மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

இராமநாதபுரம் மாவட்ட இலக்கிய ஆளுமைகள் – பாகம்-1

முனைவர் மு.பழனியப்பன்

May 16, 2020

siragu ramanathapuram1

சேதுபதிகள் காலத்தில் வாழ்ந்த இலக்கிய ஆளுமைகள்

இராமநாதபுர மாவட்டப் பகுதிகளை ஆண்ட சேதுபதி அரசர்கள் தமிழும், தெய்வீகமும் வளரப் பாடுபட்டவர்கள் ஆவர். இவர்கள் அரசவையில் தமிழ்ப்புலவர்களுக்கு தக்க இடம் அளித்தனர். பல சிற்றிலக்கியங்கள் இவர்கள் காலத்தில் எழுதப்பெற்றன.

இராமநாதபுர தமிழ் இலக்கிய காலத்தின் வளமான காலம் இக்காலம் ஆகும்.

புராணங்கள், காப்பியம், மான்மியம்

வீரை ஆசுகவி

அரிச்சந்திர புராணம் என்பதை எழுதியவர் வீரை ஆசுகவி ஆவார். இவரின் ஊர் நல்லூர் வீரை ஆகும். இவ்வூர் குலோத்துங்க சோழ நல்லூர் என்றும் குறிக்கப் படுகிறது. காப்பியத்திற்கு நிகரான அளவில் அரிச்சந்திர புராணத்தை இவர் செய்துள்ளார். இப்புராணம் திருப்புல்லாணி திருக்கோயிலில் அரங்கேற்றம் செய்யப்பெற்றுள்ளது.

உமறுப்புலவர்

எட்டய புரத்தில் பிறந்த உமறுப்புவலர் சீறாப் புராணம் எழுதியவர். இவரை கீழக்கரை சார்ந்த வள்ளல் சீதக்காதி என்பவர் கொடையளித்துக் காத்தார். இசுலாமியப் பெருங்காப்பியம் இதனால் எழுந்தது.

திருவாடானை புராணம் என்பதனை திருவாரூரைச் சார்ந்த சாமிநாத தேசிகர் என்பவர் செய்துள்ளார். திருவாடானை மான்மியம் என்ற நூலும் சிற்றம்பல தேசிகர் என்பரால் இயற்றப்பெற்றுள்ளது.

இவ்வாறு பெரும் படைப்புகள் பலவும் இராமநாதபுர இலக்கிய ஆளுமைகளால் செய்யப்பெற்றுள்ன.

கயாகர நிகண்டு

காயாகரர் என்பவர் இயற்றிய நிகண்டு கயாகர நிகண்டு ஆகும். இவர் இராமேசுவரம் சார்ந்தவர். இவர் இராமீசர் கோவையும் பாடியுள்ளார். இவர் இயற்றிய நிகண்டு பல நிகண்டு நூல்களினால் மேற்கோளாகக் காட்டப்பெற்றுள்ளது.

சிற்றிலக்கியங்கள் பாடிய கவிஞர்கள்

கவி குஞ்சர பாரதியார்.

கீர்த்தனை என்ற இலக்கிய வடிவத்திலும் புகழ் பெற்ற படைப்பாளர்கள் இராமநாதபுர மாவட்டப் பகுதிகளில் வாழ்ந்துள்ளனர். இம்மாவட்டத்தின் பெருங்கரை என்னும் ஊரைச்சார்ந்த, கவிக்குஞ்சர பாரதி சிறந்த கீர்த்தனைப் படைப்பாளர் ஆவார். இவர் பல கீர்த்தனைகளைப் பாடியுள்ளார். மேலும் சிவகங்கை சமஸ்தானப் புலவராகவும் விளங்கினார். இவர் எழுதிய அழகர் குறவஞ்சி நாடகப் பாங்குடையது. இவர் கந்தபுராணக் கீர்த்தனைகள், மதுரை மீனாட்சி அம்மன் மீது அடைக்கலமாலை, மதுரை மீனாட்சி அம்மன் மீது கயற்கணிமாலை, திருமுக விலாசம், திருப்பதி வேங்கடாசலபாதி மீது திருவேங்கடமாலை, பேரின்பக் கீர்த்தனைகள் போன்றவற்றை இயற்றியுள்ளார். இவருக்கு பெருங்கரை என்ற ஊர் சேதுபதி மரபினரால் வழங்கப்பெற்றுள்ளது.

பகழிக் கூத்தர்

பகழிக் கூத்தர் என்பவர் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள போகலூர் (சன்னாசி) என்னும் சிற்றூரில் தர்பாதனர் என்பவரின் புதல்வராகப் பிறந்தார். இந்தப் போகலூர் மையமாக வைக்கப்பெற்று சேதுபதி அரசு உதயமானது. இது முன்பு புகலூர் என வழங்கப்பெற்றது. போகலூரில் உள்ள அய்யனார் பெயர் பகழிக் கூத்த அய்யனார் என்பதாகும். அவரின் நினைவப் போற்றி இப்புலவருக்கு இப்பெயர் வைக்கப்பட்டுள்ளது. இவர் திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ் என்பதனைப் பாடினார். இவருக்கு முருகனே நேரில் வந்து பதக்கம் அணிவித்ததாக கூறப்படுகிறது. இவர் சீவக சிந்தாமணிச் சுருக்கம் பாடியவர் ஆவார்.

siragu pulavar1சவ்வாதுப் புலவர்

சவ்வாதுப் புலவர் பதினெட்டாம் நூற்றாண்டைச் சார்ந்த ஒரு இசுலாமியத் தமிழ்ப் புலவர் ஆவார். இவர் எமனேஸ்வரம் என்ற ஊரினர். இவர் பல வள்ளல்களைப் பாடியுள்ளார். வண்டமிழின் எண்ணோ, எழுத்தோ, இசையோ, இயல்புலவர் கண்ணோ, சவ்வாதுக் கவி என்ற பாராட்டு மொழிக்கு இவர் பொருத்தமாக அமைந்தார். இவர் சொல்வன்மை மிக்கவர். ‘‘நாகைக் கலம்பகம், மதீனத்தந்தாதி, முகைதீன் ஆண்டவர் பிள்ளைத்தமிழ்போன்றன இவர் எழுதியனவாகும். இவருக்கு சுவாத்தான் வண்ண வயல் என்ற பகுதி சேதுபதி மன்னரால் கொடையாக வழங்கப் பெற்றது. இவர் ராஜராஜேஸ்வரி பஞ்சரத்தனம் பாடியவரும் ஆவார். இராமநாதபுரம் மாவட்டம் மேலக்கொடுமலூர் குமரக்கடவுள் என்ற சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு ஜவாது புலவர் பல பதிகங்களைப் பாடியுள்ளார். மேலும் புலவரை கவுரவப்படுத்தும் விதமாக, கோயிலின் விமானத்தில் அவரது சிலையை சுதையில் அமைத்து பெருமைபடுத்தியுள்ளனர்.

சர்க்கரைப் புலவர்கள்

சவ்வாதுப் புலவரின் உறவினாராக விளங்கியவர் இவர். இவரின் ஊர் மேலச்செல்வனுர் என்பதாகும். இவர் சித்திரக்கவிகள் பாடுவதில் வல்லவர். இவர் மருதுபாண்டியருடன் பழகியவர். இவரின் மகனது திறமை அறிந்து மருதுபாண்டியர்கள் சின்ன சர்க்கரைப் புலவராக அவரை வளர்த்தனர். பெரிய சர்க்கரைப் புலவர் தந்தையாகவும், சின்ன சர்க்கரைப் புலவர் மகனாகவும் இலக்கிய உலகம் அடையாளம் கண்டது. பெரிய சர்க்கரைப்புலவர் திருச்செந்தில் கோவை என்பதைப் பாடினார். இவரின் கவி வல்லமைக்கு உளக்குடி கிராமம் கோடாகுடி, கொந்தலான் வயல் போன்ற சேதுபதி அரசர்களால் வழங்கப்பெற்றன. இவர் வேதாந் சூடாமணி என்பதற்கு சிந்தாந்த உரை எழுதியுள்ளார்.

சின்ன சர்க்க்கைப் புலவர் மிழலைச் சதகம், வண்டு வனப் பெருமாள் ஊசல், திருவாடானை சித்திரக்கவி மஞ்சரி போன்ற நூல்களை எழுதியுள்ளார்.

சீனிப்புலவர்

சீனிப்புலவர்  எழுதிய நூல் திருச்செந்தூர் பரணி என்பதாகும். இவர் துறைசைக் கலம்பகம் என்ற நூலையும் எழுதியுள்ளார்.

சருக்கரை அருணாசலப் புலவர்

மீமிசல் அருகில் உள்ள பொன்பற்றி என்ற ஊரில் கோயில் கொண்டிருக்கும் செல்லியம்மன் பற்றிய ஊசல் ஒன்றை இவர் எழுதியுள்ளார்.

சருக்கரை முத்துக்கருப்பப் புலவர்

சருக்கரை முத்துக்கருப்பப் புலவர் என்பவர் எழுதியது வைரவக் கடவுள் பதிகம் என்பதாகும்.

அமுத கவிராயர்

இவர் சேதுபதி மேல் நாணிக் கண் புதைத்தல் என்ற துறை சார்ந்து நானூறு பாடல்களை ஒருதுறைக் கோவையாகப் பாடியுள்ளார். இதற்காக திருமலை சேதுபதி அரசர் இவருக்கு பொன்னான் கால் என்ற கிராமத்தைக் கொடையாகத் தந்துள்ளார்.

அனந்த கவிராயர்

இவரும் சேதுபதி அரசர்களால் போற்றிப் பாதுக்காக்கப்பெற்றுள்ளார். இவருக்குக் கலையூர், மானூர் போன்ற ஊர்கள் சேதுபதி மன்னரால் அளிக்கப்பெற்றுள்ளன.

பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் 

பலபட்டடை சொக்கநாதப் புலவர் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். ”தேவை உலா” முதலான நூல்களைப் பாடியவர். தேவை நகர் என்பது இராமேசுவரத்திற்கு உள்ள மற்றொரு பெயர் ஆகும். இவர் தெய்வக்கன்னி என்பவருக்காக விஞ்ஞைக் கோவை ஒன்றைப் பாடிய்ளாளர். தனிப்பாடல் திரட்டு நூலில் இவரது அறுபதுக்கும் மேற்பட்ட தனிப்பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

வெண்பாப்புலிக் கவிராயர்

இவர் வெண்பா இயற்றுவதிலும், வசை பாடுவதிலும் சிறந்தவர். இவர் இராமநாதபுர மாவட்டம் செவ்வூர் சார்ந்தவர் ஆவார்.

மதுரகவி

இவர் சேதுபதி மன்னர்களையம், மங்களேசுவரி அரசியையும், மருது பாண்டியர்களையும் பற்றிப் பல இசைப்பாடல்கள் பாடியுள்ளார். காக்கைகுளம் என்ற ஊரை இவருக்கு சேதுபதி பரம்பரையினர் வழங்கினர்.

முத்துக்குட்டிப் புலவர்

இராமநாதபுர மாவட்டம் பரத்தை வயல் என்னும் ஊரில் பிறந்தவர் முத்துக்குட்டிப் புலவர். இவர் மிகுந்த கடவுள் பக்தி மிக்கவர். இவர் திருக்கோட்டியூர் சென்றபோது பெருமாளே இவரின் பசியை ஆற்றிட உணவு கொண்டுவந்தார் என்ற கருத்தும் உண்டு. இவர் பல வள்ளல்கள் மீதும், மக்கள் மீதும் பாடல்கள் பாடியுள்ளார். அவை கிடைக்கவில்லை.

தலைமலை கண்ட தேவர்

தலைமலை கண்ட தேவர் என்பவரின் பிறந்த ஊர் காடடர்ந்தகுடி என்பதாகும். இவர் பிறவிக் குருடர். இருப்பினும் தமிழ் நன்கு கற்றவர்.

திருடுதல் தொழிலைக் கடமையாகக் கொண்டு வாழ்ந்த குலத்தில் பிறந்த இவர் அதனை வெறுத்தார். ஆனால் அத்தொழில் அன்றி வேறுதொழில் செய்ய இயலாதவராகி இவர் அத்தொழிலுக்குக் கொலை செய்யாமல் களவு செய்வோம் என்று சென்றார்.

திருபுவனத்தில் ஒரு செல்வந்தர் வீட்டில் குழுவாக இவர் திருடச்சென்றனர். அச்செல்வந்தர் நாளும் ஒரு பாடல் எழுதும் பழக்கமுடையவர். அன்று சிவபெருமான் மீது இரண்டடி மட்டுமே வர மற்ற இரண்டடிகள் வரவில்லை. இந்நிலையில் இத்திருடர் குழு உள் நுழைய பாத்திரங்கள் உருட்டும் சத்தம் கேட்டுக் கள்வர்கள் பிடிபட்டனர். அப்போதும் செல்வந்தர் கவலை கொள்ளாது இரண்டடிப் பாடல் முடியவில்லை என்று திரும்பத் திரும்பச் சொல்ல இவர் அதனை முடித்தார். இதனைக் கேட் வியந்த செல்வர் இவருக்கே தன் செல்வம் முழுவதும் என்று சொல்லித் தந்து உதவினார்.

மேலும் இருவரும் சேர்ந்து பல பாடல்களைப் பாடினர். இவர் ‘மருதூர் யமக அந்தாதி’ என்ற நூலைப் பாடினார்.

சோமசுந்தர குரு

இவர் இராமநாதபுரத்தைச் சார்ந்தவர். இவரின் தம்பி சாமிநாதன் என்பவர் வேதாந்த சூடாமணிக்கு உரை செய்துள்ளார். இவர் சரவணப்பெருமாள் கவிராயர், சரவணப் பெருமாளையர் போன்றோரின் குருவாக விளங்கியவர். இவர் திருக்கழுக்குன்றக் கோவை பாடியவர் ஆவார்.

சரவணப் பெருமாள் கவிராயர்

இராமநாதபுர மாவட்டம் முதுகுளத்தூர் பெரும் கவிராயர்கள் வாழ்ந்த பகுதியாக உள்ளது. தாத்தா பெரிய சரவணப் பெருமாள் கவிராயர் என்பவரும்  பேரர் சிறியப் பெருமாள் கவிராயர் என்பவரும் பல இலக்கியப் பணிகளைச் செய்துள்ளனர். தாத்தா சரவணப் பெருமாள் கவிராயர் அட்டாவதானியாகவும் விளங்கியுள்ளர். இவர் திருவாடானையை மையமிட்டு விறலி விடு தூது என்பதை எழுதியுள்ளார்.

அட்டாவதானம் சரவணப் பெருமாள் கவிராயர் இரமேசுவரம் இராமலிங்கர் பண விடு தூது, அசுவமேதயாக புரணாம், விநாயகர் திருமுகவிலாசம், முத்தளகு சாமி தூது, அம்மை நாதன் வண்ணம், ஆப்பனூர் குறவஞ்சி போன்ற நூல்களை இவர் படைத்தளித்துள்ளார்.

சின்ன சரவணப் பெருமாள் கவிராயர் குன்றைச் சிலேடை வெண்பா, திருச்சுழியல் அந்தாதி, மதுரை யமக அந்தாதி போன்றனவற்றைப் பாடியுள்ளார்.

இராமநுசக் கவிராயர்

இராமநுசக் கவிராயர் இராமநாதபுரத்தைச் சார்ந்தவர். இவர் வட மொழி , தமிழ், ஆங்கிலம் போன்ற பல மொழிகள் கற்றவர். இவர் போப், ட்ரு, வின்ஸ்லோ போன்ற வெளிநாட்டவருக்குத் தமிழ்க் கற்றுத்தந்தவர். திருக்குறளை மொழி பெயர்த்த போப் இவரின் தமிழ்ப்புலமை பற்றித் தன் திருக்குறள் நூலில் வியந்து பாராட்டியுள்ளார். இவர் சென்னைக் பல்கலைக்கழக லெக்சிகன் உருவாக்கும் பணியில் முன்னின்றவர். இவரால் வின்ஸ்லோ அகராதி உருவானது. பாடத்திட்டக்குழுவிலும் இருந்து முதன் முதலாக அதனை நிறைவேற்றியவர். இவர் பரி மேல் அழகர் உரையை முதன் முதலில் பதிப்பித்தவர் ஆவார்.

மழவராயனேந்தல் மகாலிங்கையர்

மகாலிங்கையர் என்பவர் தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நச்சர் உரையை முதல் முதலாகப் பதிப்பித்தவர் ஆவார்.

மு. இராகவையங்கார்

மு. இராகவையங்கார், இரா. இராகவையங்கார் இருவரம் உறவினர் மட்டும் அல்லாது தமிழுக்கும் தொண்டாற்ற்றியவர்கள். இவர்களுள் மு. இராவையங்கார் இராமநாதபுரத்தைச் சார்ந்தவர். இவர்பாண்டித் துரைத் தேவரால் ஆதரிக்கப்பெற்றவர். செந்தமிழ்க்கல்லூரியில் ஆசிரியராகப் பணிபுரிந்த இவர் செந்தமிழ் இதழின் துணையாசிரியராகவும், பின்னாளில் ஆசிரியராகவும் விளங்கியவர். லயோலா கீழ்த்திகைக் கல்லூரி தொடங்கப்பெற்ற போது இவர் அங்குப் பணியாற்றச் சென்றார். சென்னைப் பல்கலைக்கழக பேராகராதிப் பணியில் முன்னிற்றவர். இவர் எழுதிய நூல்கள் தொல்காப்பிய பொருளதிகார ஆராய்ச்சி, சேரன் செங்குட்டுவன், தமிழரும் ஆந்திரரும், ஆழ்வார்கள் காலநிலை, சாசனத் தமிழ்க்கவி சரிதம், ஆராய்ச்சித் தொகுதி, திருவிடெந்தை எம்பெருமான், சேர வேந்தர் செய்யுட் கோவை (முதல் தொகுதி), செந்தமிழ் வளர்த்த தேவர்கள், Some Aspects of Kerala and Tamil Literature – 2 volumes, இலக்கியக் கட்டுரைகள், சேர வேந்தர் செய்யுட் கோவை (இரண்டாம் தொகுதி), வினைதிரிபு விளக்கம், கட்டுரை மணிகள், தெய்வப் புலவர் கம்பர், இலக்கிய சாசன வழக்காறுகள்ஈ நூற்பொருட் குறிப்பகராதி, நிகண்டகராதி என்பனவாகும். இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கம்பராமாயண உரை வரையும் குழுவில் இடம்பெற்று சில காண்டங்களுக்கு உரை வரைந்துள்ளார்.

கார்மேகக் கோனார்

கார்மேகக் கோனார் ஆயிரத்து எண்ணூற்று எண்பத்தொன்பதாம்ஆண்டில் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அகத்தாரிருப்பு என்னும் சிற்றூரில் பிறந்தவர். இவர் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றினார். இவர், சென்னைப் பல்கலைக் கழகப் பாடத்திட்டக் குழுவில் தொடர்ந்து இருபத்தோரு ஆண்டுகள் தலைவராக இருந்தார். இவர் செந்நாப்புலவர் என்ற பட்டத்தை பெற்றவர்.

இவர் அறிவு நூல் திரட்டு (2 தொகுதிகள் – உரைநூல்), ஆபுத்திரன் அல்லது புண்ணியராஜன் (உரைநூல்), இதிகாசக் கதாவாசகம் (2 தொகுதிகள்), ஐங்குறு நூற்றுச் சொற்பொழிவுகள், ஒட்டக்கூத்தர், கண்ணகி தேவி, காப்பியக் கதைகள், கார்மேகக் கோனார் கட்டுரைகள், கார்மேகக் கோனார் கவிதைகள், செந்தமிழ் இலக்கியத்திரட்டு , பாலபோத இலக்கணம், மதுரைக் காஞ்சி, மலைபடுகடாம் ஆராய்ச்சி, மூவருலா ஆராய்ச்சி

தமிழ்ச்சங்க வரலாறு (கட்டுரை), தமிழ்மொழியின் மறுமலர்ச்சி, நல்லிசைப் புலவர்கள் (உரைநூல்)ஆகியனவாகும்.

ஆர். கேசவ ஐயங்கார்

ஆர். கேசவ ஐயங்கார் என்பவர் இராமநாதபுர மாவட்டம் சார்ந்தவர்.இவர் சமஸ்கிருதம் தமிழ், ஆங்கிலம் போன்ற மொழிகளில் அறிஞராகத் திகழ்ந்தார். பார்த்தசாரதிமாலை, திருப்பதிகைமாலை,ஆண்டாள்மாலை போன்ற நூல்கள் இவர் இயற்றியவை ஆகும். இவர் ”வள்ளுவர் உள்ளம்” அடியவர்க்கு மெய்யன் அருள் என்ற நூல்களையும் எழுதியுள்ளார்.

வேறு மாவட்டப்பகுதிகளில் பிறந்து  இராமநாதபுர மாவட்டத்தை இலக்கிய வளம் மிக்கதாக ஆக்கிய ஆளுமைகள்

மாம்பழக்கவிச்சிங்க நாவலர் 

மாம்பழக் கவிச்சிங்க நாவலர் என்பவர் பார்வை இழந்த புலவர். இவரின் ஊர் பழனி என்றாலும் இராமநாதபுர முத்துராமலிங்க சேதுபதி இவரை ஆதரித்தார். இவர் சேதுபதி மீது வண்ணம் பாடியவர். இவர் ஏக சந்த கிரகி. பல பாடல்களைப் பாடியுள்ளார்.

வேம்பத்தூர் பிச்சுவையர் 

வேம்பத்தூர் பிச்சுவையர் இராமநாதபுரம் பாஸ்கர சேதுபதி மன்னரின் (1889–1892) அரசவையில் ஆஸ்தானப் புலவராய் இருந்தவர். இவர் “சிலேடைப் புலி” பிச்சுவையர் எனவும் அழைக்கப்பட்டார். இவர் சௌந்தரிய லஹரியை தமிழாக்கம் செய்த வேம்பத்தூர் வீரை கவிராஜ பண்டிதர் (இவர் வீரசோழன் என்ற விருதுநகர் மாவட்டப் பகதியைச் சார்ந்தவர்) பரம்பரையில் பிறந்தவர். இவரின் தந்தை “சாம ஆண்டி ஐயர்” எனும் புலவர் ஆவார். இவர் ஜெயசிந்தாமணி விநாயகர் பதிகம், திருப்பரங்குன்ற முருகன் மேற்பாடிய சிந்து, தடுத்தாள்மாலை (முத்து கண்ணாற்றுச் சிவன் பேரில் பாடியது )., ராஜராஜேஸ்வரி பதிகம்., ரியநாயகியம்மை பதிகம் மதுரை நீரோட்ட யமகவந்தாதி, பொன்மாரிச் சிலேடை வெண்பா மாலை, வல்லைக் கும்மி , உமையாண்டாள் கும்மி, ஸ்ரீ சிருங்கேரி ஆச்சாரியார் பதிகம், அரிமளம் சிவானந்த ஸ்வாமிகள் பதிகம் போன்றவற்றைப் பாடியுள்ளார்.

அழகிய சிற்றம்பலக் கவிராயர்.

மிதிலைப்பட்டி சார்ந்த அழகிய சிற்றம்பலக் கவிராயரும் இராமநாதபுர சேதுபதிகளால் பாராட்டப்பெற்றுள்ளார். இவர் சேதுபதிகள் குறித்துப் பாடிய தளசிங்க மாலை சேதுபதிகளின் கோயில்பணிகளை எடுத்துரைக்கின்றது. இவருக்கு இராமநாத மடை என்ற ஊரை திருமலை சேதுபதி வழங்கியுள்ளார்.

படிக்காசுப் புலவர்

தண்டலையார் சதகம் போன்றன எழுதிய படிக்காசு புலவர் சிலகாலம் சேதுபதி மன்னர்களின் புரத்தலில் இருந்துள்ளார்.

கல்போது பிச்சுவையர்

கல்போது பிச்சுவையர் என்பவர் திருவாடானை அந்தாதியைப் பாடியவர்.

இரா. இராகவையங்கார்

சேது சமஸ்தானத்தின் மகாவித்துவான், சேதுபதிகளின் அரசவைப் புலவர், பாசா கவிசேகரர் இரா. இராகவையங்கார் (1870-2011) சிறந்த நூலாசிரியர், உரையாசிரியர், போதகாசிரியர், பத்திராசிரியர், ஆராய்ச்சியாளர், சொற்பொழிவாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர், சமயநூலறிஞர். மொழிநூலறிஞர் என பன்முகம் கொண்டவர் ஆவார்.

இவர் சிவகங்கை நகருக்கு அருகில் உள்ள தென்னவராயன் புதுக்கோட்டையில்  பிறந்தார். இவரின் தந்தை இவரின் ஐந்தாம் வயதில் இறந்து போக, இவர் இராமநாதபுர சேதுபதி அரசவைப் புலவராக இருந்த முத்துசாமி ஐயங்காரின் பாதுகாப்பில் வளர்ந்தார். இம்முத்துசாமி ஐயங்காரின் புதல்வர் மு. இராகவையங்கார் ஆவார். எனவே தமிழ் இலக்கிய உலகில் இரு இராகவையங்கார்கள் அமையத் தொடங்கினர்.

இவர் வடமொழி, தென் மொழி இரண்டிலும் சிறந்து விளங்கினார். இவர் சேதுபதி பள்ளியில் தமிழாசிரியராகப் பணியில் இணைந்தார். பின்பு, திருச்சிராப்பள்ளி, கும்பகோணம் போன்ற இடங்களில் இவர் ஆசிரியராகப் பணியாற்றினார். உ.வே.சாமிநாதரின் நட்பு இவருக்குக் கும்பகோணத்தில் கிடைத்தது.

இதன்பின் சேதுசமஸ்தான் அரசவைப் புலவராக இவரை இருக்க பாஸ்கர சேதுபதி அழைத்தார். அவ்வகையில் மீளவும் இவர் இராமநாதபுரம் வந்து சேர்ந்தார். இவருக்கு உரிய வசதிகள், வரிசைகள் போன்றன சமஸ்தானத்தால் செய்து தரப்பெற்றது.

இதன் காரணமாக இவர் மூன்றுதலைமுறை சேதுபதி அரசர்களின் சபையில் முன்னிலை பெற்றார். பாசுகரசேதுபதி, முத்துராமலிங்க ராசராசேசுவர சேதுபதி, சண்முக ராசேசுவர சேதுபதி என்னும் முத்தலைமுறையினர் அவையிலும் இவருக்குச் சிறப்பிடம் தரப்பெற்றது.

இவர் அரசவைப் புலவராக இருந்த காலத்தில்தான் விவேகானந்தர் இப்பகுதிக்கு வருகிறார். இதன் வழி அவரை வரவேற்க, அவரை சிகாகோ மாநாட்டிற்கு அனுப்ப இவரின் வழிகாட்டலும் முக்கியமானதாக அமைந்தது.

இதன்பின் நான்காம் தமிழ்ச்சங்கத்தின் புலவராக இவர் பாண்டித் துரைத் தேவரால் அமைக்கப்பெற்றார். இச்சங்கத்தின் சார்பில் வெளிவரும்செந்தமிழ் இதழின் ஆசிரியராகவம் இவர் அமைந்தார். இவரின் உறவினரான மு. இராகவையங்கார் இவருக்குப் பின் செந்தமிழ் இதழின் ஆசிரியராக விளங்கினார்.

1906 ஆம் ஆண்டு, இரா. இராகவையங்கார் தான் வகித்து வந்த செந்தமிழ் இதழின் ஆசிரியப் பொறுப்பை தன் மாமா மகனான மு. இராகவையங்காரிடம் ஒப்படைத்தார். அங்கிருந்து தேவகோட்டைக்குச் சென்று, மெ. அரு. இராமநாதன் செட்டியார் என்பவரின் ஆதரவில் சிலகாலம் தங்கியிருந்தார். 1910ஆம் ஆண்டில் மீண்டும் இராமநாதபுரத்திற்குத் திரும்பி, இராசராசேசுவர சேதுபதியின் அவையில் அரசவைப் புலவராக இருந்தார்.

இதன்பிறகு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் தமிழராய்ச்சித் துறைக்கு முதன்மை ஆராய்ச்சியாளராக அமைக்கப்பெற்றார்.

இக்காலத்தில் மேலைச்சிவபுரி சன்மார்க்கச் சங்கத்தின் ஆண்டு விழாவிற்குத் தலைமையேற்ற உ. வே. சாமிநாதய்யர், மகாவித்துவான் என்னும் பட்டத்தை இரா. இராகவையங்காருக்கு வழங்கினார். வடமொழியில் இவருக்கு உள்ள புலமையைப் பாராட்ட விரும்பிய சமசுகிருத சமிதி இவருக்கு பாசாகவிசேகரர் என்னும் பட்டத்தை வழங்கியது.

அண்ணாமலைப்பல்கலைக்கழகப் பணிக்குப் பிறகு இராமநாதபுரம் வந்து தங்கித் தன்னை நாடி வந்தோருக்குத் தமிழ் சொல்லித்தந்தார். இவ்வகையில் இவரின் வாழ்க்கை நிறைவு பெற்றது.

இவர் வஞ்சிமாநகர், சேதுநாடும் தமிழும், புவி எழுபது, தொழிற்சிறப்பு, திருவடிமாலை, நல்லிசைப் புலமை மெல்லியர்கள், அண்டகோள மெய்ப்பொருள், நன்றியில் திரு, பாரிகாதை, அபிசஞான சாகுந்தலம், தமிழ் வரலாறு, தித்தன், கோசர், இராசராசேசுவரசேதுபதி ஒருதுறைக் கோவை, ஆத்திசூடி உரை, இனிய இலக்கியம், கம்பர், செந்தமிழ் இன்பம், தமிழக குறுநில வேந்தர்கள் போன்ற நூல்களை எழுதியுள்ளார். இவர் பல நூல்களைப் பதிப்பித்தும் உள்ளார்.

மற்ற ஆக்கங்கள்

சேதுபதி மன்னர்கள் காலத்தில் அவர்களின் அவைக்களத்தில் இருந்த புலவர்கள் தமிழ் இலக்கியங்களைப் படைத்தனர். இவை தவிர ஆங்காங்கே பல இலக்கியங்கள் தோன்றியுள்ளன. திருப்புல்லாணி கோயில் குறித்து புல்லை அந்தாதி, திருப்புல்லாணி மாலை, தெய்வச்சிலையான் துதி, வாகனமாலை, தெய்வச்சிலையான் வண்ண விருத்தம், புல்லாணிப் பெருமான் கதவு திறத்தல் பாட்டு, புல்லாணிப் பெருமான் நலங்கு, அசுவத்த விருக்ஷப்பாட்டு, திருப்புல்லாணி நொண்டி நாடகம் போன்ற பிற நூல்கள் இத்தலத்தின் பெருமைகளைப் போற்றுகின்றன. ஆசுகவி கிடாம்பி கோவிந்த அய்யங்கார் ஸ்ரீ ஜகன்னாத சுப்ரபாதம், ஸ்துதி, ப்ரபத்தி, மங்களம் ஆகியவற்றை திருப்புல்லாணி எம்பெருமான் மீது இயற்றியுள்ளார்.

பரமக்குடிக்கு அருகில் உள்ள நயினார் கோயில் என்ற கோயிலை முன்வைத்து நயினார்கோயில் பதிகம், நயினார்கோயில் வழிநடைச்சிந்து போன்றன இயற்றப்பெற்றுள்ளன.

-தொடரும்


முனைவர் மு.பழனியப்பன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “இராமநாதபுரம் மாவட்ட இலக்கிய ஆளுமைகள் – பாகம்-1”

அதிகம் படித்தது