மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஈ.வெ.ரா. வின் கணிப்பில் “இனிவரும் உலகம்”

தேமொழி

Dec 25, 2021

siragu ini varum ulagam cover page

‘பொதுநலமோ தியாகமோ பெருமைக்குரியதல்ல. பொதுவாழ்க்கையில் கிடைக்கும் திருப்தி என்பதும் சுயநலம்தான்’ என்று பொதுவாழ்க்கையில் ஈடுபட்டுக் கொண்டே அதுகுறித்து வெளிப்படையாகக் கருத்துரைத்த ஈ.வெ.ரா. பெரியாரின் கருத்துகள் காலாவதியானவையா அல்லது காலம் கடந்து சிந்திக்கப் பட்டவையா என்று ஆராய்ந்து எடை போட உதவும் நூல்களுள் ஒன்று அவர் எழுதிய “இனிவரும் உலகம்” என்ற நூல். விற்பனையில் கலை கட்டிக்கொண்டிருந்த அவரது கழகத் தோழர்கள் கலைஞர் கருணாநிதி, அறிஞர் அண்ணா ஆகியோரின் திரை வசன நூல்களை அச்சிட்ட முறை போலத்தான் இந்த நூலின் அமைப்பும் அமைந்துள்ளது. ஈரோடு குடி அரசு பதிப்பகம் மூலம் 1961 ஆம் ஆண்டு ஆறாம் பதிப்பாக 15 காசுக்கு வெளியிடப்பட்ட இந்நூலின் படி ஒன்று தமிழ்நாடு அரசின் தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் நூலகச் சேமிப்பில் கிடைக்கிறது.

திராவிட இயக்கக் கூட்டம் தொடங்குவதற்கு முன்னரோ, அல்லது தொடர்வண்டி பேருந்து போன்றவற்றுக்குக் காத்திருக்கும் வேளையிலோ சற்றொப்ப பத்து மணித்துளிகளுக்குள் படித்து முடித்துவிடக் கூடிய ஒரு நீண்ட கட்டுரைதான் “இனிவரும் உலகம்” என்ற தலைப்பில் ஈ.வெ.ரா. எழுதிய அளவில் சிறிய நூல். திராவிட இயக்கப் பகுத்தறிவுக் கருத்துக்களைக் கொண்டு, ஒரு பொருண்மையின் கீழ் ஒருசிலக் கட்டுரைகளைத் தொகுத்துப் பதிப்பித்து, பலரைச் சென்றடையும் நோக்கில் வெளியிடப்பட்ட அக்காலத்து ஒரு பரப்புரை நூல் வடிவில் அமைந்துள்ள இந்த நூலில்நான்கு பக்க முன்னுரையும் உட்பட நூலின் மொத்தப் பக்கங்கள் 20, பக்கத்திற்கு சுமார் 115 சொற்களாக 2300 சொற்களில் அடங்கிவிடக்கூடிய ஒரு நெடிய கட்டுரையாக நூல் அமைந்துள்ளது. இன்றைய சமூகவலைத்தளப் பயனர்களுக்கு விளங்கும்படி சொல்ல வேண்டும் என்றால் ஒரு நிமிட வாசிப்பு கொண்டவையாக 10 பதிவுகளில் நீளும் ஒரு கட்டுரைதான் இனிவரும் உலகம் எப்படி இருக்கும் என்று பெரியார் கணித்த கணிப்பைத் தொகுக்கிறது.

உண்மையைச் சொல்லப்போனால், 19 ஆம் நூற்றாண்டில் பிறந்து 20 ஆம் நூற்றாண்டில் அவர் வாழ்ந்து முடித்த காலத்தில் இருந்த தொழில் நுட்பத்தை மீளாய்வு செய்தால் இவரால் எப்படி இவ்வாறு சிந்திக்க முடிந்தது என்று ஈ.வெ.ரா. வியக்கவைக்கிறார்.

எதிர்காலத்தில் தொலைத்தொடர்பு முறை எப்படி மாறும் அவர் கூறியவற்றில் சில கீழே:

    ▪️ போக்குவரவு எங்கும் ஆகாயவிமானமும் அதிவேக சாதனமுமாகவே இருக்கும்.

    ▪️ கம்பியில்லாத் தந்திச் சாதனம் ஒவ்வொருவர் சட்டைப் பையிலும் இருக்கும்.

    ▪️ ரேடியோ ஒவ்வொருவர் தொப்பியிலும் அமைக்கப்பட்டிருக்கும்.

    ▪️ உருவத்தைத் தந்தியில் அனுப்பும்படியான சாதனம் எங்கும் மலிந்து, ஆளுக்காள் உருவம் காட்டிப் பேசிக்கொள்ளத்தக்க சவுகரியம் ஏற்படும். (பக்கம்: 17)

கையில் உள்ள திறன்பேசி இல்லாமல் வாழத் தெரியாத நடைமுறையில் இன்று நாமிருக்கும் நிலையையும், அது தரும் வசதிகளையும், பொதுமுடக்கக் காலத்தில் இணையவழி கற்றல், கலந்துரையாடல் என்ற முறைக்கு நாம் மாறிவிட்ட நிலையையும் சரியாக 60 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் சொல்லிவிட்டார் என்பதைக் கணக்கில் கொண்டால் அவர் கணிப்புகள் ஐயத்திற்கு இடமின்றி காலத்தைக் கடந்தவைதான்.

மனித வாழ்க்கையில் அறிவியல் ஏற்படுத்தப் போகும் மாற்றங்களாக அவர் குறிப்பவை: நீண்ட மனித ஆயுள், சோதனைக்குழாய் கருத்தரிப்பு-குழந்தை, குறைந்த அளவு மக்கட் தொகை நோக்கில் உலகில் ஏற்படும் மாற்றம். இந்தியாவே அந்த மக்கட்தொகை நகர்வை எட்டிவிட்டது. இப்பொழுது இந்தியப் பெண்ணொருத்திக்கு இரு குழந்தைகள் மட்டுமே இருப்பதாக அண்மைய புள்ளிவிவரம் சொல்கிறது. அவர் சொற்களிலேயே கீழே அவர் கருத்து கொடுக்கப்படுகிறது.

    ▪️ மனிதனுடைய “ஆயுள் நூறு” ஆண்டு என்பது இரட்டிப்பு ஆனாலும் ஆகலாம். இன்னும் மேலே போனாலும் போகலாம்.

    ▪️ பிள்ளைப்பேறுக்கு ஆண்பெண் சேர்க்கை என்பதுகூட நீக்கப்படலாம். நல்ல திரேகத்துடனும், புத்தி நுட்பமும், அழகும் காத்திரமும் உள்ள பிரஜைகள் ஏற்படும்படியாகப் பொலிகாளைகள் போல் தெரிந்தெடுத்த மணி போன்ற பொலிமக்கள் வளர்க்கப்பட்டு அவர்களது வீரியத்தை ‘இன்செக்க்ஷன் மூலம் பெண்கள் கருப்பைகளுக்குள் செலுத்தி நல்ல குழந்தைகளைப் பிறக்கச் செய்யப்படும். ஆண் பெண் சேர்க்கைக்கும் குழந்தை பெறுவதற்கும் சம்பந்தமில்லாமல் செய்யப்பட்டுவிடும்.

    ▪️ மக்கள் பிறப்புக் கட்டுப்படுத்தப்பட்டு ஒரு அளவுக்குள் கொண்டுவந்துவிடக்கூடும்.(பக்கம்: 18)

சமூக நோக்கில் மக்களின் வேலை, அதன் தேவை, அதற்கான ஊதியம், கிரிப்டோ கரன்சி முறை பொருளாதாரம் அவை மனித வாழ்வில் ஏற்படுத்தக் கூடிய மாற்றங்கள், பெண்கள் வாழ்வில் அவை எத்தகைய முன்னேற்றத்தைக் கொண்டுவரலாம் என்று அவர் கணிப்பதை அடுத்ததாகக் காணலாம்.

    ▪️ ஏன் பிறக்கவேண்டும்? சகல சவுகரியங்களுமுள்ள இப்பரந்த உலகில் உணவுக்காக என்று ஒருவன் ஏன் பாடுபடவேண்டும்? ஏன் சாகவேண்டும்? என்கின்ற பிரச்சினைகள் சிந்தனைக்கு மயக்கமளித்து வந்து சிக்கலான பிரச்னைகளாக இருந்தவை இன்று தெளிவாக்கப்பட்டுப் பரிகாரம் தேடப்பட்டும் வருகிற காலம் நடக்கிறது. இந்தப் போக்குச் சீக்கிரத்தில் மக்களின் பொதுவாழ்விலேயே பெரியதொரு புரட்சியை உண்டாக்கும்படியான புதிய உலகத்தை உண்டாக்கித்தான் தீரும். அப்போதுதான் நான் முன் சொன்ன பணம், காசு என்ற உலோக நாணயமே இருக்காது. அரச ஆட்சி இருக்காது. கடினமான உழைப்பு என்பது இருக்காது. இழிவான வேலை என்பது இருக்காது. அடிமைத் தன்மை இருக்காது. ஒருவரை ஒருவர் நம்பிக்கொண்டு வாழவேண்டிய அவசியம் இருக்காது. பெண்களுக்குக் காவல் கட்டுப் பாடு, பாதுகாப்பு என்பவையான அவசியம் இருக்காது.(பக்கம்: 9)

    ▪️ வாழ்வுக்காக எப்படி எப்படி உழைப்பது என்கின்ற கவலையும், முயற்சியும் மிகச்சிறிய அளவுக்குவந்துவிடும். சுகம் பெறுவதிலும், போகபோக்கியமடைவதிலும், நீண்ட நாள் வாழ்வதிலும், ஆராய்ச்சியும் முயற்சியும் வளர்ந்து கொண்டே போகும். மக்களின் தேவைகள் எவ்வளவு வளர்ந்தாலும், அவற்றை உற்பத்தி செய்வதற்காக மனிதன் செலவழிக்க வேண்டிய நேரம், மிகமிகக் குறை வாகவே இருக்கும்.(பக்கம்: 11)

    ▪️ புதிய உலகத்தில் மோட்ச நரகத்திற்கு இடம் இருக்காது. நன்மை தீமை செய்ய இடமிருந்தால் தானே மோட்சமும், நரகமும் வேண்டும்; எவருக்கும் யாருடைய நன்மையும் தேவை இருக்காது. புத்திக்கோளாறு இருந்தால் ஒழிய ஒருவனுக்கு ஒருவன் தீமை செய்யமாட்டான். ஒழுக்கக்கேட்டுக்கும் இடமிருக்காது. இப்படிப்பட்ட நிலையில் மோட்ச நரகத்துக்கு வேலை ஏது? ஆள் ஏது?(பக்கம்: 21)

சுருக்கமாக அவர் பார்வையில், கடின உழைப்போ மனிதர்களின் தன்மானத்தை இழிவுபடுத்தக் கூடிய வேலைகளோ வழக்கொழிந்துவிடும். இன்று இழிவாகக் கருதப்படும் வேலைகள் கருவிகளின் துணையுடன் முடிக்கப் பெறும். மக்கள் வேலை செய்யும் நோக்கம் உடற்பயிற்சிக்காக என்ற முறையில் மாறும். எனவே அவர்கள் உழைப்பில் கொள்ளும் ஆர்வமும் அதை நோக்கி இருக்கும். அதிசயப் பொருளும், அற்புதக்காட்சிகளும், அவற்றின் அனுபவங்களும் அனைத்து மக்களும் ஒன்றுபோல் அனுபவிப்பார்கள். முடியாட்சி மறைந்துவிடும். குற்றம் நிகழ்ந்தால் அதற்கான காரணம் உளவியல் கோணத்தில் மனநோய் பிழற்சியால் நேரும் என்கிறார்.

இந்தியர்கள் அறிவியலில் பின்தங்கியிருந்த கடந்த கால நிலைக்கு அவர்களது கல்வியில் பிழையையும் தேவைக்கு உதவாத தரக்குறைவான பாடதிட்டங்களையும் காரணமாகக் காட்டுகிறார். “மக்களுக்கு அறிவு வளர்க்க வேண்டிய பாடத்திட்டங்களின் குறையினால் மக்கள் புதுமை, முற்போக்கு போன்ற சிந்தனைகள் இன்றி வாழ்கிறார்கள். பழையவற்றை ஏற்ற அளவுக்கும் நற்பயன் தரவேண்டிய அளவுக்கும் பயன்கொள்ள வேண்டியது தேவை என்றாலும்; புதியவற்றில் முயற்சியும் ஆராய்வதில் ஆர்வமும் இருக்கவேண்டியது அவசியமாகும். ஏனெனில் அவற்றினால் தான் இயற்கையைப் படிப்பது என்பதோடு புதியவற்றைக் கண்டு பிடிப்பதும் முற்போக்கு அடைவதும் (இன்வென்ஷன், ப்ராக்ரஸ்) சுலபத்தில் சாத்தியமாகலாம்” என்கிறார். .

இந்த மாற்றங்களை எளிதில் அடைய முடியுமா என்று சிந்திக்கும் ஈ.வெ.ரா. மாற்றத்தை தடைப்படுத்த ஏற்படக் கூடிய இருவகை முட்டுக்கட்டைகளைச் சுட்டிக் காட்டுகிறார். பழமை மாறாது இருந்தால் ஆதாயம் அடையக்கூடிய தன்னலவாதிகளும், அவர்களின் சூழ்ச்சியான எண்ணத்தைப் புரிந்து கொள்ளும் திறனற்ற அறிவற்றவர்களும் புதிய வகை மாற்றங்களைத் தடுக்க முயல்வது இயல்பாக நிகழும். இந்த இரண்டு பெரிய எதிரிகளையும் கண்டு கலங்காமல் மனித முன்னேற்றத்திற்கான கடமையை முன்னெடுப்பவரே இனிவரும் புதிய உலகை வடிக்கும் உலகச் சிற்பிகளாக முடியும் என்பது ஈ.வெ.ரா.வின் ‘இனிவரும் உலகம்’  நூல் கொடுக்கும் அறிவுரை.

நூல் விவரம்:

இனி வரும் உலகம்: பெரியார் ஈ.வெ.ரா.

குடி அரசு பதிப்பகம், ஈரோடு

ஆறாம் பதிப்பு – 1961

தமிழன் அச்சகம், ஈரோடு.

விலை: 15 காசு

[தமிழ் இணையக் கல்விக்கழகம் — https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0010846_இனி_வரும்_உலகம்.pdf]

=================================


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஈ.வெ.ரா. வின் கணிப்பில் “இனிவரும் உலகம்””

அதிகம் படித்தது