது இளைய சகோதரர் பாலுசாமி தீட்சிதர் அப்பொறுப்பில் இருந்தார். பாலுசாமி தீட்சிதரது மகள் அன்னபூரணிக்கும் திருவாரூரைச் சேர்ந்த சிவராம ஐயருக்கும் 1839 இல் பாலசுப்ரமணிய சர்மா என்ற இயற்பெயர் கொண்ட இரண்டாவது மகனாகப் பிறந்தார்  சுப்பராம தீட்சிதர்.

எட்டயபுர அரசின் ‘இராஜா ஜெகதீஸ்வரராம வெங்கடேஸ்வர எட்டப்பராஜா’ அவர்களும் ஒரு இசை மேதை.

மன்னரின் ஆலோசனையால் தாய்வழிப் பாட்டனார் பாலுசாமி தீட்சிதர் தனது பேரனை மகனாகத் தத்தெடுத்து தனது இசை வாரிசாக உருவாக்கினார். சுப்பராம தீட்சிதர் தனது 17 ஆம் வயதில் சொந்தமாக இசை  புனையத் துவங்கினார், அட தாள வர்ணத்தை தர்பார் இராகத்தில் இயற்றி அரசர் முன்னர் ஒரு இசைநிகழ்ச்சி அளித்தார். அரசவையில் பலர் அந்த இசையை அவரது தந்தை எழுதி தனது மகன் புகழ் பெற உதவியுள்ளார் எனக் கருதினர். ஆகவே அவரது திறமையை சோதிக்க விரும்பிய அரசர் தாம் வெளியில் சென்று ஒரு மணிநேரத்தில் திரும்பி வருவதற்குள் யமுனா இராகத்தில் பாடல் அமைத்து தனக்குப் பாடிக் காட்டும்படி உத்தரவிட்டுச் சென்றார். அவர் திரும்பி வருவதற்குள் சுப்பராம தீட்சிதர் அரசர் கூறியவாறே அவர் கொடுத்த இசைக் குறிப்புகளை உள்ளடக்கிய பாடலொன்றை இசையமைத்து மன்னருக்குப் பாடிக் காட்டினார்.  அரசர் மகிழ்ந்து அவருக்குப் பொன்னாடை போர்த்திப் பாராட்டி பத்து பொற்காசுகள் பரிசளித்தார். வளர்ப்பு தந்தைக்குப் பிறகு சுப்பராம தீட்சிதரும் எட்டயபுர அரசவை கர்நாடக இசைக் கலைஞர் பொறுப்பை வகித்தார்.  இவர் இசைக்காற்றிய மிகப் பெரிய தொண்டாகக் கருதப்படுவது இவர் எழுதிய சங்கீத சம்பிரதாயப் பிரதர்சினி என்ற இசைநூலாகும்.

ஏ. எம். சின்னசாமி முதலியார் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்று அரசு தலைமைச் செயலகத்தில் பணியாற்றியவர். ரோமன் கத்தோலிக்கரான முதலியார் மேற்கத்திய இசை பயின்றவர்.இவர் கர்நாடக இசையை விரும்பியதுடன், மேற்கத்திய இசைபோல இசைக்குறியீட்டுடன் இந்திய இசையை ஏட்டில் பதிவு செய்ய விரும்பி தியாகராஜ கீர்த்தனைகள் உள்ளிட்ட இசை மும்மூர்த்திகளின் பாடல்களை சேகரித்து இசைக்குறியீடுகளுடன் எழுதிப் பதிப்பித்து வந்தார். சுப்பராம தீட்சிதரின் இசைப்புலமையை அறிந்து அவரால் தான் இந்திய இசையைக் கற்றுக்கொள்ள முடியும் என்று கருதி சுப்பராம தீட்சிதரை சென்னைக்கு அனுப்பி வைக்கும்படி எட்டையபுர அரசருக்கு வேண்டுகோள் விடுத்தார். அரசரும் ஏற்றுத் தனது அரசவை இசையறிஞரைச் சென்னைக்கு அனுப்பி வைத்தார்.

ஏ. எம். சின்னசாமி முதலியார், திரு. சுப்பராம தீட்சிதரை தமது இசையாசிரியராக ஏற்றுக் கொண்டி இசை கற்று அவருடன் இணைந்து இசைநூல் உருவாவதில் பெரும்பங்கு வகித்தார். பணி ஓய்வு பெற்ற ஏ. எம். சின்னசாமி முதலியாருக்குக் கண்பார்வை மங்கத் தொடங்கியதுடன், நிதிநிலையும் குறையத்தொடங்கியது. இந்த நிலையில் 1899 ஆம் ஆண்டு, எட்டயபுர அரசர் முடிசூட்டும் விழாவிற்கு வருமாறு  ஏ. எம். சின்னசாமி முதலியாருக்கு அழைப்பு விடுத்தார். இதை ஒரு  நல்ல வாய்ப்பாகக் கருதி அரசரிடம் உதவிபெற எண்ணினார் ஏ. எம். சின்னசாமி முதலியார். சுப்பராம தீட்சிதர் முதலில் இசையை நூலாக வெளியிடுவதில் விருப்பமின்றி இருந்தார். இசையைத் தனது குலச்சொத்து என்று கருதினார். ஆனால் இசையார்வம் கொண்ட ஏ. எம். சின்னசாமி முதலியார் அளித்த விளக்கங்களாலும் பரிந்துரைகளாலும், முதலியாரின் வேண்டுகோளுக்கு இணங்கி எட்டயபுர அரசர் கொடுத்த ஆதரவினாலும் உத்தரவினாலும் பிறகு நூலாக வெளியிட ஒப்புதல் அளித்தார். திரு. சுப்பராம தீட்சிதர்   நான்கு பாகங்களைக் கொண்ட “ஸங்கீத ஸம்ப்ரதாய ப்ரதர்சினீ” என்ற இசைநூலை தமது அறுபதாவது வயதில் தொடங்கி நான்காண்டுகள் கடுமையாக உழைத்து  இந்நூலைத் தெலுங்கு மொழியில் எழுதினார். தனது 65 ஆம் வயதில் 1904 ஆம் ஆண்டில் இந்நூலை வெளியிட்டார்.

சங்கீத சம்பிரதாயப் பிரதர்சினி இசைநூல் ஒருமாபெரும் இசைக்களஞ்சியமாகக் கருதப்படுகிறது. முத்துசுவாமி தீட்சிதரின் பாடல்கள், அக்கால இசைக் கலைஞர்களின் வாழ்க்கைக் குறிப்புக்கள், கர்நாடக இசையின் கீர்த்தனைகள், வர்ணங்கள் எனப் பல இசைக்குறிப்புகள் உள்ளடக்கிய நூலிது. ஸ்வரங்களும், கமகங்களும் இந்நூலில் வழங்கப்பட்டுள்ளது இதன் சிறப்பு.  இசையில் வல்லவரும்  இசையார்வ மிக்கவருமான  எட்டயபுர மன்னர்,  சுப்பராம தீட்சிதர் அவர்களின்  ‘ஸங்கீத ஸம்ப்ரதாய ப்ரதர்சினீ’  நூல் வெளியீட்டிற்குப் பொருளுதவியும் செய்து, தனக்கு உரிமையான ‘வித்தியா விலாசினி’ அச்சகம் மூலம் வெளியிட்டும் உதவினார். இந்த இசைநூல் உருவாகி வெளியாகி கர்நாடக இசை அச்சேறியதற்கு எட்டயபுர மன்னரும் ஏ. எம். சின்னசாமி முதலியாரும் அளித்த பங்களிப்பு இன்றியமையாதது.  இருப்பினும் நூல் வெளியாவதற்கு முன்னரே ஏ. எம். சின்னசாமி முதலியார் மறைந்துவிட்டார். சுப்பராம தீட்சிதர் மேலும் சில இசைநூல்களை எழுதியதுடன் வில்லிபாரதத்திற்கும் இசையமைத்துள்ளார். மேலும் நூல் எழுதும் திட்டங்கள் அவரிடம்  இருந்தாலும் நிறைவேற்ற வழியின்றி  1906 ஆண்டு மறைந்துவிட்டார்.

எட்டயபுர அரண்மனையுடன் தனது வாழ்நாளில் தொடர்பு கொண்டிருந்த மகாகவி பாரதியார் இசையின் மீது பற்று மிகக் கொண்டவர். அவர் சுப்பராம தீட்சிதரின் இசைத்தொண்டை மிகவும் மதித்தவர். சுப்பராம தீட்சிதர் இறந்தபொழுது மனம் வருந்தி,

“மன்னரையும் பொய்ஞ்ஞான மதக்குரவர்

                தங்களையும் வணங்கலாதேன்

தன்னனைய புகழுடையாய், நினைக்கண்ட

                பொழுதுதலை தாழ்ந்து  வந்தேன்;

உன்னருமைச் சொற்களையே தெய்விகமாம்

                எனக் கருதி வந்தேன், அந்தோ

இன்னமொரு காலிளசைக் கேகிடின், இவ்

                எளியன்மனம் என்படாதோ?”

யாருக்கும் தலைவணங்கியிராத எனது  தலைதாழ்த்திய வணக்கம் என பாரதியார் 26 நவம்பர் 1906  அன்று திரு. சுப்பராம தீட்சிதர் அவர்களின் மறைவுக்கு வருந்தி  இரங்கற்பா வரைந்துள்ளார்.

பின்னர் தமிழிலும் ஆங்கிலத்திலும்,  72 மேளகர்த்தா இராகங்களை உள்ளடக்கிய  இந்த நூல் ஐந்து பாகங்கள் கொண்ட நூல் வரிசையாகப் பதிப்பு கண்டது.  சங்கீத கலாநிதி டாக்டர் எஸ். இராமநாதன் அவர்களும் வித்வான் பி. ராஜம் ஐயர் அவர்களும் இந்த இசைநூலைத் தமிழ் எழுத்துப் பதிப்பு செய்து, அதைச் சென்னை மியூசிக் அகாடமி 1961 ஆம் ஆண்டு  வெளியீடு செய்தது. மறுபதிப்பு மீண்டும் 2006 ல் வெளியிடப்பட்டது.  தெலுங்கில் எழுதி சுமார் 100 ஆண்டுகளுக்குப் பிறகு கர்நாடக  இசையின் கருவூலமாகக் கருதப்படும் இந்த நூலைச் சென்னை மியூசிக் அகாடமி, ஆங்கில எழுத்துப் பதிப்பில், 2011  ஆம் ஆண்டு நோபல்பரிசு  பரிசு பெற்ற  வெங்கட்டராமன் ராமகிருஷ்ணன் தலைமையில் வெளியிட்டது.

தகவல் தந்து உதவியவை:

[1] The Music Academy, Madras -

https://musicacademymadras.in/publications/other-publications

[2] Sangita Sampradaya Pradarshini -

http://ibiblio.org/guruguha/ssp_cakram1-4.pdf

[3] Sangita Sampradaya Pradarsini in English

http://www.thehindu.com/news/cities/chennai/Sangita-Sampradaya-Pradarsini-in-English/article15411845.ece

[4] Subbarama Dikshitar -

https://en.wikipedia.org/wiki/Subbarama_Dikshitar

[5] Subbarama Diksitar’s Sangita Sampradaya Pradarshini, Dr. P. P. Narayanaswami -

https://archive.org/details/AENarayanaswamiPPSubbaramaDikshitarSangitaSampradayaPradarsini0288

[6] பாரதியார் யாத்த  இரங்கற்பா -

http://ibiblio.org/guruguha/sd_bharati.pdf


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “இசையறிஞர் சுப்பராம தீட்சிதர்”

அதிகம் படித்தது