மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

இராவணன் தமிழ் கற்கும் அழகு – புலவர் குழந்தையின் இராவண காவியம்

வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

Sep 19, 2020

siragu-raavana-kaaviyam1
இலங்கைக் காண்டம் இராவணப் படலத்தில் புலவர் குழந்தை இராவணன் குழந்தையாக இருக்கும்போது அவன் தமிழ் கற்ற அழகினை மிகத் தெளிவாக தன் பாடல்கள் மூலம் விளக்குவார்.

இராவணனின் தந்தை விச்சிரவாவு, தாய் கேகசி என்பதை அறிவோம்.

ஈன்றவ ருவந்து மக்கட் கிராவணன் இவனா மென்ன
ஆன்றபே ரிட்டு நாளு மன்பொடு நலம்பா ராட்டி
ஈன்றஞான் றினுமப் பெற்றோர் இனிதுவந் திடவே யான்ற
சான்றாவ னாக்க வெண்ணித் தாய்மொழி பயிற்று வித்தார்.

இந்தப்பாடலில், பெற்றோர்கள் மனம் மகிழ்ந்து பேருரிமையுடையவன் என்ற பொருளிலும், பிறருக்கு வாய்க்காத அழகன் என்ற பொருளிலும் அமைந்த இராவணன் என்ற பெயரை அவனுக்கு இட்டு  மகிழ்ந்தனர் என்று புலவர் குழந்தை எழுதிவிட்டு, அந்தக் குழந்தை தன் மழலை மொழியால் தமிழ் படிக்கும் அழகை,

தமிழென ஆசான் சொல்லத் ததும்பிய மழலை வாயால்
தமிழ்மொழி யென்னும் பின்னும் தமிழ்மொழி என்ன எந்தாய்
தமிழ்மொழி யெமது சொந்தத் தாய்மொழி யென்னும் பின்னும்
தமிழக மென்ன எங்கள் தாயகம் என்னு மாதோ.

தமிழ் என ஆசிரியர் கூற உடனே குழந்தை இராவணன் தன் மழலை மொழியால், தமிழ்மொழி என்றானாம். தமிழ்மொழி என்றால் என்ன என்றவுடன் தமிழ்மொழி என் தந்தையைப் போன்றது என்றும், தமிழ் மொழி எனது சொந்த தாய்மொழி என்றும், பின் தமிழ்நாடு என்றால் என்ன என்றவுடன் அது எங்கள் தாய்நாடு என்றும் குழந்தை இராவணன் குறிப்பிட்டான்.

அமிழ்துணும் எண்ணில் அன்னை அப்பவே தமிழுண் டேனிவ்
வமிழ்துவேண் டாம்போ வென்னு மமிழ்தது தமிழ்தா னென்ன
அமிழ்தமிழ் தமிழ்தா மன்னாய்!! ஆமது தமிழ்தா னென்னும்
தமிழ்தமிழ் தாக வுண்டு தமிழ்மகன் வளரு மாதோ;

பாலும் சோறும் தன் அன்னை உண்ணக் கொடுத்தபோது, குழந்தை இராவணன் நான் அப்போதே தமிழ் என்னும் அமிழ்தை உண்டுவிட்டேன், “எனக்கு இந்த உணவு வேண்டாம் போ” என்று குழந்தை கூறினான். தமிழ் தமிழ் என்று கூறும்போது அமிழ்து அமிழ்து என்று தானே ஒலிக்கும்? எனவே அந்த அமிழ்தை உண்டுவிட்டேன் என்றானாம். இப்படியாக, தமிழ் எனும் அமிழ்து மொழி கற்று குழந்தை இராவணன் வளர்ந்து வந்தான்.

அலகுறு மெண்ணோ டெண்மை யாமெழுத் தோடின் சொல்லும்
இலகுசெம் பொருளு மான வியற்றமிழ்க் கூறிய வாகிப்
பொலியிலக் கியமு மத்தைப் பொருந்திலக் கணமு மான
பலபல நன்னூ லாய்ந்து பழுனிய வறிவின் மிக்கான்.

எண்ணும் எழுத்தும், இயற்றமிழ் இலக்கியங்களும் -இலக்கணங்களும் எனப் பல நூல்களை ஆராய்ந்து பழுத்த அறிவினனாக இராவணன் விளங்கினான்.

அவனுடைய அறிவின் திறம் எதனோடு ஒத்திருந்தது என்று கூற வரும் புலவர் குழந்தை,

படர்தரு நந்தம் முன்னோர் பயின்றநற் பழக்க மான
நடைமுறை தன்னை யின்னும் நம்மருந் தெரியச் செய்தே
கடைமுறை போய மாதொல் காப்பியக் கடலை மாந்தி
மிடைதரு புலனீர் தாங்கி மெக்கெழு முகிலை யொத்தான்.

முன்னோர்கள் பயின்ற நற்பழக்கம் ஆகிய நடைமுறை உலகியலைத் தலைமுறைகள் தெரிந்து கொள்ளும் விதமாக விளங்கும் தொல்காப்பியம் எனும் கடலை பருகி, நிறைந்துள்ள நீரைச் சுமந்து நிற்கும் கருமேகங்கள் போல அறிவு நீர் சுமந்து இராவணன் விளங்கினான்.

இவ்வாறு இராவணன் தமிழ் கற்ற முறையைப் புலவர் குழந்தை விளக்குகின்றார்.


வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “இராவணன் தமிழ் கற்கும் அழகு – புலவர் குழந்தையின் இராவண காவியம்”

அதிகம் படித்தது